நபி மருத்துவமும் உடற்பயிற்சியும்
நபி மருத்துவம் பற்றிப் பேசும் நூல்கள் உடற்பயிற்சிக்கான பக்கங்களையும் ஒதுக்கியுள்ளன. உடற்பயிற்சியைக் குறிக்க ரியழா என்ற சொல் அரபு மொழியில் பயன்படுகிறது. இச்சொல் விரிவான அர்த்த்த்தில் கையாளப்படுகின்றது. ரியாழா உடற்பயிற்சியைக் குறிக்கும் அதேவேளை, உளப்பயிற்சி, புலப்பயிற்சி என்ற அர்த்தங்களிலும் பாவிக்கப்படுகின்றது.
உடற்பயிற்சியிலும் பல தராதரங்கள் உள்ளன. குழந்தைகளுக்கு, கட்டிளமைப் பருவத்தினருக்கு ஒரு விதமாகவும் வயோதிபருக்கு வேவொரு விதமாகவும் சுக்தேயிகளுக்கு இன்னொரு விதமாகவும் நோயாளிகளுக்கு வேறுவிதமாகவும் அமைந்துள்ளது. அசைவியக்கம் என்பது இன்று மிகுந்த முக்கியத்துவம் பெற்று வருகின்றது. நவீன மருத்துவத்தில் Physio – Therapy என்ற பகுதியே தனியாக வளர்ந்துள்ளது. பின்வரும் நிலமைகளில் உடற்பயிற்சி அவசியமானதாக மாறுகின்றது.
மூட்டு, முறிவுகளை அடுத்து, பக்கவாதத்தால் பீடிக்கப்பட்டால் இருதய நோயாளிகளுக்கு, அஜீரன நோயாளிகளுக்கு, செமிபாட்டுத் தொகுதி கோளாறுகளுக்கு, தோற்புயங்கள் பலவீனமடையும் போது, சத்திரசிகிச்சை மேற்கொண்ட பின்பு, பிரசவத்தின் பின்பு, உடல் பருமனைக் குறிக்க, மூட்டு வலிகளுக்கு, சில உறுப்புக்களின் அசைவுக் குறைபாட்டைப் போக்க என்று உடற்பயிற்சியின் பரப்பு விரிந்து செல்கின்றது. நபிகளின் மருத்துவக் கண்ணோட்டத்தில் விளையாட்டு மற்றும் உடற்பயிற்சி மேலதிக உணவால் வரும் உடல் பருமனைக் குறைக்க உதவுகின்றது.
உடற்பயிற்சி அசைவுகளால் உணவு விரைவாக செரிமானம் அடைகின்றது. உடலில் சேமிக்கப்பட்டிருக்கும் மேலதிக உணவு இதனால் இல்லாமல் போகின்றது. மேலதிகமாக உண்பது சோம்பலாய் இருப்பது, அசைவியக்குறைவு போன்றவை உடலுக்குத் தீங்காக அமைகின்ற பழக்கங்களாகும். இவை பின்னர் பல நோய்களுக்கு காரணமாக இருக்கும். அல்லது உடல் பருமனுக்கு இட்டுச் செல்லும். உணவு மருந்தைப் போல எதிர்மறைப் பண்புகளையும் கொண்டுள்ளது. சில போது நச்சுத் தன்மையையும் கொண்டுள்ளது. இத்தகைய அபாயங்களிலிருந்து தப்ப வேண்டுமானால் உடற்பயிற்சிதான் சரியான வழியாகும். அல்லது நபி வழியில் நோன்பு நோற்பதும் ஒரு வழிமுறையாகும்.
உடற்பயிற்சி உடல் பாரத்தைக் குறைத்து சுறுசறுப்பாகவும் புத்துணர்ச்சியுடனும் இயங்க வைக்கின்றது. மூட்டுக்களையும் புயங்களையும் பலப்படுத்துகின்றது. உடல் நோய்களும் உள நோய்களும் வராமல் பாதுகாக்கின்றது. திப்புந் நபவி ஆசிரியர்களின் வார்த்தைகளில் கூறுவதானால் தேவையான நேரத்தில் தேவையான அளவில் உடற்பயிற்சி செய்வது அனைத்து வகையான சட ரீதியான நோய்களிலிருந்தும் கூடுதலாக உள நோய்களிலிருந்தும் உடலைப் பாதுகாக்குகின்றது என்று கூறுகின்றார்.
நபிகள் மருத்துவம் உடற்பயிற்சிக்கான நேரத்தை வரையறுக்கின்றது. உணவு பூரண செரிமானம் அடைந்த பின்பே பயிற்சி இடம்பெற வேண்டும் என்பது நபிகள் மருத்துவத்தில் ஒரு முன்நிபந்தனையாகும். இவை இன்றைய விளையாட்டு மருத்துவ ஆய்வுகளோடு ஒத்துச் செல்கின்றது. சாப்பிட உடனேயே உடற்பயிற்சியில் ஈடுபடுவது உடலுக்குத் தீங்கு பயக்கின்றது. சாப்பிட்டவுடன் குடல், செமிபாட்டுத் தொழிற்பாடு ஆரம்பமாகின்றது. அந்நேரத்தில் உடற்பயிற்சி செய்தால் இருதயத் துடிப்பு சிரம்மாக மாறும். குறிப்பாக வயோதிபர்கள், இருதய நோயாளிகளுக்கு இது இன்னும் கஷ்டமாகும்.
நபிகள் மருத்துவத்தில் பல வகையான உடற்பயிற்சிகள் கூறப்பட்டுள்ளன. நபிகள் காலத்தில் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெற்றன. விளையாட்டு, மற்றும் உடற்பயிற்சிகளை ஒருங்குபடுத்தி நடத்துவதற்கான ஒரு குழுவையும் நபிகள் வைத்திருந்த்தாக இமாம் அல் கத்தானி கூறுகின்றார். இது இன்றைய விளையாட்டுத் துறை அமைச்சை நமது நினைவுக்குக் கொண்டு வருகின்றது. இக்குழுவினர் சீஸனுக்கு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவார்கள். நபிகளும் அவரது மனைவிமாரும் அங்குராட்பன விளாவில் கலந்து ஆரம்ப்ப் போட்டிகளில் ஈடுபடுவார்கள்.
நபிகள் மருத்துவத்தில் நடைபோடுதல், குதிரைச் சவாரி, அம்பெரிதல், மல்யுத்தம், ஓட்டப்போட்டி, நீச்சல், ஹஜல் நடனம், ரக்ஸ் என்னும் போர்ப்பறை நடனம் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவை தவிர நட்பணி, சமூக சேவை போன்ற காரியங்களையும் திப்புந்நபவி ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர். எல்லா உடற்பயிற்சிகளிலும் அல்லது விளையாட்டுக்களிலும் தலையாயது நீச்சல் என்றும் நபிகள் குறிப்பிட்டுள்ளார். உடற்பயிற்சிகளை மென்பயிற்சிகள், பாரமான பயிற்சிகள் என வகைப்படுத்துவதுமுண்டு.
உண்மையில் நீச்சல் மிகவும் நெகிழ்வுத் தண்மையான உடலுறுப்புகளுக்கு ஊறுகள் வராத உடற்பயிற்சியாகும். இது அல்லாமல் இஸ்லாம் கூறும் தொழுகை போன்ற வழிபாடுகளும் மென் உடற்பயிற்சிகளை சார்ந்தவையாகும். நிலையில் நிற்றல், கைகளை உயர்த்துதல், கைகளைத் தாழ்த்துதல், கைகளைக் கட்டிக் கொள்ளல், இடுப்பை வளைத்துக் குணிதல், பல்வேறு இருப்பு நிலைகள், நிலத்தில் நெற்றியை வைத்தல் போன்ற பல ஆசன முறைகளை உள்ளடக்கியதாக தொழுகை காணப்படுகின்றது. நோன்பும் உள்ளம் உடல் இரண்டுக்குமான ஓர் பயிற்சி வழிமுறையே. வருடத்தில் ஒரு மாதம் பகல் காலங்களில் பல மணித்தியாலங்கள் நோன்பு நோற்பதால் உடல் உறுப்புக்களும் மனமும் சிறந்த பயிற்சிகளை பெற்றுக் கொள்கின்றன.
உடற்பயிற்சிகள் ஆளுக்கால் வேறுபடும் என்பதை ஏற்கனவே நாம் குறிப்பிட்டுள்ளோம். குறிப்பாக வயதானவர்களுக்கு நடத்தல் பயிற்சியே பொருத்தமானது என கூறப்படுகின்றது. நபிகளும் இதனையே வலியுறுத்தியுள்ளார்கள். மனித உடலில் குருதி செல்லும் நாடி, நாளங்கள் அடைபடுவது ஓர் ஆட்கொல்லி நோயாகும். இதற்கு இன்று மருத்துவர்கள் தொடர்ச்சியான உடற்பயிற்சியே தேவை எனக்கூறுகின்றார்கள்.
உடற்பயிற்சித் துறையில் நபிகள் மருத்துவம் உடலையும் உள்ளத்தையும் பாதுகாக்கவே விரும்புகின்றது. நவீன மேற்கு மருத்துவம் சிகிச்சை அளிப்பதிலும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளிலும் இன்று மிகப்பெரும் முன்னேற்றத்தைக் கண்டுவருகின்றது. ஆரோக்கிய வாழ்வுக்கான அடிப்படைகளைக் கண்டுகொள்வதிலும் அது மிக நுண்ணிய சாதனைகளை நிகழ்த்தியுள்ளது. இன்றைய மருத்துவத்தின் உச்சமாக உடற்பயிற்சி, அசைவுத் தொழிற்பாடு, சுற்றுழா, உணவுப் பழக்க முறைகள் போன்றவையே விதந்து போற்றப்படுகின்றன.
மருந்துப் பாவனைகளைவிட உடற்பயிற்சியே சிறந்த மருந்தும் ஆரோக்கியம் என்ற கருத்துக்கு முழு உலகமும் இன்று வந்து சேர்ந்துள்ளது. குருதிச்சுற்றோட்டத்தை சீரமைப்பதற்கும் உடலின் சீரான அமைப்பை, வளர்ச்சியை பேணுவதற்கும் பல நுண்ணிய உடற்பயிற்சிகளும் அதற்குரிய கருவிகளும் வீட்டுக்குள்ளேயே வந்து சேர்ந்துவிட்டன. இதில் வியாபாரப் போட்டியும் நிலவுகின்றது.
இந்த நுண்ணிய பயிற்சிக்கான சான்றாதாரங்களையும் திப்புந் நபவி நூல்களில் காணக்கிடைக்கின்றன. இதை தொழுகை போன்ற வழிபாடுகளில் அவதானிக்க முடியும். யோகா போன்ற அப்பியாசனங்களில் காணப்படும் பல பயிற்சி நுட்பங்களை தொழுகையும் கொண்டுள்ளது. இஸ்லாம் இந்த வழிபாடுகளை தனிமனித விருப்புக்குரியதாக விட்டுவிடவில்லை. அவற்றை ஒரு சமூக ஆற்றுகையாக அமைத்துள்ளது. அவற்றைத் தொடர்ந்து பேண வேண்டும் எனவும் நன்மை கிடைக்கும் எனவும் கூறி உடற்பயிற்சியை வாழ்நாள் பூராகவும் பெற்றுக் கொள்ள வழிவகை செய்துள்ளது.
source: http://idrees.lk/?p=1809 (جَزَاكَ اللَّهُ خَيْرًا )