இணைந்திருங்கள்
Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
[ பெரும்பாலும் யாரோ ஒருவரை சீராடுவதற்கும் யாரோ சிலரோடு போராடுவதற்கும் மட்டுமே ஒன்று சேர பழகி இருக்கிறோம்.
வெற்றி என்பது மகிழ்ச்சி என்றும், ஒருவனின் தோல்வி மற்றவனின் வெற்றி என்பதும் விளையாட்டின் விதிகளாக இருக்கலாம். வாழ்வின் விதி வேறு. அது உனக்கும் எனக்குமாக சேர்ந்து பகிர்ந்து உண்பதையே மகிழ்ச்சி என்கின்றது.
விற்பவனின் இலாபம் வாங்குபவனின் ஆதாயம் எனும் win-win கொள்கையே வாழ்வின் உன்னதம், மகிழ்ச்சியின் மூலதனம்.
ஒருவரின் திறமை என்பது அவருக்கானது மட்டுமல்ல. life is balancing. உன்னிடம் இருப்பதை நீ கொண்டு வா என்னிடம் இருப்பதை நான் தருகிறேன் என்று ஒருவருக்கொருவர் இணக்கமாக பகிர்ந்து கொள்ளும்போது எல்லோருடைய தேவையும் இனிதே நிறைவேறுகிறது.]
இணைந்திருங்கள்
நீங்கள் ஒரு சவாலை சந்திக்கத் தயாராக இருக்கிறீர்களா…? உண்மையை சொல்லப் போனால் இது உங்களுக்கு மட்டுமான சவால் அல்ல. ஒட்டுமொத்த நம் சமுகத்துக்கானது. நம் அனைவரின் வளர்ச்சிக்கானது. அதாவது போட்டி போடுவதற்கு போட்டி போட்டு பழகிக் கொண்டிருக்கும் நாம், நம் சமுகத்தோடு, ஒன்றுபட்டு உழைத்து, இணைந்து வெற்றி பெற்று, மகிழ்ச்சியோடு பகிர்ந்து வாழ பழகி பார்க்கலாமா?
பெரும்பாலும் யாரோ ஒருவரை சீராடுவதற்கும் யாரோ சிலரோடு போராடுவதற்கும் மட்டுமே ஒன்று சேர பழகி இருக்கிறோம், வேற்றுமையில் ஒற்றுமை, ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றி பிடியுங்கள், ஒன்று பட்டால் உண்டு வாழ்வு எனும் நல்மொழிகளெல்லாம் இன்று பழ(மை)மொழிகளாகிக் கொண்டிருக்கின்றன.
சிறு குழந்தை, ஒன்று இரண்டு என்று எண்களை கற்றுக் கொள்ளத் தொடங்கும்போதே அங்கே நம்பர் ஒண்ணுக்கான போட்டியும் ஆரம்பமாகி, வேலை அலுவலகம் என்று அது விடாது தொடர்கிறது. பலநேரம், எல்லோரையும் தவிர்த்து விட்டு, எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு, நான்ஸ நான் மட்டுமே, எனது.. எனக்கு மட்டுமே என்று முண்டியடித்து முன்னேறுபவன் வெற்றி பெற்றவனாக முன் நிறுத்தப்பட, மற்றவர்கள் பின் தங்கிப் போனவர்களாக சித்தரிக்கப் படுகிறார்கள், படிப்பில் மட்டுமல்ல சமுகத்திலும்.
சேர்ந்து உண்டு, சேர்ந்து பேசி, சேர்ந்து வேலை செய்து, சேர்ந்து கற்று, சேர்ந்து மகிழ்ந்த காலங்கள் எல்லாம் இந்த நம்பர் ஒன் வேட்டையில் நசுங்கிக் கொண்டிருக்கிறது. சுய மரியாதை, சுய கௌரவம், சுய பச்சதாபம், சுய பிரதானம் என ஒவ்வொரு சுயமும் அன்புமயமான இந்த உலகத்தை ஒவ்வொரு தனித் தீவுகளாக கூறு போட்டு பிரித்துக் கொண்டிருக்கிறது.
வெற்றி என்பது மகிழ்ச்சி என்றும், ஒருவனின் தோல்வி மற்றவனின் வெற்றி என்பதும் விளையாட்டின் விதிகளாக இருக்கலாம். வாழ்வின் விதி வேறு. அது உனக்கும் எனக்குமாக சேர்ந்து பகிர்ந்து உண்பதையே மகிழ்ச்சி என்கின்றது. விற்பவனின் இலாபம் வாங்குபவனின் ஆதாயம் எனும் win-win கொள்கையே வாழ்வின் உன்னதம், மகிழ்ச்சியின் மூலதனம்.
தென்னாப்ரிக்காவில் கூட்டாக சேர்ந்து விளையாடிக் கொண்டிருந்த பழங்குடி சிறுவர்களைக் காணும் மேலைநாட்டு பயணி ஒருவருக்கு அவர்களை வைத்து வேறு ஒரு விளையாட்டு விளையாடத் தோன்றுகிறது. பழங்களையும் சாக்லேட்களையும் பிஸ்கட்களையும், ஒரு கூடையில் அடுக்கி தூரத்தில் வைத்து விட்டு, அந்த சிறுவர்களை வரிசையாக நேர் கோட்டில் நிற்க செய்து உங்களில் யார் வேகமாக முந்தி சென்று அந்த கூடையயை நெருங்கி நம்பர் ஒண்ணாக வருகிறார்களோ அவர்களுக்கு அந்த கூடையும் அதில் உள்ள பொருட்களும் பரிசாக அளிக்கப் படும் என்கிறார்.
ரெடி.., ஸ்டெடி.., கோ..! என்றவுடன் அது வரை சேர்ந்து விளையாடிய அந்த சிறுவர்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதி வெற்றி தளத்தை அடைய முயலும் என நினைத்தவருக்கு பெரும் ஏமாற்றம். அந்த சிறுவர்கள் அத்தனை பேரும் ஒருவர் கையை மற்றொருவர் பிடித்துக் கொண்டு சேர்ந்து சென்று, கூடையை நெருங்கி பொருட்களை எடுத்து ஒருவருக்கொருவர் பகிர்ந்து மகிழ்கிறார்கள்.
எதிர்பாராத இந்த திருப்பத்தைக் கண்டு திகைத்த அந்த பயணி ஏன் இப்படி செய்தீர்கள் என்று கேட்டபோது அந்த சிறுவர்கள் கூட்டாக சொல்கிறார்கள், வாழ்வில் நம்முடன் ஒன்றாக பயணிப்பவர்கள் தோற்று நம் முன் நிற்க தனி ஒருவன் மட்டும் தன் வெற்றியை எப்படிக் கொண்டாட முடியும், தன்னை சுற்றி இருப்பவர்களை கவலையோடு தலை குனிய விட்டு விட்டு தான் மட்டும் எப்படி தலை நிமிர முடியும்.. நான் நானாக இருப்பதற்கு நான் மட்டும் காரணம் அல்ல. ஒருவன் இல்லாமல் மற்றவன் இல்லை. வெற்றி எல்லோருக்கும் பொதுவானது என்கிறார்கள்.
இந்த இனிமையான மனித நேய பாடத்தை எங்கே கற்றார்கள் அந்த சிறுவர்கள். உண்மை என்னவென்றால் அந்த பண்புதான் மனிதனின் பிறப்பியல்பு. இயல்பை மீறிய சிந்தனைகளை தான் ஏதோ ஒரு தேடலின் போது இயல்பாக நம்மை தொற்றிக் கொள்ள விடுகிறோம். பெரும்பாலும் நாம் தனித்து நிற்க முயற்சி செய்யும், நம் வாழ்க்கை பயணத்தில் நம்மையுமறியாமல் நம் இனிய தனித்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோம். இருந்தும் மனிதம் நமக்குள் சுரந்து கொண்டிருக்கிறது.
மனிதமே மகிழ்ச்சி எனும் அந்த மந்திரத்திற்கு நம் மனதை தீர்க்கமாக உட்டுபடுத்தவில்லையென்றால், அது பல தந்திரங்களை செய்து நம்மை எந்திரமாக்கி விடும். போட்டிக்கு ஆள் இல்லையென்றால் நான் எப்படி வெற்றி மகுடம் சூட்டிக் கொள்வது என்று எதிரிகளை அது உருவாக்கி விடும். உன் நண்பன் யாரென்று சொல் நீ யாரென்று சொல்கிறேன் என்று கேட்டது போய் என் எதிரி யார் தெரியுமா என்று பறை சாற்றிக் கொள்வதில் கர்வம் கொள்ள செய்யும் மனம், நம்முடைய ஒவ்வொரு வெற்றிக்கும் நம்மோடு இணையும் கைகளை விட, நம்மை உசுப்பேற்றி உறுவேறச் செய்யும் எதிரிகளை இனங் காணத் தொடங்கி விடும் என அச்சுறுத்துகிறது வாழ்வியல்.
மேலை நாட்டின் இன்றைய ஆய்வுகள் ஸ்ட்ரெஸ்ஸை நல்லது என்கிறது. ஏன் தெரியுமா?! ஸ்ட்ரெஸ் வரும் போது ஆக்ஸிடோசின் என்ற சோஷியல் ஹார்மோன் சுரக்கும். இது மற்றவர்களுடன் இயைந்து பழகத் தூண்டும். அப்படி சோசியலைஸ் பண்ணும் போது ஸ்ட்ரெஸ் குறையும் ஒற்றுமை கூடும் என்கிறார்கள். இயற்கை இப்படி இருக்க அதை விட்டும் ஸ்ட்ரெஸ் வரும் போது தன்னம்பிக்கையும் சமுக நம்பிக்கையும் இழந்து தனிமைப் படும்போது ஆக்சிடோசின் செயல் இழந்து மனஅழுத்தம் அதிகமாகி அதனாலேயே பலருக்கும் மகிழ்ச்சி குறைகிறது என்கிறது மனஇயல்
மனிதர்களை ஹியுமன் ரேஸ் (human race) என்று அழைப்பது ஒருவரோடு ஒருவர் போட்டி போட்டு யார் வெற்றி பெறுகிறார்கள் என்று பார்ப்பதற்கல்ல, ஒருவரை ஒருவர் பகையாளியாக பார்க்காமல் நட்போடு கை கோர்த்த எங்கள் உழைப்பே எங்கள் வெற்றியின் மூலகாரணம், இது ஒரு தனி மனித வெற்றி அல்ல எங்கள் அனைவரின் வெற்றி, இணைந்து செயல்படுங்கள் உங்கள் கனவுகள் நனவாகும் என்கிறார் ஐரோப்பிய சாதனையாளர் ரிச்சர்ட் பிரான்ஸன்.
வாழ்வின் அன்றாட செயல்களில் இயைந்து இருக்க வேண்டிய மனித நேய உணர்வு பல நேரம் போட்டி மனப் பான்மையால் நீர்த்துப் போய் பேரிடர் காலங்களில் மட்டும் சட்டென்று வெளிப்படும் இன்ஸ்டன்ட் இரக்கமாக சுருங்கிப் போயிருக்கிறது. நீறு பூத்த நெருப்பாக அமிழ்ந்திருக்கும் மனிதத்தை புரிந்து சற்றே அதை நிரடி விட்டால் போதும் ஒரு சொம்புக்குள் சுருக்கி வைத்திருக்கும் மனிதம் பொங்கிப் பிரவாகமெடுக்கும் கங்கை வெள்ளமாய் இந்த உலகை நனைத்து விடும்.
ஒருவரின் திறமை என்பது அவருக்கானது மட்டுமல்ல. life is balancing. உன்னிடம் இருப்பதை நீ கொண்டு வா என்னிடம் இருப்பதை நான் தருகிறேன் என்று ஒருவருக்கொருவர் இணக்கமாக பகிர்ந்து கொள்ளும்போது எல்லோருடைய தேவையும் இனிதே நிறைவேறுகிறது. மகிழ்ச்சியும் அங்கு பலமடங்காகிறது. எது வேண்டும் நமக்கு..?!
Dr.Fajila Azad
(International Life Coach – Mentor – Facilitator)
fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad
source: https://mail.google.com/mail/u/0/?tab=lm#inbox/FMfcgxwGCbCPlNKmZLjjgGXSCMSxSJvV