உண்மையான தஃவா!
நபிகளார் ஹஜ்ஜை நிறைவேற்றும் போது ஒரு லட்சத்தி இருபதாயிரம் தோழர்கள் ஒன்றாக ஹஜ் கடமையை செய்தார்கள்.
ஆனால், மூன்று மாதம் கழித்து நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணித்தபோது ஜனாஸா தொழுகையில் கலந்து கொண்டவர்கள் வெறும் முப்பதாயிரம் பேர் மட்டுமே என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கூற்று.
அப்படியானால், மற்றவர்கள் எங்கே?
‘இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு என்னிடம் கேட்டதை எடுத்துச்சொல்லுங்கள்’
என, ஹஜ்ஜின் இறுதி உரையில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இட்ட கட்டளையை நிறைவேற்ற தங்களின் குதிரை மற்றும் ஒட்டகங்கள் நின்ற திசையில், பூமியின் கடைசி எல்லைவரை அவர்கள் சென்று சத்தியத்திற்கு சான்று பகன்றார்கள் என்பது வரலாறு.
இதில் நாம் கவனிக்கத் தவறும் ஒரு செய்தி,
நபித்தோழர்கள் எந்த மொழியில் தஃவா செய்தார்கள் என்பதே!
உதாரணமாக, தமிழகம் வந்த நபித்தோழர்களுக்கு தமிழ் தெரியாது. இங்குள்ள நம் முப்பாட்டன்மார்களுக்கு அரபி தெரியாது.
தஃவா (அழைப்பு) மெட்டீரியல்களான சிற்றேடுகள், மடக்கோலைகள், துண்டு பிரசுரம் . . . இவை எதுவும் கிடையாது.
ஏன், குர்ஆன் கூட புத்தக வடிவில் கிடையாது.
அபூபக்கர் கிலாஃபத்தின் போதுதான் குர்ஆன் புத்தக வடிவம் பெற்றது.
இச்சூழலில் நபித்தோழர்களின் தஃவா எதுவாக இருந்தது?
பிறப்புக்கும் இறப்புக்கும் மதுக்குடிப்பதை கடமையாக்கிய சமூகத்தை சந்தித்தார்கள்.
ஆனால், இவர்களோ மதுவை தீண்டத்தகாத பொருளாக கருதினார்கள்.
இறைவனின் பெயரால் சுரண்டல், வட்டி, எடைமோசடி, பெண் கொடுமை, தீண்டாமை, பணமோசடி, பொய்சாட்சி, நீதி – ஆளைபார்த்து . . .
இப்படியாக, அனைத்து தீமைகளையும் விலக்கிவைத்து, முற்றிலும் மாறுபட்ட வாழ்வை நடைமுறைபடுத்தி, தான் சந்தித்த மக்களுக்கு செயல்ரீதியாக கல்வி புகட்டினார்கள்.
இறைத்தூத்துவம் என்பது, நபித்தோழர்களின் தூய வாழ்வு தான் என உலகம் புரிந்து கொண்டது.
ஆனால் இன்று தஃவா என்பதை விவாதம் செய்வது என சிலர் புரிந்துள்ளனர்.
அல்லது மற்ற கொள்கைகளை மட்டம் தட்டுவது என நம்புவதாக அறியமுடிகிறது.
வார்த்தைகளால் மடக்குவதிலும் வாதத்திறமையால் பிறரை முடக்குவதிலும் மகிழ்வுற்று, தன் திறமை?!யை தன்னைச் சார்ந்தவர்களிடம் வெளிச்சம் போட்டுக்காட்டும் தாஇகள் (அழைப்பாளர்கள்) ஏராளம்.
எதற்கெடுத்தாலும் குர்ஆனை கொடுப்பது மட்டும் அல்ல தஃவா. குர்ஆனாகவே வாழ்வது – குர்ஆனுக்கு சான்று பகர்வதுதான் உண்மையான அழைப்புபணி.
மொழி தெரியாத தாஇகளான நபித்தோழர்களின் தூய வாழ்வுக்கு தயாராவது தான் இன்றைய தேவை.
அதுதான் உண்மையான தஃவா.
அவன்தான் உண்மையான தாஇ.
– Thahir Saifudheen