அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது ‘இஸ்லாம்’
இஸ்லாமியப் பெண்கள் டெல்லி ஷாஹின் பாகில் காவல் துறையின் உத்தரவை புறம் தள்ளிவிட்டு தொடர் போராட்டத்திலிருந்து சற்றும் பின்வாங்காமல் சொற்போர் புரிந்து கொண்டிருக்கும்போது அவர்கள் கோரசாக எழுப்பிய கோஷத்தைக்கண்டு காவல் அதிகாரிகள் திகைத்து நிற்கும் கணொளி காட்சி மெய்சிலிர்க்க வைத்தது.
அப்படி என்ன முழக்கத்தை ஓங்கி ஒலித்தார்கள் என்று கேட்கிறீர்களா…?
“அல்லாஹு அக்பர்… அல்லாஹு அக்பர்…” விண்ணைமுட்டும் இப்பேரொலிக்கு எந்த எதிராளியும் பயப்படுவதில் ஆச்சரியமில்லைதான்.
இஸ்லாமிய பெண்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும்போது பொதுவெளிக்கு அதிகமாக வராதவர்கள்தான். ஆனால் மற்ற மத பெண்களை விட துணிச்சல் மிக்கவர்கள். தைரியமாக களத்தில் நின்று போராடும் குணமுடையவர்கள் என்பது இன்றைக்கு மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது. தலைநகர் டெல்லி மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவிலும் இதுவே நிதர்சனம்.
இஸ்லாமிய பெண்கள் அடுப்பங்கறை மட்டுமல்ல, உலக அரசியலையும் தெரிந்து வைத்திருப்பவர்கள். ராணுவத்தையும், காவல் துறையையும் இறக்கினாலும் கொஞ்சமும் சஞ்சலப்பட மாட்டார்கள் என்பதும் நிரூபணமாகிக் கொண்டிருக்கிறது.
ஷாஹின் பாக் இஸ்லாமிய பெண்களின் போராட்டத்தைப்பற்றி மூத்த காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் குறிப்பிடும்போது,
“அரசியல் கட்சிகளுக்கு போராட தைரியம் தந்ததே போராடுகிற இஸ்லாமிய பெண்கள் தான்.
அவர்கள் இலட்சக்கணக்கில் திரண்ட பிறகுதான் போராட முடியும் எனும் நம்பிக்கையே எதிர்கட்சிகளுக்கு வந்திருக்கிறது.
இது இந்திய வரலாற்றில் 2020 வரலாற்றில் எழுத வேண்டிய ஒரு புதிய சரித்திரம்.
இதனால் தான் உச்சநிதிமன்ற சந்திரசூட் இதை அங்கீகரிக்கிறார்.
உச்சந்திமன்ற நீதிபதிகளே இன்று போராடுகிறவர்களெல்லாம் பயங்கரவாதிகள் அல்ல, தேச விரோதிகள் அல்ல, என்கிற தீர்ப்பை அவர்கள் தர ஆரம்பித்திருக்கிறார்கள் என்றால் இந்த போராட்டங்கள் அரசியல் கட்சிகளுக்கு தைரியத்தையும், நீதிமன்றங்களுக்கு இதை கேட்பதற்கான ஒரு ஆன்மீக அழுத்தத்தையும், ஒரு எதார்த்த உணர்வையும் தந்திருக்கிறது என்பதுதான் இந்த போராட்டத்தின் முக்கியத்துவம்.
ஆகவே இன்று அவர்களை நான் பாராட்டுகிறேன்.
அவர்கள் சட்டத்தை மீறவில்லை, அரசியல் சாசனத்தை மதிக்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள்.
இந்தியர்கள் என்று தங்களை வெளிப்படுத்துவதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்துகிறார்கள்.
எனவே எதிர்கள் இவர்களுடன் சேர்ந்து போராடவில்லையென்றால் எதிர்கால ஜனநாயகம் கேள்விக்குறியாகிவிடும்.” என்று கூறுகிறார்.
இது ஒருபுறமிருக்க இஸ்லாமிய வீரப்பெண்மணிகளின் வரலாறுகள் தெரியாத சில வாய்ச்சொல் வீரர்கள்; பெண்கள் வீதிக்குவந்து போராடுவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை… என்று தன்பங்குக்கு விமர்சனம் செய்வது வெட்கக்கேடு.
ஆண்களே! பெண்களை பாதுகாக்கும் பொருப்பை அல்லாஹ் உங்களுக்கு கடமையாக்கியிருக்க நீங்கள் அக்கடமையை நிறைவேற்றுவதில் அலட்சியமோ, இயலாமையோ காட்டியதன் காரணத்தால் தான் இன்று பெண்கள் வீதிக்கு வந்து போராட வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இரண்டாவது சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து நடத்தியவர்கள் “இஸ்லாமிய ஷாஹின் பாக் பெண்மணிகளே” என்பதை வரலாறு இப்பொழுதே பதிவு செய்யவிட்டது என்பதை அறிவீர்களா? அவர்களின் இந்த துணிச்சலுக்கும், கடமையுணர்வுக்கும் காரணம் ஒன்றே ஒன்றுதான்.
ஆம், ஏனெனில் அவர்கள் தங்கள் நெஞ்சில் சுமந்திருப்பது ‘இஸ்லாம்’ எனும் ஏக இறை மார்க்கம். உலக பல்கலைக் கழகங்களில் கிடைக்காத தெளிவு ஏக இறைவனின் வசனங்களில் அந்த பெண்களுக்கு கிடைத்துக் கொண்டிருக்கிறது.
– M.A.Mohamed Ali