அன்னையின் காலடியில் சொர்க்கம்
உலக மாந்தர்களில் ஒருவருக்கொருவர் காட்டும் அன்புகளில் ஈடு இணையற்றது தாயின் அன்புதான். மனைவியானாலும், மக்களானாலும், உடன்பிறந்தோர் ஆனாலும் , உற்றார்-உறவினர்களானாலும் அந்த அன்புக்கு ஒரு எல்லை உண்டு. ஆனால் தாயன்புக்கு எல்லையில்லை.
ஒரு பெண் கற்பமாவது முதல் அவள் பிரசவிக்கும் வரை படும் வேதனைகளை, அவள் பெற்றெடுக்கும் குழந்தை ‘அம்மா’ என்று அழைத்தவுடன் அத்துணை வேதனையையும் அடியோடு மறந்துவிடுகிறாள்.
தான் பெற்ற குழந்தையை பாலூட்டி, பாராட்டி, சீராட்டி வளர்த்து ஆன்றோர்களின் அவைதனில் தன்பிள்ளை சான்றோனாக மதிக்கப்பட தன்னையே மெழுகுவர்த்தியாக கரைத்துக்கொள்கிறாள்.
தான் வளர்த்த பிள்ளை தறுதலையானாலும் அந்த தாய் ஒதுக்கிவிடுவதில்லை. தான் வளர்த்த பிள்ளை தன்னை அநாதை விடுதியில் சேர்த்தாலும், அனாதையாக தெருவிலே விட்டுவிட்டாலும் அந்தத்தாய் தன் பிள்ளையை சபிப்பதில்லை. அதனால் தான் உலகில் இழந்த எந்த உறவையும் மீட்டெடுக்கமுடியும் தாயைத்தவிர!
மனைவி வெறுத்துவிட்டால் மற்றொரு மனைவியை திருமணம் செய்து ஈடு செய்துவிடலாம். ஒரு பிள்ளை வெறுத்து விட்டால் இன்னொரு பிள்ளையை கொண்டு ஈடு செய்து விடலாம். உடன்பிறந்தோர் வெறுத்துவிட்டால் யாரை வேண்டுமானாலும் அண்ணன்-தம்பி என்று அழைத்து ஆனந்தப்பட்டு கொள்ளலாம். ஆனால் ஒரு தாயின் அன்பை நாம் இழந்துவிட்டால் அந்த அன்பை எந்த அன்னியப்பெண்ணாலோ , அல்லது அன்னையின் உடன்பிறந்தவர்களாலோ கூட தரமுடியாது. இத்தகைய மகத்தான தகுதி தாய்க்கு உள்ளதால்தான் இஸ்லாம்,உலகில் வாழும் ஒவ்வொரு முஸ்லிமும் தலைவர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அடுத்தபடியாக தாயை நேசிக்கவேண்டும் என்று கட்டளையிடுகிறது.
முதல் மூன்று இடம் தாய்க்கே!
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஒருவர் வந்து, ‘இறைத்தூதர் அவர்களே! நான் அழகிய முறையில் உறவாடுவதற்கு மிகவும் அருகதையானவர் யார்?’ என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். ‘உன் தாய்’ என்றார்கள். அவர், ‘பிறகு யார்?’ என்றார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘பிறகு, உன் தந்தை’ என்றார்கள். [நூல் புஹாரி 5971 ]
இத்தகைய உயர்வான முதல் மூன்று ஸ்தானத்தை தாய்க்கு இஸ்லாம் வழங்கியிருக்க, திருமணமாகும்வரை தாய்சொல்லை தட்டாத மகன் திருமணத்திற்கு பின் மனைவி சொல்லே மந்திரம் என்று மகுடிக்கு மயங்கும் பாம்பாக மாறி, தாயை-தந்தையை பழிப்பதும், விரட்டுவதும் அவர்களை நோவினை படுத்துவதுமான செயல்களை செய்பவர்களை பார்க்கிறோம்
அல்லாஹ் கூறுகின்றான்
மனிதனுக்கு தன் பெற்றோர் (இருவருக்கும் நலம் செய்ய வேண்டியது) பற்றி வஸிய்யத்துச் செய்(து போதித்)தோம்; அவனுடைய தாய் பலஹீனத்தின் மேல் பலஹீனம் கொண்டவளாக (கர்ப்பத்தில்) அவனை சுமந்தாள்; இன்னும் அவனுக்குப் பால் குடி மறத்த(லி)ல் இரண்டு வருடங்கள் ஆகின்றன் ஆகவே “நீ எனக்கும் உன் பெற்றோர்க்கும் நன்றி செலுத்துவாயாக என்னிடமே உன்னுடைய மீளுதல் இருக்கிறது.”[31:14]
மனிதனுக்கு தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்; “இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிஃமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்புகிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்” என்று கூறுவான்.[46:15 ]
பெற்றோரை ஏசலாகாது
(வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக![17:23 ]
பெற்றோரை சபிப்பது பெரும்பாவம்
அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி) அறிவித்தார் ‘ஒருவர் தம் தாய் தந்தையரை சபிப்பது பெரும் பாவங்களில் உள்ளதாகும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் தாய் தந்தையரை எவ்வாறு சபிப்பார்?’ என்று கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், ‘ஒருவர் இன்னொருவரின் தந்தையை ஏசுவார். உடனே (பதிலுக்கு) அவர் இவருடைய தந்தையையும் தாயையும் ஏசுவார் (ஆக, தம் தாய் தந்தையர் ஏசப்பட இவரே காரணமாகிறார்)’ என்றார்கள்.[நூல்;புஹாரி 5973 ]
இறைவனுக்கு பிடித்தமான நற்செயல்
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரளியல்லாஹு அன்ஹு கூறினார். நான் இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று பதில் சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம் வேறெதுவும் கேட்காமல் மெளனமாம் விட்டேன். நான் இன்னும் கேட்டிருந்தால் அவர்கள் இன்னும் பதிலளித்திருப்பார்கள்.[நூல்;புஹாரி எண் 2782 ]
அறப்போரை காட்டிலும் அன்னைக்கு செய்யும் பணிவிடை சிறந்தது
அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரளியல்லாஹு அன்ஹு அறிவித்தார் ஒருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம், ‘நான் (இந்த) அறப்போரில் கலந்து கொள்ளட்டுமா?’ என்று கேட்டார். நபி ஸ ல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘உனக்குத் தாய் தந்தை இருக்கின்றனரா?’ என்று கேட்டார்கள். அவர், ‘ஆம் (இருக்கிறார்கள்)’ என்று கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘(அவ்வாறாயின் திரும்பிச் சென்று) அவர்கள் இருவருக்காகவும் பாடுபடு’ என்றார்கள். [நூல்;புஹாரி எண் 5972 ]
ஈன்றவர்கள் இணைவைப்பில் இருந்தாலும் இணக்கமாக இரு
பெற்றோர்கள் அறியாமையினால் இணைவைப்பில் இருப்பதால் சில தவ்ஹீத்வாதிகள் பெற்றோரை புறந்தள்ளி அவர்களை கவனிக்காமல் விட்டுவிடுவதை பார்க்கிறோம். அதற்கு அவர்கள் கூறும் காரணம் பெற்றோர் இணைவைப்பிலிருக்கும்போது அவர்களுடன் நாங்கள் எப்படி இணக்கமாக இருக்கமுடியும் என்று கேட்கின்றனர். பெற்றோரின் கொள்கையில்தான் நாம் உடன்படக்கூடாது. அதே நேரத்தில் அவர்களுக்கு செய்யவேண்டிய கடமைகளை செய்வது நம்மீது கடமையாகும்.
அஸ்மா பின்த் அபீ பக்ர் ரளியல்லாஹு அன்ஹு கூறினார். என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், ‘என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரின் உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?’ என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ‘ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்” என்று கூறினார்கள். (நூல்;புஹாரி எண் 2620)
பெற்றோருக்கு பணிவிடை செய்து பெரியோனிடம் பிரார்த்தித்தால் பிரார்த்தனை ஏற்கப்படும்
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்” உங்களுக்கு முன் (சென்ற காலத்தில்) இருந்தவர்களில் மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தபோது, (திடீரென) மழை பிடித்தது. எனவே, அவர்கள் ஒரு குகையில் தஞ்சம் புகுந்தார்கள். உடனே, அந்தக் குகை (வாசலை மலையிலிருந்து உருண்டு வந்த ஒரு பாறை மூடி) அவர்களை அடைத்தது.
அவர்கள், ‘அல்லாஹ்வின் மீது ஆணையாக! நம்மை (நம்முடைய) வாய்மையான செயல் தான் காப்பாற்ற முடியும். எனவே, நம்மில் ஒவ்வொருவரும், தான் வாய்மையுடன் நடந்ததாக நம்புகிற விஷயத்தைக் கொண்டு (அல்லாஹ்விடம்) பிரார்த்திக்கட்டும்” என்று ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டார்கள்.
எனவே, அவர்களில் ஒருவர் பின் வருமாறு பிரார்த்தித்தார்: “இறைவா! எனக்கு வயது முதிர்ந்த தாய் தந்தையர் இருந்தனர். நான் ஒவ்வோர் இரவிலும் அவர்களுக்கு என் ஆடு ஒன்றின் பாலைக் கொண்டு செல்வேன். ஓர் இரவு அவர்களிடம் செல்லத் தாமதமாம்விட்டது. அவர்கள் தூங்கிவிட்ட பின்பு சென்றேன். என் மனைவியும் என் குழந்தைகளும் பசியால் கூக்குரலெழுப்பி அரற்றிக் கொண்டிருந்தனர். என் தாய்தந்தையர் பருகுகிற வரை அவர்களுக்குப் புகட்ட மனமில்லாதவனாக நான் இருந்தேன். அதே வேளையில், அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிடவும் நான் விரும்பவில்லை. நான் அவர்களை (பால் தராமல்)விட்டுவிட, அவர்கள் அதைக் குடிப்பதற்காக எதிர்பார்த்துக் காத்திருப்பதை நான் விரும்பவுமில்லை. எனவே, அதிகாலை நேரம் உதயமாகும் வரை நான் எதிர்பார்த்துக் காத்திருந்தேன். (இதை நீ அறிவாய்.) இதை நான் உன் அச்சத்தின் காரணத்தால் தான் செய்தேன் என்று நீ கருதினால் எங்களைவிட்டு (இந்த அடைப்பை இன்னும் சற்று) நீக்குவாயாக!” அவ்வாறே, அந்தப் பாறை அவர்கள் வானத்தைப் பார்க்கும் அளவிற்கு (இன்னும் சற்று) விலகியது.[ ஹதீஸ் சுருக்கம் புஹாரி;எண் 3465 ]
பெற்றோருக்காக மன்னிப்பு தேடுங்கள்
رَبِّ اغْفِرْ لِي وَلِوَالِدَيَّ وَلِمَن دَخَلَ بَيْتِيَ مُؤْمِنًا وَلِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَلَا تَزِدِ الظَّالِمِينَ إِلَّا تَبَارًا
“என் இறைவா! எனக்கும், என் பெற்றோருக்கும், என் வீட்டில் நம்பிக்கையாளர்களாகப் பிரவேசித்தவர்களுக்கும், முஃமினான ஆண்களுக்கும், முஃமினான பெண்களுக்கும், நீ மன்னிப்பளிப்பாயாக! மேலும், அநியாயக்காரர்களுக்கு அழிவையேயல்லாது (வேறு எதையும்) நீ அதிகரிக்காதே” (என்றும் கூறினார்).[71:28 ]
பெற்றோரிடம் நமக்காக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டுதல்
قَالُواْ يَا أَبَانَا اسْتَغْفِرْ لَنَا ذُنُوبَنَا إِنَّا كُنَّا خَاطِئِينَ
(அதற்கு அவர்கள்) “எங்களுடைய தந்தையே! எங்களுடைய பாவங்களை மன்னிக்குமாறு எங்களுக்காக (இறைவனிடம்) பிரார்த்தனை செய்யுங்கள், நிச்சயமாக நாங்கள் தவறு செய்தவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள்.[12:97 ]
அன்பானவர்களே! அன்னையின் காலடியில்சொர்க்கம் இருக்கிறது என்ற நபிமொழிக்கேற்ப, பெற்றோருக்கு பணிவிடை செய்வோம். சொர்க்கத்தை அடைவோம்.