புல் விற்றாவது வலீமா விருந்து கொடுக்க நாடிய ஆண் சிங்கம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை திருமணம் செய்துகொள்வதற்கு பலரும் விருப்பம் தெரிவித்தார்கள்.
குறிப்பாக நபியின் உற்ற நண்பர்களான அபு பக்கர் ரளியல்லாஹு அன்ஹு, உமர் ரளியல்லாஹு அன்ஹு ஆகியோரும் விருப்பம் தெரிவித்தார்கள்.
ஆனால் நபியவர்களோ அந்த இருவருக்கும் பாத்திமா அவர்களை தீருமணம் செய்து வைக்கவில்லை. சில காரணங்களினால் மறுத்துவிட்டார்கள்.
அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டவுடன் அதனை ஒத்துக் கொண்டார்கள்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹாவை அவர்களை திருமணம் செய்த அலீ பின் அபீதாலிப் ரளியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு திருமணம் செய்ததற்கான வலீமாவை கொடுப்பதற்கு வசதியில்லாமல் இருந்தது. அதனால் தான் தன்னிடம் இருந்த இரண்டு கிழட்டு ஒட்டகங்களையும் எடுத்துக் கொண்டு புல் விற்பதற்காக செல்கிறார்கள்.
புற்களை விற்றாவது தனது வலீமாவைக் கொடுக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களை மிகைத்திருந்தது.
அந்தச் சந்தர்ப்பத்தில் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சற்றும் எதிர்பாராத ஒரு சம்பவம் அங்கு நடந்தேறியது.
அலீ பின் அபீதாலிப் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறியதாவது: பத்ருப் போரில் கிடைத்த பொருட்களில் (எனது பங்காக) அல்லாஹ்வின் தூதருடன் சேர்ந்து கூட்டாக ஒரு முதிர்ந்த வயதுடைய ஒட்டகம் எனக்குக் கிடைத்தது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எனக்கு மற்றொரு (கிழட்டு) ஒட்டகத்தையும் கொடுத்திருந்தார்கள்.
ஒரு நாள் அவ்விரண்டையும் நான் அன்சாரி ஒருவரின் வீட்டு வாசலுக்கருகே அமரச் செய்தேன். இத்கிர் புல்லை விற்பதற்காக அதன் மீது ஏற்றிக் கொண்டுவர நான் விரும்பியிருந்தேன். அப்போது பனூ கைனுகா குலத்தைச் சேர்ந்த பொற் கொல்லன் ஒருவன் (புல் வாங்கி ஏற்றிக் கொண்டு வர உதவியாக) என்னுடன் இருந்தான்.
ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை மணம் புரிந்த வலீமா விருந்திற்காக அந்தப் புல் விற்ற பணத்தைப் பயன்படுத்த நான் நாடியிருந்தேன். (நான் என் ஒட்டகத்தை வாசலில் அமரச் செய்திருந்த) அந்த வீட்டில் (என் சிறிய தந்தை) ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் மது குடித்துக் கொண்டிருந்தார்.
அவருடன் ஓர் அடிமைப் பாடகியும் இருந்தாள். அவள் ஹம்ஸாவே! இந்த முதிர்ந்த பருத்த ஒட்டகங்களைக் கொன்று (உங்கள் விருந்தாளிகளுக்குப் பரிமாறி) விடுங்கள் என்று பாடினாள். உடனே ஹம்ஸா அவர்கள் அந்த இரு ஒட்டகங்களின் மீதும் பாய்ந்து அவற்றின் திமில்களை வெட்டி இடுப்பைக் கிழித்தார்கள். பிறகு அவற்றின் ஈரல் குலைகளை வெளியே எடுத்துக் கொண்டார்கள். அருவருப்பூட்டிய அந்த பயங்கரக் காட்சியை நான் கண்டேன்.
உடனே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் சென்றேன். அப்போது அங்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் ஸைத் பின் ஹாரிஸா அவர்களும் இருந்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் நடந்த (நிகழ்ச்சியின்) செய்தியைக் கூறினேன். உடனே அவர்கள் ஸைத் பின் ஹாரிஸா அவர்களுடன் புறப்பட்டார்கள். அவர்களுடன் நானும் சென்றேன். ஹம்ஸா அவர்களிடம் சென்று தமது கோபத்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வெளிப்படுத்தினார்கள்.
ஹம்ஸா அவர்கள் தமது பார்வையை உயர்த்தி நீங்கள் என் முன்னோர்களின் அடிமைகள் தாமே? என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அவர்களை விட்டு அப்படியே (திரும்பாமல்) பின்னோக்கி நடந்து வந்து வெளியேறி வந்து விட்டார்கள்.
(இந்த நிகழ்ச்சி மதுபானம் தடை செய்யப்படுவதற்கு முன்பு நடந்தது.)
அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஜுரைஜ் ரஹ்மதுல்லாஹி அலைஹி கூறுகிறார்கள்:
நான் அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களிடம் திமில்களின் இறைச்சியையுமா (ஹம்ஸா அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள்) எடுத்துக் கொண்டார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் ஆம் அவ்விரண்டின் திமில்களையும் அவர் வெட்டி எடுத்துக் கொண்டு சென்று விட்டார் என்று கூறினார். (புகாரி – 2375 )
திருமண வலிமா விருந்தை கொடுப்பதற்காக புல் விற்கச் சென்றவரின் ஒட்டகங்களை குடி போதையில் இருந்த ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு, அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் வெட்டி சாய்த்துவிடுகிறார்கள்.
அதைத் தட்டிக் கேட்க வந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தகாத வார்த்தையையும் பேசுகிறார்கள் அந்த சந்தர்ப்பத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்து கொண்ட விதம் இங்கு கவனிக்கத்தக்கது.
ஹம்ஸா அவர்கள் குடி போதையில் இருக்கிறார்கள் என்பதை அறிந்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலதிகமாக ஹம்ஸா ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் பேசாமல் திரும்பி வந்துவிடுகிறார்கள்.
போதையில் இருப்பவனிடம் தனது வீரத்தைக் காட்டக் கூடாது என்பதினால் தான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இப்படி நடந்து கொள்கிறார்கள்.
நற்குணத்தின் பிறப்பிடம் அல்லவா நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்?
”(நபியே!) நீங்கள் சிறந்த நற்குணத்தில் இருக்கிறீர்கள்.” (68 – 04)
மது அருந்துவது தடை செய்யப்படுவதற்கு முன் நடந்த இந்த நிகழ்சியின் மூலம் அலீ ரளியல்லாஹு அன்ஹு தமக்குறிய இரண்டு ஒட்டகங்களையும் இழந்தார்கள்.
ஆனாலும் சிறந்த கவுரவம் கொண்ட ஆண் மகன் என்பதற்கு அடையாளமான புல் விற்றாவது வலீமா கொடுக்க வேண்டும் என்ற அலி அவர்களின் எண்ணம் அனைத்து ஆண்களுக்கும் ஒரு சிறந்த படிப்பினையாகும்.
முழு வரலாறை தெரிந்துகொள்ள…
http://nidur.info/old/index.php?option=com_content&view=article&id=9269