மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம்,
வாழ்க்கைச் சூழ்நிலை
எப்படி அமைய வேண்டும் என
அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது!
ஒரு உண்மையை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்.
உறுதியாக நம்பவும் வேண்டும்.
அது அல்லாஹ் இந்த உலகை ஓர் நிர்ணயத்தின் அடிப்படையில் இயக்கிக் கொண்டிருக்கின்றான்.
அல்லாஹ் கூறுகின்றான்:
”நிச்சயமாக! நாம் ஒவ்வொரு பொருட்களையும் ஒரு குறிப்பிட்ட நிர்ணயத்தின் படி இயங்குவதாகவே படைத்திருக்கின்றோம்.”
உலகின் அத்துனை படைப்புகளும் அதனதன் நிர்ணயத்தின் மீது செயல் பட்டுக் கொண்டிருக்கிறது. அது ஏற்கனவே முடிவும் செய்யப்பட்டு விட்டது. மனித வாழ்வும் அப்படித்தான்.
ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஒருவர் வந்தார். வந்தவர், ”அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு ஏராளமான பறவைகளின், உயிரினங்களின் மொழிகளைக் கற்றுத் தந்திருக்கின்றான்.
எனக்கு நீங்கள் ஏதாவது ஒரு உயிரினத்தின் மொழியைக் கற்றுத் தாருங்கள், அவைகள் பேசுவதை நான் கேட்க விரும்புகின்றேன்” என்று வேண்டி நின்றார். அதற்கு ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “எனக்கு அதற்கான அதிகாரம் வழங்கப்பட வில்லை” என்றார்கள்.
ஆனால், அவரோ விடாப்பிடியாக கற்றுத்தருமாறு வற்புறுத்தினார். அதற்கு, ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “நீர் எந்த உயிரினத்தின் பாஷையை கற்க விரும்புகின்றீரோ அதைத் தெரிவியுங்கள். நான் கற்றுத் தருகின்றேன்” என்றார்கள்.
அப்போது, அவர் “என் வீட்டில் இரண்டு பூனைகள் வாழ்ந்து வருகின்றன. அவைகளின் பேச்சைக் கேட்கவே அதிகம் விரும்புகின்றேன். ஆகவே, அதன் மொழிகளைக் கற்றுத்தாருங்கள்” என்றார்.
அப்போது, ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “அவரை அருகே அழைத்து அவரின் காதில் ஏதோ ஒன்றை சொல்லி ஊதினார்கள். அவர் அந்த பூனைகள் பேசும் பாஷையைக் கேட்கும் ஆற்றலைப் பெற்றார். ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் நன்றி கூறி விடை பெற்றுச் சென்றார்.
இரவில் உறங்கச் செல்லும் முன்பாக, இரண்டு பூனைகளும் என்ன பேசிக் கொண்டிருக்கின்றது என தன் காதை பூனைகளுக்கு நேராக வைத்து, திரைமறைவில் நின்று கேட்டார்.
ஒரு பூனை இன்னொரு பூனையிடம் “உன்னிடத்தில் ஏதாவது உணவு இருந்தால் எனக்குக் கொடு, நான் பசியால் செத்து விடுவேன் போலிருக்கின்றது” என்றது.
அதற்கு, இன்னொரு பூனை ”கொஞ்சம் பொறுத்துக் கொள். நாளை நம் எஜமானன் வளர்க்கும் சேவல் செத்துவிடும். செத்த பிறகு அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்” என்றது.
இதைக் கேட்ட அந்த மனிதர் மறுநாள் அதிகாலையில் அந்த சேவலை எடுத்துக் கொண்டு சந்தைக்குச் சென்று விற்று விட்டார்.
சேவலைத் தேடியலைந்த அந்த பூனைக்கு எங்கும் சேவல் கிடைக்கவில்லை. நேராக இன்னொரு பூனையிடம் வந்து “ நீ சொன்ன மாதிரி அந்தச் சேவல் செத்து, நம் கண்ணில் படாத ஏதோ இடத்தில் நம் எஜமான் புதைத்திருப்பான் போலும்” என்றது.
அதற்கு, அந்தப்பூனை “அதிகாலையிலேயே அதைத் தூக்கிக் கொண்டு நம் எஜமான் விற்று காசாக்கி விட்டான்” என்றது. இதைக் கேட்ட அந்த பூனை ஏமாற்றத்தோடு சென்றது.
இரவு நேரம் வந்தது. முன்பு போல் அந்த பூனையிடம் முறையிட்டது, பசியால் வாடும் இந்தப்பூனை. “கவலைப் படாதே! நாளை நம் எஜமான் வளர்க்கும் ஆட்டுக் குட்டி செத்துவிடும், அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்” என்றது.
முன்பு போல் திரைமறைவில் நின்று கேட்ட அவன் திடுக்கிட்டான். முன்பு போன்று அதிகாலையிலேயே அந்த ஆட்டைத் தூக்கிச் சென்று சந்தையில் விற்று விட்டான்.
ஆட்டுக்குட்டியைத் தேடியலைந்த அந்த பூனைக்கு எங்கும் ஆட்டுக்குட்டி கிடைக்கவில்லை. நேராக இன்னொரு பூனையிடம் வந்து “ நீ சொன்ன மாதிரி அந்த ஆட்டுக்குட்டி செத்து, நம் கண்ணில் படாத ஏதோ இடத்தில் நம் எஜமான் புதைத்திருப்பான் போலும்” என்றது.
அதற்கு, அந்தப்பூனை “அதிகாலையிலேயே அதைத் தூக்கிக் கொண்டு நம் எஜமான் விற்று காசாக்கி விட்டான்” என்றது. இதைக் கேட்ட அந்த பூனை மிகுந்த ஏமாற்றத்தோடு சென்றது.
இரவு நேரம் வந்தது. முன்பு போல் அந்த பூனையிடம் முறையிட்டது, பசியால் வாடும் இந்தப்பூனை. “கவலைப் படாதே! நாளை நம் எஜமான் செத்து விடுவார். அதை உண்டு பிழைத்துக் கொள்ளலாம்” என்றது.
முன்பு போல் திரைமறைவில் நின்று கேட்ட அவன் திடுக்கிட்டான். அவன் தலையில் இடி விழுந்ததைப் போன்று உணர்ந்தான். உடனடியாக, ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் ஓடி வந்தான். ”நடந்த சம்பவங்களைக் கூறிவிட்டு என்னை நீங்கள் தான் காப்பாற்ற வேண்டும்” என்றான்.
அதற்கு, ஸுலைமான் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் “எப்படி நீ சேவல் விஷயத்திலும், ஆட்டுக்குட்டி விஷயத்திலும் புத்தி சாதுர்யத்தோடு நடந்து கொண்டாயோ, அது போன்றே இப்போதும் நடந்து கொள்” என்று கூறிவிட்டு..
வீட்டுக்குச் சென்று மரணசாசனத்தையும், கஃபன் துணியையும் தயாராக வை” என்று கூறி அனுப்பினார்கள். (நூல்: அத்துரருஸ் ஸனிய்யா)
ஆக அல்லாஹ் ஒவ்வொரு மனிதனுக்கும் என்ன கொடுக்க வேண்டும் என நிர்ணயித்து இருக்கின்றானோ அதை அம்மனிதனுக்குக் கொடுப்பான். இன்னொரு மனிதனுக்கு வழங்கப்பட்டிருப்பது போன்ற வாழ்வியல் அருட்கொடைகள் தமக்கும் வழங்கப்பட வேண்டுமென ஆசைப்படுவது இறுதியில் தமக்கே பாதகமாக அமைந்து விடும் என்பதை மேற்கூறிய சம்பவம் எடுத்துக் காட்டுகின்றது.
அந்த வகையில் ஒரு மனிதனின் ஆயுட்காலம், வாழ்வாதாரம், வாழ்க்கைச் சூழ்நிலை எப்படி அமைய வேண்டும் என அல்லாஹ்வால் தீர்மானிப்பட்டு விட்டது, நிர்ணயிக்கப்பட்டு விட்டது. அதன்படியே மனித வாழ்வும் அமைந்திருக்கும்.