மஹ்தி அலைஹிஸ்ஸலாம் என்பது யார்? வஹியின் வெளிச்சத்தில்!
.
“மஹ்தி வெளிப்பட்டு விட்டார்!” என்று உங்களிடம் யார் சொன்னாலும், கீழ்வரும் அடையாளங்கள் அனைத்தும் பூர்த்தியாகாத வரை அதை நம்பவே வேண்டாம்.
.
அடையாளம் 1:
உண்மையான மஹ்தி (அலைஹிஸ்ஸலாம்) என்பவர் ஸஊதி அரேபியாவில், மக்கா நகரில் மட்டுமே வெளிப்படுவார்.
.
அடையாளம் 2:
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது அருமை மகள் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது நேரடி வழித்தோன்றலாகவே மஹ்தி இருப்பார். இன்னொரு விதத்தில் சொன்னால், அவர் குரைஷி குலத்தைச் சேர்ந்த ஓர் அரபியாகவே இருப்பார்.
அடையாளம் 3:
இமாம் மஹ்தியின் இயல்புப் பெயர், அச்சொட்டாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது பெயராகவே இருக்கும். அதாவது, முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் என்பது மஹ்தியின் பிறப்புப் பெயராக இருக்கும். பிறப்பில் வேறொரு பெயரையும், பிற்காலத்தில் “முஹம்மத் இப்னு அப்துல்லாஹ்” என்று மாற்றப்பட்ட பெயரையும் கொண்டோரையெல்லாம் இந்தக் கணக்கில் சேர்க்க முடியாது.
.
அடையாளம் 4:
அநீதியும், அராஜகமும் முழு உலகையும் ஆக்கிரமித்திருக்கு போது நீதியும், நேர்மையும் நிரம்பிய ஒரு புத்தம்புது ஆட்சியை அரபு நாட்டில் இமாம் மஹ்தி நிறுவுவார்.
.
அடையாளம் 5:
இமாம் மஹ்தியின் வெளிப்பாடு என்பது திட்டமிடப் பட்ட ஒன்றாகவோ, படிப்படியான மாற்றங்களின் விளைவாக ஏற்படும் ஒன்றாகவோ, ஏற்கனவே ஊகிக்கப் பட்ட ஒருவரது வெளிப்பாடாகவோ இருக்காது. மாறாக, யாருமே எதிர்பாராத ஒரு சாதாரண மனிதரது திடீர் மாற்றங்களின் விளைவாகவே மஹ்தி எனும் பாத்திரம் ஒரே நாளில் வெளிப்படும்.
.
அடையாளம் 6:
இமாம் மஹ்தி வெளிப்படும் தினம் வரை, அவர் ஒரு சிறந்த நல்லடியாராக இருக்க மாட்டார். குற்றம் குறைகள், பலவீனங்கள் நிறைந்த ஓர் அற்ப மனிதராகவே அவர் இருப்பார். ஒரே இரவில் அவரை மன்னித்து, பரிசுத்தப் படுத்தி, அவர் மனதை இறைவன் மாற்றும் வரை அவர் தான் மஹ்தி எனும் உண்மை அவருக்கே தெரிந்திருக்காது.
.
அடையாளம் 7:
பரந்த நெற்றியையும், கூரிய, நீண்ட மூக்கையும் கொண்ட ஒரு மனிதராகவே மஹ்தி அலைஹிஸ்ஸலாம் இருப்பார்.
.
அடையாளம் 8:
இமாம் மஹ்தியின் ஆட்சிக் காலம் ஏழு ஆண்டுகளாகும்.
.
ஆதாரம் 1:
“மஹ்தி எனது குடும்பத்தைச் சேர்ந்தவராகவும், ஃபாத்திமாவின் வழித்தோன்றல்களில் ஒருவராகவுமே தோன்றுவார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
– அபூதாவூத் 4284.
.
“எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அரபுகளை ஆட்சி செய்யாத வரை உலகம் அழியாது. அவரது பெயர் எனது பெயராக இருக்கும். அவரது தந்தையின் பெயர் எனது தந்தையின் பெயராக இருக்கும். ஒடுக்குமுறையும், கொடுங்கோலும் ஆக்கிரமித்திருக்கும் பூமியை அவர் சமத்துவத்தைக் கொண்டும் நீதியைக் கொண்டும் நிரப்புவார்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
– அபூதாவூத் 4282
.
“எனது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் அரபுகளை ஆட்சி செய்யாத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அவரது பெயரும் எனது பெயரும் ஒரே மாதிரி இருக்கும்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
– திர்மிதி 2230
.
“இவ்வுலகம் அழிவதற்கு ஒரு நாளைக்கு முன்பாவது எனது குடும்பத்திலிருந்து ஒரு மனிதரை அல்லாஹ் தோற்றுவிப்பான். ஒடுக்குமுறையும் கொடுங்கோலும் நிரம்பியிருக்கும் இப்பூமியில் அவர் நீதியைக் கொண்டு நிரப்புவார்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
– அபூதாவூத் 4283
.
“மஹ்தி எனது குடும்பத்தைச் சேர்ந்தவர். (ஆரம்பத்தில் மார்க்கப்பற்று அற்ற) அவரை ஒரே இரவுக்குள் அல்லாஹ் பக்குவப்படுத்தி (நேர்வழி பெற்ற இமாமாக) மாற்றுவான்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
– இப்னுமாஜா 4085
.
“மஹ்தி எனது குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது நெற்றி அகலமாகவும், மூக்கு கூரிய, நீண்ட வடிவத்திலும் இருக்கும். ஒடுக்குமுறையும், கொடுங்கோலும் நிறைந்திருக்கும் (அரபுகளின்) பூமியில் அவர் சமத்துவத்தையும் நீதியையும் நிரம்பச் செய்து, ஏழு ஆண்டுகள் வரை அவர் ஆட்சி செய்வார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்.
– அபூதாவூத் 4285
.
இமாம் மஹ்தியின் அடையாளங்கள் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கும் ஆதாரபூர்வமான அறிவிப்புகள் இவை தாம்.
.
மஹ்தி வெளிப்படும் காலத்தையொட்டிய உலக நிலவரங்கள் எவ்வாறு இருக்கும் என்பதை இன் ஷா அல்லாஹ் இக்கட்டுரையின் அடுத்த பாகத்தில் பார்க்கலாம்.
.
– அபூ மலிக்