திருமணம் பற்றி திருக்குர்ஆன்
மனிதனது வாழ்க்கை பல குழப்பங்கள், சிக்கல்கள், சஞ்சலங்கள் போன்ற இன்னோரன்ன இடர்களுடன் பின்னிப்பினைந்த ஒரு கலவையாக இருப்பதனை நாம் உணர்கின்றோம். இந்த சிக்கல்களிலேயே மனிதனை ஆட்டிப்படைப்பது, அவனது பாலியல் உணர்வுகள் என்பதில் ஐயமில்லை.
படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை இந்த விடயத்தில் தடம் புரழ்வதை நாட்டு நடப்புக்கள் நம் கவணத்திற்கு தந்து கொண்டுதான் இருக்கின்றன. எனவே இந்த உணர்வுகளைப்படைத்த இறைவன் அதற்கான வடிகாலையும் செவ்வனே மனித சமூகத்திற்குத் தந்து இல்வாழ்க்கையென இனிக்கவைத்துள்ளமை ஒரு கொடையே!
பன்டுதொட்டு திருமண பந்த உறுவுமுறைகள் ஒவ்வொரு சமுதாயத்திலும் நடைமுறையில் இருந்து வருகின்றன. பன்பட்ட, பயிற்சிப் பட்டறைகள், சமூக அபிவிருத்தி முகாம்கள், மகளிர் மேம்பாட்டு வைபவங்கள், இளைஞர் நல முகாமைத்துவம் போன்ற பெயர்களில் நச்சக்கலாச்சாரங்களுக்கு வித்திட்டு வரும் செய்திகள் கவணத்தில் கொள்ளப்பட வேண்டிய அம்சங்களாகும்.
”அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்”. (திருக்குர்ஆன் 25:54)
இத்தருனத்தில் இஸ்லாமியத் திருமணம் தொடர்பாக இடம்பெற்றுள்ள சில குர்ஆன் வசனங்களையும் சில பொன் மொழிகளையும் இங்கு தருகின்றோம்.
சம்பந்தி உறவுகளை ஏற்படுத்தியவன்:
அவனே நீரிலிருந்து மனிதனைப் படைத்தான். அவனுக்கு (பிறப்பினால் வந்த) இரத்த சம்பந்தமான உறவுகளையும், (திருமணத்தால் வந்த) சம்பந்தி உறவுகளையும் ஏற்படுத்தினான்’. (திருக்குர்ஆன் 25:54)
இஸ்லாம் கூறும் பெண் உரிமை:
பெண்களுக்குக் கடமைகள் இருப்பது போல அவர்களுக்கு உரிமைகளும் சிறந்த முறையில் உள்ளன’. (அல்குர்ஆன் 2:228)
மஹர் (திருமணக் கொடை) பெண்ணின் உரிமை:
மஹர் எவ்வளவு என தீர்மானிப்பதும், விட்டுக் கொடுப்பதும், கடனாகப் பெற்றுக் கொள்வதும் பெண்ணின் உரிமையாகும்’. (அல்குர்ஆன் 2:229, 2:237, 4:4)
மஹர் கொடுத்தல் ஓர் கட்டாயக் கடமை:
பெண்களுக்கு அவர்களின் மணக்கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்’. (அல்குர்ஆன் 4:4)
பெண்களுக்கு ஆண்கள் மஹர் வழங்குவது கட்டாயக் கடமையாகும்:
ஆதாரம்: (அல்குர்ஆன் 4:4, 4:24, 4:25, 4:127, 5:5, 28:27, 33:50, 60:10.)
மஹர் தொகைக்கு அளவு கிடையாது:
ஒரு பொற்குவியலையே மஹராகக் கொடுக்கலாம். (ஆதாரம் அல்குர்ஆன் 4:20)
பண்டைக்காலத்தில் மஹர் (மஹராக எட்டு ஆண்டுகள் கூலி வேலை செய்த நபி மூஸா அலைஹிஸ்ஸலாம்.
எட்டு ஆண்டுகள் நீர் எனக்குக் கூலி வேலை செய்ய வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் எனது இந்த இரு புதல்விகளில் ஒருத்தியை உமக்கு மணமுடித்துத் தருகிறேன். பத்து ஆண்டுகளாக முழுமையாக்கினால் (அது) உம்மைச் சார்ந்தது. நான் உமக்கு சிரமம் தர விரும்பவில்லை. (என்று மூஸாவின் மாமனார் கூறினார்) இதுவே எனக்கும் உமக்கும் இடையே உள்ள ஒப்பந்தம். இரண்டு காலக்கெடுகளில் எதை நான் நிறைவேற்றினாலும் என் மீது குற்றமில்லை. நாம் பேசிக் கொண்டதற்கு அல்லாஹ்வே பொறுப்பாளன் என்று (மூஸா) கூறினார். (அல்குர்ஆன் 28:27,28)
திருமணம் பற்றி திருமறையில் இறைவனின் கட்டளை:
உங்களுக்கு விருப்பமான பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்துகொள்ளுங்கள்’.(அல்குர்ஆன் 04:03)
பலதார மணம்:
மணந்துகொள்ளுங்கள்! ஏனெனில், இந்தச் சமுதாயத்திலேயே சிறந்தவர் (ஆன முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள்) அதிகமான பெண்களை மணமுடித்தவராவர்’ என்று இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு கூறினார்கள். அறிவிப்பவர்: ஸயீத் இப்னு ஜுபைர் ரஹ்மதுல்லாஹி அலைஹி நூல் புகாரி 5069.
ஒருவரிலிருந்து ஒருவர்:
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது மனைவியைப் படைத்தான்’. (அல்குர்ஆன் 39:6, 4:1, 7:189)
மன அமைதி:
அவளிடம் அவர் மன அமைதி பெறுவதற்காகப் படைத்தான்’. அல்குர்ஆன் 7:189.189.
சிந்தனையைத் தூண்டும் இஸ்லாமிய மணம்:
நீங்கள் அமைதி பெற உங்களிலிருந்தே துணைவியரை உங்களுக்காகப் படைத்து உங்களிடையே அன்பையும், இரக்கத்தையும் ஏற்படுத்தியிருப்பது அவனது சான்றுகளில் ஒன்றாகும். சிந்திக்கின்ற சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன’. (அல்குர்ஆன் 30:21.)
நல்ல முறையில் குடும்பம்:
அவர்களுடன் நல்ல முறையில் குடும்பம் நடத்துங்கள்.’ (அல்குர்ஆன் 4:19.)
ஆடை:
அவர்கள் உங்களுக்கு ஆடை நீங்கள் அவர்களுக்கு ஆடை’. (அல்குர்ஆன் 2:187.)
விளைநிலங்கள்:
உங்கள் மனைவியர் உங்களின் விளைநிலங்கள். உங்கள் விளைநிலங்களுக்கு விரும்பியவாறு செல்லுங்கள்’. (அல்குர்ஆன் 2:223)
துறவறம் கூடாது:
அவர்கள் தாமாகவே புதிதாக உண்டாக்கிக் கொண்ட துறவித்தனத்தை நாம் அவர்கள் மீது விதிக்க வில்லை. அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை அடைய வேண்டியேயன்றி (அவர்களே அதனை உண்டுபண்ணிக் கொண்டார்கள்) (அல்குர்ஆன் 57:27)
இல்லறம் நபிமார்களின் வழிமுறை:
உமக்கு முன் தூதர்களை அனுப்பினோம். அவர்களுக்கு மனைவியரையும் மக்களையும் ஏற்படுத்தினோம்’. (அல்குர்ஆன் 13:38)
திருமணத்தால் வறுமை அகலும். ‘உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவர்களுக்கும், அவ்வாறே (வாழ்க்கைத் துணையில்லாத) நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும் பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்;! அவர்கள் ஏழைகளாக இருந்தால், அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றவர்களாக ஆக்குவான்; மேலும் அல்லாஹ் தாராளமானவன்: நன்கறிந்தவன்.’ அல்குர்ஆன் 24:32.
திருமண வீட்டில் தஃப் அடித்தல், பாட்டுப் பாடல்:
எனக்குத் திருமணம் நடந்த அன்று காலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் வந்தார்கள். (இந்த ஹதீஸைக் கேட்டுக் கொண்டிருந்த காலித் இப்னு தக்வான்-ரஹ்மதுல்லாஹி அலைஹி-அவர்களிடம்) ‘எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னுடைய விரிப்பின் மீது அமர்ந்திருந்தார்கள். அங்கு சில சிறுமிகள் கஞ்சிராக்களை (தஃப்) அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களைப் புகழ்ந்து பாடிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒரு சிறுமி, ‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்க விருப்பதையும் அறிவார்’ என்று கூறினாள். உடனே நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘இப்படிச் சொல்லதே. (இதைவிடுத்து) முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்’ என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ருபய்யிஉ பின்த் முஅவ்வித் ரளியல்லாஹு அன்ஹா நூல் புகாரி 4001).
எங்கள் இறைவா! எங்கள் வாழ்கைத் துணைகளிலிருந்தும், மக்களிலிருந்தும் எங்களுக்கு கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக என்று (நல்லறம் செய்யும்) அவர்கள் கூறுகின்றனர்’ (அல்குர்ஆன் 25:74)
‘Jazzakallaahu khairan’ மௌலவி லாஃபிர் மதனி (அபூ அரீஜ்), சுவனத் தென்றல்