வரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரமல்ல…
அது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும்
[ தஞ்சை மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். நாகூர் ஆண்டகை தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும், அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர்.
இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம், மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக முஸ்லீம்கள் இருப்பதன் காரணம் இதுதான். அதேபோல இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பிராமண இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு நாகூரில் முடி இறக்குவதைக் காணலாம்.
வடக்கு மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள். இருப்பினும் அனைவரிடத்திலும் பெண் கொடுத்தல் எடுத்தல் உண்டு.]
எனக்கு என்னுடைய குடும்பப் பாரம்பரியம் கிட்டத்தட்ட எட்டு தலைமுறைகளாகத் தெரிந்திருக்கின்றது. அதாவது என் மகள் துவங்கி அதற்கு முன்னாள் உள்ள ஏழு தலைமுறை மூத்தோர்கள்.
என் மகள்களின் தந்தையான அப்துல்லாஹ்வாகிய நான், என் தந்தையார் இஸ்மாயில், அவர் தந்தையார் காதர் பாட்சா, அவரது தந்தையார் முஹம்மது இப்ராஹிம், அவரது தந்தையார் நத்தர் சாஹிப்,அவரது தந்தையார் சையது அப்துல்காதர், அவரது தந்தையார் கருப்பையா ராவுத்தர். இதில் இந்த கருப்பையா ராவுத்தர் பிறப்பால் கருப்பையாத் தேவராக இருந்தவர்.
ஒரு விவசாயியாக அமைதியான எளிமையான ஒரு வாழ்க்கை முறையை வாழ்ந்து வந்தவர். குற்றப் பரம்பரைச் சட்டம் வந்தபோது அதில் பாதிக்கப்பட்ட இவர் அதில் இருந்து மீள்வதற்காக முஸ்லீமாக மதம் மாறியிருக்கின்றார். இவர் மட்டுமல்ல புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாடு, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் இன்று உள்ள முஸ்லீம்களில் பலரும் இதே காரணத்திற்காக அன்று மதம் மாறியவர்களே.
மதம் மாறிய கிருஸ்துவர்கள் இன்னமும் மோசஸ் பிள்ளை, செபஸ்டியன் நாடார், மைக்கேல் உடையார் என்று சாதிய அடையாளங்களைத் விடாமல் தொடரும் நிலையில், மதம் மாறிய முஸ்லீம்கள் முற்றிலும் தங்கள் ஜாதி அடையாளங்களைத் துறந்துவிட்டனர். கடற்கரை ஓரப் பகுதிகளில் உள்ள முஸ்லீம்கள் மீனவ(செம்படுவ) சமுதாயத்தில் இருந்து இஸ்லாம் வந்தவர்கள்.
தஞ்சை மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் பிராமணர்களாய் இருந்து மாறியவர்கள். நாகூர் ஆண்டகை தஞ்சைத் தரணியை வந்து அடைந்தபோது அவரது உரையாலும், அற்புதங்களாலும் ஈர்க்கப்பட்ட எண்ணற்ற பிராமண சமூகத்தினர் கூட்டம், கூட்டமாக இஸ்லாம் மார்க்கத்தைத் தழுவினர். இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் அக்ரகாரம், மங்கலம் என்று முடியும் பல ஊர்களில் பிராமணர்களுக்குப் பதிலாக முஸ்லீம்கள் இருப்பதன் காரணம் இதுதான். அதேபோல இன்றைக்கும் தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல பிராமண இல்லங்களில் பிறக்கும் குழந்தைகளுக்கு நாகூரில் முடி இறக்குவதைக் காணலாம்.
வடக்கு மாவட்ட முஸ்லீம்களில் பெரும் பகுதியினர் தலித் சமுதாயத்தில் இருந்து வந்தவர்கள். இருப்பினும் அனைவரிடத்திலும் பெண் கொடுத்தல் எடுத்தல் உண்டு.
சரி இதை விடுவோம். மீண்டும் என் பரம்பரை அடையாளத்துக்கு வருகின்றேன்.
அந்த கருப்பையா ராவுத்தரின் உடன்பிறந்தவர்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை. அதேபோல சையது அப்துல்காதர் மற்றும் அவரது மகன் நத்தர் சாஹிபின் உடன் பிறந்தவர்கள் பற்றி எந்தத் தகவலும் இல்லை.
முஹம்மது இப்ராஹிமின் உடன் பிறந்தோர் காதர்மீரா ராவுத்தர் மற்றும் அப்துல் ரஹ்மான் ராவுத்தர் (இதில் காதர்மீரா ராவுத்தர் புதுக்கோட்டை சமஸ்தானத்தில் எம்.எல்.சி யாக பதவி வகித்தவர். இவர் மறைவிற்குப்பின் அவரது நேரடி வாரிசுகள் மைனர்களாக இருந்ததால் அந்தப் பதவி வாரிசு பதவியாக என் தந்தையின் தந்தை காதர் பாட்சா ராவுத்தருக்கு வந்தது. அவர் மறைவிற்குப்பின் என் அப்பா மைனராக இருந்ததால் அப்பாவின் சித்தப்பா முஹம்மது பாவாவிற்கு சென்றது. இவர் பதவியில் இருந்தது 2 ஆண்டுகள் மட்டுமே. காரணம் அப்போது தனி நாடான புதுக்கோட்டை இந்தியாவுடன் இணைந்து இந்தியன் யூனியனில் அங்கமாகிவிட்டது) மற்றும் அப்துல் ரஹ்மான் ராவுத்தர்.பெண் வாரிசுகள் மூன்று பிறந்து சிறு வயதிலேயே இறந்துவிட்டன.
இப்போது அண்ணன் தம்பிகளான முஹம்மது இப்றாஹிம் ராவுத்தர், காதர்மீரா ராவுத்தர் மற்றும் அப்துல்ரகுமான் ராவுத்தர் ஆகிய இந்த மூன்று பேரின் வழித்தோன்றல்களான நாங்கள் 216 பேரும் (இதில் சமீபத்திய வரவு அபுதாபில் உள்ள என் சித்தப்பா மகனுக்கு 2 மாதம் முன்பு பிறந்த பெண் குழந்தை. சமீபத்திய மறைவு என் அப்பாவின் சித்தப்பாவும் 1940 களில் சென்னை மாகாண ரஞ்சி கிரிக்கெட் அணி வீரருமான தாத்தா நத்தர் சாஹிப்) இன்று வரை ஒருவொருக்கொருவர் ஒருவர் நல்ல தொடர்பில் உள்ளோம். ஏதேனும் விஷேசங்கள் என்றால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தவிர மற்ற அனைவரும் ஒன்றுகூடி விடுவோம்.
எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள். இது மட்டும் போதும் என்று நிறுத்திவிட்டேன். இதில் என் அம்மாவிற்கு மிகவும் வருத்தம். காரணம் பரம்பரையின் பெயர் சொல்ல எனக்கு ஆண் வாரிசு இல்லாமல் போய்விட்டதாம். வாழ்க்கையில் சாதித்த காலம்போய் வாழ்வதே சாதனையாகிவிட்ட இன்றைய நாளில் வாரிசு என்பது ஆணா? பெண்ணா? என்ற வாதத்தில் எனக்கு உடன்பாடு இல்லை.
சரி நமது மூதாதையர்கள் மற்றும் ஒன்றாம், இரண்டாம், மூன்றாம் தலைமுறைப் பங்காளிகளை, பெண் குடுத்த வகையில் வரும் சொந்தங்களைத் தெரிந்து வைப்பதால் என்ன பயன் என்ற கேள்வி எழலாம்.
பரம்பரையாக இத்தனை பேர்களை நினைவில் வைத்துக்கொள்ள நாங்கள் ஒன்றும் சோழ வம்சம் அல்ல. கருப்பையா ராவுத்தர் காலம் துவங்கி இன்று வரை ஒரு சாதாரண குடும்பம்தான். ஆனால் இத்தனை ஆண்டு வரலாறு எனக்குச் சொந்தம் எனும்போது எந்தத் தவறுகளும் என்னால் எளிதில் செய்ய முடிவதில்லை. காரணம் என்னை எனது தலைமுறை தவறுகளால் நினைவுகூர்ந்து விடக்கூடாது என்ற எண்ணம். நமது வேர்களைத் தெரிந்து வைத்துக்கொள்வதில் இது ஒரு பெரும் பயன்.
வரலாறு என்பது ஆட்சியாளர்கள் படைப்பது மாத்திரம் அல்ல… அது சாமானியனின் சரித்திரமாகவும் இருக்கட்டும்.
– சாம்ராஜ்