முஸ்லிம் உம்மத் மீதான இறைவனின் கருணை
“எனது இந்த உம்மத் (இறைவனின் விஷேட) கருணையைப் பெற்ற உம்மத்தாகும். இந்த (உம்மத்துக்குரிய) தண்டனைகள் மறுமையில் வழங்கப் படுவதில்லை. மாறாக, இவ்வுலகிலேயே (இந்த உம்மத்) தண்டிக்கப் பட்டு விடும். சோதனைகளும், பூகம்பங்களும், (அநியாயமாகக்) கொல்லப் படுவதுமே (இந்த உம்மத்துக்கான இவ்வுலகத்) தண்டனைகளாகும்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அபூதாவூத் 4278)
அப்போது இந்த உம்மத்திலுல்லோரில்; மறுமையில் யாரும் நரகம் செல்லமாட்டார்களா? எனும் சந்தேகம் சிலருக்கு தோன்றலாம்…
இணைவைக்காத, பெரும்பாவங்கள் செய்யாத, இறைநம்பிக்கையாளருக்கு அவர் செய்த மற்ற பாவங்களுக்கான தண்டனையை இவ்வுலகிலேயே அல்லாஹ் வழங்கிவிடுவான் என்ற விளக்கத்தை இந்த ஹதீஸில் இருந்து நாம் விளங்கிகொள்ளலாம்.
நயவஞ்சகம், இணைவைப்பு, மிதமிஞ்சிய பெருமை போன்ற பாரதூரமான பாவ காரியங்களில் ஒரு முஸ்லிம் ஈடுபடும் போது அவர் தன்னாலேயே இந்த உம்மத்திலிருந்து வெளியேறி விடுகிறார். வெளிப் பார்வையில் இவ்வாறானோர் இந்த உம்மத்தைச் சார்ந்தோராகத் தெரிந்தாலும், அல்லாஹ்வின் பார்வையில் இவர்கள் நபியின் உம்மத்தைச் சார்ந்தோர் அல்ல. எனவே, ஏனைய சமூகங்களைப் போல் இவர்களையும் அல்லாஹ் மறுமையில் பிடிப்பான்.
இவ்வாறானோர் கழிந்த பிறகு உம்மத்தில் எஞ்சும் ஏனையோர் தமது பலவீனங்கள் காரணமாகப் பாவ காரியங்களில் ஈடுபடுவோராகவே இருப்பர்.
இது போன்ற பாவங்களுக்காக அவர்களை மறுமையில் தண்டிப்பதற்குப் பதிலாக அல்லாஹ் இவ்வுலகிலேயே தண்டித்து விடுவான்.
இதன் விளைவாக மறுமையில் எழுப்பப்படும்போது, ஏற்கனவே தண்டிக்கப்பட்டு தூய்மைப் படுத்தப்பட்ட ஆன்மாக்களாகவே இந்த உம்மத் எழுந்து நிற்கும் என்பதையே நான் அறிந்தவரை ஹதீஸ் கூறுகிறது. அல்லாஹ்வே அனைத்தும் அறிந்தவன்.
=====
தனது கருணையின் முழு வடிவத்தையும் மறுமை நாளிலேயே அல்லாஹ் வெளிக்காட்டுவான்
“நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்த அந்த நாளிலேயே அல்லாஹ், தனது கருணையை நூறு பாகங்களாக வடிவமைத்தான்.
.
(அந்தக்) கருணையின் ஒவ்வொரு பாகமும் வானங்களுக்கும் பூமிக்கும் இடைப்பட்ட பெருவெளிகளையெல்லாம் வியாபிக்கும் அளவுக்கு விசாலமானது.
.
அவனது கருணையின் ஒரு பாகத்தை மட்டும் பூமிக்கும், அதில் வாழும் உயிரினங்களுக்கும் பகிர்ந்தளித்தான். மீதி தொன்னூற்றொன்பது பாகங்களையும் தன்னிடமே வைத்துக் கொண்டான்.
.
(கருணையின்) இந்த ஒரு பாகத்தின் விளைவாகவே தாய் தனது குழந்தையை நேசிப்பதும், மிருகங்களும், பறவைகளும் தமக்கிடையே பாசத்தைப் பகிர்ந்து கொள்வதும் (உலகில்) நடந்து கொண்டிருக்கின்றன.
.
தனது கருணையின் முழு வடிவத்தையும் மறுமை நாளிலேயே அல்லாஹ் வெளிக்காட்டுவான்.
.
அல்லாஹ்வின் கருணையின் முழு அளவையும் ஓர் இறை மறுப்பாளன் அறிவானேயானால், சுவர்க்கத்தில் நுழைவது குறித்து அவன் ஒருபோதும் நம்பிக்கையிழந்து விடவே மாட்டான்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
.
(புகாரி 6469, முஸ்லிம் 2753 / 6634)