இந்தியாவை பின்னுக்கு தள்ளி அபார பொருளாதார வளர்ச்சியில் வங்கதேசம்!
By Veerakumar
டெல்லி: ஹென்றி கிஸ்ஸிங்கர், 1970களில், வங்கதேசத்தை “ஒரு சர்வதேச பேஸ்கெட் கேஸ்” என்று அழைத்தார். உண்மைதான். அடிக்கடி ஏற்பட்ட வெள்ளப் பேரழிவுகளால் தத்தளித்தது அந்த நாடு. ஆனால் இன்று? வங்கதேசம் வேறு நாடு.
வங்கதேசம் பற்றி ஆழ்மனதில் பதிய வைத்துள்ள மோசமான கருத்தை உலகம் மாற்றிக்கொள்வதில், சோம்பேறித்தனம் இருக்கலாம். ஆனால் 1970களின் வங்கதேசம் இல்லை அது, என்ற உண்மை, விரைவில் பல நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்படும்.
இந்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி சமீபத்தில் “இந்தியா ஒருவேளை அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால் வங்கதேசம் பாதி காலியாக மாறிவிடும்” என்று கிண்டலாக கூறியிருக்கலாம். ஆனால் உண்மை அதுவல்ல. இந்தியாவுடன் ஒப்பிடுகையில், வங்கதேசம், வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கும் குறியீடுகளில் பலவற்றில் மிகச் சிறப்பாக முன்னேறிவிட்டது என்பது பாவம் ரெட்டிக்கு தெரியுமோ தெரியாதோ!
செம வேகம்
வங்கதேசம் நாம் பொறாமை கொள்ளும் வேகத்தில் வளர்ந்து வருகிறது. அவர்கள் நமது மொத்த உள்நாட்டு உற்பத்தி 5% க்கு கீழே போய்க்கொண்டு இருக்கிறது. ஆனால், வங்கதேசம் 8%க்கு மேல் உள்ளது. கார்ப்பரேட் வரியை குறைத்து, சீனாவை விட்டு வெளியேறும் முதலீட்டை ஈர்க்க நிர்மலா சீதாராமன் ஒருபக்கம் தீவிரமாக செயல்படுகிறார். ஆனால், உண்மையில், அந்த பலனை அனுபவிப்பது வங்கதேசம்.
லண்டன் மற்றும் நியூயார்க்கில் வங்கதேசத்தில் தயாரான ஆடைகள் உடுத்தப்படுகின்றன. தமிழகத்தின் திருப்பூரிலும், பஞ்சாப்பின் லூதியானாவிலும் தயாராகும் ஆடைகள் இப்போதெல்லாம் அங்கே அதிகம் விற்பனையாகவில்லை.
வாழ்க்கைத் தரமும் சூப்பர்
2019ம் நிதியாண்டில் வங்கதேசத்தின், வர்த்தக ஏற்றுமதி இரட்டை இலக்கங்களில் கிடுகிடுவென வளர்ந்துள்ளது. ஆச்சரியமில்லை. ஆனால் இந்திய ஏற்றுமதியின் செங்குத்தான வீழ்ச்சிதான், அதிர்ச்சி. பொருளாதாரம் மட்டுமல்ல.. அப்பட்டமாகக் கூறினால், வங்கதேசத்தின் வாழ்க்கை தரம், இந்தியாவை விட மிகவும் முன்னேறிவிட்டதாகவே தெரிகிறது. சும்மா சொல்லவில்லை. புள்ளி விவரமும் அதையேத்தான் கூறுகிறது.
ஒப்பீடு
o வங்கதேசத்தில் ஆண்களுக்கு சராசரி ஆயுட்காலம், 71, பெண்கள் சராசரி ஆயுட்காலம் 74. இந்தியாவில், இது முறையே, 67 மற்றும் 70 ஆகும்.
o இந்தியாவில் பேறுகால இறப்புவிகிதம், அதாவது 1,000 பேறுகாலங்களில், 22.73 என்ற அளவில் உள்ளது.
o வங்கதேசத்தில் பேறுகால இறப்பு விகிதம் என்பது குறைவு. 17.12 மட்டுமே.
o குழந்தை இறப்பு விகிதம், இந்தியாவில் 29.94 ஆகவும், வங்கதேசத்தில் 25.14 ஆகவும் உள்ளது.
o வங்கதேசத்தில், 15 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் 71% கல்வியறிவு பெற்றவர்கள், இந்தியாவிலோ இது 66% பேர் மட்டும்தான்.
o வங்கதேசத்தில், மொத்த பணிகளில், பெண் பணியாளர்கள் பங்களிப்பு 30%. மேலும் உயர்ந்து வருகிறது. நம்முடையது 23% மட்டுமே. அதுமட்டுமின்றி, கடந்த தசாப்தத்தில் 8% குறைந்துள்ளது.
எதிர்கால வளமை
சிறுவர் மற்றும் சிறுமிகளுக்கான உயர்நிலைப் பள்ளி சேர்க்கை விகிதம் எப்படி இருக்கிறது என்பதையும் பாருங்கள். ஏனெனில் எதிர்கால சந்ததிகள் எந்த நாட்டில் எப்படி செயல்படப்போகிறார்கள் என்பதற்கான குறியீடு இது. இந்தியாவில் 0.94 என்ற அளவில் உள்ளது. ஆனால் வங்கதேசத்தில் இது 1.14 ஆகும். அதாவது பெண்கள், ஆண்களைவிட அதிகம் கல்விக்கூடம் வருகிறார்கள்.
டிரெண்ட் மாறிவிட்டது
எனவேதான், வங்கதேச வெளியுறவு அமைச்சர் ஏ.கே. அப்துல் மோமன், சொன்னார், “சில இந்தியர்கள் பொருளாதார காரணங்களுக்காக சட்டவிரோதமாக வங்கதேசத்திற்குள் நுழைகிறார்கள்” என்று. அவர் சொல்வது சரிதான். மக்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இப்போது வங்கதேசத்திற்குள் குடியேறுவது அதிகரித்துள்ளது.
இந்த புள்ளி விவரங்களையெல்லாம் படித்து பார்க்கும் ஒருவர், நமது அமைச்சர் கிஷன் ரெட்டியிடம் சொல்ல வேண்டும்.. அமெரிக்கா இந்தியர்களுக்கு குடியுரிமை அளிப்பதாக ஒருவேளை, உறுதியளித்தால், இந்தியாவில் பாதி பேர் அங்கு குடியேற ரெடியாக இருப்பார்கள். எனவே, நாம் பேச்சை குறைத்துவிட்டு செயலில் சாதித்து காட்டுவோம் என்று!
https://tamil.oneindia.com/news/india/how-bangladesh-is-better-