“ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும்!” – சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பும் இந்தியாவின் நிலையும்
[ உலக வரலாற்றில் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று]
\ரோஹிங்யாக்கள் இனப்படுகொலை தொடர்பான வழக்கில் சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு முக்கியத்துவம் வாய்ந்தது.
மியான்மரில் வசித்துவருகிற பல இனக்குழுக்களில் ரோஹிங்யாக்களும் ஒன்று. இவர்கள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றுபவர்கள். வங்கதேச எல்லையை ஒட்டிய ரகைன் மாகாணத்தில் பெரும்பான்மையாக வசித்துவருபவர்கள்.
மியான்மர் அவர்களின் குடியுரிமையைப் பறித்து அவர்களை தொடர் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாக்கி வருகிறது. இதனால் ரோஹிங்யாக்கள் பலரும் அகதிகளாக, இந்தியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலையில், கடந்த 2017-ம் ஆண்டு மியான்மரில் நடைபெற்ற ராணுவ ஒடுக்குமுறையைத் தொடர்ந்து ஏழு லட்சத்துக்கும் அதிகமான ரோஹிங்யாக்கள் வங்கதேசத்தில் தஞ்சம் புகுந்தனர்.
மியான்மரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் இனப்படுகொலையைச் சந்தித்து வருகின்றனர் என்று இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் சார்பில் ஆப்பிரிக்க நாடான காம்பியா சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
மியான்மரில் ரோஹிங்யாக்கள் இன அழிப்பைச் சந்திக்கின்றனர் என ஐ.நா-வும் பதிவு செய்துள்ளது.
உலக வரலாற்றில் இனப்படுகொலை தொடர்பாக சர்வதேச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மிகச் சில வழக்குகளில் இதுவும் ஒன்று. இந்த வழக்கு கடந்த நவம்பர் 2019 சர்வதேச நீதிமன்றத்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இந்த வழக்கின் மீதான விசாரணை டிசம்பர் மாதம் நடைபெற்றது. அமைதிக்காக நோபல் பரிசு பெற்ற மியான்மர் அரசின் தலைவர் ஆங் சான் சூகி தன் ராணுவத்தின் ரத்தக் கரையைத் துடைக்க சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணைக் கூண்டில் ஏறினார்.
ராணுவத்துக்கு ஆதரவாக வாதிட்ட ஆங் சான் சூகி `ரோஹிங்யா’ என்கிற சொல்லைக் கூட உச்சரிக்கவில்லை. ரோஹிங்யா என்பது பர்மிய மொழியுடன் தொடர்புடைய சொல். ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மரைச் சேர்ந்தவர்களே இல்லை என்று தெரிவிக்கவே ரோஹிங்யா என்கிற சொல்லை ஆங் சான் சூகி பயன்படுத்தவில்லை.
இந்த வழக்கை விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு அதிகார வரம்பு இல்லை, வழக்கைத் தொடர காம்பியாவுக்கு முகாந்திரம் இல்லை என்பதே மியான்மரின் பிரதானமான வாதமாக இருந்தது.
1948-ம் ஆண்டு இயற்றப்பட்ட இனப்படுகொலை தடுப்புச் சட்டத்தை மியான்மர் மீறிவிட்டதாகக்கூறி காம்பியா இந்த வழக்கைத் தொடர்ந்தது. காம்பியா ரோஹிங்யா பிரச்னையால் நேரடியாக பாதிக்கப்படவில்லை என்று மியான்மர் வாதிட்டது. மியான்மர் அரசு ரோஹிங்யாக்கள் மீது நேரடியாக இனப்படுகொலையை நிகழ்த்தியுள்ளது.
மியான்மரில் ரோஹிங்யாக்கள் பாதுகாக்கப்படுவதற்கான உத்தரவுகளை வழங்க வேண்டும் என்று காம்பியா வாதிட்டது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. கடந்த ஜனவரி 23-ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அமர்வில் இருந்த 17 நீதிபதிகளும் ஒருமனதாக இந்தத் தீர்ப்பை வழங்கினர்.
தீர்ப்பு என்ன சொல்கிறது?
1. மியான்மரில் இனப்படுகொலை தொடர்பாக விசாரிக்க சர்வதேச நீதிமன்றத்துக்கு விசாரணை வரம்பு இருக்கிறது. காம்பியாவுக்கு வழக்கு தொடரும் அதிகாரம் இருக்கிறது. ஒரு நாட்டின் மீது இனப்படுகொலை குற்றம் சுமத்தி வழக்கு தொடரும் ஒரு நாடு அதனால் நேரடியாக பாதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கிற தேவை இல்லை.
2. இனப்படுகொலைச் சட்டத்தின்படி ரோஹிங்யாக்கள் பாதுகாக்கப்பட்ட மக்கள். 2017-ல் நடைபெற்ற ராணுவ வன்முறையின்போது நடைபெற்ற குற்றங்கள், முறைப்படுத்தப்பட்ட அடக்குமுறையின் விளைவே. இது தொடர்பான பல ஐ.நா குழுக்களின் அறிக்கைகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
3. மியான்மரில் ரோஹிங்யாக்களின் உரிமைகள் உள்ள நிலைக்கு அவர்கள் மீது பாரபட்சம் காட்டப்பட்டால் அது சரிசெய்ய முடியாத தீங்கை உருவாக்கிவிடும். தற்போதைய சூழ்நிலையில் ரோஹிங்யாக்கள் உரிமைகள் பாதுகாக்கப்படும் என்பதை மியான்மரால் நிரூபிக்க முடியவில்லை.
4. இனப்படுகொலைத் தடுப்புச் சட்டத்துக்குட்பட்டு மியான்மர் ரோஹிங்யாக்களைப் பாதுகாக்க வேண்டும். ரோஹிங்யாக்கள் மீதான போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்களை மியான்மர் பாதுகாக்க வேண்டும்.
5. மியான்மர் ராணுவம் அல்லது ஆயுதப்படைகள் ரோஹிங்யாக்கள் மீது இனப்படுகொலை நிகழ்த்தக் கூடாது என்பதை மியான்மர் அரசு உறுதி செய்ய வேண்டும். நான்கு மாதங்கள் கழித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக மியான்மர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்தத் தீர்ப்பு சர்வதேச அளவில் கட்டுப்பட வேண்டியது. இது இடைக்கால தீர்ப்பு தானே தவிர, இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பு கிடையாது.
இவையே சர்வதேச நீதிமன்ற தீர்ப்பின் சாராம்சங்கள். இடைக்கால நடவடிக்கைகள் உறுதிசெய்யப்பட்ட பிறகு இனப்படுகொலை குற்றங்கள் மீதான விசாரணை நடைபெறும். இது மியான்மருக்குப் பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது.
இந்தியாவும் ரோஹிங்யாக்களும்
மியான்மரின் அச்சுறுத்தலால் அண்டை நாடுகளுக்கு இடம்பெயர்ந்த ரோஹிங்யாக்களில் கிட்டத்தட்ட 40,000 பேர் பல்வேறு காலகட்டங்களில் இந்தியாவிலும் தஞ்சமடைந்துள்ளனர். இந்திய அரசு சமீபத்தில் நிறைவேற்றிய குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ரோஹிங்யா முஸ்லிம்கள் சேர்த்துக் கொள்ளப்படவில்லை. “ரோஹிங்யாக்கள் நேரடியாக இந்தியாவுக்குள் வருவதில்லை, வங்கதேசத்தின் வழியாக திருட்டுத்தனமாக இந்தியாவுக்குள் நுழைந்திருக்கிறார்கள்” என்பதை அவர்கள் சேர்க்கப்படாததற்கு காரணமாக உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இதற்கு மத்தியில் “இந்தியாவில் உள்ள ரோஹிங்யா முஸ்லிம்களை விரைவில் நாடு கடத்த வேண்டும் என்பதுதான் அரசின் அடுத்த நடவடிக்கை” என மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
இந்தியாவிலிருந்து ரோஹிங்யாக்களை நாடுகடத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தற்போது வரை விசாரணை நடைபெற்று வருகிறது. ஆனாலும், மத்திய அரசு தொடர்ந்து அவ்வப்போது ரோஹிங்யாக்களை நாடுகடத்தி மியான்மர் ராணுவத்திடம் ஒப்படைத்து வருகிறது.
`சர்வதேச அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட `Non-refoulment’ விதியின்படி, மியான்மரில் ரோஹிங்யாக்கள் உயிருக்கு அச்சுறுத்தல் இல்லை என்பது உறுதிசெய்யப்படும் வரை திரும்பிச் செல்ல மறுக்கும் உரிமை ரோஹிங்யாக்களுக்கும் அவர்களைப் பாதுகாக்கவேண்டிய கடமை இந்திய அரசுக்கும் உள்ளது’ என்பதை ஜனவரி 8 அன்று விகடன் இணையதளத்தில் வெளிவந்த கட்டுரையில் சுட்டிக்காட்டியிருந்தோம்.
அதற்குப் பிறகு ஐ.நா-வின் சிறப்பு பிரதிநிதி உச்சநீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அதன்மூலம் ரோஹிங்யாக்கள் நாடுகடத்தப்படுவதற்கு எதிரான வழக்கில் உதவி செய்ய தன்னையும் சேர்த்துக்கொள்ள வேண்டும் என ஐ.நா தெரிவித்துள்ளது.
அந்த மனுவில் “தற்போது இந்தியாவில் உருவாகி வருகிற முஸ்லிம்களுக்கு எதிரான ஓர் அரசியல் சூழலில் ரோஹிங்யாக்கள் நிலை குறித்து கேள்விகள் எழுந்துள்ளன. இந்தியாவின் மனித உரிமை உத்திரவாதங்களை நிலைநிறுத்துவதில் இந்திய நீதித்துறைக்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவில் தஞ்சம் தேடும் ரோஹிங்யா முஸ்லிம்கள் மியான்மருக்கு நாடு கடத்தப்படுவது மிகவும் கவலையளிக்கிறது. அங்கு அவர்கள் மனித உரிமை மீறல்களை சந்திக்கின்றனர். ரோஹிங்யாக்கள் மியான்மர் திரும்புவதற்கு தற்போது உகந்த சூழ்நிலை இருப்பதாக ஐ.நா அகதிகள் ஆணையம் கருதவில்லை” என்று தெரிவித்திருக்கிறது.
ரோஹிங்யாக்கள் `பாதுகாக்கப்பட்ட மக்கள்’ என்பதை சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு உறுதி செய்திருக்கிறது. இந்தத் தீர்ப்பு, ஐ.நா-வின் தலையீடு ஆகியவை உச்சநீதிமன்றத்தின் விசாரணையில் தாக்கம் செலுத்தக்கூடியவை. ரோஹிங்யா முஸ்லிம்களை நாடுகடத்த வேண்டும் என்பதில் இந்திய அரசு பிடிவாதமாக இருக்கிறது. சர்வதேச அழுத்தங்களைத் தொடர்ந்து இந்திய அரசு அந்த முடிவிலிருந்து பின்வாங்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– மோகன் இ
VIKATAN
source; https://www.vikatan.com/government-and-politics/international/why-icj-ruling-on-