வீரத்தின் விளைநிலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்
ஒரு நாள் ஒரு பெரிய நகரில் மிகப்பெரிய ஓர் சப்தம் கேட்டது.
அந்த நகரத்து மக்கள் அனைவரும் திடுக்கிட்டு வீட்டை விட்டு வெளியே ஓடி சென்று சப்தம் வந்த திசை நோக்கி நகர்ந்தனர்.
ஒட்டுமொத்த மக்களும் அந்த திசை நோக்கி நகர்ந்து செல்லும் வேளையில் அவர்களுக்கு எதிர் திசையிலிருந்து ஒரு மனிதர் சேணம் பூட்டாத அரேபிய குதிரையில் தனது போர்வாளை தோளில் தொங்க விட்டவாறு காற்றை கிழித்து கொண்டு மின்னல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறார்.
சப்தத்தின் பீதியில் வீதியில் வந்து நின்ற மக்களை நோக்கி அருகே வந்த அந்த மனிதர் “பயப்படாதீர்கள் பயப்படாதீர்கள் நீங்கள் அஞ்சும் அளவிற்கு ஒப்றுமில்லை” என்று பதட்ட சூழலை சமாதாணப்படுத்துகிறார். மக்கள் எல்லாம் அமைதியாய் வீடு திரும்புகின்றனர்.
அந்த குதிரையில் வந்தவர் வேறு யாருமில்லை வீர வரலாற்றில் இதுவரை யாரோடும் ஒப்பிட முடியாத ஒப்பற்ற ஒரே தலைவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தான்.
சப்தம் வந்த அந்த நகரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வரவால் பூரித்து போன மதினா நகரமே தான்.
இந்த சம்பவம் நடக்கும்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு 53 வயது இருக்கும்.
கொஞ்சம் கண் முன்னே அப்படியே கற்பனை செய்து பாருங்கள் ஐம்பத்து மூன்று வயது என்பது இப்போது நாம் முதியவர் என்பதை கணக்கிடும் வயது.
சேனம் பூட்டாத உயரமான குதிரை என்பதால் யார் துணையும் இன்றி பாய்ந்து தான் அந்த குதிரையில் ஏறி அமர்ந்திருக்க வேண்டும்.
தனியே செல்லும்போது எதிரிகள் தாக்க நேரிடும் என்பதால் எதிரிகளை எதிர்கொள்ள தயாராகவே வாளையும் எடுத்து சென்றிருக்கிறார்கள்.
அந்நாட்டின் அரசர் மத தலைவர் என இரண்டு மாபெரும் பொறுப்புகளுக்கு சொந்தக்காரர் என்பதால் எதிரிகளின் எண்ணிக்கையை சொல்லியா தெரிய வேண்டும்?
எதிரிகளுக்கு பன்ஞ்சமும் இல்லை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நெஞ்சத்தில் அச்சமும் இல்லை என்பதால் தானே அந்த இரவு பொழுதிலும் யாரையும் எதிர்பார்க்காமல் தனியே சென்றிருக்க முடியும்.
மக்கள் திரள்வதற்கு முன்பே சப்தம் வந்த திசையின் பக்கமிருந்து திரும்பி வந்திருக்கிறார்கள் என்றால் எத்தனை வேகமாக செயல்பட்டிருக்க வேண்டும்.
நாடி நரம்பெல்லாம் வீரமும் துணிவும் ஊறி புரையோடி போன ஒருவரால் மட்டும் தானே இது சாத்தியம்.
அரண்மனையின் அந்தப்புரத்தில் அமர்ந்துகொண்டு உத்திரவு போட்டு வேலை வாங்கும் அரசர்களை தானே நாம் கேள்வி பட்டிருக்கிறோம்.
மக்களுக்கு கேடயமாக இருந்து களத்தில் முதல் ஆளாக இறங்கி மக்களோடு மக்களாக வாழ்ந்த தலைவரை எங்கே பார்த்திருக்கிறோம்…
எளிமை விவேகம் நீதி நேர்மை வீரம் துணிவு இவை அனைத்தையும் ஒருசேர ஒரு தலைவர் பெற்றிருந்தார் என்றால் அது நபிகள் நாயகம் ஸல் அவர்களை தவிர இந்த உலகில் வேறு யாருமில்லை.
இப்படி ஒரு தலைவரை பாரேனும் பார்த்ததுண்டா யாரேனும் கண்டதுண்டா? (அனஸ் ரளியல்லாஹு அன்ஹு, (புஹாரி 2908)
– கூத்தாநல்லூர் ஜின்னா