புவி நிர்வாணம்
நூருத்தீன்
உலகளாவிய முறையில் புரட்சி(!!!). புவி நிர்வாணம் நடைபெற்று வருகிறது. அனேகமாக மேற்கில் தொடங்கியிருக்க வேண்டும். இப்பொழுது கிழக்கு, தெற்கு, வடக்கு என்று உலகின் அனைத்துத் திசையிலும் இதன் தாக்கம்தான்.
பெரும்பான்மையான மக்களின் மூளைக்குள் யாரோ வாஷிங்மெஷினைப் பொருத்தியதைப்போல், சலவைச் சுத்தமாய் அந்தப் புரட்சிக்கு ஆதரவு.
அப்படியென்ன புரட்சி? புவியாகப்பட்ட இக்கிரகத்தில் மனிதனாகப்பட்ட ஆறறிவு படைப்புகள் குற்றம், பாவம், அட்டூழியம் என என்னென்னவோ அனாச்சாரங்கள் புரிந்துகொண்டிருக்கிறார்களே, அதையெல்லாம் சட்டமியற்றி முற்றிலுமாய்த் தடுக்க இயலவில்லையே என யோசித்தார்கள் மேன்மக்கள். அவர்களுக்கு அற்புத யோசனை உதித்தது.
‘ஒன்றும் பாதகமில்லை; அனைத்தையும் சட்டமியற்றி அங்கீகரித்துவிட்டால்? தீர்ந்தது விஷயம்!!!’
நமக்குப் புரியும்படியான எளிய உதாரணம் சொல்வதென்றால், ‘மது’ தப்பு, பாவம், தீங்கு என்று நம்மிடம் குத்துமதிப்பாய் ஓர் அனுமானம் உள்ளது. அதை, ‘சொன்னால் கேட்கிறார்களா இந்தக் குடிமக்கள்? குடித்தே தீருவேன் என்று நிற்கிறார்களே’ என்று திட்டிவிட்டு அரசாங்கமே சப்ளை செய்து லாபம் பார்க்கிறார்கள் இல்லையா, அதைப்போல்தான்.
இப்படி உருவாகியுள்ள புரட்சியினூடே நடைபெறும் மற்றொரு பக்கவிளைவு, அழிக்கப்படும் சொரணை. அதாவது, ஒரு விஷயத்தை insensitive ஆக்குவது.
சென்னைக்குப் புதிதாய் வருபவருக்குத்தானே கூவம் ‘கப்பு’. அதன் கரையோரம் வாழ்பவர்களுக்கு? உதாரணமாய்ப் பார்த்த மது எளிய போதை. அதைவிட மகா போதையான சமாச்சாரம் ஒன்று உண்டு. மாது!
இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு முன் ஒருநாள். கனடா நகரிலுள்ள டொராண்டோ நகர் காவல்துறை அதிகாரி ஒருவர், “பெண்கள் ஒழுக்கமற்றவளைப் போன்ற (slut) உடை அணியாதிருந்தால் வன்புணர்வுக்கு ஆட்படுவதைத் தவிர்க்கலாம்” என்று சொல்லிவிட்டார். கொதித்துவிட்டார்கள் பெண்கள்.
பாலுறவுக்கு அப்பட்டமான சுதந்தரம் உள்ள மேலைநாடுகளில், கட்டுப்பாடுகள் அற்ற படுக்கை உறவுகள் ‘வாயேன் பழகிப் பார்க்கலாம்’ ரீதியில் இயல்பான ஒன்று. அங்குள்ள அரசாங்கங்களைப் பொறுத்தவரை மனிதனின் தனிப்பட்ட உரிமை இது. அனுமதித்துவிட்டால் ஆடி, ஓய்ந்து சலித்துப்போய், இயற்கைத் தேவை அடங்கிவிடும்; பாலியல் குற்றங்கள் குறைந்துவிடும் என்பது அவர்களது சித்தாந்தம். ஆனால் வன்புணர்வு குற்றங்கள் அத்தகைய நாடுகளிலும் சகஜம்; அதிகம் என்பதுதான் காலம் உணர்த்திவரும் அப்பட்டமான மெய்.
‘ஏன் இப்படி’ என்று அந்த காவலதிகாரி எங்கோ அமர்ந்து நிதானமாக யோசித்திருப்பார் போலிருக்கிறது. அந்தரங்க அங்கங்களை பகிரங்கமாகக் காட்டியும் தூண்டியும் உலாவரும் மங்கையர்களிடமும் கொஞ்சம் தப்பு இருக்கத்தான் செய்கிறது என்று தாம் நினைத்ததைச் சொல்லிவிட்டார்.
குளிருக்குப் பாதுகாவலாய் ஜாக்கெட் அணிவதைத் தவிர, குளிரற்ற பருவங்களில் ரவிக்கை, தாவணி, மாராப்புத் துணி அறியாத மங்கையர்களுக்கு அது தாளவில்லை.
‘என்ன நினைத்துக்கொண்டிருக்கிறான் இந்த ஆணாதிக்க அதிகாரி’ என்று கொதித்தவர்கள் ஒரு முடிவுக்கு வந்தார்கள்.
Cat walk போல் slut walk என்று ஒன்றை அறிவித்துவிட்டார்கள். Slut walk என்பதை ஒழுக்கமற்றவளின் நடைப் போராட்டம் என்று சுமாராக மொழிபெயர்க்கலாம்.
இந்த நடைப்போராட்டம் அமெரிக்காவின் குறிப்பிட்ட நகரங்களில் இப்பொழுது ஆண்டுதோறும் நடைபெறுகிறது. என்ன செய்கிறார்கள்? இருப்பதிலேயே குறைவான ஆடையாகப் பார்த்து தேர்ந்தெடுத்து அணிந்துகொண்டு, அவர்களது கருத்துகளை, வாசகங்களை பலகைகளில் ஏந்திக்கொண்டு தெருவில் இறங்கி கூச்சல், பேரணி, காமாந்திரச் செயல்கள் என்று நகரின் அந்தப் பகுதி அதகளப்படும்.
I’m Sexy –
It’s not an invitation
A Short dress is not a yes
Ask me what I’m asking for
It’s rude to stare
Believe it or not but my outfit has nothing to do with you
It’s my hot body, I do what I want
It’s a dress not a yes.
போன்றவை பதாகைகளின் வாசகங்கள்.
அவர்களது கருத்துகள் எளிதானவை.
படுப்பது என் இஷ்டம்;
அவிழ்த்துப்போட்டுத் திரிவது என் உரிமை.
‘நீ பொத்திக்கிட்டுப் போ!’
இயற்கை ஆண்பாலாருக்கு ஏற்படுத்தியுள்ள ஹார்மோன்களுக்குச் சவால்.
ஆபாசம், திருமண பந்தத்தை மீறிய பாலுறவு, ஒரேபால் உறவு போன்றவை அக்கிரமம், குற்றம், பாவம் என்ற அந்தஸ்துகளை இழக்கும் அவலத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறது உலகம். இந்த மனோநிலைதான் இப்பொழுது உலகம் எங்கும் பரவி விரவி வருகிறது. ஷேம் என்ற வார்த்தைக்கு இனி ‘பப்பி ஷேம்’, ‘அடல்ட் ஷேம்’ என்று எந்த அர்த்தமுமில்லை.
கற்கால மனிதர்களுக்காவது வெட்கம் இருந்திருக்கும். இலை, தழையால் மறைக்க வேண்டியதை மறைத்துக்கொண்டார்கள். நிகழ்கால மனிதர்களோ அதே இலை, தழை அளவுள்ள உடைகளைக்கொண்டு, மறைக்க வேண்டியதை எடுப்பாய்க் காட்டுவதே நாகரீகத்தின் உச்சம் என்று சொல்லிக்கொண்டு திரிகிறார்கள். இதை என்னவென்பது?
சுயநலத்திற்காகவோ, சபலத்திற்காகவோ இந்தத் தீங்கைத் தடுக்க, மனிதர்களுக்கும் விருப்பமில்லை. ‘அட, இந்த அலங்கோலம் காமக் குற்றங்களுக்கு வித்திடுகிறதே’ என்று குற்றப்பட்டியலின் விபரங்கள் உரத்துக் கூவினால், குற்றமிழைத்தவனுக்கான தண்டனைகள் மட்டும் அலசப்பட்டு, ஆபாசங்களை நியாயப்படுத்த சட்டங்கள் முனைந்து நிற்கின்றன. வங்கியின் பேழைகளை அகலத் திறந்து வைத்துவிட்டு, கொள்ளையனை மட்டும் குற்றம் சொல்லும் நியாயம் நடைபெறுகிறது.
ஏடிஎம் அட்டையும் கடவு எண்ணும் பாதுகாப்புப் பெட்டகத்தின் சாவியும் யார் வீட்டு வாசலிலாவது தொங்குவதைப் பார்த்திருக்கிறீர்களா? கற்புடைமை என்பது பணம் காசைவிட சல்லிசாகத் தெருவில் கிடக்கிறது. அந்தரங்கங்களை சொரணை மழுங்கச் செய்யும் insensitivity எனும் சூழ்ச்சி வெற்றி அடைந்துவருகிறது.கண்ணைத் தாழ்த்து; ஆபாசத்தைப் பொத்து என்பது இறைவனின் எளிய அறிவுரை.
அடங்க மறுத்து பாலுறவு குற்றங்களில் ஈடுபட்டால், பால் பேதமையின்றி கடுமையான தண்டனை என்பதும் இறைவனின் கட்டளை.
அவையெல்லாம் காட்டுமிராண்டிச் சட்டம் என்று அறிவித்துவிட்டு அம்மணமாய்த் திரிகின்றன மனிதன் இயற்றிய சட்டங்களும் மந்தைகளாய் மனிதர்களும்.
அரசன் எப்படியோ தெரியாது. ஆனால், இறைவன் நீதி வழுவான்.
-நூருத்தீன்