தொழுகையில் தவிர்க்க வேண்டிய பொதுவான தவறுகள்
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.
1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்.
2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது.
3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது.
4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் சொல்வது.
5) தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது.
7) சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல்.
8.) ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது.
9) தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது.
10) கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது.
11) சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது.
12) தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல்.
13) இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒதுவதை சரிபார்ப்பது.
14) கூட்டுத் தொழுகையில் இமாமை முந்துவது அல்லது இமாமோடு செயல்படுவது.
15) ருகூவின் போது தலையை அதிகமாக குணிதல் அல்லது தலையை மேலாக்குதல் அல்லது முதுகை வளைவாக வைத்துக் கொள்ளுதல். ருகூவின் போது தலையை சாதாரணமாக வைக்கவேண்டும்; முதுகை சமமாக வைக்க வேண்டும்.
16) ருகூவு, ஸஜ்தாவின் போது கைகளை உடலோடு ஒட்டிவைத்தல் மற்றும் ஸஜ்தாவின் போது அடிவயிற்றை தொடையோடு ஒட்டிவைத்தல்.
17) பின்புறம் வெளியே தெரியுமாறு தொழுவது.
18) இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை முடிக்கும் போது ‘ஆமீன்’ வேகமாக சொல்வதை தவிர்ப்பது.
19) ஸஜ்தாவின் போது நெற்றியை மட்டும் தரையில் வைப்பது.
20) ருகூவு, ஸஜ்தாவை அமைதியாக நிறைவேற்றாமல் வேகமாக நிறைவேற்றுவது.
21) ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்கும் போது இரண்டு உள்ளங்கையை அசைத்தல்.
22) இடது கையால் தஸ்பீஹ் எண்ணுவது.
23) தொழுகை முடிந்தவுடன் மற்றவர்களுடன் ‘தகப்பலல்லாஹ்’ என்று சொல்லி கை குழுக்குவது.
24) தொழுகை முடிந்த உடனே கையை உயர்த்தி துஆ கேட்பது.
25) தொழுகை முடிந்தவுடன் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வது.
26) தொழுது கொண்டிருப்பவரின் முன்னால் செல்வது.
27) நோய் வாய்பட்டிருக்கும் போது தொழுகையை அலட்சியப்படுத்துவது.
28) கப்ருகளில் தொழுவது.
29) ஆண்கள் தொழுவதுபோல் அல்லாமல் பெண்கள் வேறு முறையில் தொழுவது.
[ மேற்கண்டவைகள் இக்கட்டுரையின் துணைத்தலைப்புகளே! கட்டுரையை முழுமையாக படியுங்கள்.]
முஸ்லிம்கள் தொழுகையில் செய்யக் கூடிய பொதுவான தவறுகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ் நம்முடைய வணக்கத்தை ஏற்றுக்கொண்டு அதற்குரிய கூலியை கொடுப்பான் என்ற நம்பிக்கையில் நாம் அவற்றை தவிர்ந்துகொள்ள வேண்டும்.
1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிதல்.
இது பெரும்பாவங்களில் ஒன்று என முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள். “மறுமை நாளில் மறுமையில் மூன்று பேரிடம் அல்லாஹுத்தாஆலா பேசவோ அல்லது அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவோ அல்லது அவர்களை தூய்மைப் படுத்தவோ மாட்டான். மேலும் அவர்களுக்கு கொடிய வேதனையும் உண்டு. 1) கணுக்காலுக்கு கீழே ஆடை அணிபவர் 2) பிறரிடம் பலனை எதிர்பார்த்து அன்பளிப்பு செய்பவர் 3) பொய் சத்தியம் செய்து தன் பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரி” (முஸ்லிம்)
சிலர் தொழும்போது மட்டும் கணுக்காலுக்கு மேலே இருக்குமாறு வைத்துக் கொண்டு மற்ற நேரங்களில் கணுக்காலுக்கு கீழே இருந்தால் பாவம் இல்லை என்று நினைக்கின்றனர். இன்னும் சிலர் பெறுமையின் காரணமாக அதுபோல் செய்தால் பாவம் மற்றபடி வேற ஒன்றும் தவறு இல்லை என நினைக்கின்றனர்.
உண்மையிலே மேலே கூறிய ஹதீஸின் படி பெருமையின் காரணமாகவோ அல்லது வேறு எந்த காரணத்துக்காகவோ கணுக்காலுக்கு கீழே ஆடை அணிந்தால் அது பெரும் பாவமாகும். அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கக் கூடிய ஹதீஸ் இதை உறுதிப்படுத்துகிறது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், “கணுக்காலுக்கு கீழே இருக்கக் கூடிய ஆடையின் பாகம் நரகத்தின் தண்டனைக் குரியதாகும்” (புகாரி)
மேலும் சில சகோதரர்கள் தொழும்போது ஆடையை கணுக்காலுக்கு மேலே மடித்துவிட்டு தொழுகை முடிந்தவுடன் மறுபடி கீழே இறக்கி விடுகின்றனர். தொழும் போது மட்டும் ஆடை கணுக்காலுக்கு மேலே இருக்க வேண்டும் என்ற தவறான எண்ணத்தில் தான் இது போல செய்கின்றனர். ஆடையை மடித்துக் கொண்டு தொழுவதை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடைசெய்துள்ளார்கள். (முஸ்லிம்)
2) தொழுகைக்கு வருமுன் துர் வாசனையுடைய பூண்டு, வெங்காயம் மற்றும் புகை பிடித்து முடித்து விடுவது:
மலக்குகள் மற்றும் தொழுகையாளிகள் தீய வாசனையை வெறுக்கின்றனர். பள்ளிவாசலுக்கு வருமுன் தன்னிடம் இருந்தால் வாசனை திரவியங்களை பூசிக் கொண்டு வரவேண்டும் என முஹம்மது நபி صلى الله عليه وسلم அவர்கள் கூறியதாக ஜாபிர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். துர் வாசனை வரக்கூடிய (பூண்டு, வெங்காயம் போன்ற)வற்றை சாப்பிட்டவர்கள் பள்ளிவாசலுக்கு வர வேண்டாம். ஏனெனில் மலக்குகள் சங்கடப்படுவார்கள்.
3) தொழுகையை விட்டு விடுவோம் என்ற பயத்தில் தொழுகைக்காக விரைந்தோடுவது:
இதுபோல் விரைந்தோடுவதால் ஏற்கனவே தொழுது கொண்டிருப்பவர்களையும் இது சிரமத்திற்குள்ளாக்கும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள், “தொழுகை ஆரம்பமாகி விட்டால் அதற்காக வேகமாக நடந்து வரவேண்டாம்; அமைதியாக சென்று கிடைத்ததை பெற்றுக்கொண்டு, (தவற)விட்டதை நிறைவு செய்யவும்”. (புகாரி முஸ்லிம்)
4) ருகூவுக்கு செல்லும் போது தக்பீர் அல்-இஹ்ராம் சொல்வது:
ஜமாஅத் தொழுகைக்கு தாமதமாக வந்தவர்கள் ஜமாஅத்தாக தொழுபவர்கள் ருகூவுக்கு சென்று விட்டதை அறிந்து அந்த ரக்அத்தை அடைந்து கொள்வதற்காக தக்பீர் அல்-இஹ்ராம் கூறி நேரடியாக ருகூவிற்குச் செல்கின்றனர். இது தவறானதாகும். தக்பீர் அல்-இஹ்ராம் என்பது நின்ற நிலையில் கூறக் கூடியதாகும். எனவே தாமதமாக வந்தவர் முதலில் நின்ற நிலையில் தக்பீர் அல்-இஹ்ராம் கூறிய பிறகு பின்னர் தக்பீர் கூறி ருகூவிற்குச் செல்ல வேண்டும். இது தான் சரியான தாகும்.
5) தொழுகைக்கான நிய்யத்தை வாயால் சொல்வது:
எண்ணத்தின் இடம் இதயமாகும். தொழுவதற்கு முன்னால் இந்த தொழுகையை இத்தனை ரக்அத் தொழுகிறேன் என்று வாயால் முனுமுனுப்பது, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ அல்லது ஸஹாபாக்களோ பின்பற்றப்படாத ஒரு பித்அத் ஆகும்.
7) சுத்ரா (தடுப்பு) நோக்கி தொழுவதை தவிர்த்தல்:
சுத்ரா என்பது ஒருவர் தொழும் போது தனக்கு முன்னாள் எவரும் குறுக்கே செல்லாதபடி வைத்துக் கொள்ளும் சுவர், தூண் போன்ற ஏதாவது ஒரு தடுப்பாகும். இவற்றையல்லாமல் வேறு தடுப்புகளையும் வைத்துக் கொள்ளலாம். சுத்ரா என்பது ஒரு பொருளை நோக்கி தொழுவது. மேலும் அது மற்றவர்களுக்கு எல்லையாகவும் உள்ளது.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “சுத்ராவை நோக்கி தொழுங்கள்; மேலும் தொழும் போது யாரும் அதை மீறி செல்லக் கூடாது! அப்படி அந்த எல்லையை மீறினால் சக்தியைக் கொண்டு அவரை தடுக்கட்டும். ஏனெனில் அவன் சைத்தானோடு தொடர்பு உள்ளவனாவான்” (இப்னு குஜைமா)
சுத்ரா இல்லாமல் தொழக்கூடிய ஒருவனின் முன்னால் சைத்தான் குறுக்கிடுகிறான்; அதன் மூலம் அவனுடைய தொழுகையை வீணாக்குகிறான். யாராவது ஒருவர் திறந்த வெளியில் தொழுதால் கூட சுத்ரா வைத்துக் கொள்ளட்டும்.
அல்லாஹ் கூறுகிறான்: “ஆதமுடைய மக்களே! ஷைத்தான் உங்கள் பெற்றோர் இருவரையும், அவர்களுடைய மானத்தை அவர்கள் பார்க்குமாறு அவர்களுடைய ஆடையை அவர்களை விட்டும், களைந்து, சுவனபதியை விட்டு வெளியேற்றியது போல் அவன் உங்களை (ஏமாற்றிச்) சோதனைக்குள்ளாக்க வேண்டாம்; நிச்சயமாக அவனும், அவன் கூட்டத்தாரும் உங்களைக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் – நீங்கள் அவர்களைப் பார்க்க முடியாதவாறு மெய்யாகவே நாம் ஷைத்தான்களை நம்பிக்கையில்லாதவரின் நண்பர்களாக்கி இருக்கிறோம்.” (அல்-குர்ஆன் 7:27)
8.) ஜமாஅத் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பதை வெறுப்பது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “பாங்கு சொல்வது, அதனுடைய மிகப் பெரும் கூலி, மற்றும் தொழுகையில் முதல் வரிசையில் நிற்பது போன்றவற்றின் கூலியை மக்கள் உணர்ந்து கொள்வார்களானால் குலுக்கல் முறையிலே அன்றி வேறெதுவும் செய்ய இயலாது. தொழுகைக்கு முன்னதாகவே வருவதன் முக்கியத்துவத்தை அறிவார்களானால் ஒருவரை ஒருவர் முண்டி அடித்துக் கொண்டு வருவார்கள். இஷா, பஜ்ர் தொழுகையின் மிகப் பெரும் பலனை அறிவார்களானால் தவழ்தாவது பள்ளிக்கு வருவார்கள் (முடியாதவர்கள் அதன் பலன் கிடைக்காமல் போய்விடுமோ என்ற பயத்தில் தவழ்ந்து வருவார்கள்)” (முஸ்லிம்)
9) தொழுகையில் மேல் நோக்கியோ, இமாமையோ, வலது, இடது புறமோ பார்ப்பது:
இது தொழுகையில் கவணமின்மையை உண்டாக்கும். நாம் தொழுகையில் பார்வையை தாழ்த்தி ஸஜ்தா செய்யும் இடத்தை பார்க்குமாறு கட்டளை இடப்பட்டு உள்ளோம். “தொழுகையில் மேல்நோக்கி பார்ப்பவர் அவ்வாறு செய்வதை நிறுத்திக்கொள்ளட்டும்! இல்லை எனில் அவர் பார்வை திரும்பாமல் போய்விடும் (பார்வையை இழந்து விடுவார்)” என்று முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்லிம்)
10) கூட்டுத் தொழுகையில் வருசைகளில் இடைவெளி விடுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள் :”உங்கள் வரிசைகளை நேராக்குங்கள்; தோள்பட்டைகளை சமமாக்குங்கள்; இடைவெளியை நிரப்புங்கள்; சைத்தான் இடைவெளியின் வழியாக நுழைகிறான்” (அஹ்மத்)
11) சூரதுல் பாதிஹாவை இடைவெளி விடாமல் தொடர்ந்து ஓதுவது:
“முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒவ்வொரு வசனத்தின் நடுவிலும் இடைவெளி விட்டு ஓதுவார்கள்” (அபூ தாவூத்)
12) தொழுகையின் போது ஆடிக் கொண்டிருத்தல், கைக்கடிகாரம் பார்த்தல், விரல்களை முறித்தல், பாதத்தையோ மற்ற உறுப்புகளையோ தொடர்ந்து அசைத்துக் கொண்டிருத்தல்:
மேற்கூறியவைகள் அனைத்தும் தொழுகையின் கூலியை குறைத்து விடும். கீழ்படிதல் என்பது தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுவதற்குரிய முக்கியமான ஒரு நிபந்தனையாகும்.
அல்லாஹ் கூறுகிறான்: “தொழுகைகளை (குறிப்பாக) நடுத்தொழுகையை பேணிக் கொள்ளுங்கள் (தொழுகையின்போது) அல்லாஹ்வின் முன்னிலையில் உள்ளச்சப்பாட்டுடன் நில்லுங்கள்.” (அல்-குர்ஆன் 2:238)
13) இமாமுக்கு பின்னால் நின்று குர்ஆனை பார்த்துக் கொண்டு இமாம் ஒதுவதை சரிபார்ப்பது:
மேற்கண்ட செயல் தொழுகையின் கவனத்தை சிதறடிக்கிறது. மேலும் இது விரும்பத்தக்க செயல் இல்லை.
14) கூட்டுத் தொழுகையில் இமாமை முந்துவது அல்லது இமாமோடு செயல்படுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் “உங்களுடைய செயல்களை இமாமுக்கு முன்னால் ஆக்காதீர்கள்! இமாம் ‘அல்லாஹ் அக்பர்’ என்று கூறினால் நீங்களும் ‘அல்லாஹ் அக்பர்’ என்று சொல்லுங்கள்; இமாம் ‘வலள்ளால்லீன்’ என்று கூறினால் நீங்கள் ‘ஆமீன்’ என்று சொல்லுங்கள்”. மற்றொரு அறிவிப்பில், “நிச்சயமாக இமாமைப் பின்பற்ற வேண்டும்” என்று கூறினார்கள். மேலும், “இமாமுக்கு முந்தி தலையை உயர்த்துபவர் மறுமையில் அவருடைய தலையை கழுதையின் தலையைப் போல் அல்லாஹ் ஆக்கிவிடுவான் என்று அவர் பயந்துக்கொள்ள வேண்டாமா?” என்றார்கள்.
15) ருகூவின் போது தலையை அதிகமாக குணிதல் அல்லது தலையை மேலாக்குதல் அல்லது முதுகை வளைவாக வைத்துக் கொள்ளுதல்:
ருகூவின் போது தலையை சாதாரணமாக வைக்கவேண்டும்; முதுகை சமமாக வைக்க வேண்டும்.
16) ருகூவு, ஸஜ்தாவின் போது கைகளை உடலோடு ஒட்டிவைத்தல் மற்றும் ஸஜ்தாவின் போது அடிவயிற்றை தொடையோடு ஒட்டிவைத்தல்:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “(ஸஜ்தாவின் போது) உங்களில் யாரும் முன்னங்கைகளை நாயைப் போன்று ஊன்று கோலாக்க வேண்டாம். அவர் தன்னுடைய உள்ளங்கைகளை ஊன்று கோலாக ஆக்கிக்கொள்ளட்டும், மேலும் அவருடைய முழங்கைகளை உடலோடு ஒட்டாமல் வைத்துக்கொள்ளட்டும்”.
17) பின்புறம் வெளியே தெரியுமாறு தொழுவது:
ஸஜ்தா. ருகூவு செய்யும் போது இறுக்கமான அல்லது மெல்லிய ஆடை அணிபவர்களுக்கு அவர்களுடைய பின்பாகங்கள் வெளியே தெரிகிறது. உள் அவயங்கள் வெளியே தெரியுமாறு தொழும் தொழுகையானது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படாது.
18) இமாம் சூரத்துல் ஃபாத்திஹாவை முடிக்கும் போது ‘ஆமீன்’ வேகமாக சொல்வதை தவிர்ப்பது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : “இமாம் ‘வலள்ளால்லீன்’ என்று கூறும்போது ‘ஆமீன்’ என்று கூறுங்கள்; ஏனெனில் மலக்குகளும் ‘ஆமீன்’ கூறுகின்றனர். யாருடைய ‘ஆமீன்’ மலக்குகள் ‘ஆமீனோடு’ ஒத்துப் போகிறதோ அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன” (புகாரி மற்றும் முஸ்லிம்).
மற்றொரு அறிவிப்பில், ‘ஆமீன்’ கூறுங்கள்; அல்லாஹ் உங்களை நேசிப்பான்’ (முஸ்லிம்)
19) ஸஜ்தாவின் போது நெற்றியை மட்டும் தரையில் வைப்பது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘நான் ஏழு உறுப்புகளால் ஸஜ்தா செய்ய கட்டளை இடப்பட்டுள்ளேன். முகம்(நெற்றி, மூக்கு), இரண்டு உள்ளங்கைகள், இரண்டு முழங்கால்கள் மற்றும் இரண்டு பாதங்கள்’
20) ருகூவு, ஸஜ்தாவை அமைதியாக நிறைவேற்றாமல் வேகமாக நிறைவேற்றுவது:
ருகூவை பூரணமாக செய்யாத, ஸஜ்தாவை மிக குறுகிய நேரத்திலும் செய்த ஒருவரைப் பார்த்து, “இந்த நிலையிலேயே தொழக்கூடியவர்கள் இறக்க நேரிட்டால், அவர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மார்க்கத்தை விட்டு விட்டு வேறு மார்க்கத்தை நிலைநாட்டியவராகத்தான் மரணிப்பார்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ‘திருடர்களில் மிகவும் மோசமான திருடன் தொழுகையில் திருடுபவன்’ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியபோது, அல்லாஹ்வின் தூதரே தொழுகையில் எப்படி ஒருவன் திருடுவான்? என்று நபித் தோழர்கள் கேட்டனர். “தனது ருகூவையும், ஸுஜுதையும் பூரணமாகச் செய்யாதவனே அந்தத் திருடன்” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதிலளித்தாகள். (அறிவிப்பவர்: அபூகதாதா ரளியல்லாஹு அன்ஹு, நூற்கள் அஹ்மத், ஹாகிம், தப்ரானி)
“ருகூவை முழுமையாக செய்வது என்பது ‘சுப்ஹான ரப்பியல் அளீம்’ என்று நிதானமாக மூன்று முறை கூறும் நேரத்திற்கு ருகூவின் நிலையிலே இருப்பதாகும். அதே போல் ஸஜ்தாவை முழுமையாக செய்வது என்பது ‘சுப்ஹான ரப்பியல் அஃலா’ என்று மூன்று முறை கூறும் அளவிற்கு ஸஜ்தாவின் நிலையிலே இருப்பதாகும். “ருகூவையும், ஸஜ்தாவையும் பரிபூரணமாக நிறைவேற்றாதவருடைய தொழுகை கூடாது” என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அபூ தாவூத்)
21) ஸலாம் சொல்லி தொழுகையை முடிக்கும் போது இரண்டு உள்ளங்கையை அசைத்தல்:
சிலசஹாபாக்கள் இவ்வாறு செய்வதை பார்த்த முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தடுத்தார்கள். “காட்டுக்குதிரையின் வால் ஆடுவதைப் போல ஏன் உங்கள் கைகளை அசைக்கிறீர்கள் என்று கேட்டார்கள்” அதன் பிறகு அவர்கள் ஒருபோதும் அவ்வாறு செய்யவில்லை (அபூ தாவூத்)
22) இடது கையால் தஸ்பீஹ் எண்ணுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தொழுகை முடிந்தவுடன் தன்னுடைய வலது கையின் விரல்களால் தஸ்பீஹ் எண்ணுவார்கள். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் பின் அம்ர் رَضِيَ اللَّهُ عَنْهُ அறிவிக்கிறார்கள் : ‘இரண்டு நல்ல விஷயங்களை யார் செய்கிறார்களோ அவர்கள் சொர்க்கத்தில் நுழைவார்கள். ஆனால் ஒரு சிலர் தான் சுப்ஹானல்லாஹ் பத்து தடவை, அல்ஹம்துலில்லாஹ் பத்து தடவை, அல்லாஹ் அக்பர் பத்து தடவை என்று சொல்கிறார்கள்.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தன்னுடைய கையால் தஸ்பீஹ் செய்வதை நான் பார்த்தேன்’
இப்னு கதாமா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள், “இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஸ்பீஹ் செய்வதற்கு தமது வலக்கரத்தைப் பயன்படுத்தினார்கள்”
மேற்கண்ட ஹதீஸில் இருந்து முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தஸ்பீஹ் செய்வதற்கு ஒரு கையை (வலக்கரத்தை) உபயோகித்துள்ளார்கள் என்று தெளிவாக தெரிகிறது.
தஸ்பீஹ் செய்வதற்கு தன்னுடைய இடது கையை பயன்படுத்தினார்கள் என்று எந்த ஒரு முஸ்லிமாலும் கற்பனை செய்ய முடியாது.
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள் : முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அசுத்தங்களை நீக்குவதற்காக மட்டும் இடது கையை உபயோகிப்பார்கள். இடது கையை தஸ்பீஹ் ஓதுவதற்காக ஒருபோதும் பயன்படுத்தியது இல்லை.
23) தொழுகை முடிந்தவுடன் மற்றவர்களுடன் ‘தகப்பலல்லாஹ்’ என்று சொல்லி கை குழுக்குவது:
இது போல் செய்வது மார்க்கத்தில் புதிதாக உண்டாக்கப்பட்டதாகும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோ, சஹாபாக்களோ இதுபோல் செய்ததில்லை.
24) தொழுகை முடிந்த உடனே கையை உயர்த்தி துஆ கேட்பது:
இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை அல்ல. தொழுகை முடிந்தவுடன் திக்ரைக் கொண்டு ஆரம்பிப்பது தான் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறை ஆகும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘அத்தஹியாத்து ஓதிய உடன் நீங்கள் விரும்பிய துவாவை ஓதிக்கொள்ளுங்கள்’ (நஸயீ).
25) தொழுகை முடிந்தவுடன் திக்ரு செய்யாமல் எழுந்து செல்வது:
திக்ரு என்றால் 33 தடவைகள் ‘சுபஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ், அல்லாஹ் அக்பர்’ ஓதுவதும், 10 தடவை ‘ஆயத்துல் குர்ஸி’ ஓதுவதும் ஆகும். (பார்க்கவும் : தொழுது முடித்ததும் ஓத வேண்டிய திக்ருகள்)
26) தொழுது கொண்டிருப்பவரின் முன்னால் செல்வது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள் : ‘தொழுது கொண்டிருப்பவருக்கு முன்னால் செல்வதால் ஏற்படக்கூடிய பின் விளைவுகளை ஒருவன் அறிய நேரிட்டால் அப்படி முன்னால் செல்லுவதைவிட நாற்பது.. (வருடங்கள்) காத்திருப்பான்’ (புகாரி மற்றும் முஸ்லிம்)
குறிப்பு : நாற்பது நாட்களா அல்லது மாதமா அல்லது வருடமா என்பதை அல்லாஹ்வே அறிவான்.
27) நோய் வாய்பட்டிருக்கும் போது தொழுகையை அலட்சியப்படுத்துவது:
தொழுகை இஸ்லாத்தின் முக்கிய தூண்களில் ஒன்று. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எதிரிகளிடம் சண்டைடும் போதோ நோய் வாய்பட்டிருக்கும் போதோ தொழுகையை விட்டதில்லை. எந்த நிலையிலும் தொழுகையை கடைபிடிக்க வேண்டும். ஏதாவது காரணத்தால் ஒழு செய்ய முடியவில்லை எனில், தயம்மம் செய்து கொண்டு தொழ வேண்டும். ஒருவரால் நின்று கொண்டு தொழ முடியவில்லை எனில் உட்கார்ந்து கொண்டோ, சாய்ந்துகொண்டோ தொழவேண்டும். இல்லை எனில் ருகூவுக்காக கண்களை மேலே உயர்த்தியோ ஸஜ்தாவின்போது கண்களை கீழே தாழ்தியோ வைத்து மீதமுள்ள தொழுகையை முடிக்கவேண்டும். ஆனால் எக்காரணத்தைக் கொண்டும் தொழுகையை விடுவதற்கு அனுமதி இல்லை.
28) கப்ருகளில் தொழுவது:
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள் : ‘கப்ருகளில் தொழாதீர்கள்! மேலும் கப்ருகளில் உட்காராதீர்கள்’ (முஸ்லிம்)
29) ஆண்கள் தொழுவதுபோல் அல்லாமல் பெண்கள் வேறு முறையில் தொழுவது:
தொழுகை முறை முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் கற்றுத்தரப்பட்டது. வேறு இமாமுக்கோ அறிஞருக்கோ அதில் சேர்க்கவோ, நீக்கவோ உரிமை இல்லை. ஆண்கள் ஒருமுறையிலும் பெண்கள் வேறுமுறையிலும் தொழுமாறு சொல்லக் கூடிய எந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இல்லை.
முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள் : “எண்ணை எவ்வாறு தொழக்கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள்” (புகாரி)முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் தொழுகை முறையை வேறு படுத்தவில்லை.
சில அறிஞர்கள், பெண்கள் ஸஜ்தா செய்யும் போது எல்லா பாகங்களையும் சேர்த்து வைத்துக் கொள்ளவேண்டும் என்று கூறுகின்றனர். நாம் எல்லோரும் அறிந்துள்ளது போல், மற்ற வணக்க வழிபாடுகள் போல தொழுகையும் ஒரு வணக்கமாகும். ஆகையால் குர்ஆனிலோ ஹதீஸிலோ அதற்கு ஆதாரம் வேண்டும்.
source: http://allaahuakbar.in -தமிழில் எழுதியவர்: M.அன்வர்தீன், சுவனத் தென்றல்.காம்