ஒருவருக்கு கொடுத்த நன்கொடையையோ, சன்மானத்தையோ திரும்ப கேட்காதீர்கள்!
“ஒருவர் நன்கொடை நல்கிவிட்டோ அல்லது சன்மானம் அளித்து விட்ட பின்னர் அதனையவர் திரும்பப் பெற்றுக் கொள்வது அவருக்கு ஆகுமானதல்ல. ஆனால் தந்தை தன் மைந்தனுக்கு அளித்து விட்டதைத் திரும்பப் பெறுவது ஆகுமானதாகும்.“
மற்றோர் அறிவிப்பின்படி, “எவர் தாம் அளித்த நன்கொடையையோ அல்லது தாம் கொடுத்த சன்மானத்தையோ திரும்பப் பெறுவாராயின் அவர், வாந்தி எடுத்து விட்டுப் பின்னர் தம் வாந்தியைத் தின்னும் நாயைப் போலாவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்.
(அறிவிப்பவர்கள்: இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, இப்னு உமர் َரளியல்லாஹு அன்ஹு, நூல் : ஸூனன்)
o அபூஸயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “நிச்சயமாக! உலகம் இனிமையானதாகவும், செழுமையானதாகவும் உள்ளது. நிச்சயமாக அல்லாஹ், இதில் உங்களை பிரதிநிதியாக ஆக்கி உள்ளான். நீங்கள் என்ன செய்கிறீர்கள் எனப் பார்ப்பான். எனவே உலகை பயந்து கொள்ளுங்கள். மேலும் பெண்களைப் பயந்து கொள்ளுங்கள். பனீ இஸ்ரவேலர்களிடம் ஏற்பட்ட குழப்பத்தில் முதன்மையானது, பெண்கள் விஷயத்தில்தான் ஏற்பட்டது” என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.” (நூல்: முஸ்லிம்).
o அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”நிலத்தில் ஒரு சாண் அளவுக்கு (பிறரிடம் இருந்து பறித்து) ஒருவன் அநீதம் செய்தால், (அது போன்ற) ஏழு நிலங்களை (மாலையாக மறுமையில்) அவன் (கழுத்தில்) போடப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்).
o அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கின்றார்கள்: ”உங்களில் ஒருவர், தொழும் நிலையில் தூங்கினால், தன்னை விட்டும் தூக்கம் நீங்கும் வரை அவர் தூங்கட்டும்! உங்களில் ஒருவர் தூங்கிய நிலையில் தொழுதால், ‘அவர் தன்னை மன்னிக்க வேண்டுகிறாரா? அல்லது தன்னைத் திட்டுகிறாரா’ என்று அறிய மாட்டார் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்”.(புகாரி,முஸ்லிம்).
o ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அநீதம் செய்வதை அஞ்சிக் கொள்ளுங்கள். அநீதம் என்பது, மறுமை நாளின் இருள்களில் உள்ளதாகும். கஞ்சத்தனத்தை அஞ்சிக் கொள்ளுங்கள். கஞ்சத்தனம் தான், உங்களுக்கு முன் இருந்தவர்களை அழித்தது. மேலும் அது (கொலை மூலம்) இரத்தங்களை ஓட்டிடவும், தடுக்கப்பட்டதை ஆகுமாக்கிக் கொள்ளவும் அவர்களை தூண்டியது.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
o அபூமூஸா அஷ்அரீ ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”ஒரு அடியான் நோயாளியாகவோ அல்லது பயணத்திலோ இருந்தால் அவருக்கு, அவர் உடல் ஆரோக்கியத்துடன் ஊரில் இருந்த சமயம் செய்தது போலவே (கூலி) எழுதப்படும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (புகாரி).
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அபூஹூரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “ஓர் இறைவிசுவாசியான ஆண் மற்றும் பெண்ணிற்கு அவரது உயிர் மற்றும் அவரது குழந்தை, அவரது சொத்து என அனைத்திலும் சோதனை இருந்து கொண்டே இருக்கும்.” (நூல்: ரியாளுஸ்ஸாலிஹீன்):
o ”ஒரு முஸ்லிமான அடியான் உளுச் செய்யும் போது தன் முகத்தைக் கழுவினால் அவனின் முகத்திலிருந்து அவன் பார்த்த ஒவ்வொரு தவறுகளும் அவனது கண் வழியே தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறிவிடும். தன் கைகளை அவன் கழுவினால், அவனது செய்த தவறுகள் அனைத்தும் அவனது கைகள் வழியாக தண்ணீருடன், அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறிவிடும்.
அவன் கால்களைக் கழுவினால் அவனது கால்கள் நடந்து செய்த தவறுகள் அனைத்தும் (அவனது கால்கள் வழியாக) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசிச் சொட்டுடன் வெளியேறி விடும். இறுதியாக (உளுச் செய்ததன் மூலம்) பாவங்களை விட்டும் பரிசுத்தமானவனாக வெளியேறுவான் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்)
o அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: ”அல்லாஹ்விடம் தவறுகளை அழிக்கவும், பதவிகளை உயர்த்தவும் காரணமாக உள்ள செயலை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். ‘சரி! இறைத்தூதர் அவர்களே! என்று நபித்தோழர்கள் கூறினர்.
‘சிரமமான நேரங்களிலும் உளுவை முழுமையாக செய்வது, பள்ளிவாசல்களுக்கு (நடப்பது மூலம்) அதிக காலடிகள் வைப்பது, ஒரு தொழுகை முடிந்து மறு தொழுகைக்காக காத்திருப்பது (ஆகியவையாகும்). இதுதான் இறைவனின் பாதையில் (வழிபாடுகளில்) உள்ளவையாகும்” என்று நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (முஸ்லிம்).
o இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்: “இரண்டு அருட்கொடைகள். இந்த இரண்டு விஷயத்திலும் மக்களில் அதிகமானோர் நஷ்டப்பட்டு விடுகின்றனர். அவை (1) ஆரோக்கியம், (2) ஓய்வு என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: புகாரி).