மனக் காயம்
Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
யாராவது உங்கள் கண் முன்னால் அடி பட்டு விழுந்தால் என்ன செய்வீர்கள்? உடனே ஓடிச் சென்று அடிபட்டவரை தூக்கி அவரது காயத்துக்கு வேண்டிய முதலுதவி செய்து, பின் தேவையான சிகிச்சை எடுக்கச் சொல்லி அனுப்புவீர்கள் இல்லையா. உங்களுக்கு நேர்ந்தாலும் இதைத்தானே செய்வீர்கள். அடிபட்ட காயம் ஆறும் வரை தேவையான ஓய்வு, மாத்திரை மருந்து என்று எடுத்துக் கொள்வீர்கள். அடிபட்ட இடத்தில் மீண்டும் அடிபடாமல் இருப்பதற்கான தற்காற்புகளையும் செய்து கொள்வீர்கள்.
உடலில் ஏற்படும் காயங்களுக்கு இப்படி அக்கறை எடுத்துக் கொள்ளும் நீங்கள் என்றாவது உங்களுக்கோ உங்களை சுற்றி இருப்பவர்களுக்கோ மனதில் படுகிற அடிகளைப் பற்றியோ அதனால் ஏற்படும் காயங்கள் பற்றியோ, (emotional bleeding) இரத்தக் கசிவைப் பற்றியோ யோசித்திருக்கிறீர்களா?
மனதில் படும் காயங்களும் (emotional injury) உடலில் ஏற்படும் காயங்கள் போன்று கவனிக்கப் பட வேண்டிய ஒன்று தான். இவை வெளியில் தெரியவில்லை என்றாலும் உடல் காயங்களை விட மிக மோசமான விளைவுகளை ஒரு மனிதனின் வாழ்வில் ஏற்படுத்தி விடும்
பெரும்பாலும் மனக்காயங்களை உடனடியாக சரி செய்ய வேண்டும் என நினைக்காமல் அது தங்கள் மனநிலையை, செயல்திறனை எந்த அளவிற்கு பாதிக்கும் என்பதை அறியாமல், தங்களையும் மீறி தங்களுக்குள் சுழன்று வரும் அந்த எண்ணங்களுக்கு வடிகால் தேடாமல், அதை மனதில் பாரமாக அழுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அறிந்தும் அறியாமலும் பலரும் அதை தூக்கி சுமந்து கொண்டிருக்கிறார்கள்.
ஒருவர் தன் மனபாரத்தை இறக்கி விட நினைத்து யாரிடமாவது ‘மனது கஷ்டமாக இருக்கிறது’ என்று சொல்லும் போது, இதன் பாதிப்புகளை பற்றிய சரியான புரிதல் இல்லாத காரணத்தால், கேட்பவர்கள், ‘இதெல்லாம் ஏன் பெரிய விஷயமாக எடுக்கிறீர்கள்’,‘தூக்கி போட்டு விட்டு உங்கள் வேலையைப் பாருங்கள்’,‘காலம் தான் இதற்கு பதில் சொல்லும்’,‘காலம் எல்லாவற்றையும் மாற்றி விடும்’ என்பது போன்ற ரெடிமேட் பதில்களை சொல்லி விட்டு தங்கள் வேலைகளை பார்க்கப் போய் விடுகிறார்கள்.
எமோஷனல் இன்ஜுரியால் பாதிக்கப் பட்டவர்களின் வலியை பிறரால் புரிந்து கொள்ள முடியாது. ஏன் என்றால் அது வெளியில் தெரியும் காயம் அல்ல. அது மட்டுமன்றி, காயத்திற்கான காரணங்கள் ஒவ்வொருவருக்கும் வேறுபடவும் செய்கிறது. ஒருவருக்கு சாதாரணமானதாகத் தெரியும் ஒரு விஷயம் வேறொருவருக்கு மிகப் பெரும் மனக் காயத்தை ஏற்படுத்தி விடுகிறது. தவிர தனக்கென்று வரும் போது தவிக்கும் பலருக்கும் பிறருடைய வேதனை… பெரும்பாலும் சின்ன விஷயத்தையும் அவர்கள் பெரிது படுத்துகிறர்கள் என்றே படுகிறது.
இதனாலேயே, பெரும்பாலானோர் தங்கள் மனக் காயங்களை சரி பண்ண வேண்டும் என்று எண்ணாமல், மற்ற வேலைகளில் கவனம் செலுத்தும் போது அது தானே சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டு, தங்கள் மனதின் காயங்களுக்கு மருந்திடாமலேயே நாட்களை கடத்துகிறார்கள். நாட்கள் செல்லச் செல்ல, ஆறாத காயங்கள் உறுத்தும்போது, மற்ற வேலைகளையும் சரியாக செய்ய முடியாமல் மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள்.
உண்மையில் உங்கள் மனக் காயங்களை மறந்து விட்டு வேறு வேலையில் உங்களை நீங்கள் ஈடுபடுத்திக் கொள்கிறீர்கள் என்பது, நெருப்பை அணைக்காமல் மணல் போட்டு மறைப்பது போன்றதுதான். சிறு காற்றிலும் அந்த தீ மீண்டும் கொழுந்து விட்டு எறியத் தொடங்குவது போல உங்கள் மனக் காயங்களை நல்ல முறையில் தேற்றி ஏற்றுக் கொள்ளாமல், அதற்கான நியாயங்கள் கற்பிக்கப் படாமல் தானே அவை சரியாகி விடும் என விடும் போது, ஏதாவது ஒரு சிறு நிகழ்வோ அல்லது யாராவது செய்யும் சிறு சீண்டலோ மீண்டும் அந்த வருத்தங்களை உங்களுக்குள் கனன்று எழச் செய்து விடுகிறது.
அந்த சந்தர்ப்பங்களில், பொதுவாக, இதை இவர்கள் ஞாபகப் படுத்தாமல் இருந்திருக்கலாமே என்றுதான் தோன்றும். ஆனால், யாரோ ஒருவர் கேட்டதினாலோ அல்லது ஞாபகப் படுத்தியதனாலோ அந்த வலி ஏற்படவில்லை. அந்த நிகழ்வுகள் உங்கள் மனதில் அணைக்கப்படாமல் கிடந்ததினால்தான் ஏற்படுகிறது.
அந்த காயங்களுக்குத் தேவையான சிகிச்சை கொடுக்கப்படும் வரை இது ஒரு தொடர்கதையாகத்தான் இருக்கும்.
சற்றே யோசித்துப் பாருங்கள். இதே போல் ஒரு காயம் உடலின் ஏதாவது ஒரு பகுதியில் ஏற்பட்டால், ‘அது தானே சரியாகிவிடும்’ என்று சொல்லி விட்டு வேறு வேலைகள் பார்ப்பீர்களா?
பொதுவாக மனக் காயங்கள் எதனால் ஏற்படுகிறது என்று பார்த்தால், அவமானங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள், தனிமை, உறவுகளின் புறக்கணிப்பு போன்றவை முதன்மையாக இருக்கின்றன. இவைதான் மனதை தாக்கி மனதில் ஆறாத காயத்தை ஏற்படுத்துகிறது.
இதைப் புரிந்து கொண்டால் இந்தக் காயங்கள் உங்கள் மனதில் ஏற்படாத வகையில் நீங்கள் திடமாகவும் தன்னம்பிக்கையாகவும் இருந்து சுயபச்சாதாபத்திற்கு இடம் கொடுக்க மாட்டீர்கள்.
அவமானம் என்பதோ தோல்வி என்பதோ ஏமாற்றம் என்பதோ நீங்கள் ஒரு விஷயத்தை எப்படி எடுத்துக் கொள்கிறீர்கள் என்பதில்தான் இருக்கிறது.
ஒரு முறை புத்தர் தனது சீடர்களுடன் சென்று கொண்டிருந்த போது எதிரில் வந்த ஒரு பெண் புத்தரை தகாத சொற்கள் கொண்டு திட்டுகிறார். அதைக் கேட்டு எதுவும் சொல்லாமல் புத்தர் அந்த பெண்ணைக் கடந்து செல்கிறார். உடன் வரும் சீடர்கள் புத்தரிடம், ‘புத்தபிரானே, அந்தப் பெண்மணி உங்களை இவ்வளவு மோசமாக திட்டியும் நீங்கள் மறுத்து எதுவும் சொல்லாமல் வருகிறீர்களே’ என்று கேட்கும்போது, புத்தர் ‘எந்த ஒரு பொருளையும் கொடுப்பதற்கு யாருக்கும் அனுமதி இருக்கிறது. ஆனால், அதை பெற்றுக் கொள்வதும் மறுப்பதும் நமது இஷ்டம்தான். அந்த பெண்மணி கொடுத்த பொருளை நான் வாங்கிக் கொள்ளவில்லை. எனவே, அது அவரிடமே இருக்கிறது’ என்று கூறுகிறார்.
இது புத்தர் போன்ற மகான்களுக்கு வேண்டுமானால் சாத்தியப் படலாம், என்னைப் போன்ற சாமான்ய மனிதர்களுக்கு இதெல்லாம் சாத்தியமா என்று நினைக்காதீர்கள். உங்கள் ஆழ்மனதின் மொழி என்பதே காட்சிகள்தான். ஆழ்மனம் எந்த ஒரு வார்த்தையையுமே காட்சியாகத்தான் பார்க்கும். அதை அறிந்திருந்தனாலேயே புத்தரால் அந்த பெண்மணி பேசிய வார்த்தைகளை ஒரு பொருளாக பார்த்து அதனை வேண்டாம் என்று கூற முடிந்தது.
நீங்களும் ஆழ்மனம் இப்படித்தான் செய்திகளை கிரகிக்கிறது என்பதை உணர்ந்து கொண்டால் பிறரது வார்த்தைகளை மட்டுமல்ல செயல்களையும் பொருட்களாக உருவகப் படுத்தி, தேவையானதை எடுத்துக் கொள்ளவும் தேவையில்லாததை அவர்களிடமே வைத்துக் கொள்ளச் சொல்லி விட்டு விடவும் உங்கள் ஆழ்மனதை பழக்கி விடுவீர்கள்.
எதையும் உணர்வு பூர்வமாக அனுகும் போது அதன் நன்மையும் தீமையும் உங்களுக்குள் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும். பொதுவாக மகிழ்ச்சியான மனநிலையை உணர்வு பூர்வமாக அனுபவிப்பதை விட்டும் அதை நீங்கள் பொருளில் தேடுகிறீர்கள். வருத்தங்களை வேண்டாத பொருளாக தூக்கி வெளியே வீசுவதை விட்டும் அதை உணர்வு பூர்வமாக மனதில் பாதுகாத்து வைக்கிறீர்கள்.
உங்களுக்கு தெரியுமா.. நீங்கள் எதை விரும்புகிறீர்கள், எதை வெறுக்கிறீர்கள் என்பதை ஒரு சிறு வரையறைக்குள் கொண்டு வந்து அதனை உங்கள் மனதில் ஏற்றி விட்டால் போதும். பின்னர் எந்த சந்தர்ப்பத்திலும் உங்கள் மனம் உங்களுக்கு விருப்பமானவற்றை மட்டுமே தேடித் தேடி தனக்குள் தேக்கி வைக்கும். உங்களுக்கு விருப்பமில்லாதவற்றை தானே புறக்கணித்து விடும். உங்களுக்கு விருப்பான ஒன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரகூடியதாக இருக்கிறதா என்று ஊர்ஜிதம் செய்து கொள்ளுங்கள். மனம் ஆரோக்யமாக இருக்கும்.
Dr.Fajila Azad
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com FB: fajilaazad.dr youtube: FajilaAzad