அகதிகளுக்கு இறைவன் கூறும் அறிவுரை
இந்த பூமியில் அதர்மம் பெருகி தலைவிரித்து ஆடும்போது அதர்மத்தை அடக்கி அங்கு தர்மத்தை நிலைநாட்ட இறைவன் அவ்வப்போது தன் தூதர்களையும் வேதங்களையும் அனுப்பி அங்குள்ள மக்களை சீர்திருத்தி அவர்கள் மூலமாகவே தர்மத்தை நிலைநாட்டி வந்துள்ளான்.
அவ்வாறு மக்கள் சீர்திருத்தம் அடைவது அதர்மத்தை வைத்து வயிறு வளர்ப்பவர்களுக்கும் அதர்மமான முறையில் மக்கள் மீது ஆதிக்கம் செய்து அடக்கியாள்வோருக்கும் அறவே பிடிக்காது. எனவே அவர்கள் அந்த சீர்திருத்த இயக்கம் வளராமல் தடுக்க பலவகையான வழிமுறைகளையும் கையாள்வார்கள்.
ஒரு புறம் அந்த மக்கள் இயக்கத்தைப் பற்றி அவதூறுகள் பரப்பி பொது மக்களிடம் தவறான கண்ணோட்டத்தை ஏற்படுத்துவார்கள். மறுபுறம் அந்த இயக்கத்தில் இணைந்த மக்களை அடக்குமுறைகளுக்கு உட்படுத்தித் துன்புறுத்துவார்கள்.
சித்திரவதைகளும் கொலைகளும் இன்ன பிற கொடூரங்களையும் நிகழ்த்துவார்கள். எந்த அளவுக்கென்றால் அவர்களால் அங்கே வாழவே முடியாத நிலைக்குத் தள்ளி அவர்களை விழிபிதுங்க வைப்பார்கள்.
இப்படிப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டால் சத்தியவான்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்? இறைவனே அதற்கு வழிகாட்டுகிறான்.
நபிகளாருக்கும் தோழர்களுக்கும் நெருக்கடி
இறைவனின் இறுதித் தூதராக வந்த நபிகள் நாயகம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா நகரில் மக்களுக்கு மேற்கூறப்பட்ட சீர்திருத்த இயக்கத்தை அறிமுகப்படுத்தி தனது சத்தியப் பிரச்சாரத்தைத் துவங்கினார்கள். அந்த இயக்கமே இஸ்லாம் என்று அறியப்படுகிறது. இதன் பொருள் இறைவனுக்குக் கீழ்படிந்து ஒழுக்க வாழ்வு வாழுதல் என்பது.
ஒன்றே மனித குலம், மனிதர்கள் அனைவரும் சரி சமமே மற்றும் சகோதரர்களே, படைத்தவன் மட்டுமே இறைவன், படைப்பினங்கள் ஒரு போதும் இறைவனாக மாட்டா, இறைவனை இடைத்தரகர் இன்றி நேரடியாக வணங்கலாம், நன்மையை ஏவுவதும் தீமைகளைத் தடுப்பதும் விசுவாசிகள் மீது கடமை என்பவை இஸ்லாத்தின் முக்கிய கொள்கைகளாக அறிமுகப்படுத்தப்பட்டன.
அந்நாட்டில் வாழ்ந்து வந்த எளியோரையும் ஒடுக்கப்பட்டோரையும் இது எளிதில் கவர்ந்தது. அவர்கள் மனமுவந்து தங்களை இதில் இணைத்துக் கொண்டார்கள். ஆனால் ஆதிக்க சக்தியினரும் கடவுளின் பெயரால் பாமரர்களை சுரண்டி வாழ்ந்த இடைத்தரகர்களும் இதை முழுமூச்சாக எதிர்த்தார்கள்.
இஸ்லாத்திற்கு எதிரான பிரச்சாரங்களையும் இஸ்லாத்தை ஏற்றவர்கள் அடக்குமுறைகளையும் முடுக்கிவிட்டார்கள். கடுமையான சித்திரவதைகளும் கொலைகளும் தொடர்ந்தன. இதனால் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அந்த மக்கள் தங்கள் தாயகமான மக்காவை விட்டு அண்டைப் பிரதேசங்களுக்கு அகதிகளாக குடியேற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. நபித்தோழர்கள் சிலர் யத்ரிப் என்று அறியப்பட்ட எத்தியோப்பியாவை அடைந்த பொது அங்குள்ள அரசரால் அடைக்கலம் கொடுக்கப்பட்டனர். நபிகள் நாயகமும் இன்ன பிற தோழர்களும் மதீனாவில் தஞ்சம் புகுந்தனர்.
இறைவனின் அறிவுரைகள்
இந்த வாழ்க்கையை ஒரு பரீட்சையாக அமைத்துள்ள இறைவன் தன்னை நம்பி வாழ முற்பட்ட நன்மக்களுக்கு அறிவுரையும் ஆறுதலும் கூறும் வண்ணம் அமைந்துள்ளன கீழ்காணும் திருக்குர்ஆன் வசனங்கள்.
= 29:56. நம்பிக்கை கொண்ட என் அடியார்களே! நிச்சயமாக என் பூமி விசாலமானது; ஆகையால் நீங்கள் என்னையே வணங்குங்கள்.
ஆம், நீங்கள் வாழும் இடங்களில் என்னை வணங்கி எனக்குக் கட்டுப்பட்டு ஒழுக்கமாக வாழ்வதற்கு – அதாவது இஸ்லாத்தைப் பின்பற்றி வாழ்வதற்கு – அங்குள்ள அடக்குமுறையாளர்கள் தடை விதிக்கிறார்களா? உங்களை சித்திரவதைகள் செய்து ஒடுக்க நினைக்கிறார்களா? நீங்கள் கவலையே படவேண்டாம். எனது பூமி விசாலமானது. எனவே நீங்கள் என்மீது முழுமையான நம்பிக்கை கொண்டு உங்கள் ஊர்களை அல்லது நாடுகளைத் துறந்து பூமியெங்கும் பரவிச் சென்று எங்கு அமைதியோடு வாழ முடியுமோ அங்கு சென்று வாழுங்கள். எங்கும் நானே இறைவன். உங்களைப் பாதுகாப்பது எனது பொறுப்பு.
o 29:57. ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுகிக்கக் கூடியதே யாகும்; பின்னர் நீங்கள் நம்மிடமே மீள்விக்கப்படுவீர்கள்.
அதாவது, உயிருக்கு பயந்து நீங்கள் கொண்ட கொள்கையை விட்டுக் கொடுக்காதீர்கள். அடக்குமுறையாளர்களுக்கு அடிபணியாதீர்கள். நீங்கள் எங்கிருந்தாலும் மரணம் என்பது விதிக்கப்பட்ட நேரத்தில் உங்களை அடைந்தே தீரும். என் பக்கமே மறுமையில் நீங்கள் விசாரணைக்காக மீள வேண்டியுள்ளது என்பதை மறந்து விடாதீர்கள் என்று நினைவூட்டுகிறான் இறைவன். தொடர்ந்து, ‘நீங்கள் உங்கள் இரட்சகன் காட்டிய பாதையில் உங்களைக் கட்டுப்படுத்திக்கொண்டு நீங்கள் மேற்கொண்ட தியாகங்கள் வீண்போவதில்லை. அவற்றுக்குப் பரிசாக நிரந்தர இன்பங்கள் நிறைந்த சொர்க்கம் வழங்கப்பட உள்ளது’ என்ற நற்செய்தியையும் இறைவன் கூறுவதைப் பாருங்கள்:
o 29:58, 59 எவர்கள் இறைநம்பிக்கை கொண்டு, நற்காரியங்களை செய்கிறார்களோ அவர்களை, சதா கீழே ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும் சுவனபதியிலுள்ள உயர்ந்த மாளிகைகளில், நிச்சயமாக நாம் அமர்த்துவோம்; அவற்றில் அவர்கள் நிரந்தரமாக (நிலைத்து) இருப்பார்கள்; (இவ்வாறாக நற்) செயல்கள் புரிவோரின் கூலியும் பாக்கியம் மிக்கதாகவே உள்ளது. (ஏனெனில்) அவர்கள் பொறுமையைக் கொண்டார்கள்; மேலும் தங்கள் இறைவன் மீதே முழு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள்.
உணவுக்குப் பொறுப்பேற்றிருப்பவன் இறைவன்
சொந்த நாட்டைத் துறந்து அறிமுகமே இல்லாத அந்நிய நாடுகளுக்கு அகதிகளாக புலம்பெயர்ந்து செல்லும் யாரையும் வெகுவாக ஆட்கொள்வது உணவு மற்றும் வாழ்வாதாரம் பற்றிய கவலை. அந்தக் கவலையை எவ்வளவு அழகாக ஆனால் உறுதியான முறையில் நீக்கி அகதிகளுக்கு தன்னம்பிக்கை அளிக்கிறான் பாருங்கள்:
o 29:60. அன்றியும் (பூமியிலுள்ள) எத்தனையோ பிராணிகள் தங்கள் உணவைச் சுமந்து கொண்டு திரிவதில்லை; அவற்றுக்கும் உங்களுக்கும் இறைவன்தான் உணவளிக்கின்றான் – இன்னும் அவன் (யாவற்றையும் செவிமடுப்பவனாகவும் (நன்கு) அறிபவனாகவும் இருக்கின்றான்.
எந்த இறைவன் மீது நம்பிக்கை கொண்டு இஸ்லாத்தை ஏற்றீர்களோ அதே இறைவன் உங்கள் வாழ்வாதாரத்துக்கும் பொறுப்பேற்றுள்ளான். சிறுசிறு சோதனைகள் தலைக் காட்டினாலும் உங்களுக்கு விதிக்கப்பட்ட உணவு உங்களை வந்தடையும் என்பதாக இறைவன் மேற்படி வசனத்தின் மூலம் தெரிவிக்கிறான்.
o நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் : “இறைவன் மீது எப்படி நம்பிக்கை வைக்க வேண்டுமோ, அத்தகைய உண்மையான நம்பிக்கையை வைப்பீர்களாயின் அவன் உங்களுக்கு பறவைகளுக்கு உணவளிப்பது போன்று உணவளிப்பான். பறவைகள் கூட்டை விட்டு காலியான வயிறோடு சென்று, கூட்டுக்குத் திரும்பும் போது வயிறு நிரம்பியவாறு திரும்புகின்றது”. (நூல்: அஹ்மது, திர்மிதீ)