கல்விக்காக சேவை செய்த வள்ளல் அப்துல் ஹகீம் சாஹிப் (1863-1938)
வட ஆற்காடு மாவட்டம் கீழ்விசாரம் என்ற ஊரில் கிபி 1863ல் இவர் பிறந்தார். இவருடைய மூதாதையர்கள் தஞ்சை மாவட்டம் அய்யம் பேட்டையைச் சேர்ந்தவர்கள். பாட்டனார் காதர் ஹுசைனுக்கு விவசாயம். தகப்பனார் சித்தீக் ஹுசைனுக்கு பம்பாயில் சின்னதாக துணி வியாபாரம். இப்படித்தான் தொடங்கியது இந்த வள்ளல் குடும்பத்தின் வரலாறு.
விஷாரத்தில் பள்ளி இல்லாததால் வருங்கால வள்ளல் அப்துல் ஹகீம் ஆற்காடு வரை நடந்துபோய் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் சிறு அளவில் வியாபாரத்தில் ஈடுபட்டார்.
கிட்டத்தட்ட பத்து கிலோ மீட்டர் தூரத்தை அந்த சிறுவயதில் கடந்துபோய், நடந்து போய் மூன்றாம் வகுப்பு வரை அவர் படித்திருக்கிறார் என்பது கல்விமீது அவருக்கு அல்லது அவரது பெற்றோருக்கு அல்லது இருவருக்குமே இருந்த காதலைக் காட்டுகிறது.
அவருடைய தந்தையாருக்கு வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட்டது. அந்தக் கவலையோடு ஊர் திரும்பிய அவர் உயிரும் பிரிந்தது. ஆனால் தன் மகனுக்கு வசிய்யத் – இறுதி விருப்பம் – போல ஒன்றை அவர் சொல்லிச் சென்றார்.
தான் பம்பாயிலிருந்து சென்னை வந்தபோது அங்கிருந்த ராமசாமி முதலியார் விடுதியில் தமிழ்நாட்டு முஸ்லிம்கள் மிகவும் கேவலமாக, நாயைவிடக் கேவலமாக நடத்தப்படுவதாகவும், அதுகண்டு தன்னை மிகவும் வாட்டியது என்றும், வருங்காலத்தில் செல்வம் கிடைக்குமாயின், முஸ்லிம்கள் மரியாதையோடும் கண்ணியத்தோடும் சென்னை வந்து தங்கிச் செல்வதற்கு ஒரு விடுதி கட்டிக் கொடுக்க வேண்டும் என்று தன் மகனிடம் கூறி அவர் உயிர் விட்டார். சமுதாயத் தொண்டு கொண்ட உள்ளம் என்றால் இதுதான்.
தராவீஹுக்கு எட்டு ரக்’அத்தா இருபதா, தொழுகையில் விரலை ஆட்டுவதா நீட்டுவதா, தவ்ஹீத் ஜமா’அத் சரியா, சுன்னத் வல் ஜமா’அத் சரியா என்ற தனி மனித அகந்தைத் தீக்கு நெய்யூற்றி வளர்க்கும் வாக்குவாதங்களைவிட மேலான, ஆரோக்கியமான, உண்மையான இஸ்லாமிய சேவை என்பது இதுதான்.
வள்ளல் ஹகீமின் தந்தையாருக்கு இறைவன் மறுமையில் நிச்சயம் கண்ணியம் கொடுத்திருப்பான் என்றே நம்புகிறேன். இந்த இறுதி விருப்பத்தை ஹகீமின் தந்தையார் அவரிடம் தெரிவித்து இறந்தபோது ஹகீமின் வயது பதினெட்டுதான்.
தன் சிறிய தந்தை அப்துர் ரஜ்ஜாக்குடன் இணைந்து ஹகீம் வியாபாரம் செய்தார். ஹகீமின் திறமையைக் கண்டு தன் மகள் குல்ஸும் பீவியை ஹகீமுக்குத் திருமணம் செய்து வைத்தார் அப்துர் ரஜ்ஜாக். மாமனாரின் மறைவுக்குப் பிறகு, அவரது மகனுடன் சேர்ந்து வியாபாரம் செய்தார் ஹகீம். அவர் செய்த தோல் வாணிபம் அவருக்கு விரைவிலேயே செல்வத்தையும் செல்வாக்கையும் கொடுத்தது. அந்தப் பகுதிக்கே ஒரு ராஜா மாதிரி ஆகிவிட்டார் ஹகீம்.
தர்ம சிந்தையும் வள்ளன்மையும் கர்ண பரம்பரையாக இவரது ரத்தத்தில் ஊறிக் கலந்திருக்க வேண்டும். இவரது செல்வம் வளர வளர இவரது தர்மச் செயல்பாடுகளும் வளர்ந்தன. தர்மம் செய்தால் அந்த செல்வத்தில் அல்லாஹ் அருள் புரிந்து அதை பெருகச் செய்கிறான் என்று குர்’ஆனும் கூறுகிறது(2:276).
மலையளவு என்னிடம் தங்கம் இருந்தாலும் மூன்று நாட்களுக்குள் அதையெல்லாம் தர்மம் செய்துவிடுவேன் என்றும், தொடர்ந்து தர்மம் செய்யுங்கள் அது உங்களைத் தூய்மைப் படுத்தும் என்றும் இன்னும் தர்மத்தின் சிறப்புகள் பற்றி அனேக நபிமொழிகள் இருக்கின்றன.
வேதங்களெல்லாம் தர்மத்தைப் பற்றி உயர்வாக இப்படியெல்லாம் கூறியிருந்தாலும் செல்வம் பெற்ற எல்லாருக்கும் தர்ம சிந்தை இருக்குமா என்றால் அது கேள்விக்குறிதான். கொடுக்கக் கொடுக்கக் குறையும் என்பதுதான் பெரும்பாலான மனிதர்களுடைய தர்க்கமாக இருக்கிறது. ஆனால் சீதக்காதி, வள்ளல் அப்துல் ஹகீம் போன்றவர்கள்தான் அது தவறு என்பதை தம் வாழ்க்கையால் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்.
தன் தந்தையின் இறுதி விருப்பத்தை நிறைவேற்ற, சென்னையில் இருந்த ராமசாமி முதலியார் விடுதிக்கு அருகில் இருந்த காலி இடத்தை ஹகீம் விலை பேசினார். அவரது நோக்கம் அறிந்து கொண்ட சிலர் இடத்தின் விலையை ஏலத்தில் ஏற்றிவிட்டனர். கடைசியில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அதை வாங்கிய ஹகீம் மேலும் 50,000 செலவிட்டு அதில் தங்குவதற்கு மாடிக் கட்டிடமும் தொழுவதற்கு ஒரு பள்ளியும் கட்டி அதைத் தன் தந்தையின் பெயரால் 1921-ம் ஆண்டு வக்ஃபு செய்தார்.
இன்றும் சென்னையில் செண்ட்ரலுக்கு எதிர்ப்பக்கத் தெருவில் இருக்கும் சித்தீக் ஸராயின் சேவை புகழுக்குரியது. இங்கு முஸ்லிம்கள் இலவசமாக மூன்று நாட்கள் தங்கலாம். அதற்கு மேல் கொஞ்சம் பணம் கொடுத்தால் தங்கிக் கொள்ளலாம்.
கல்விக்காக இவர் செய்த சேவையும் தர்மமும் காலத்தால் அழியாதவை. இப்படிக்கூட மனிதர்கள் இருந்தார்களா என்று ஆச்சரியப்பட வைப்பவை. சென்னை அங்கப்ப நாயக்கன் தெருவில் ஒரு இந்துப் பெண்மணி வாடகை இடத்தில் ஒரு பள்ளிக்கூடம் நடத்தி வந்தார்.
தொடர்ந்து அங்கே நடத்த முடியாத சூழ்நிலை வந்தபோது, அப்பெண்மணி அப்துல் ஹகீம் அவர்களிடம் வந்து முறையிட்டாள். உடனே அதே தெருவில் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்த தன் மகனை, அந்தக் கடையைக் காலி செய்து அப்பெண்மணி பள்ளிக்கூடம் நடத்துவதற்காக்க கொடுக்க உத்தரவிட்டார்! தந்தையின் அன்புக் கட்டளைக்கு மகனும் அடி பணிந்தார்! அது கண்டு வியந்த இந்து மக்கள், அப்பள்ளிக்கு அவர்களே சி.அப்துல் ஹகீம் இந்து முஸ்லிம் பள்ளி என்று பெயரிட்டு மகிழ்ந்தனர்.
வரலாற்றில் நெகிழ்ச்சியூட்டும் இத்தகைய கணங்கள் மறுபடியும் கிடைக்குமா? முடியாது என்று கூறவில்லை. முடியலாம். முடிய வேண்டுமென்றே ஆசைப்படுகிறேன். ஏனெனில் வள்ளல் தன்மைக்கு ஜாதி மதமெல்லாம் தெரியாது. ஆம்பூரில் உள்ள இந்து மேல்நிலைப்பள்ளியின் மைய வளாகத்தை இவர்தான் கட்டிக் கொடுத்தார். அப்பள்ளியின் கல்வெட்டு இன்றும் அதைப் பறைசாற்றிக் கொண்டுள்ளது. அந்தக் காலத்திலேயே ஏழை மாணவர்கள் 200 பேர் இவருடைய தர்மத்தில் படித்தார்கள்.
அவர் செய்த சில தர்ம காரியங்கள்:
o வேலூர் பாகியாதுஸ் ஸாலிஹாத் மார்க்கக் கல்லூரிக்கு ஒரு லட்ச ரூபாய்
o உம்ராபாத் மத்ரஸா தாருல் உலூமுக்கு 50,000 ரூபாய்
o வாணியம்பாடி முஸ்லிம்சங்க வருமானத்துக்கு சென்னை பெரியமேட்டில் ஆறு கிடங்குகள்
o மேல்விஷாரம் உயர் நிலைப்பள்ளிக்கு கட்டிடம்
அதன் வருமானத்திற்காக சில கட்டிடங்கள்
o ஆம்பூர் மஸ்ஹருல் உலூம் உயர் நிலைப்பள்ளிக்காக ஒரு மார்க்கட் வாங்கி அப்துல் ஹகீம் மார்க்கட் என்ற பெயரில் வக்ஃபு செய்தார்.
o திருவல்லிக்கேணி முஸ்லிம் உயர் நிலைப்பள்ளியின் கட்டிடம்
o கட்டாக்கில் உள்ள தேசியக் கல்லூரிக்கு 25000 ரூபாய்
o பெங்களூர் அநாதை விடுதிக்கும் உயர் நிலைப்பள்ளிக்கும் நிதி
அதன் சார்மினார் மஸ்ஜிதுக்கு நிதி
o பல சிற்றூர்களிலும் பள்ளிகள்
o சேலத்தில் ஒரு பள்ளிவாசல்
o குடியாத்தத்தில் ஒரு பெரிய பள்ளிவாசல்
o மைசூர் பெரிய பஜாரில் ஜாமிஆ மஸ்ஜித்
o ஆற்காடு அப்துல் ஹகீம் போர்டு உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு அரைச்சம்பள உதவி
o அகில இந்திய காங்கிரஸுக்கு நிறைய பண உதவி
o திருவண்ணாமலை கோவில் தர்மஸ்தான் நிர்வாகிகளின் கோரிக்கையின் பேரில் கோவிலுக்கு ஒரு யானை
இவர் சென்னையில் இருந்து விஷாரம் வந்துவிட்டாரென்றால் சிறுவர் சிறுமியரெல்லாம் இவரைச் சுற்றுக் கொள்வர் சந்தோஷமாக. கரும்பு வண்டியோ, பழக்கூடையோ போனால், இவர் உடனே “கொள்ளை” என்று சொல்வார். உடனே குழந்தைகள் அந்த கரும்பு வண்டியையோ பழக்கூடையையோ ’அபேஸ்’ செய்துகொண்டு போய்விடுவர். ஆனால் இவர் அதற்கான முழுப்பணத்துக்கும் மேல் இரண்டு மூன்று மடங்கு பொருளுக்கு உரியவர்களுக்குக் கொடுத்து அனுப்புவார்.
இவர் தன் ஆயுளில் சம்பாதித்த 40 லட்சம் ரூபாயில் 35 லட்சம் வரை தர்மம் செய்துவிட்டார். எஞ்சிய ஐந்து லட்சம்தான் இன்று பல கோடியாகப் பெருகிக் கிடக்கிறது.
இந்தியாவை ஆண்ட பிரிட்டிஷ் அரசு இவருக்கு ’சர்’ பட்டத்துக்கு பதிலாக நவாப் பட்டம் கொடுத்து கௌரவித்தது.
ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக சென்னை சென்ற இவருக்குக் காய்ச்சல் ஏற்பட்டு 1938-ம் ஆண்டு இவர் காலமானார்.
அவர் இறந்த பிறகு கலியுகக் கர்ணன் மறைந்துவிட்டார் என்று ராஜாஜியும், தர்மம் குடை சாய்ந்தது என்று சுதேசமித்திரன் தலையங்கமும், தென்னிந்தியாவின் வணிக மன்னர் காலமானார் என்று இந்து நாளிதழும் இரங்கல் செய்திகள் வெளியிட்டன.
ஜாதி மத பேதம் பார்க்காமல், தர்மம் செய்வதில், கொடுப்பதில் இன்பம் கண்ட இந்தப் பெருமகன் இம்மையில் மறுமைக்காண காரியங்களை சிறப்பாகச் செய்த வள்ளல் பெருமக்களில் நினைவு கூறத்தக்கவர். நவாப் சி. அப்துல் ஹகீம் அவர்களைப் பற்றி இளைய சமுதாயம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். ஒற்றுமையான, வளமான இந்தியாவை உருவாக்க இது உதவும் என்று நம்புகிறேன்.
தகவல்: இஸ்லாமியக் கலைக் களஞ்சியம் – பாகம் 1 — அப்துற்றஹீம் — யுனிவர்சல் பப்ளிஷர்