Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

குழந்தையின்மையால் நெருக்கடிக்கு உள்ளாகும் பாலுறவு!

Posted on December 1, 2019 by admin

குழந்தையின்மையால் நெருக்கடிக்கு உள்ளாகும் பாலுறவு!

[ குழந்தையின்மைப் பிரச்சினையால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது தம்பதிகளுக்கிடையேயான பாலுறவு தான் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன.

o தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் பலருக்கு இல்லை. அப்படி என்றால் அதன் மீதான கவர்ச்சியும் இல்லை; ஒரு சடங்கைப் போல அவர்களுக்கிடையேயான பாலுறவு இருக்கிறது.

o இன்றைய சூழ்நிலையில், அதுவும் குறிப்பாகக் குழந்தையின்மை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பாலுறவு என்பதே குழந்தை பெறுவதற்கான உத்தி மட்டுமே என்று பார்க்கப்படுவதால் குழந்தை பெறுவதற்கான சாத்தியம் உள்ள நாட்களில் மட்டுமே பாலுறவு வைத்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

o குழந்தையின்மைக்கான இன்றைய மருத்துவம் அனைத்து வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் உடல் வாதைகளையும் மனவுளைச்சலையும் தரக்கூடியது. பரஸ்பர அன்பும் ஆதரவும் வேறு எப்போதையும்விட மிக அதிகமாக இருவருக்கும் தேவைப்படும் காலகட்டம் அது. அதைக் கொடுக்கும் இடத்தில் இருவரும் இருக்க வேண்டும்.

o நிபந்தனையற்ற உரையாடலும் முதிர்ச்சியான புரிதலும் சமரசமற்ற ப்ரியமும் அதற்கு அவசியமானது. உடல்களுக்கிடையேயான இயந்திரத்தனமான பிணைப்பை மட்டுமே கொண்ட பாலுறவில் அது சாத்தியமில்லை. மாறாக, மன ஒத்திசைவோடு அமைந்த பாலுறவே ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தும்.]

குழந்தையின்மையால் நெருக்கடிக்கு உள்ளாகும் பாலுறவு!

திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகளே ஆன தம்பதியினர் சில நாட்களுக்கு முன்பு என்னைச் சந்திக்க வந்தனர். கணவன் பொறியியல் கல்லூரியில் பேராசிரியராகவும், மனைவி தகவல் தொழில்நுட்ப வல்லுனராகவும் இருப்பதாக அறிமுகப்படுத்திக்கொண்டார்கள். கணவனுக்கு முப்பது வயது இருக்கலாம், அந்தப் பெண்ணுக்கு இருபத்தைந்து வயது இருக்கலாம்.

பெண்ணின் முகத்தில் இன்னமும் கொஞ்சம் குழந்தைத்தன்மை மிச்சமிருந்தது. திருமணம் முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை என்பதால் கடந்த ஆறுமாத காலமாகப் பல்வேறு மருத்துவமனைகளில் அவர்கள் வைத்தியம் பார்த்துவருகிறார்கள். நான் அவர்களுக்கு அதுவரை அளிக்கப்பட்ட வைத்தியங்களைப் பார்த்து அதில் எந்தக் குறிப்பிடத்தக்க பிரச்சினையும் இல்லாததைக் கவனித்துவிட்டு அவர்களிடம் கேட்டேன், “கடைசியாக எப்போது செக்ஸ் வைத்துக்கொண்டீர்கள்?”

அந்தப் பெண் துல்லியமாக ஒரு தேதியைச் சொன்னாள். “அதுக்கு முன் எப்போது?” என்று கேட்டதும், “இருபத்திரண்டாம் தேதியிலிருந்து இருபத்தைந்தாம் தேதி வரை மூன்று நாட்களும் தொடர்ச்சியாக வைத்துக்கொண்டோம்” என்று இப்போதும் அந்தப் பெண்தான் சொன்னாள். அவள் துல்லியமாக தேதி சொல்லியது குறித்து அவளிடம் கேட்டேன். “மாதமாதம் கிட்டத்தட்ட அந்த தேதியில்தான் மூன்று நாள் கூடுவோம். மீதி நாட்கள் கூடாது என்று எங்கள் டாக்டர் சொல்லியிருக்கிறார்” என்றாள். “கடைசியாக எப்போது முழுமையான திருப்தியோடு உறவு வைத்துக்கொண்டீர்கள்?” எனக் கேட்டேன். அவர்களிடம் பதில் இல்லை.

குழந்தையின்மைக்காக வைத்தியம் செய்துவரும் பெரும்பாலான தம்பதிகளின் பாலியல் உறவு கிட்டத்தட்ட இதே நிலையில் தான் இருக்கிறது. தங்கள் பாலுறவின் மீதான எந்த அந்தரங்கங்களும் அவர்களுக்கு இல்லை. அப்படி என்றால் அதன் மீதான கவர்ச்சியும் இல்லை; ஒரு சடங்கைப் போல அவர்களுக்கிடையேயான பாலுறவு இருக்கிறது. குழந்தையின்மைப் பிரச்சினையால் மிக அதிகமாகப் பாதிக்கப்படுவது தம்பதிகளுக்கிடையேயான பாலுறவு தான் என சமீபத்திய ஆய்வுகள் சொல்கின்றன. இந்தப் பாலுறவுதான் குழந்தை பிறப்பதையும் தீர்மானிப்பதாக இருக்கிறது என்பதுதான் இதில் உள்ள முக்கியமான சிக்கல்.

பாலுறவற்ற திருமணங்கள்

குழந்தையின்மையை வெறும் மருத்துவச் சிக்கலாக மட்டும் நாம் பார்க்க முடியாது. ஏனென்றால் பாலுறவு, குழந்தைப்பேறு போன்றவற்றின் மீது இங்கு ஏராளமான சித்தாந்தங்கள் இருக்கின்றன. அவை அத்தனையையும் நாம் உணர்ந்துகொண்டால்தான் அதற்கான தீர்வை நோக்கிச் செல்ல முடியும். துரதிர்ஷ்டவசமாக, இது எதையும் புரிந்துகொள்ளாத நிலையில்தான் இன்றையை குழந்தையின்மைக்கான மருத்துவ முறைகள் இருக்கின்றன.

பாலுறவற்ற திருமணங்கள்தான் (Unconsummated marriage) குழந்தையின்மைக் கான முக்கியமான காரணமாக இருக்கின்றன என ஆய்வுகள் சொல்கின்றன. அதற்குக் காரணம், ‘ஒரு முழுமையான பாலுறவு’ என்றால் என்ன என்பதே இங்கு பெரும்பான்மையானவர்களுக்குத் தெரியாது. பாலுறவின் மீதான எதிர்மறை எண்ணங்கள், அருவருப்பு, குற்றவுணர்வு சிறு வயதிலிருந்தே குழந்தைகளின் மனதில் விதைக்கப்படுகின்றன.

அதைப் பற்றி பேசுவதோ தெரிந்துகொள்வதோ ஒழுக்கமின்மை எனச் சொல்லி வளர்க்கப்படுபவர்கள் எப்படி திருமணத்துக்குப் பிறகு திடீரென ஒருநாள் முழுமையாகத் தெரிந்துகொள்வார்கள் என எதிர்பார்க்க முடியும்? அதேபோல, குழந்தைகளின் மீதான சிறுசிறு பாலியல் வன்கொடுமைகள் இங்கேதான் அதிகமாக நடக்கின்றன. அதன் விளைவாக, அந்தக் குழந்தைகளுக்குப் பாலுறவின் மீதான அச்சம் மனதில் படிந்துவிடுகிறது.

அவர்களால் திருமணத்துக்குப் பிறகும் முழுமையான பாலுறவில் ஈடுபட முடிவதில்லை. குழந்தையில்லை என்று தம்பதிகள் வரும்போது அவர்களுக்கிடையேயான பாலுறவு முழுமையானதாக இருக்கிறதா என்று பார்ப்பதுதான் முதன்மையானது. ஆனால், நமது குழந்தையின்மைக்கான வைத்தியம் இதை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்வதில்லை. அதனால், அதற்கான எந்த விசாரணையும் குழந்தையின்மைக்கான வைத்திய முறைகளின் உள்ளடக்கத்தில் இல்லை.

பாலுறவின் முதன்மை நோக்கம்

மனிதனின் பரிணாமத்தில் பாலுறவின் முதன்மையான நோக்கம் மற்ற விலங்குகளைப் போல குழந்தை பெறுவதல்ல. தம்பதிகளுக்கிடையே பரஸ்பர அன்பையும், காதல் நிறைந்த பிணைப்பையும் மேம்படுத்துவதே. ஆனால், இன்றைய சூழ்நிலையில், அதுவும் குறிப்பாகக் குழந்தையின்மை மருத்துவத்தைப் பொறுத்தவரையில் பாலுறவு என்பதே குழந்தை பெறுவதற்கான உத்தி மட்டுமே என்று பார்க்கப்படுவதால் குழந்தை பெறுவதற்கான சாத்தியம் உள்ள நாட்களில் மட்டுமே பாலுறவு வைத்துகொள்ள அறிவுறுத்தப்படுகின்றனர்.

அதுவும் குறிப்பிட்ட முறைகளில், குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட நிலையில் எனப் பல நெறிமுறைகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. சில மருத்துவமனைகளில் ஸ்கேன்செய்து பார்த்துவிட்டு அங்கேயே, அப்போதே உடனடியாகப் பாலுறவு வைத்துகொள்ளச் சொல்வதாகவும் கேள்விப்பட்டது உண்டு.

ஒரு குழந்தையின் நிமித்தமாகப் பாலுறவின் மீது கொடுக்கப்படும் இத்தகைய அழுத்தங்களின் விளைவாக இயல்பான ஆர்வம், கவர்ச்சி, இன்பம் எல்லாம் குறைந்துபோய் அதை ஒரு மருத்துவச் சிகிச்சையை மேற்கொள்வதைப் போல பாவிக்கின்றனர். இப்படி ஒரு வெளிப்புற அழுத்தத்தின் பேரில் நிகழும் பாலுறவு எப்படி அவர்களுக்கிடையேயான அன்பையும் பிணைப்பையும் பலப்படுத்தும்?

இங்கு தம்பதிகள் குழந்தை பெற முடியாமல் போகும்போது அவர்கள் அதைத் தங்களது தனிப்பட்ட தோல்விகளாகவும் பலவீனங்களாகவும் நினைக்கின்றனர். தங்களது பாலினம் மேல் அதுவரை இருந்துவந்த ஈர்ப்பும் கர்வமும் உடையத் தொடங்குகின்றன. தனது ஆண்மையிலிருந்து தோல்வி அடைந்துவிட்டதாக நினைத்துக்கொள்ளும் ஆண் கோபம், வன்முறை போன்றவற்றை வலிந்து தனக்குள் திணித்துக்கொள்கிறான்.

ஒரு பெண் குழந்தையின்மைக்கான முழு பொறுப்பையும் தானே சுமந்துகொண்டு அதன் நிமித்தம் அதீத படபடப்புடனும் பயத்துடனும் எப்போதும் இருக்கிறாள். இந்த பயத்தின் வழியாகவே அவள் இதிலிருந்து வெளியேறும் வழியையும் நம்பிக்கையற்றுத் தேடத் தொடங்குகிறாள்.

இருவரது இந்த அசாதாரண மனநிலைகளுமே இயல்பான பாலுறவை அவர்களுக்கு சாத்தியமற்றதாக மாற்றிவிடுகிறது. பாலுறவு என்பதையும் தாண்டி அவர்களுக்கிடையேயான உறவும்கூட இதனால் சீர்குலையத் தொடங்குகிறது. பரஸ்பரப் புரிதலும் அன்பும் இல்லாமல் வெறுமையும் வெறுப்பும் பழிசொல்லுதலுமே பிரதானமாக இருக்கும் உறவின் வழியாகக் கனிந்த பாலியல் உறவை மீட்பது அத்தனை எளிதானதல்ல. ஆனால், அதைச் செய்வதுதான் குழந்தையின்மை மருத்துவத்தில் முதல் படியாக இருக்க வேண்டும்.

இயந்திரத்தன பிணைப்பு கூடாது

குழந்தையின்மைக்கான இன்றைய மருத்துவம் அனைத்து வகையிலும் தம்பதிகள் இருவருக்கும் உடல் வாதைகளையும் மனவுளைச்சலையும் தரக்கூடியது. பரஸ்பர அன்பும் ஆதரவும் வேறு எப்போதையும்விட மிக அதிகமாக இருவருக்கும் தேவைப்படும் காலகட்டம் அது.

அதைக் கொடுக்கும் இடத்தில் இருவரும் இருக்க வேண்டும். நிபந்தனையற்ற உரையாடலும் முதிர்ச்சியான புரிதலும் சமரசமற்ற ப்ரியமும் அதற்கு அவசியமானது. உடல்களுக்கிடையேயான இயந்திரத்தனமான பிணைப்பை மட்டுமே கொண்ட பாலுறவில் அது சாத்தியமில்லை. மாறாக, மன ஒத்திசைவோடு அமைந்த பாலுறவே ஆழ்ந்த பிணைப்பை ஏற்படுத்தும். அதன் வழியே குழந்தையின்மைக்கான தீர்வையும் நாம் அடைய முடியும்.

என்னிடம் வந்த தம்பதியினரிடம் அனைத்து பரிசோதனைகளையும் வைத்தியங்களையும் உடனடியாக நிறுத்தச் சொன்னேன். அவர்களின் பாலுறவு மீது திணிக்கப்பட்ட அத்தனை கட்டுப்பாடுகளையும் தளர்த்திவிட்டு, விரும்பும் நேரத்தில் இயல்பான பாலுறவை எந்த நிர்ப்பந்தங்களுமற்று அனுபவிக்கச் சொன்னேன். அது அவர்களின் குழந்தையின்மை நெருக்கடிகளிலிருந்து மட்டுமல்ல, அவர்களது மகத்தான உறவையும் நிச்சயம் மீட்டுக்கொண்டுவரும்.

– சிவபாலன் இளங்கோவன்,
மனநல மருத்துவர், எழுத்தாளர்.

source:   https://www.hindutamil.in/news/opinion/columns/524499-infertility.html

 

 

 

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 6 = 4

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb