Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

அவதூறு -Dr.ஃபஜிலா ஆசாத்

Posted on December 25, 2019 by admin

அவதூறு

    Dr.Fajila Azad, (International Life Coach–Mentor–Facilitator)    

“நீ இப்படி செய்தாயாமே..?”

உங்கள் மீது பழிச் சொல்லை சுமந்து வரும், நீங்கள் செய்யாத ஒன்றை, செய்ததாக குற்றம் சொல்லும் இந்த கேள்வியை எதிர் கொள்ளாதவர்களே இல்லை எனலாம்.

உங்களிடம் கேட்கப் படும் அந்தக் கேள்வி உங்களுக்குள் பெரும் குழப்பத்தையே ஏற்படுத்தி விடும். அதிலும், உங்கள் மீதான அந்த பழிச் சொல்லை உங்களிடம் கொண்டு வருபவர் உங்களுக்கு வேண்டியவராக இருந்தால் ‘you too Brutes’ என்ற நினைவைத் தருவதோடு உங்கள் தன்னம்பிக்கையையும், மனிதர்கள் மேல் உள்ள நேசத்தையும், நேர்மறையான உங்கள் சிந்தனைகள் எல்லாவற்றையுமே அது அசைத்துப் பார்க்கும்.

ஒரு முனிவரிடம் செல்வந்தர் ஒருவர், தான் தன் பங்காளி மீது இல்லாத பழி ஒன்றை சுமத்தி விட்டதாகவும் அது தன் மனதை உறுத்திக் கொண்டிப்பதாகவும் வருந்தி, அதற்கான பரிகாரம் தேட முன் வந்ததாக சொல்கிறார். அதைக் கேட்ட முனிவர் அவரிடம் ஒரு பஞ்சு மூட்டையைக் கொடுத்து அந்த பங்காளியின் வீட்டின் முன்னால் அதைக் கொட்டிவிட்டு வந்து பார்க்கச் சொல்கிறார்.

அவ்வாறே செய்து விட்டு செல்வந்தர் முனிவரிடம் திரும்பி வர முனிவரோ, அவரிடம் கொட்டிய அனைத்து பஞ்சையும் மீண்டும் மூட்டையில் கட்டி எடுத்து வரச் சொல்கிறார். திகைக்கும் செல்வந்தர் அப்போதே அது காற்றில் பல திக்கும் பறந்து சென்று விட்டதே. இப்போது எப்படி திருப்பி எடுத்து வர முடியும் எனக் கேட்க, முனிவர் அவரிடம் ‘ஒருவர் பற்றி பேசுவதும் அப்படித்தான். அதை நீங்கள் தவறு என்று பின்னால் வருந்தினாலும் அவர்களுக்கு ஏற்பட்ட பாதிப்பை உங்களால் நிவர்த்தி செய்ய முடியாது’ என்று எடுத்து சொல்கிறார்.

இப்படி போகிற போக்கில் யாரோ எதையோ எளிதில் கொட்டிவிட்டு சென்று விடலாம். ஆனால் அது பல திக்கும் சென்று, பாதிக்கப் பட்டவர்களை நிச்சயம் பலவகையில் கொட்டிக் கொண்டே தான் இருக்கும். அவர்கள் மீது சிந்தப் பட்ட அந்த நெருப்பு வார்த்தைகள் விட்டு விலகமுடியாத வீரியத்தோடு தினம் தினம் அவர்கள் மனதை சுட்டுக் கொண்டே இருக்கும். அவர்கள் மனம் ஆறவே செய்யாது. மகிழ்ச்சியற்று தவிக்கும். அதை செய்தவர்களாலும் நிவர்த்தி செய்ய முடியாது.

ஆனால், அவதூறு என்பது விழும் இடத்தை மட்டும் பாதிக்காது அது எழும் இடத்தையும் சத்தமில்லா நீர்க்கசிவாக வெடிக்கச் செய்து விடும். வீண் பழிச் சொல்லால் பிறருக்கு ஏற்படுத்தும் பாதிப்பின் வேர் யாரிடமிருந்து செல்கிறதோ அவர்கள் மனதில் பெரும் அழுத்தத்தை கொடுக்கும். அவர்களையுமறியாமல், அவர்களுக்குள் எழும் குற்ற உணர்ச்சி பிறரிடம் பகிர்ந்து கொள்ளவும் முடியாமல் ஆழ்மனதில் புகைந்து கொண்டே இருக்கும். அது அவர்களுக்குள் பல பின் விளைவுகளை ஏற்படுத்தும். அதனால், தங்களுடைய வார்த்தைகளோ செய்கைகளோ பிறரை எந்த விதத்தில் பாதிக்கும் என்பதை ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்து பேசாதவர்கள் கூறும் அவதூறுகள், கால ஓட்டத்தில் அவர்கள் தங்களுக்கு தாங்களே கொடுத்துக் கொள்ளும் தண்டனையாகவே முடிகிறது.

பெரும்பாலும், பழிச் சொல் வந்து தாக்கும் போது, இப்படி ஒரு செய்தி நம்மைப் பற்றி ஊரெல்லாம் வந்து விட்டதே இனி என்ன செய்வது என்று நிலை குலையச் செய்வதாகத் தான் இருக்கும். நீங்கள் இது வரை சேர்த்து வைத்த உங்கள் நல்ல மதிப்பும் பேரும் புகழும் ஒரே நேரத்தில் காட்டு வெள்ளத்தில் அடித்து செல்லப் பட்ட சொத்துக்கள் போல் அடித்துச் செல்லப் பட்டுவிட்டதாகத் தான் தோன்றும்.

ஆனால், நிதானம் இழந்து பதட்டத்தில் அத்தகைய அவதூறுகளை நீங்கள் பொய் என உடனே நிரூபிக்க அவர்கள் வழியிலேயே முயன்றால் அது உங்களை உங்கள் வாழ்க்கைப் பாதையிலிருந்தும் வேறு சூழலுக்குள் இழுத்து சென்று அதன் சுழலில் சுழற்றி விட்டு விடும்.

பொய்க் குற்றச் சாட்டை பரப்புவதற்கும், அதை நம்புவதற்கும் பெரிதான ஆதாரங்கள் யாருக்கும் தேவை இருக்காது. சக மனிதர்களுக்குள் இயல்பாக இழைந்து கொண்டிருக்கும் சிறு காழ்ப்புணர்வே அதற்குப் போதுமானது. ஆனால், ‘உண்மை இல்லை’ என மறுப்பதற்கு ஆயிரம் ஆதாரங்கள் தேவைப்படும். அவை நிதர்சனமற்ற கேள்விகளால் துளைக்கப்படும்.

நீங்கள் அந்த அவதூறு ‘பொய்’ என்று சொன்னவுடன் ‘நெருப்பு இல்லாமல் புகையுமா’ என ஆரம்பித்து ‘பின் ஏன் அப்படி அவர்கள் சொன்னார்கள்’ என்று தொடர்ந்து ‘அந்த நேரத்தில் அது இப்படி நடந்ததாமே’ என்று உங்களிடம் கேள்விக் கனைகள் நீளும் போது, அஸ்திவாரம் இல்லாத ஒரு சீட்டுக்கட்டின் மாளிகை போல உங்கள் ஸ்திரத் தன்மை உங்கள் முன்னாலேயே சரிந்து விழும். ஒரு நில நடுக்கத்தில் ஆடிப் போகும் பூமியாக நீங்கள் ஆடி போய் விடுவீர்கள்.

இது தான் அந்த அவதூறைக் கிளப்பி விட்டவர்களின் நோக்கம். எனவே, எத்தகைய அவதூறு உங்களைப் பற்றி பரப்பப் பட்டாலும் அது உங்கள் மனதை பாதிக்காதவாறு முதலில் திடமாக இருங்கள். இப்படி அவதூறுக்கு ஆளாகுவது அனைவருக்கும் பொதுவானது தான் என்பதை உங்களுக்குள் சொல்லிக் கொண்டு முதலில் மூச்சை உள்ளிழுத்து வெளியே விட்டு உங்களை நீங்கள் ஆசுவாசப் படுத்துங்கள்.

இந்த அவதூறு வந்ததாலேயே நீங்கள் தவறானவராக ஆகி விட மாட்டீர்கள். அது எவ்வளவு சிரமமானதாக இருந்தாலும் கையாளப் படக்கூடிய விஷயம் தான் என்பதை உணர்ந்து எதற்கும் உடனே ரியாக்ட் பாண்ணாமல் ரெஸ்பான்ட் பண்ண முடிவு செய்யுங்கள். அது உங்களைப் பற்றிய ஒன்று என்றாலும் அதை சற்று தள்ளி வைத்து ஒரு மூன்றாம் கோணத்தில் அனுகி சரி செய்யப் பாருங்கள் உங்கள் கேரக்டரையே மாசு படுத்தி விட்டார்களே என்று வருந்தி உங்கள் கேரக்டரை விட்டு விட்டு அவர்கள் லெவலுக்கு இறங்கிப் போய் விடாதீர்கள்.

இது எங்கிருந்து வந்திருக்கும், என்ன எதிர்பார்த்து இப்படி செய்யப் படுகிறது, எய்தவன் ஒருவனாக இருக்க அம்பு உங்கள் முன் வந்துள்ளதா? என்று எதையும் நிதானமாக அனுகி உங்கள் தரப்பு நியாயங்களை எடுத்து சொல்லுங்கள். அல்லது அதற்கான காலம் கனிந்து வரும் வரை அந்த நிகழ்வை சற்றே உங்களை விட்டும் தள்ளி வைத்து விட்டு மற்ற வேலைகளில் உங்கள் கவனத்தை செலுத்துங்கள். உண்மைதான் பல நேரம் உங்களைப் பற்றி வந்த அவதூறுகள் இல்லையென்று நிரூபணமாகி விட்டாலும், பட்ட அவமானமும் அந்த நேர மரண அவஸ்தையும் இனி எப்படி நிவர்த்தி செய்ய முடியும் என்பதாகவே தோன்றும். மழை விட்டும் தூவானம் விடாததாக மனதை நிம்மதியற்று தவிக்கச் செய்யும்.

வருந்தாதீர்கள்.. அதற்கும் தீர்வு இருக்கிறது. சூப்பர் இம்போசிங்க் டெக்னிக் பற்றி நீங்கள் அறிவீர்களா. அதாவது கசப்பான ஒன்றை தவறுதலாக சாப்பிட்டு விட்டீர்கள் என்றால் உடனே அந்த கசப்பு சுவையை நீக்குவதற்காக தண்ணிரை அருந்துவீர்கள். இனிப்பான ஒன்றை உடனே சாப்பிடுவீர்கள். அதே போல் கசப்பான எண்ணங்களை மாற்றுவதற்கேற்ப ஒரு பிராக்டிஸாக நேர்மறை எண்ணங்களை, இனிமையான சந்தர்ப்பங்களை, நீங்கள் வெற்றி பெற்ற தருணங்களை, மகிழ்ச்சியான நிமிடங்களை நினைத்துப் பாருங்கள் அப்படி எதுவும் உடனே உங்கள் நினைவிற்கு வரவில்லை என்றால் கூட ஒன்றை நல்ல முறையில் நடந்ததாக கற்பனை செய்யுங்கள்.

மூளையின் லாஜிக்கல் பகுதியோடு அதன் கிரியேட்டிவிட்டி பகுதியையும் தேவையான முறையில் பயன்படுத்திக் கொண்டால், எந்த பிரச்னையையும் கடந்து வரக் கூடிய நிதானம் உங்களுக்குள் எழும். பிரச்னைகள் சுமுகமாக நீங்கி அங்கு மகிழ்ச்சி மலரும்.

மறந்து விடாதீர்கள்… அந்த விரும்பாத ஒரு நிகழ்வும் உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. அது ஒன்று மட்டும் உங்கள் வாழ்க்கையில் நடந்து விடவில்லை.

Dr.Fajila Azad

fajila@hotmail.com FB:fajilaazad.dr youtube:FajilaAzad

Dr. ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்

source:   https://mail.google.com/mail/u/0/#inbox/FMfcgxwGCQcWhMwxGSvXdtlJntCTvhJC

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 86 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb