நாம் என்ன செய்ய வேண்டும்?
மக்தூம் தாஜ், சென்னை
நம்மைச் சுற்றி என்ன நடந்து கொண்டிருக்கிறது?
ஏன் நடந்து கொண்டிருக்கிறது?
இந்த ஆட்சியாளர்களின் திட்டம்தான் என்ன?
முஸ்லிம்களை எதிர்ப்பவர்களே ஆட்சிக்கட்டிலில் அமர்கிறார்களே?
தொடர்ந்து முஸ்லிம்களுக்கு ஏன் இத்துணைப் பிரச்னைகள்?
முஸ்லிம்கள் நிம்மதியாக வாழ முடியாதா?
பயங்கரவாதிகள், பிற்போக்குவாதிகள், மதவெறி பிடித்தவர்கள், மதமாற்றம் செய்பவர்கள், மததுவேசத்தை பரப்புபவர்கள், தேசதுரோகிகள் என்றெல்லாம் முஸ்லிம்களின் மீது அடுக்கடுக்காக பழிகள் சுமத்தப்படுகிறதே!
இஸ்லாமிய நாடுகளிலும் கூட குழந்தைகள், பெண்கள், தாய்மார்கள், இளைஞர்கள், முதியவர்கள் கொல்லப்படுகிறார்களே? பள்ளிவாசல்கள் இடிக்கப்படுகிறதே? வீடுகள் அழிக்கப்படுகிறதே? குண்டு மழைகள் கொத்துக்கொத்தாக இறக்கப்படுகிறதே? முஸ்லிம்கள் தொடர்ந்து சோதனைக்கு உள்ளாக்கப்படுகிறார்களே? இவ்வாறு ஒவ்வொருவரின் உள்ளத்திலும் கேள்விக் கனைகள் பாய்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் என்ன பதில்? இப்பொழுது சொல்லுங்கள் “நாம் என்ன செய்ய வேண்டும்?”
இந்த பூமியில் அன்பை விதைத்து, அமைதியை வளர்த்து, சகோதரத்துவத்தை சுவைத்து, மனிதநேயத்தை மிளிர்த்து அல்லாஹ்வையும் அவனது தூதரையும் அகிலத்திற்கு அறிமுகம் செய்து அல்லாஹ்வின் ஆட்சியை பூமிக்கு பறைசாற்ற வேண்டிய சமுதாயம் இன்று அரக்கர்களின் கையில் ஆட்சியை பறிகொடுத்திருக்கிறது. உலகத்தை ஆள வேண்டிய முஸ்லிம்கள் இன்று அழ வேண்டிய தருணத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
சமூக வலைதளங்களில் ஈமான் கொண்டவர்களுடைய கண்ணீர்க் குரல்களின் ஊடுருவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது. ஃபிர்அவ்னையே எதிர்த்து வெற்றிக் கொண்ட சமுதாயம் ஏன் இன்றைய அபுஜஹல்களைப் பார்த்துப் பதறுகிறது என்று புரியவில்லை. தெளிவான தீர்வைக் கண்டு நம்மை நாம் மாற்றிக்கொள்வது காலத்தின் கட்டாயம். ஆனால் தீர்வு என்ன ?
சங்கிலித்தொடராக தொடரும் சோதனைகள்:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்போது நபித்துவப்பட்டம் பெற்று இஸ்லாமிய மார்க்கத்தை இந்த உலகத்திற்கு சொல்ல ஆரம்பித்தார்களோ அன்று முதலே இந்த முஸ்லிம் சமுதாயத்திற்கு சோதனைகள் சோர்வடையாமல் சங்கிலித் தொடராக முஸ்லிம்களை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கிறது.
ஆனால், நபித்தோழர்களும் அவர்களுக்குப் பின் வந்த நல்லோர்களும் இந்த மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்தால் பெரும் சோதனைக்கு ஆளானார்கள். உயிரையும் பொருளையும் குடும்பத்தையும் சொத்தையும் சொந்தத்தையும் பிறந்து வளர்ந்த நாட்டையும் தியாகம் செய்தார்கள். சிறைவாசத்தை அனுபவித்தார்கள். வன்சொல்லாலும் வீண் சொல்லாலும் அவர்களை வதைத்தார்கள். இப்போதும் இதே பிரச்னைகளைத்தான் இன்றைய முஸ்லிம்களும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய கால முஸ்லிம்களும் அன்றைய கால முஸ்லிம்களும் சங்கிலித் தொடராக சோதிக்கப்பட்டாலும் சோதிக்கப்பட்ட கருப்பொருளில் ஒரு முக்கியமான சிந்தித்தறிய வேண்டிய திருத்த மாற்றம் இருக்கிறது. ஆம்! அவர்கள் சோதிக்கப்பட்டது அல்லாஹ்வை சரியான முறையில் வணங்கி வாழ்ந்தார்கள் என்பதற்காக! நாம் சோதிக்கப்படுவது அல்லாஹ்வை சரியான முறையில் வணங்கி வாழவில்லை என்பதற்காக!
மேற்கூறியவற்றில் சிறிதளவு வார்த்தையில் வித்தியாசம் இருந்தாலும் வாழ்க்கையில் அவர்களுக்கும் இன்றைய முஸ்லிம்களுக்கும், மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசத்தைப் போன்று. அவர்கள் கஷ்டத்திலும் நஷ்டத்திலும் துயரத்திலும் துன்பத்திலும் இடுக்கிலும் இழிவிலும் உரிய முறையில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பேணி வாழ்ந்தார்கள் அதனால் எதிரிகளால் அதிகமாக சோதிக்கப்பட்டார்கள்.
இன்றைய முஸ்லிம்கள் வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும் உரிய முறையில் இஸ்லாமிய மார்க்கத்தைப் பேணி வாழ்வதில்லை. அதனால் எதிரிகளால் அதிகமாக சோதிக்கப்படுகிறார்கள். அந்த நல்லோர்கள் அல்லாஹ்வை வணங்குவதில் தங்களுக்கு ஏற்பட்ட சோதனையை சகித்துக் கொண்டதால் அவர்களுக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்தான். அதிகாரத்தைக் கொடுத்தான். அமைதியைக் கொடுத்தான். மகிழ்ச்சியைக் கொடுத்தான். சொர்க்கம் உங்களுக்கு உண்டு என்ற சுபச்செய்தியையும் அறிவித்துக் கொடுத்தான். இன்றைய முஸ்லிம்கள் அல்லாஹ்வை உரிய முறையில் வணங்கி வாழாததாலேயே சோதிக்கப்படுகிறார்கள் என்றால், பின்னர் எங்கிருந்து அல்லாஹ்வின் வெற்றியை எதிர்பார்க்க முடியும்.
“(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர்கள் ஒருவருமில்லை. உங்களை அவன் (கை)விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்?” (அல்குர்ஆன்-3.160)
ஆட்சி வேண்டுமா? அதிகாரம் வேண்டுமா?
“எங்கள் அல்லாஹ்வே! எல்லா தேசங்களுக்கும் அதிபதியே! நீ விரும்பியவர்களுக்கு ஆட்சியைக் கொடுக்கின்றாய். நீ விரும்பியவர்களிடமிருந்து ஆட்சியை நீக்கி விடுகின்றாய். நீ விரும்பியவர்களை கண்ணியப்படுத்துகின்றாய். நீ விரும்பியவா்களை இழிவுபடுத்துகின்றாய் நன்மைகள் அனைத்தும் உன் கையில் இருக்கின்றன. நிச்சயமாக நீ அனைத்தின் மீதும் பேராற்றலுடையவன்.” (அல்குர்ஆன்-3.26)
முஸ்லிம்களுக்கு ஆட்சி வேண்டுமா? அதிகாரம் வேண்டுமா? அமைதியும் பாதுகாப்பும் வேண்டுமா? பயமற்ற வாழ்க்கை வேண்டுமா? அதற்கு படைத்த இறைவன் ஒரு வழியைக் காட்டித் தந்திருக்கிறான். ஆர்ப்பாட்டங்கள் தேவையில்லை, போராட்டங்கள் தேவையில்லை, அரசியல் அனுபவங்களும் தேவையில்லை, பெண்களையும் தாய்மார்களையும் சாலைகளுக்கு கொண்டு வரத்தேவையில்லை, ஆளும் வர்க்கத்திடம் அடங்கிப்போகத் தேவையில்லை. அடிவாங்கத் தேவையில்லை. மிதிவாங்கத் தேவையில்லை. ஒரே ஓர் இறைவசனத்தை ஆழப்படித்து அதன்படி ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகமும் தங்களை மாற்றிக் கொண்டால் போதும்.
அல்லாஹ் கூறுகின்றான்
“(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால்,
அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் புமிக்கு) அதிபதிகளாக்கியது போன்று இவர்களையும் நிச்சயமாகப் புமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும்,
அவன் விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும்,
அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும்
நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கின்றான்.
(அன்றி) அவன் தன்னையே வணங்கும்படியாகவும், யாதொன்றையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கின்றான்.
இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகிவிட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும்பாவிகள்தாம். (அல்குர்ஆன் 24:55)
உண்மையிலேயே இந்த இறைவசனத்தின்படி ஒரு சமூகம் வாழ்ந்து விட்டு சென்றிருக்கிறது. அவர்கள்தான் நபித்தோழர்கள். அவர்களை அல்லாஹ் ஆட்சியாளர்களாக்கினான். அச்சத்திலிருந்து அப்புறப்படுத்தினான். அமைதியை அளித்தான். மார்க்கத்தில் உறுதியாக்கினான். எனவே, இனி நாம் செய்ய வேண்டியது இதுதான்.
நபித்தோழர்கள் எவ்வாறு ஈமான் கொண்டார்களோ, அவர்கள் எவ்வாறு நற்செயல்கள் புரிந்தார்களோ அந்த வழிமுறையை நம் வழிமுறையாக கடைப்பிடிக்க வேண்டும். இந்த வழிமுறையின் பக்கம் மக்களை அழைத்திட வேண்டும். ஏனெனில் சிறந்த சமுதாயம் என்றும், பொருந்திக் கொள்ளப்பட்டவர்கள் என்றும், சிறந்த முஃமின்கள் என்றும் அல்லாஹ்வால் சான்றளிக்கப்பட்டவர்கள் ஸஹாபாக்கள். அல்லாஹ்வின் தூதரால் கல்வி பயிலப்பட்டவர்கள்.
நேர்வழியின் அளவுகோலாக எதுவென்று கேட்கப்பட்டபோது, தானும் தன் தோழர்கள் இருக்கும் வழிதான் நேர்வழி என்று பிரகடனப்படுத்தினார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள். அப்படிப்பட்ட நபித்தோழர்கள் குர்ஆனையும் ஹதீஸையும் புரிந்து வாழ்ந்த முறையை நம் வழிமுறையாக ஏற்றுக் கொள்ள வேண்டும். மார்க்க விழுமங்கள் அனைத்திலும் அவர்களின் புரிதலுக்கு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டும். தெளிவான அகீதாவை கற்றுக்கொள்ளல் வேண்டும். அதன்படி வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். நன்மையை ஏவி, தீமையை தடுப்பதில் உள்ள உயர்நிலை அம்சமான தவ்ஹீதை ஏவி ஷிர்க்கை தடுக்கும் பணியை வாழ்க்கையின் முக்கியக் குறிக்கோளாகக் கையிலெடுக்க வேண்டும்.
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் ஒரு கூட்டத்தார் (மனிதர்களை) சிறந்ததின் பக்கம் அழைத்து நன்மையைச் செய்யும்படி ஏவி, பாவமான காரியங்களிலிருந்து அவர்களை விலக்கிக் கொண்டும் இருக்கவும். இத்தகையவர்கள்தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 3:04)
கவலை வேண்டாம்! பயம் வேண்டாம்!
வானங்கள், பூமி, சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள், அண்டங்கள் மற்றும் மலக்குகள், மனிதர்கள், மலைகள், மரங்கள், ஜின்கள், கடல்கள், உயிரினங்கள் என அல்லாஹ்வைத் தவிர அல்லாஹ்வால் படைக்கப்பட்ட அனைத்தும் அல்லாஹ்வுக்கே சொந்தம். அவன்தான் பேராட்சியாளன், பெருமதிபதியாளன். அப்படிப்பட்ட அல்லாஹ் மனிதர்கள் வாழ்வதற்கு வழிகாட்டிய மார்க்கம்தான் இந்த இஸ்லாம். இது அல்லாஹ்வின் கருணையாளும், அருளாளும், அங்கீகாரத்தாலும் நிறைந்துள்ளது. அவனிடத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரே மார்க்கம் இஸ்லாம்.
“நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கம் இஸ்லாம்தான். (அல்குர்ஆன் 3:19)
“இன்றைய தினம் நாம் உங்களுக்கு உங்களுடைய மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என்னுடைய அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்து விட்டோம். உங்களுடைய இந்த இஸ்லாம் மார்க்கத்தைப் பற்றியும் திருப்தியடைந்தோம்.“ (அல்குர்ஆன் 5:3)
இந்த அளவு கண்ணியம் பொருந்திய இஸ்லாம் என்னும் அசைக்க முடியாத பலமுள்ள மரத்தின் பல லட்ச கிளைகளில் இலைகளாக முஸ்லிம் மக்களாகிய நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மரத்தை வேரோடு வெட்டி வீச வேண்டும் என்று எண்ணி எதிரிகள் முயன்று முடியாததால் கல்லெடுத்து கிளைகளின் மீது அடிக்கிறார்கள். பலவீனமான ஈமானுள்ள இலைகள் சில கல்லடிகளால் விழுந்தும் வீழ்ந்தும் விடுகின்றன. ஆனால் ஈமானில் உறுதிபடைத்த இலைகளை எந்த கல்லடியாலும் உதிரவைக்க முடியாது. அந்த இலைகள் தங்களின் விடா முயற்சியால் கனிகளாக மாறிக்கொண்டிக்கின்றன. எனவே, படைத்த இறைவனின் உண்மை பிரதிநிதிகளை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது.
“(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள். (அல்குர்ஆன் 3:139)
இக்காலச் சூழ்நிலையில் சூனியக்காரர்களுக்கும் மூஸா(அலை) அவர்களுக்கும் நடந்த போட்டி நினைவு வருகிறது. சூனியக்காரர்கள் தடிகளை எறிந்து பாம்பு போல நெளிய வைத்தார்கள். ஆனால் அது பாம்பு இல்லை. பின்பு மூஸா(அலை) அவர்கள் தடியைப் போட்டார்கள். அது உண்மையான பாம்பாகவே மாறி மற்றதை விழுங்கிவிட்டது. அதுபோன்று தற்கால வஞ்சகர்கள் அநீதி, அராஜகம், அக்கிரமம், மததுவேசம், ஊழல், கொலை, கொள்ளை இது போன்ற அசத்தியம் என்னும் தடிகளைக் கொண்டு மக்களை உண்மையான பாம்புதான் என்று அச்சுறுத்துகிறார்கள். எனவே, நாம் சத்தியம் என்னும் நிஜ தடியைக் கொண்டு இந்த அசத்திய பாம்புகளை விழுங்கிட வேண்டும்.
“அன்றி, சத்தியம் வந்தது அசத்தியம் மறைந்தது. நிச்சயமாக அசத்தியம் அழிந்தே தீரும். என்றும் கூறுங்கள். (அல்குர்ஆன் 17:81)
“இன்னும் , அவர்கள் தங்கள் இறைவனின் திருப்பொருத்தத்தைக் கோரி (எத்தகைய கஷ்டத்தையும்) பொறுமையுடன் சகித்துக் கொள்வார்கள். தொழுகையையும் கடைபிடிப்பார்கள். நாம் அவர்களுக்கு அளித்தவற்றை ரகசியமாகவும் வெளிப்படையாகவும் (நல்வழியில்) செலவு செய்வார்கள். நன்மையைக் (கைக்) கொண்டே திமையைத் தவிர்த்து விடுவார்கள். இத்தகையவர்களுக்கு (மறுமையில்) நல்ல முடிவு உண்டு. (அல்குர்ஆன்-13.22)
மனிதர்களை வழிகெடுத்து நரகத்திற்கு இட்டுச் செல்வேன் என்று அல்லாஹ்விடத்தில் சவால் விட்ட ஷைத்தானையே அல்லாஹ்வின் அருளால் சமாளித்துக் கொண்டிருக்கும் உண்மை முஸ்லிம் சமூகம் இந்த சாதாரண எதிரிகளைக் கண்டு என்றும் அஞ்சாது.
நாம் செய்ய வேண்டியது இதுதான்!
நாம் செய்ய வேண்டியது உடனடியாக வீட்டிற்கு ஓர் அழைப்பாளரை தயார்படுத்த வேண்டும். தெளிவான அகீதா, திறம் கொண்ட வாய்மை, நிறைவான கல்வி, நிலையான நற்குணங்கள் ஆகியவைகளைக்கொண்ட அழைப்பாளர் சமூகத்தை உருவாக்க வேண்டும். உருவாக வேண்டும். அவரவர் தத்தம் பகுதிகளிலுள்ள மக்களுக்கு இஸ்லாமிய அழைப்பு கொடுக்கும் பொறுப்பை கையிலெடுக்க வேண்டும். நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டும். குறிப்பாக கெட்ட பண்புகளை விட்டொழிக்க வேண்டும். நேரத்தை நேர்த்தியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். பகைமையை தூக்கியெறிந்து சகோதரத்துவத்தை நிலை நிறுத்த வேண்டும். இவையனைத்தையும் உடனடியாக செயல்படுத்தவது காலத்தின் கட்டயாம். ஆனால் அதில் பொறுமையும் சகிப்புத்தன்மையும் மிக அவசியம்.
“நீங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அல்லாஹ்வுடைய (வேதம் என்னும்) கயிற்றை பலமாகப் பற்றிப்பிடித்துக் கொள்ளுங்கள். (உங்களுக்குள் தர்க்கித்துக் கொண்டு) நீங்கள் பிரிந்திட வேண்டாம்.” (அல்குர்ஆன் 3:103)
“நம்பிக்கையாளர்களே! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடியுங்கள். ஒருவருக்கொருவர் சகித்துக் கொள்ளுங்கள். எந்நேரமும் தயாராக இருங்கள். அல்லாஹ்வுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். நீங்கள் (இம்மையிலும் மறுமையிலம்) வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 3:200)
அல்ஜன்னத் மாத இதழ் (01.12.2016)
source: http://www.islamkalvi.com/?p=109471