ஜமாஅத் நிர்வாகிகளின் தகுதிகள் – ஓர் அலசல்!
தலைமைக்கு வேறெந்த மதமும் கொடுக்காத முக்கியத்துவத்தை கொடுக்கும் அதே வேளை அத்தலைமையிடம் இருக்க வேண்டிய பண்புகளை பற்றி குர்ஆனும் அதன் நடைமுறை விளக்கமான பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்வும் நமக்கு வழி காட்டுகின்றன.
தலைமைக்கு இருக்க வேண்டிய முக்கியப் பண்புகள் :
1. தக்வா
தலைவருக்கு இருக்க வேண்டிய மிக முக்கிய பண்பாக இஸ்லாம் தக்வாவை தான் கருதுகிறது. “மக்களை கண்காணிக்கும் தலைவரிடம் அவருடைய பொறுப்பில் உள்ள குடிமக்கள் குறித்து கேள்வி கேட்கப்படும்” (புகாரி முஸ்லிம்) எனும் நபி மொழிக்கு ஏற்ப இறைவனிடம் தன் பொறுப்பு குறித்து பதில் சொல்ல வேண்டும் என்ற அச்சம் உள்ளவராகவும் தன் செயல்களுக்குரிய கூலியை மக்களிடமிருந்து எதிர்பார்காமல் இருக்கவேண்டும்.
2. அறிவு
வாழ்வின் அனைத்து துறைகளுக்கும் இஸ்லாம் வழி எனும் அளவில் இஸ்லாத்தை பற்றிய முழுமையான ஞானமும், மாறி வரும் காலச்சூழலுக்கேற்ப இஸ்லாம் எதிர்கொள்ளும் நவீன பிரச்சினைகளுக்கு இஸ்லாத்தின் அடிப்படையில் தீர்வு சொல்ல வேண்டியவராய் இருத்தல் அவசியம்.
மேலும் இஸ்லாம் தவிர்த்த பிற ஜாஹிலிய்ய கொள்கைகளை பற்றியும் விரிவான அறிவு கொண்டவராய் இருத்தலின் அவசியத்தை பற்றி உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் குறிப்பிடுகையில் “இஸ்லாமிய அறிவை மட்டுமே பெற்றிருந்து ஜாஹிலிய்யாவை அறியா ஒருவன் இஸ்லாத்தையே அழித்து விடுவானோ என அஞ்சுகிறேன்” என்று குறிப்பிட்டார்கள்.
3. உறுதி கொண்ட நெஞ்சம்
“அல்லாஹ்விற்கு மிக உவப்பான செயல்கள் யாதெனில் அதனை செய்பவர் தொடர்சியாக செய்வதே” (புகாரி, முஸ்லிம்) எனும் நபிமொழிக்கேற்ப எடுத்துக் கொண்ட காரியம் அல்லாஹ்வுக்கு உவப்பான ஒன்று எனில் அதை எத்துணை எதிர்ப்புகள் வந்தாலும் அதை முடிக்கக் கூடிய திறன் உடையவராக தலைமை இருத்தல் அவசியம். எத்தனை எதிர்ப்புகள் வந்த போதிலும் மனங்குன்றி விடாமல் நெஞ்சுரம் மிக்க தலைமை இஸ்லாமிய பார்வையில் மிக தேவையான ஒன்றாகும்.
4. நிலைமையை கணிக்கும் திறன்
தனது பலம், பலவீனத்தை பற்றி இஸ்லாமிய தலைமை தெரிந்து வைத்திருப்பதுடன் எதிரிகளை எடைபோடும் ஆற்றல் கொண்டவராய் இருக்க வேண்டும். பார்ப்பதற்கு வெளிப்படையாக சாதகமான சூழல் போன்று தெரியாவிட்டாலும் தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட கால இலட்சியத்தை கொண்டு செயல்பட வேண்டும்.
5. நீதி செலுத்துதல்
தலைவராக இருக்க கூடியவர்கள் எந்த சொந்தங்கள், இரத்த பந்தங்கள், செல்வாக்கு, அதிகாரத்துக்கும் பணியாமல் சரியான முறையில் நீதி வழங்க கூடியவர்களாக இருக்க வேண்டும். “மக்களில் ஒரு சாரார் மேலுள்ள வெறுப்பு அக்கிரம் செய்யும்படி உங்களை தூண்டாதிருக்கட்டும் நீங்கள் நீதி செலுத்துங்கள் அது தான் தக்வாவுக்கு மிக நெருங்கியது.” (அல்குர்ஆன் 5:8)
6. திடவுறுதி, பொறுமை, வீரம்
இம்மூன்று பண்புகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்தவை. இஸ்லாமிய பாதையானது அல்லாஹ்வின் பால் மக்களை அழைக்கக் கூடிய மிகப்பெரும் பனி ஆதலால் பல்வேறு குறுக்கீடுகள் வரும். இடைத்தடங்கல்;களையும், வாய்ப்புகள் நழுவிப் போவதையும் தீரத்துடன் பொறுத்து செயல்படக் கூடியவராகவும், தனக்கு ஏற்படக்கூடிய துன்பங்களை பொறுமையுடன் தாங்கிக் கொள்ளக் கூடியவராக தலைமை இருத்தல் அவசியம்.
7. பொது அறிவு திறன்
இஸ்லாமிய தலைமையானது எப்படி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன் தோழர்களின் பலம், பலவீனத்தை புரிந்து அவரவர் இயல்புக்கேற்ற வகையில் வேலையைக் கொடுத்தார்களோ அது போல் தனக்கு கீழ் உள்ள தொண்டர்களை புரிந்து கொண்டு, வேலையை பகிர்ந்து கொடுக்க வேண்டும். தமது எண்ணங்களையம், திட்டங்களையும், கொள்கைகளையும் மக்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு “சொல்வதை தெளிவாக நேரடியாக சொல்லுங்கள்” எனும் இறைவாக்கியத்திற்கேற்ப தெளிவாக சொல்லக் கூடியவராய் இருத்தல் வேண்டும்.
8. சேவை மனப்பான்மை
“சமூகத்தின் தலைவர் மக்களின் சேவகராவார்” (அத் தாரமி) எனும் நபி மொழிக்கேற்ப சேவை மனப்பான்மை கொண்டவராய் தலைவர் திகழ்தல் வேண்டும்.
9. ஷூரா
தன்னிச்சையாக முடிவெடுக்காமல் இறையச்சமும் ஞானமும் நிரம்பிய மார்க்க அறிஞர்களை கலந்து ஆலோசித்து முடிவெடுக்க கூடியவராக தலைவர் இருத்தல் வேண்டும்.
“இறை நம்பிக்கையாளர்கள் ஒவ்வோர் காரியத்தையும் தங்களுக்குள் கலந்தாலோசிப்பார்கள்” (ஷூரா 38) சகல காரியங்களிலும் அவர்களிடம் கலந்தாலோசிப்பீராக (ஆல இம்ரான்- 159)
– Mohideen Kadhar – Mohammed Sutheer Omi
https://www.facebook.com/mohammed.sutheer/posts/1095480417277333?__tn__=K-R