வரலாறு படைக்கும் ஷஹீன் பாக் (Shaheen Bagh) பெண்களின் போராட்டம்
[ மாபெரும் புரட்சி என்ற பெயரில் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்ட, பிரிட்டிஷ்காரர்களால் “சிப்பாய் கிளர்ச்சி” என்று அழைக்கப்பட்ட, 1857 ல் நடந்த முதல் சுதந்திரப்போராட்டத்திற்கு தலைமையேற்றவர்களின் வம்சா வழியினர், தங்களின் மூதாதையர்களின் போராட்ட வீரியம் சற்றும் இழக்காமல் வீதியில் இரண்டாவது சுதந்திரப்போராட்டத்தை துவக்கியுள்ளனர்.
ஒரு போராட்டக்களம் அத்தனை ஜனநாயகத்துடன், கடுங்குளிரிலும் இயல்பாக இயங்கிவருகிறது.
இந்திய வரைபடம் ஒன்று மிக உயரமாக எழுப்பப்பட்டு, அதில் “இந்திய மக்களாகிய நாங்கள் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் முதலானவற்றை நிராகரிக்கிறோம்” என்று எழுதப்பட்டிருக்கிறது.
எங்கு திரும்பினாலும், இந்திய தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது.
பிரதமர் மோடியின் காதை பாபாசாகேப் அம்பேத்கர் திருகிக்கொண்டிருக்கும் ஓவியம் ஒன்றையும் வரைந்து வைத்திருக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். சர்வதேச ஊடகங்கள் ஷஹீன் பாக் போராட்டத்தை “மீண்டும் ஒரு சத்தியாகிரகம்” என்று மகாத்மா காந்தியின் அமைதிப் போராட்டத்தோடு இதை ஒப்பிடுகின்றன.
“எங்கள் குழந்தைகள் கல்வி கற்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கல்வி கற்கச் செல்லும் இடத்தில் இப்படி தாக்கப்பட்டால், நாங்கள் என்ன செய்வது? எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார் ஷஹீன் பாக்கின் பெண் ஒருவர்.
தங்களின் முந்தைய 5 அல்லது 6 தலைமுறை மூதாதையர்களின் பெயர்களைக்கூறும் தாய்மார்கள் “இதுபோல் மோடி, அமித்ஷாவால் கூறமுடியுமா?” என்று சவால் விடுக்கின்றனர்.]
52 நாள்களைக் கடக்கும் ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம்
52 நாள்கள் கடந்துவிட்டன. டெல்லியின் குளிர்காலத்தின் கடுமையைத் தாண்டி, இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது ஷஹீன் பாக் பெண்களின் போராட்டம். கடந்த டிசம்பர் மாதம், டெல்லி ஜாமியா பல்கலைக்கழகத்தில் டெல்லி காவல்துறை மேற்கொண்ட தாக்குதலைக் கண்டித்தும் குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரியும் ஷஹீன் பாக்கை முதன்முதலாகக் கைப்பற்றினர் பெண்கள். தற்போது நாட்டின் மிக முக்கியமான போராட்டக் களமாக மாறி, சர்வதேச கவனத்தை ஈர்த்து வருகிறது ஷஹீன் பாக்கின் போராட்ட முழக்கம்.
டெல்லியை நொய்டா, ஃபரிதாபாத் முதலான நகரங்களுடன் இணைக்கும் பிரதான சாலையில், ஷஹீன் பாக் என்ற இடத்தில் இந்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஜாமியா பல்கலைக்கழகத்துக்கு மிக அருகில் இருக்கும் இந்த இடத்துக்கு லட்சக்கணக்கானோர் வந்து செல்கின்றனர். 24 மணி நேரமும் போராட்டங்கள் தொடர்கின்றன.
தேசிய கீதம் இசைக்கப்படுகிறது; பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ் முதலான வலதுசாரிகளுக்கு எதிரான முழக்கங்கள், பேச்சுகள் தொடர்கின்றன; பாடல்கள் பாடப்படுகின்றன; விடுதலைக்கான கவிதைகள் வாசிக்கப்படுகின்றன; ஓவியங்கள் காட்சிப்படுத்தப்படுகின்றன.
புர்கா அணிந்த முஸ்லிம் பெண்கள் இந்தப் போராட்டத்தை முன்னின்று நடத்துகின்றனர். சர்வதேச ஊடகங்கள் ஷஹீன் பாக் போராட்டத்தை `மீண்டும் ஒரு சத்தியாகிரகம்’ என்று மகாத்மா காந்தியின் அமைதிப் போராட்டத்தோடு இதை ஒப்பிடுகின்றன.
ஷஹீன் பாக் பெண்களுக்குக் கடுங்குளிரையும் தாண்டி, ஆதரவுக்கரம் நீட்டியுள்ள நேச சக்திகளால் உணவு தயாரிக்கப்படுகிறது. குழந்தைகளோடு, குடும்பம் குடும்பமாக அமர்ந்து போராட்டத்தைத் தொடர்கின்றனர். `ஷஹீன்’ என்னும் உருது சொல்லுக்கு `ராஜாளி’ என்று பொருள். ‘இந்தியா ஒரு தோட்டம் என்றால், நாங்கள் அதைக் காக்கும் ராஜாளிகள்’ என்று எழுதப்பட்ட பதாகையொன்று தொங்கவிடப்பட்டுள்ளது.
இந்திய வரைபடம் ஒன்று மிக உயரமாக எழுப்பப்பட்டு, அதில் “இந்திய மக்களாகிய நாங்கள் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் முதலானவற்றை நிராகரிக்கிறோம்” என்று எழுதப்பட்டிருக்கிறது. எங்கு திரும்பினாலும், இந்திய தேசியக்கொடி பறந்துகொண்டிருக்கிறது. பிரதமர் மோடியின் காதை பாபாசாகேப் அம்பேத்கர் திருகிக்கொண்டிருக்கும் ஓவியம் ஒன்றையும் வரைந்து வைத்திருக்கிறார்கள் போராட்டக்காரர்கள்.
அரசுக்கு எதிராகவும் அடக்குமுறைக்கு எதிராகவும் தங்கள் கலைப் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர் ஷஹீன் பாக்கின் போராட்டக்காரர்கள். இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. இவற்றையெல்லாம் கடந்து, அனைத்து மதத்தவரும் இணைந்து பிரார்த்தனைக் கூட்டங்கள் நடத்துகின்றனர்.
ஒரு போராட்டக்களம் அத்தனை ஜனநாயகத்துடன், கடுங்குளிரிலும் இயல்பாக இயங்கிவருகிறது. அந்தப் பகுதியின் பேருந்து நிலையம் ஒன்றை ‘ஃபாத்திமா ஷேக் & சாவித்திரிபாய் பூலே நூலகம்’ என்ற பெயரில் புத்தகம் வாசிக்கும் இடமாக மாற்றியுள்ளனர். ஷஹீன் பாக்கின் நடைபாலத்தில் அப்பகுதி குழந்தைகள் இந்திய அரசியலமைப்பு குறித்தும் மதச்சார்பின்மை குறித்தும் தங்கள் படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளனர்.
கடந்த பிப்ரவரி 2-ம் தேதியன்று, ஷஹீன் பாக் போராட்டக்காரர்களை எதிர்த்து, அனுராக் தாக்கூர் முன்வைத்த முழக்கங்களைக் கூறி போராட்டம் நடத்தினர் வலதுசாரி அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். “தோட்டாக்கள் வேண்டாம்; மலர்களை எறிவோம்!” என்று பதில் போராட்டம் நடத்தி, வலதுசாரிகளின் மீது மலர்களைத் தூவினர் ஷஹீன் பாக் பெண்கள்.
பாலிவுட் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, ஷஹீன் பாக் போராட்டங்கள் காஷ்மீர் பண்டிட்கள் விரட்டப்பட்டதைக் கொண்டாடுகின்றன என்று கருத்து தெரிவிக்க, ‘காஷ்மீர் பண்டிட்களுக்கு ஆதரவு தருவோம்’ என்ற பதாகையோடு நின்றது ஷஹீன் பாக்.
பி.ஜே.பி-யின் தொழில்நுட்ப அணியின் தலைவர் அமித் மாளவியா, ‘ஷஹீன் பாக் பெண்கள் பணம் வாங்கிக்கொண்டு போராடுகின்றனர்’ என்று குற்றம் சாட்ட, போராட்டத்தில் ஈடுபடும் பெண்களில் இருவர் அமித் மாளவியா மீது வழக்கு பதிவு செய்ததோடு, 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கோரியுள்ளனர்.
“எங்கள் குழந்தைகள் கல்வி கற்க விரும்புகிறார்கள். ஆனால், அவர்கள் கல்வி கற்கச் செல்லும் இடத்தில் இப்படி தாக்கப்பட்டால், நாங்கள் என்ன செய்வது? எங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காக நாங்கள் இங்கு போராடிக் கொண்டிருக்கிறோம்” என்று கூறுகிறார் ஷஹீன் பாக்கின் பெண் ஒருவர்.
ஷஹீன் பாக் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்ணின் 4 மாதக் குழந்தை, கடுங்குளிர் காரணமாக உயிரிழந்தது. முகமது ஆரிஃப், நாஸியா தம்பதி தினமும் ஷஹீன் பாக்குக்குப் போராட்டத்தில் கலந்துகொள்ள வந்திருக்கின்றனர். கடந்த இரண்டு நாள்களுக்கு முன், 4 மாதங்களே ஆன முகமது ஜஹான் உயிரிழந்துள்ளான்.
குழந்தையின் தாய் நாஸியா, “என் மகன் குளிரால் இறந்துள்ளான்; வேறு எந்த நோயும் இல்லை. நாங்கள் இப்போதும் நாட்டுக்காகப் போராட்டத்தைத் தொடரவுள்ளோம். எங்களிடம் எந்த ஆவணங்களும் இல்லை. நாங்கள் என்ன செய்வது? பிரதமர் மோடியும் அமித் ஷாவும் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி ஆகியவற்றைத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
‘ஐ லவ் இந்தியா’ என்ற தொப்பியணிந்தபடி, பலரின் செல்லப்பிள்ளையாக இருந்த குழந்தை இறந்துள்ளது, ஷஹீன் பாக் பெண்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி – நொய்டா நெடுஞ்சாலையில், நொய்டாவிலிருந்து டெல்லிக்குள் நுழையும்போது, ஷஹீன் பாக் பகுதியை அடைவதற்கு முன், ஒரு பதாகை எழுப்பப்பட்டுள்ளது. ‘வாருங்கள், உரையாடுவோம்!’ என்கிறது அந்தப் பதாகை. தேர்தல் கட்சிகள் ஷஹீன் பாக்கை வைத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வழி தேடிக்கொண்டிருக்கும் வேளையில், ஷஹீன் பாக் முன்வைக்கும் உரையாடலே ஜனநாயகம்.
குடியரசு தினத்தன்று ஷஹீன் பாக்
source: https://www.vikatan.com/news/politics/anti-caa-protests-in-delhi-shaheen-bagh