இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களும் மல்ஹமத்துல் குப்ராவும்
.
“மல்ஹமத்துல் குப்ரா” எனும் வரலாறு காணாத மாபெரும் யுத்தம் முஸ்லிம்களுக்கும் கிறித்தவ வெள்ளையர்களுக்கும் இடையில் மூளும்.
.
இந்த யுத்தத்தில் பங்கேற்கும் முஸ்லிம் படைகளுக்கு இமாம் மஹ்தி அலைஹிஸ்ஸலாம் அவர்களே தலைமை தாங்குவார்கள்.
.
ஸஊதி அரேபியாவில் இமாம் மஹ்தி வெளிப்படும் நிகழ்வையொட்டி நிகழும் மல்ஹமத்துல் குப்ராவின் பின்னணியை ஹதீஸ்களின் வெளிச்சத்தில் பின்வரும் ஒழுங்கில் நாம் புரிந்து கொள்ளலாம்:
.
இமாம் மஹ்தி வெளிப்படுவதையொட்டிய காலப்பகுதியில் கிறித்தவ வெள்ளையர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் மிகுந்த நல்லிணக்கமும், நட்புறவும் நிலவி வரும்.
.
இக்காலப் பகுதியில் முஸ்லிம்களும், வெள்ளையர்களும் ஒரே அணியாக இணைந்து, வேறொரு பொது எதிரிக்கு எதிராக ஒரு யுத்தம் செய்வார்கள்.
.
இந்த யுத்தத்தில் வெற்றி பெற்ற முஸ்லிம்களும் வெள்ளையர்களும் சந்தோஷமாக ஒரே அணியாகத் திரும்பி வந்து கொண்டிருக்கும் போது, வழியில் சில முஸ்லிம் வீரர்களுக்கும், கிறித்தவ வீரர்களுக்கும் இடையில் சிலுவையை முன்னிறுத்தி ஒரு கைகலப்பு ஏற்படும்.
அதுவரை நட்புறவோடு முஸ்லிம்களிடம் பழகி வந்த வெள்ளையர்கள், இந்தக் கைகலப்பின் விளைவாக முஸ்லிம்களுக்கு எதிராக உள்ளத்தில் வஞ்சம் வைக்க ஆரம்பிப்பார்கள்.
.
இந்த வஞ்சம் நாளடைவில் பகையாக மாற, முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் செய்ய ஒரு மாபெரும் படையையே வெள்ளையர்கள் திரட்ட ஆரம்பிப்பார்கள்.
.
புதிதாக ஏற்படும் இந்தப் பகையுணர்வின் வெளிப்பாடாக துருக்கியை காஃபிர்கள் கைப்பற்றி விடுவார்கள்.
.
அடுத்த கட்டமாக, சிரியா, ஃபலஸ்தீன், ஜோர்தான், லெபனான் போன்ற நாடுகளின் பூர்வகுடிகளான “பனூ இஸ்ஹாக்” இனத்தைச் சேர்ந்த முஸ்லிம்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் சண்டைகள் வலுக்க ஆரம்பிக்கும்.
.
இது போன்ற பிரச்சினைகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் ஸஊதி அரேபியாவில் இமாம் மஹ்தி வெளிப்படுவார். அவரது தலைமைத்துவத்தின் கீழ் புதியதொரு முஸ்லிம் படையணி திரளும்.
.
இந்தப் புதிய படையில் பல்வேறு இனங்களைச் சார்ந்த முஸ்லிம்கள் இருப்பார்கள். குறிப்பாக “பனூ இஸ்ஹாக்” முஸ்லிம்களில் பலரும் இப்படையில் அங்கம் வகிப்பார்கள்.
.
இமாம் மஹ்தியின் புதிய படையின் முதல் யுத்தம் அரேபிய தீபகற்பத்தினுள்ளேயே நிகழும். இதன் விளைவாக அரேபிய தீபகற்பம் முழுவதும் இமாம் மஹ்தியின் ஆளுகைக்குள் வந்து விடும்.
.
அடுத்த கட்டமாக மஹ்தியின் படைக்கும் ஈரானுக்கும் இடையில் உக்கிரமான போர் நிகழும். இதிலும் மஹ்தியின் படை ஈரானை வெற்றி கொள்ளும்.
.
இந்த நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கும் போது மறுபுறம் சிரியாவில் நிலைமை மோசமடைய ஆரம்பிக்கும்.
.
ஏற்கனவே வெள்ளையர்களுக்கும், சிரிய முஸ்லிம்களுக்கும் இடையில் நடக்கும் சண்டைகளின் உச்ச கட்டமாக, வெள்ளையர்களின் ஒரு குழுவினரை சிரிய முஸ்லிம்கள் சிறைப்பிடித்து விடுவார்கள்.
.
சிறைப்பிடிக்கப் பட்ட வெள்ளையர்களை விடுவிக்கும் நோக்கத்தோடும், சிரிய முஸ்லிம்களை அழிக்கும் நோக்கத்தோடும் 80 படைப் பிரிவுகளையும், ஒன்பது லட்சத்து அறுபதாயிரம் வீரர்களையும் கொண்ட ஒரு மாபெரும் படையோடு வெள்ளையர்கள் சிரியா நோக்கி முன்னேறுவார்கள்.
.
இந்த மாபெரும் படையெடுப்பிலிருந்து சிரிய முஸ்லிம்களைக் காப்பாற்றும் நோக்கத்தோடு மதீனாவிலிருந்து புறப்படும் மஹ்தியின் படையணி சிரியாவின் வட எல்லையை வந்தடையும்.
.
மதீனாவிலிருந்து முஸ்லிம்களது படை புறப்படும் அதே நேரத்தில் மறுபுறம் மதீனா நகரத்தின் மீது காஃபிர்கள் தாக்குதல் தொடுப்பார்கள். இதன் விளைவாக மதீனா நகரம் தரைமட்டமாக அழிக்கப் படும்.
.
எதையும் பொருட்படுத்தாமல் முன்னேறும் முஸ்லிம்களது படை, இறுதியில் சிரியாவின் வட எல்லையை வந்தடையும் போது, அங்கு சிரியாவைத் தாக்குவதற்காக வெள்ளையர்களது மாபெரும் படை தயார் நிலையில் இருக்கும்.
.
மதீனா முஸ்லிம் படையைக் கண்டவுடன் வெள்ளையர்கள், “உங்களுக்கு இதில் சம்பந்தமில்லை; இதில் நீங்கள் தலையிட வேண்டாம்” என்று அவர்களை எச்சரிப்பார்கள்.
.
ஆனால், என்ன நடந்தாலும் வெள்ளையர்கள் சிரியாவைத் தாக்க இடமளிக்க முடியாது என்று முஸ்லிம்கள் உறுதியாகக் கூறி விடுவார்கள். இதன் விளைவாக முஸ்லிம்களுக்கும் வெள்ளையர்களுக்கும் இடையில் இதுவரை உலகம் கண்டிராததோர் உக்கிரப் போர் தொடங்கும். இதுவே மல்ஹமா எனும் மாபெரும் யுத்தமாகும்.
.
இந்த யுத்தம் ஒரே நாளில் நடந்து முடிந்து விடாது. நான்கு கட்டங்களாக நடக்கும் இந்த மாபெரும் யுத்தத்தின் ஆரம்ப கட்டத்திலேயே மூன்றில் ஒரு பங்கு முஸ்லிம்கள் புறமுதுகு காட்டி ஓடி விடுவார்கள். இவர்கள் அல்லாஹ்வின் கோபத்துக்கு ஆளாகி விடுவார்கள்.
.
எஞ்சும் முஸ்லிம்கள் துணிந்து போரிடுவார்கள். போரின் இரண்டாம் கட்டத்தை அடையும் போது, முஸ்லிம் படையில் இன்னொரு மூன்றில் ஒரு பகுதி கொல்லப்பட்டு அழிந்து போய்விடும்.
.
மறுநாள் மீண்டும் போர் நடக்கும். அதிலும் ஏராளமான முஸ்லிம்களும் காஃபிர்களும் கொல்லப்படுவார்கள்.
.
நான்காவது நாள், எஞ்சியுள்ள முஸ்லிம்கள் அனைவரையும் ஒன்று திரட்டி, இரண்டில் ஒன்று பார்க்கும் தீர்மாணத்தோடு மிக உக்கிரமான இறுதி யுத்தம் நடக்கும்.
.
இந்த யுத்தத்தின் உக்கிரத்தையும், கொடூரத்தையும் வார்த்தைகளால் வர்ணித்து விட முடியாது. யுத்த களத்தைத்துக்கு மேலால் வானில் பறக்கும் பறவைகள் கூட செத்து விழும் அளவுக்கு இதன் கொடூரம் இருக்கும். (இந்தப் போரில் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப் படலாம் என்றே இதன் மூலம் நம்பப் படுகிறது).
.
யுத்தத்தின் இறுதியில், எதிரணியைச் சேர்ந்த லட்சக் கணக்கான இறைமறுப்பாளர்கள் ஏற்கனவே கொல்லப் பட்டிருப்பார்கள். அதே போல், முஸ்லிம்கள் தரப்பிலும் நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது வீதமானோர் கொல்லப்பட்டிருப்பார்கள்.
.
சொற்ப எண்ணிக்கையில் எஞ்சும் முஸ்லிம் வீரர்களே வெற்றி வீரர்களாக இருப்பார்கள். இவர்களில் அனேகர் சிரியா, ஃபலஸ்தீன், லெபனான் போன்ற நாடுகளைச் சேர்ந்த இஸ்ஹாக் அலைஹிஸ்ஸலாம் அவர்களது வம்சத்து முஸ்லிம்களாகவே இருப்பார்கள்.
.
இந்த வெற்றி வீரர்கள் இறுதியாக துருக்கியின் கொன்ஸ்தாந்தினோபில் நகரத்தையும் காஃபிர்களிடமிருந்து மீட்டெடுப்பார்கள்.
.
இந்த வெற்றி வீரர்களது காலடியில் ஃகனீமத் எனும் யுத்தச் செல்வங்கள் கோடிக் கணக்கில் குவிந்து கிடக்கும்.
.
இவ்வளவு பெரிய வெற்றியை அடைந்த போதும், முஸ்லிம்களுக்கு அதில் எந்த சந்தோஷமும் இருக்காது. காரணம், நூற்றுக்குத் தொன்னூற்றொன்பது வீத முஸ்லிம்களது உயிரைக் காவு கொடுத்து அடையும் ஒரு வெற்றியாகவே இந்த வெற்றி இருக்கும்.
.
இந்த வெற்றி வீரர்களில் ஒவ்வொருவரும் தனது உறவினர்களில் கிட்டத்தட்ட அனைவரையும் இழந்து அனாதையாகவே நின்று கொண்டிருப்பார். இப்படியொரு பேரிழப்பின் வாயிலாக வரும் வெற்றியால் யார் தான் சந்தோஷப்பட முடியும்?
.
மல்ஹமாவின் விளைவாக உலக சனத் தொகையே பாரியளவு குறைந்து போவது மட்டுமல்லாமல், முஸ்லிம்கள் எண்ணிக்கையும் தொன்னூறு வீதத்துக்கு மேல் குறைந்து விடும்.
.
இப்பேர்ப் பட்ட சோகமும், இழப்பும் நிறைந்ததொரு வெற்றி சகிதம் தளர்ந்த நிலையில் முஸ்லிம்கள் இருக்கும் போதே தஜ்ஜால் வெளிப்படுவான்.
.
இந்த நிகழ்வுகள் அனைத்துக்குமான ஆதாரங்களை இனி பார்க்கலாம்:
.
ஆதாரம் 1:
“அரபு தீபகற்பத்துக்கு எதிராக நீங்கள் யுத்தம் செய்வீர்கள். அதில் உங்களுக்கு வெற்றியை அல்லாஹ் வழங்குவான். பிறகு நீங்கள் வெள்ளையர்களுக்கு எதிராக யுத்தம் செய்வீர்கள். அதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். பிறகு நீங்கள் தஜ்ஜாலுக்கு எதிராக யுத்தம் செய்வீர்கள். அதிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். “வெள்ளையர்களுடன் நீங்கள் யுத்தம் செய்யாத வரை தஜ்ஜால் தோன்ற மாட்டான்.” என்று ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு மேலும் அறிவித்தார்கள். (நூல்: இப்னுமாஜா 4091)
.
ஆதாரம் 2:
“யுகமுடிவு ஏற்படுவதற்கு முன் நிகழவிருக்கும் ஆறு விடயங்களை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். அதில் முதலாவதாக நிகழவிருப்பது எனது மரணம். அடுத்ததாக நிகழ்வது பைத்துல் மக்திஸை (முஸ்லிம்கள்) கைப்பற்றுவது. அடுத்து நிகழவிருப்பது உங்களிலும், உங்கள் சந்ததிகளிலும் (ஏராளமானோரை) உயிர்த்தியாகிகளாக மரணிக்கச் செய்யும் ஒரு (மாபெரும்) கொள்ளை நோய். அதன் பிறகு ஒரு மனிதருக்கு நூறு தீனார் (தங்கக் காசுகள்) கொடுக்கப்பட்டால், அதையே அவர் அற்பமாகக் கருதும் அளவுக்கு உங்கள் மத்தியில் செல்வம் பெருகி விடும். அதையடுத்து ஒரு முஸ்லிமின் வீட்டைக் கூட விட்டு வைக்காத அளவுக்கு உங்களை இன்னல்கள் சூழ்ந்து கொள்ள ஆரம்பிக்கும்.
அதையடுத்து உங்களுக்கும் கிறித்தவர்களுக்கும் இடையில் ஒரு சமாதான உடன்படிக்கை உண்டாகும். பிறகு அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். என்பது கொடிகளுக்குக் கீழ் அவர்கள் அணிவகுத்து உங்களுக்கெதிராகப் போர் தொடுப்பார்கள். அதில் ஒவ்வொரு கொடியின் கீழும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 4042)
.
ஆதாரம் 3:
“(ஒரு காலத்தில்) கிறித்தவர்களோடு நீங்கள் (முஸ்லிம் உம்மத்) சமாதானமாக உடன்படிக்கையில் இருப்பீர்கள். பிறகு நீங்கள் இரு தரப்பினரும் உங்களுக்குப் பின்னால் இருக்கும் வேறோர் எதிரியுடன் யுத்தம் செய்வீர்கள். அதில் நீங்கள் வெற்றி பெற்று, யுத்தச் செல்வங்களையும் பெற்றுப் பாதுகாப்பாகத் திரும்புவீர்கள்.
வரும் வழியில் மேடுகளையுடைய ஒரு பசும்புல்வெளியில் நீங்கள் (இளைப்பாற) இறங்கும் போது, கிறித்தவ அணியைச் சேர்ந்த ஒருவர் தமது சிலுவையைத் தூக்கிப் பிடித்தவாறு ‘சிலுவை தான் வெற்றி பெற்றது’ என்று சத்தமிடுவார். உடனே முஸ்லிம்களது அணியைச் சேர்ந்த ஒருவர் கோபமடைந்து அந்தச் சிலுவையை உடைத்து நொறுக்கி விடுவார்.
இதன் விளைவாகக் கிறித்தவர்கள் உங்களுக்கு எதிராகத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். உங்களுக்கெதிராக மாபெரும் யுத்தம் ஒன்றைத் தொடுக்கவும் அவர்கள் தயாராகி விடுவார்கள்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்கள்: அபூதாவூத் 4292 / இப்னுமாஜா 4089)
.
ஆதாரம் 4:
“(ஒரு காலத்தில் அரபுகளாகிய) நீங்களும் “பனூ அஸ்ஃபர்” எனும் வெள்ளையர்களும் (மஞ்சள் நிற ஐரோப்பியர்கள் / Blonde) ஒரு சமாதான உடன்படிக்கையின் கீழ் இருக்கும் போது அவர்கள் உங்களுக்குத் துரோகம் செய்ய ஆரம்பிப்பார்கள். என்பது கொடிகளின் கீழ் (என்பது அணிகளாக) ஒருங்கிணைந்து அவர்கள் உங்களுக்கெதிராகப் போர் தொடுக்க வருவார்கள்.
அதில் ஒவ்வொரு கொடியின் கீழும் பன்னிரண்டாயிரம் போர் வீரர்கள் இருப்பார்கள். (மொத்தம் ஒன்பது லட்சத்து அறுபதாயிரம் வீரர்கள்)” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: இப்னுமாஜா 4095)
.
ஆதாரம் 5:
“(சிரியாவில்) அஃமாக் எனும் ஊரிலோ, அல்லது தாபிக் எனும் ஊரிலோ கிறித்தவர்கள் (வெள்ளையர்கள்) வந்திறங்கி (முகாமிடும்) வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அக்காலத்தில் பூமியில் வாழும் மக்களிலேயே மிகவும் சிறந்தவர்களைக் கொண்ட படையொன்று (இந்த வெள்ளையர்களை எதிர்கொள்வதற்காக) மதீனாவிலிருந்து புறப்பட்டு வரும்.
அவர்கள் தம் படையணிகளை வரிசைப்படுத்தி யுத்தத்துக்காக ஒழுங்கு செய்து கொண்டிருக்கும் போது அவர்களிடம் கிறித்தவர்கள், “எமது தரப்பைச் சேர்ந்தோரை இவர்கள் (வேறொரு முஸ்லிம் பிரிவினர்) சிறைப்பிடித்துள்ளார்கள். அவர்களோடு சண்டை செய்யவே இங்கு நாம் வந்துள்ளோம். நீங்கள் அநாவசியமாக எங்களுக்கிடையில் குறுக்கிட வேண்டாம்.” என்று எச்சரிப்பார்கள். அதற்கு (மதீனாவிலிருந்து வந்த) முஸ்லிம்கள், “இல்லை, அல்லாஹ் மீது ஆணையாக, எங்கள் சகோதரர்களோடு உங்களைச் சண்டை செய்ய விட்டு நாம் சும்மா பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம்” என்று கூறுவார்கள். அதைத் தொடர்ந்து அவர்கள் சண்டையிட்டுக் கொள்வார்கள்.
(சண்டை ஆரம்பிக்கும் போது முஸ்லிம்களில்) மூன்றில் ஒரு பகுதியினர் புறமுதுகு காட்டி ஓடி விடுவார்கள். இவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிப்பதில்லை. மூன்றில் ஒரு பகுதியினர் சண்டையில் கொல்லப்படுவார்கள். இவர்களே அல்லாஹ்வின் பார்வையில் மிகச் சிறந்த உயிர்த் தியாகிகளாவர். (எஞ்சிய) மூன்றில் ஒரு பகுதியினர் வெற்றி பெறுவார்கள். இவர்களை அதன் பிறகு எந்தச் சோதனைகளும் தீண்டாது. இவர்களே (துருக்கியின்) கொன்ஸ்தாந்தினோபில் நகரையும் (இறுதியில்) வெற்றி கொள்வார்கள்.
பிறகு இவர்கள் தமது ஆயுதங்களை ஒலிவ் மரங்களில் தொங்க வைத்து விட்டு, யுத்தத்தில் கிடைத்த செல்வங்களைத் தமக்கிடையில் பங்கு போட்டுக் கொண்டிருக்கும் போது “தஜ்ஜால் உங்கள் குடும்பங்களில் உங்களுக்குரிய இடங்களை அபகரித்துக் விட்டான்” என்று ஷைத்தான் ஓலமிடுவான். உடனே அவர்கள் வெளியில் வந்து பார்ப்பார்கள். ஆனால், அதில் எந்த உண்மையும் இருக்காது. பிறகு அவர்கள் சிரியாவை வந்தடைவார்கள். அங்கு அவர்கள் தமது படையணிகளை யுத்தத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கும் போதே அவன் (தஜ்ஜால்) வெளிப்படுவான். (நூல்: முஸ்லிம் 2897 / 6924)
.
ஆதாரம் 6:
யுஸைர் இப்னு ஜாபிர் அறிவித்தது:
ஒரு தடவை கூஃபா நகரில் செம்மண் புயல் அடித்தது. அப்போது (நம்மிடம்) வந்த ஒரு மனிதர் “இப்னு மஸ்ஊதே, யுகமுடிவு நாள் ஆரம்பித்து விட்டது” என்று (பதற்றத்தில்) கூறினார்.
ஒரு (சுவரில்) சாய்ந்து அமர்ந்திருந்தவாறே இதைக் கேட்ட இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்கள் “வாரிசுரிமைச் சொத்துக்கள் பகிர்ந்தளிக்கப் படாத ஒரு காலமும், போரில் கிடைக்கும் ஃகனீமத் செல்வங்களுக்காக (வெற்றி பெற்றோர்) மகிழ்ச்சியடைய முடியாத ஒரு காலமும் உருவாகும் வரை யுகமுடிவு நாள் ஏற்படாது” என்று கூறினார்கள்.
பிறகு அவர் சிரியா தேசத்தை நோக்கிக் கையை நீட்டிக் காட்டியவாறு, “(அங்கு) முஸ்லிம்களுக்கு எதிராக எதிரிகள் தம் படை பலத்தைத் திரட்டி வருவார்கள். முஸ்லிம்களும் எதிரிகளுக்கு எதிராக (அங்கு) தம் பலத்தைத் திரட்டிக் கொள்வார்கள்” என்று கூறினார்.
உடனே நான், “நீங்கள் வெள்ளையர்களை / கிறித்தவர்களைப் பற்றித் தானே கூறுகிறீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர் கூறினார்:
“ஆம், மிகப் பயங்கரமானதொரு போர் மூளும். வெற்றி பெறாமல் உயிரோடு திரும்ப மாட்டோம் எனும் உறுதியான முடிவோடு கிளம்பும் ஒரு படைப் பிரிவை முஸ்லிம்கள் போருக்காகத் தயார் படுத்துவார்கள்.
இரவுப் பொழுது குறுக்கிடும் வரை (பகல் முழுவதும்) அவர்கள் கடுமையாகப் போரிடுவார்கள். (இறுதியில்) இரு தரப்புப் படைகளும் அடியோடு அழிக்கப்பட்ட நிலையிலும், இரு தரப்புமே வெற்றி பெறாத நிலையிலுமே இரு தரப்பும் திரும்பிச் செல்வார்கள்.
பிறகு மீண்டும் ஒரு படைப்பிரிவை முஸ்லிம்கள் போருக்குத் தயார் படுத்துவார்கள். அவர்களும் வெற்றி பெறாமல் உயிரோடு திரும்ப மாட்டோம் எனும் தீர்மாணத்தோடு கிளம்புவார்கள்.
நான்காவது நாளை அடையும் போது எஞ்சியுள்ள முஸ்லிம்களிலிருந்து இன்னொரு படைப்பிரிவு போருக்குக் கிளம்பும். (இம்முறை) எதிரிகள் படுதோல்வி அடையும் விதமாகவே அல்லாஹ்வின் நாட்டம் இருக்கும். இந்த (முஸ்லிம் படைப் பிரிவு) செய்யும் யுத்தம், இதற்கு முன் எவரும் உலகில் செய்திராத அளவு (உக்கிரமானதாக) யுத்தமாக இருக்கும். அவர்களது யுத்த அணிவகுப்புகளைக் கடந்து வானில் ஒரு பறவை பறந்து சென்றால், யுத்த களத்தின் மறு பக்கத்தை அடையும் முன்பே அது செத்து விழுந்து விடும்.
(யுத்தம் முடிந்த பின், இறந்தவர்களைக்) கணக்கெடுக்கும் போது, யுத்தத்தில் கலந்து கொண்ட ஒவ்வொரு நூறு உறவினர்களிலும் ஒருவர் மட்டுமே உயிரோடு எஞ்சியிருப்பார். (ஏனைய தொன்னூற்றொன்பது பேரும் இறந்திருப்பார்கள்).
(இப்படியொரு கோர யுத்தத்தில்) கிடைக்கும் ஃகனீமத் செல்வங்களுக்காக அவர்கள் எப்படி சந்தோசப்பட முடியும்? (சொத்துக்களைப் பகிர்ந்தளிக்க வாரிசுகளே இல்லாமல் அனைவரும் அழிந்து போன நிலையில்) அவர்களது சொத்துக்களை எப்படி அவர்கள் பகிர்ந்தளிக்க முடியும்?
இந்த நிலையில் அந்த (முஸ்லிம்கள்) இருக்கும் போது இதை விடவும் பயங்கரமான ஒரு பேரிடர் பற்றிய செய்தி அவர்களை வந்தடையும். “உங்கள் குடும்பத்தாரையெல்லாம் தஜ்ஜால் அடைந்து விட்டான்” என்று ஓர் அழுகுரல் கேட்கும்.
உடனே அவர்கள் தமது கைகளில் உள்ளவற்றையெல்லாம் போட்டு விட்டு அவனை நோக்கிப் புறப்படுவார்கள். (சிறந்த) பத்துக் குதிரை வீரர்களை அவர்கள் தமக்கு முன்னால் (தகவல் அறிவதற்காக) அனுப்புவார்கள்.
“அவர்களது பெயர்களையும், அவர்களது தந்தையர்களது பெயர்களையும், அவர்கள் சவாரி செய்யும் குதிரைகளது நிறங்களையும் நான் அறிவேன். அன்றைய தினம் உலகிலுள்ள குதிரை வீரர்களில் அவர்களே மிகச் சிறந்தவர்களாக இருப்பார்கள்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 2899 / 6927)
.
ஆதாரம் 7:
“ஜெரூசலெம் நகரம் செழித்து மலரும் போது யத்ரிப் (மதீனா) நகரம் இடிந்து சின்னாபின்னமாகி விடும். மதீனா நகரம் இடிந்து சிதைவடைவது மல்ஹமா எனும் மாபெரும் யுத்தத்தின் போதே நிகழும். மல்ஹமா எனும் மாபெரும் போர் கொன்ஸ்தாந்தினோபில் நகரம் கைப்பற்றப் படும் போதே நிகழும். கொன்ஸ்தாந்தினோபில் நகரம் வெற்றி கொள்ளப் படுவது தஜ்ஜால் வெளிப்படும் போதே நிகழும்.” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (நூல்: அபூதாவூத் 4294)
ஆதாரம் 8:
“ஒரு புறம் நிலமாகவும், மறு புறம் கடலாகவும் இருக்கும் (கொன்ஸ்தாந்தினோபில் எனும்) நகரத்தைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள். “ஆம் அல்லாஹ்வின் தூதரே” என்று அவர்கள் பதிலளித்தார்கள்.
அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்: “இஸ்ஹாக்கின் சந்ததிகள் (பலஸ்தீன், ஜோர்தான், சிரிய பூர்வகுடி முஸ்லிம்கள்) எழுபதாயிரம் பேர் (கொன்ஸ்தாந்தினோபில் எனும்) அந்நகரத்தின் மீது படையெடுக்காத வரை யுகமுடிவு நாள் ஏற்படாது. அங்கு வந்திறங்கும் அவர்கள் ஆயுதங்களைக் கொண்டு சண்டையிட மாட்டார்கள்; அம்புகளை எய்து சண்டையிடவும் மாட்டார்கள். (அதற்குப் பதிலாக) அவர்கள் “லா இலாஹ இல்லல்லாஹ்; அல்லாஹு அக்பர்” என்று ஒரு முறை கூறுவார்கள். உடனே (அந்நகரின்) ஒரு பக்கம் அவர்களிடம் சரணடைந்து விடும்.
பிறகு அவர்கள் இரண்டாவது முறையும் “லா இலாஹ இல்லல்லாஹ்; அல்லாஹு அக்பர்” என்று கூறுவார்கள். உடனே (அந்நகரின்) அடுத்த பக்கமும் சரணடைந்து விடும். மேலும் அவர்கள் (இன்னொரு தடவை) “லா இலாஹ இல்லல்லாஹ்; அல்லாஹு அக்பர்” என்று கூறுவார்கள். உடனே அவர்களுக்காக அந்நகரின் வாயிற் கதவுகள் திறக்கப்படும். அத்தோடு அவர்கள் நகருக்குள் (வெற்றி வீரர்களாக) நுழைவார்கள்.
அங்கு தமக்குக் கிடைக்கும் போர்ச் செல்வங்களை அவர்கள் தமக்குள் பங்கு பொட்டுக் கொண்டிருக்கும் போது “நிச்சயமாக தஜ்ஜால் வெளிப்பட்டு விட்டான்” என்று (திடீரென்று) ஒரு குரல் கேட்கும். உடனே அவர்கள் அனைத்தையும் அங்கேயே போட்டு விட்டு (தஜ்ஜாலின் படையை எதிர்கொள்ளத்) திரும்பிச் செல்வார்கள்.” (நூல்: முஸ்லிம் 2920 / 6979)
.
– அபூ மலிக்
source: https://www.facebook.com/photo.php?fbid=883817191994924&set=a.195761454133838&type=3&theater