Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

டீன்ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வு! தாயின் கடமை!

Posted on January 15, 2020 by admin

டீன்ஏஜ் பெண்களுக்கு விழிப்புணர்வு!

தாயின் கடமை!

     Dr. ஷ ர் மி ளா       

[ o பெண் குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

o இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

o ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

o பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

o திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.]

    டீன் ஏஜ் பெண்களின் அம்மாக்களுக்கு டிப்ஸ்….  .

     டீன் ஏஜ் பிள்ளைகளிடம் அதை பேசுங்கள்….    

குழந்தைக்கு ஓரளவு விவரம் தெரிய ஆரம்பிக்கிற போதே, அதன் உடல் பாகங்களைப் பற்றியும், அவற்றின் வேலைகளைப் பற்றியும் அந்த வயதுக்குத் தேவையான அளவுக்குக் கற்றுக் கொடுங்கள்.

குளிக்கும் போது அந்தரங்க உறுப்புகளை சுத்தப் படுத்தக் கற்றுக் கொடுங்கள். அந்த இடங்களைத் தொடுவதோ, பார்ப்பதோ அசிங்கம் என்ற மனப்பான்மையை விதைக்காதீர்கள்.

குழந்தை தன் அந்தரங்க உறுப்புகளைத் தொட்டு விளையாடுகிற போது அதைக் கிண்டல் செய்யவோ, திட்டவோ வேண்டாம். அது அதில் ஏதோ விஷயம் இருக்கிறது என்ற எண்ணத்தைக் குழந்தைக்கு உண்டாக்கும்.

குழந்தைக்கு எடுத்த எடுப்பிலேயே கருத்தரித்தல், பிள்ளை பிறப்பு போன்றவற்றைக் கற்றுக் கொடுக்க முடியாது. கதைப் புத்தகங்கள், பூக்கள், விலங்குகள் படங்கள் போட்ட கலர் புத்தகங்களை வைத்துக் கொண்டு, விதையிலிருந்து பூ எப்படி உருவாகிறது என்றும், இது அம்மா கரடி, இது அப்பா கரடி, இது அவங்களோட குட்டி என்றும், குழந்தைக்குப் பாலூட்டும் அம்மாவைக் காட்டியும் மேற்சொன்ன விஷயங்களைப் புரிய வைக்கலாம்.

என் பொண்ணோட டிரெஸ் எனக்கும் சரியா இருக்கும். ரெண்டு பேரும் மாத்தி மாத்திப் போட்டுப்போம். நாங்க அம்மா- பொண்ணு கிடையாது. ப்ரெண்ட்ஸ் மாதிரி என்று சொல்லிக் கொள்வதில் பெருமை இல்லை. செக்ஸ் சம்பந்தப்பட்ட சந்தேகங்களை அம்மாவாகிய உங்களைத் தவிர வேறு யாராலும் குழந்தைக்கு மிகச் சரியாக விளக்க முடியாது. நீங்கள் மறுக்கிற பட்சத்தில், அது அதற்கான விளக்கத்தை வேறு தவறான நபர்களிடமிருந்து பெறக் கூடும்.

    ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள்    

உங்கள் பெண் குழந்தைக்கு விவரம் தெரிய ஆரம்பிக்கிறபோதே எளிய மொழியில் பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்.

உடலின் ஒவ்வொரு உறுப்பைப் பற்றியும், அவற்றின் பயன்கள் பற்றியும் சொல்லிக் கொடுங்கள்.

நல்ல ஸ்பரிசத்துக்கும், கெட்ட எண்ணத்துடனான ஸ்பரிசத்துக்கும் உள்ள வித்தியாசத்தை மகளுக்கு உணர்த்துங்கள்.

யாரும் அவளது அந்தரங்க உறுப்புகளைத் தீண்ட அனுமதிக்கக் கூடாது என்பதைக் கண்டிப்புடன் சொல்லிக் கொடுங்கள்.

ஸ்பரிசத்தில் உள்ள வித்தியாசத்தைப் பெண் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுங்கள். நல்ல எண்ணத்துடன் தொடுவதற்கும், கெட்ட எண்ணத்துடன் தொடுவதற்கும் உள்ள வித்தியாசத்தை அது உணர வேண்டும். கெட்ட ஸ்பரிசத்தை உடனடியாக எதிர்க்கவும் கற்றுக் கொடுங்கள்.

எந்த ஆணாவது அவளைத் தீண்டும் முறையோ, பேசும் முறையோ தவறாகத் தெரிந்தால் உடனடியாக உங்களிடம் தெரியப்படுத்தச் சொல்லுங்கள். அந்த மாதிரி நேரங்களில் அவளைக் குற்றம் சொல்லாமல், அவளுக்கு நீங்கள் துணை இருப்பீர்கள் என்ற தைரியத்தை உண்டாக்குங்கள்.

ஆண் வேலைக்காரர், டிரைவர், நெருங்கிய நண்பர், உறவினர் என எந்த ஆணுடனும் மகளைத் தனிமையில் விட்டுச் செல்லாதீர்கள்.

எங்கேயாவது வழி தவறிக் காணாமல் போனாலும், கண்களில் தென்படுகிறவர்களிடம் உதவி கேட்காமல், போலீஸ்காரரிடமோ, பெண்களிடமோ விசாரிக்கச் சொல்லுங்கள்.

சின்னத்திரையின் ஆக்கிரமிப்பு இன்று ரொம்பவே அதிகம். சானிட்டரி நாப்கின், ஆணுறை, கருத்தடை மாத்திரைகள் என எல்லாவற்றுக்கும் விளம்பரங்கள் வருகிற போது அது என்ன என்று தெரிந்து கொள்கிற ஆர்வம் குழந்தைக்கு வரலாம். உங்கள் குழந்தையின் வயதைப் பொறுத்து, அந்தப் பொருட்கள் பற்றிய அடிப்படை விவரங்களை நாசுக்காக நீங்கள் விளக்கலாம்.

    திருமணத்துக்கு முன்பான செக்ஸ் தவறானது    

இந்தக் காலத்துப் பெண் குழந்தைகள் எட்டு, ஒன்பது வயதிலேயே பூப்பெய்துகிறார்கள். எனவே அவர்களுக்கு முன்கூட்டியே மாதவிலக்கு என்றால் என்ன, அது வந்ததும் என்ன செய்ய வேண்டும், அது பயப்படுகிற விஷயமல்ல என்பதையெல்லாம் எடுத்துச் சொல்ல வேண்டும்.

பருவ வயதை எட்டும் போது ஏற்படுகிற இனக் கவர்ச்சி பற்றியும், அது இயல்பான ஒன்றே என்றும் சொல்லிக் கொடுங்கள். அதை ஒரு சீரியஸான விஷயமாக நினைத்துக் கொள்ள வேண்டியதில்லை என்பதை விளக்குங்கள்.

பருவ வயதை எட்டியதும் உங்கள் மகளுக்கு ஆண்-பெண் உறவு பற்றி விளக்கலாம். அதில் அசிங்கப்படவோ, தயங்கவோ வேண்டியதில்லை. ஆபத்தான சூழ்நிலைகளிலிருந்து அவள் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள அந்த அறிவுரை அவளுக்கு முக்கியம்.

படுக்கையில் சிறுநீர் கழித்தல், அளவுக்கதிமாக உடல் வியர்த்தல், மனச்சோர்வு, பசியின்மை, பயம், தூக்கமின்மை, படிப்பில் கவனமின்மை போன்ற அறிகுறிகள் உங்கள் மகளிடம் தென்பட்டால் அலட்சியம் செய்யாதீர்கள். அவள் பாலியல் ரிதியான தாக்குதலுக்கு உட்பட்டிருந் தாலும்கூட இந்த அறிகுறிகள் இருக்கக் கூடும்.

தவிர்க்க முடியாமல் உங்கள் மகள் அப்படி ஏதேனும் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகி இருந்தாலும், அவளைத் திட்டாதீர்கள். என்ன நடந்தது, எப்படி நடந்தது எனப் பொறுமையாக விசாரியுங்கள். அடுத்து அவளுக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள். எதிர்காலத்தில் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்துங்கள்.

திருமணத்துக்கு முன்பான செக்ஸ் ஏன் தவறானது என்றும், அது எந்தளவுக்குப் பெண்களை பாதிக்கும் என்றும், அதன் பின் விளைவுகள் என்னவென்றும் உங்கள் மகளுக்கு எச்சரிக்க வேண்டும். அதைத் தவிர்த்து ஏன் கூடாது என்பதற்கான விளக்கம் சொல்லி விட்டால் அதுவே அவர்களுக்கு விழிப் புணர்வைத் தரும்.

    பெண் வயசுக்கு வந்தாச்சா…. ?   

உடல் மாற்றங்கள்:

பெண் வயதுக்கு வருகிற வயது தலைமுறைக்குத் தலை முறை மாறிக் கொண்டே வருகிறது. 13 முதல் 16 வயது பூப்பெய்தும் காலம் என்றாலும், பரம்பரைத் தன்மை, உணவுப் பழக்கம் போன்ற விஷயங்களைப் பொறுத்து அந்த வயது கூடவோ, குறையவோ செய்யலாம். ரொம்பவும் வெப்பமான சூழலில் வாழும் பெண்கள் தாமதமாகவே பூப்பெய்துகிறார்கள் என்று தெரிகிறது.

பெண்ணின் 13-வது வயதில் சினைப் பையில் சினைமுட்டைகள் வளரத் தோன்றும். இது ஆணின் உயிரணுவுடன் சேர்ந்து கரு முட்டையானால், கரு தங்கி வளர்வதற்கு ஏற்ற வகையில் தயாராக இருக்கும். அப்படி இணையாமல் போகிற போது கருப்பையினுள் கருத்தரிப்பிற்காக செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகள் கலையத் தொடங்கும். அப்படிக் கலைகிற போது ரத்த நாளங்களில் இருந்து இரத்தம் கசியும். இத்துடன் சேர்ந்து கருப்பையின் உள்வரிச் சவ்வுப் பகுதியும், சிதைந்த சினை முட்டையும், கருப்பையின் முகப்பின் வழியே வடிந்து, பெண்ணின் பிறப்புறுப்பின் வழியே வெளியேறும். இதையே மாதவிலக்கு என்கிறோம்.

மாதவிலக்கு சுழற்சியானது நான்கு வாரங்களுக்கு ஒரு முறையோ, 28, 29 நாட்களுக் கொரு முறையோ, மாதம் ஒரு முறையோ வரும். ஒரு பெண்ணின் வாழ் நாளில் சுமார் 400 முறைகள் மாத விடாய் வரும். மாத விலக்கின் போது வெளியேறும் இரத்தத்தின் அளவும், மாதவிடாய் நீடிக்கும் நாட்களின் எண்ணிக்கையும் பெண்ணுக்குப் பெண் வேறுபடும்.

பூப்பெய்தும் காலத்து முதல் அறிகுறியாக பெண்ணின் உடலில் சில பகுதிகள் உருண்டு, திரண்டு காணப்படும். மார்பகங்கள், இடுப்பு மற்றும் தொடைகள் லேசாகப் பருக்கும். அக்குள், பிறப்புறுப்பு பகுதிகளில் ரோம வளர்ச்சி தெரிய ஆரம்பிக்கும். மேலுதடு, மார்பகங்களைச் சுற்றி, வயிற்றில் கூட சில பெண்களுக்கு மெல்லிய ரோம வளர்ச்சி தெரியும்.

ஆண்ட்ரோஜென் என்கிற ஹார்மோன், சீபம் சுரக்கும் சுரப்பியையும், வியர்வை சுரப்பியையும் தூண்டுவதன் விளைவால் பூப்பெய்தும் பருவத்துப் பெண்களின் முகத்தில் வலியுடன் கூடிய பருக்கள் தோன்றலாம். அதைக் கிள்ளாமல், அழுத்தாமல் அப்படியே விடுவதே பாதுகாப்பானது. இல்லா விட்டால் அவை முகத்தில் நிரந்தரக் கரும்புள்ளிகளையும், தழும்புகளையும் ஏற்படுத்தி விடும்.

பள்ளியிலோ, வீட்டிலோ நீங்கள் இல்லாத சமயத்தில் உங்கள் மகள் பூப்பெய்தினால், இரத்தப் போக்கைக் கண்டு பயப்படாமலிருக்கவும், அதற்கு என்ன செய்யவேண்டும் என்றும் சொல்லிக் கொடுங்கள். நாப்கின் உபயோகிக்கக் கற்றுக்கொடுங்கள்.

மாத விடாய் பற்றி அவளாகக் கேட்கும் கேள்விகளுக்கு மழுப்பாமல் உண்மையான பதில்களைச் சொல்லுங்கள். இதில் தயக்கத்துக்கோ, கூச்சத்துக்கோ அவசியமே இல்லை.

    மனமாற்றங்கள்:    

ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் புரியாத புதிரான காலக்கட்டம் அவர்களது டீன் ஏஜ் பருவம். விடை தெரியாத பல கேள்விகள் மனதைக் குடைந்தெடுக்கும் பருவம்.

செக்ஸ் தொடர்பான சந்தேகங்கள், குழப்பங்கள் உருவாகும். அவற்றுக்கு விடை தேடும் ஆர்வம் அதிகரிக்கும்.

எல்லோரும் தன்னையே கவனிக்கிற உணர்வு ஏற்படும்.

தன் உடலில் ஏற்படுகிற மாற்றங்களையும், ஆண்களைப் பற்றி எழும் சந்தேகங்களையும் யாரிடமாவது பகிர்ந்து கொள்ளத் தோன்றும்.

பூப்பெய்துதல் என்பது பெண்களுக்கு இயற்கையாக ஏற்படக் கூடிய ஒரு நிகழ்வு. ஆனால் சில பெண்கள் அதை செக்ஸ் உறவில் ஈடுபடுவதற்கான அங்கீகாரமாக நினைத்து வழிதவறிப் போவதுண்டு. வயதுக்கு வந்தது முதல் திருமணம் வரைத் தன்னைக் கட்டுப் பாடாக வைத்திருக்க வேண்டியது அவளது கடமை.

By Dr.ஷர்மிளா

நன்றி: பூபூவையர் பூங்கா.வையர் பூங்க

Note: 

நீடூர் இன்ஃபோவின்    LINK – 5    இல்   ”பூவையர் பூங்கா”   எனும் பெயரில்   டாக்டர் ஷர்மிளா 

அவர்களின் இணையதளத்திற்கு இணைப்பு கொடுத்துள்ளோம்.

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb