மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு அல்லாஹ் வழங்கிய கண்ணியம்
[ பள்ளிவாசலில் நடந்த உண்மைச் சம்பவம் ]
நான் தான் பைத்தியமாச்சே (மனநிலை பாதிக்கப்பட்டவர்) அல்லாஹுத்த ஆலா சொல்லி இருக்கான் பைத்தியங்களுக்கு தொழுகை வாஜிப் இல்லை என்று, நீங்கள் சென்று தொழுவுங்கள்…
மலேசியாவில் கிள்ளாங் சிலாங்கூரில் ஒரு பள்ளிவாசலின் ஜமாஅத் உறுப்பினர் சொல்லிய உருக்கமான சம்பவம். கிள்ளாங் சிலாங்கூரில் உள்ள ஒரு பள்ளிவாசலில் ஹுஸைன்(hussein gila) என்ற மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவர் இருந்தார்,
சிலநாட்களாக அவரை காணவில்லை பள்ளிவாசலும் ஒருவித அமைதியாக இருக்கிறது, ஏனென்றால் ஹுஸைன் என்பவர் தொழுகை நேரத்தில் இப்படி சத்தமாக சொல்வார் நான் தான் பைத்தியமாச்சே (மனநிலை பாதிக்கப்பட்டவர்), அல்லாஹுத்த ஆலா சொல்லி இருக்கான் பைத்தியங்களுக்கு (மனநிலை பாதிக்கப்பட்டவர்) தொழுகை வாஜிப் இல்லை என்று, நீங்கள் சென்று தொழுவுங்கள் என்பார்..!
அந்த பள்ளிவாசலில் மக்கள் தொழுது முடித்து சென்றதும் தொழுகையிடம் சென்று அங்கே கிடக்கும் குப்பைகள், தூசிகள் இவற்றை சுத்தம் செய்வார், அங்கு கிடக்கும் குப்பைகளை கைகளால் ஒவ்வொன்றாக பொறுக்கி எடுப்பார்கள், அப்பொழுது பள்ளி நிர்வாகத்தினர் சுத்தம் செய்ய அதற்கான கருவிகளை கொடுத்தால் ஹுஸைன் இப்படி சொல்வார்…
இதை வைத்து நான் பள்ளிவாசலை சுத்தம் செய்தால் எனக்கு மிகப்பெரிய நஷ்டம் உண்டாகும், அதுவே நான் கைகளால் சுத்தம் செய்தால் அல்லாஹ் எனது கையின் ஒவ்வொரு அசைவுக்கும் பத்து நன்மைகள் தருவான் இல்லையா என்று..! இது கேட்ட நிர்வாகத்தினர் வாயடைத்துப் போவார்கள்!
சில நேரம் பள்ளிவாசலின் ஒழு செய்யும் இடம்,குளியல் அரையை பல் தேய்க்கும் புருசைக் கொண்டு தேய்த்து கழுவுவார்கள் ஹுஸைன், நிர்வாகத்தினர் சென்று தரையை சுத்தம் செய்ய அதற்கான கருவிகளைக் கொடுத்தால் அவர்கள் இந்த கருவிகளைக் கொண்டு நான் சுத்தம் செய்தால் ஒரு மணிநேரம் கூட எடுக்காது அதற்குள் எல்லாம் சுத்தமாகிவிடும்.
ஆனால் நான் அதிக நேரம் இறைவனுக்காக செலவிட விரும்புகிறேன். இன்று முழுவதும் இதை நான் சுத்தம் செய்தால் அல்லாஹ் எனக்கு அதற்கு ததகுந்தார் போல பரிசளிப்பான் இல்லையா என்பார்களாம்..! இது கேட்ட நிர்வாகத்தினர் மீண்டும் வாயடைத்துப் போவார்கள். யாரேனும் அவர்களுக்கு தர்மம் செய்தால்,அவர்கள் எனக்கு கைகால்கள் சுகமாகத் இருக்கிறது, எனக்கு தேவையானதை நானே தேடிக்கொள்கிறேன், மக்கள் அதிகமான உணவை வீண்விரயம் செய்கிறார்கள் அதில் இருந்து உண்டுகொள்வேன். நான் உணவருந்தி உயிரோடு இருப்பதே பள்ளியினை சுத்தம் செய்வதற்காகத் தான் என்பாராம்.
அவர்கள் யாரிடமாவது சென்று சிகிரெட் கேட்டால் உடனே அந்த நபர்கள் ஒரு பெட்டி முழுவதையும் கொடுப்பார்கள். அதற்கு ஹுஸைன் சொல்வாராம் நான் உன்கிட்ட ஒரேயொரு சிகிரெட் தான் கேட்டேன் நீ ஏன் எல்லாவற்றையும் கொடுக்கிறாய் என்பாராம், கொஞ்சம் கொஞ்சமாக கேட்கலாம் தப்பில்லை அதிகமாகத் தான் கேட்க்க கூடாதுன்னு சொல்வார்.
சிலநேரம் கீழே கிடக்கும் சோற்றுப் பருக்கைளை எடுத்து தரையில் ஒரு இடத்தில் சேர்த்து வைப்பார்.
ஏன் இப்படிச் செய்கிறீர்கள் என்று யாரும் கேட்டால், எறும்பிற்காக உணவு வைக்கிறேன்,
நீங்கள் பூனைக்கு உணவு வைக்கிறீர்கள் நான் எறும்பிற்கு வைக்கிறேன்
எறும்பும் அல்லாஹுவின் படைப்புதான் என்பார்கள்.
அப்பள்ளியின் இமாம் அவரிடம் யாரும் எதையும் கேட்க வேண்டாம் அவர் செய்வதை செய்யட்டும் என்பார்.
ஜமாத்தினர் தொழுகச் செல்லும்போது ஹுஸைன் வாங்க தொழுகைக்கு என்று அழைத்தால், நான் தான் பைத்தியமாச்சே அல்லாஹுத்த ஆலா சொல்லி இருக்கான் பைத்தியங்களுக்கு தொழுகை வாஜிப் இல்லை என்று நீங்கள் சென்று தொழுவுங்கள் என்பார்.. ஸுப்ஹானல்லாஹ்.
உண்மையில் யார் இந்த ஹுஸைன் (Hussein gila)..?
ஹுஸைன் ஒரு அரபி மதரஸாவில் ஓதியவர். தாயை இழந்த தந்தை மற்றும் தந்தையின் இரண்டாம் மனைவியால் அதிகமான தொல்லைகளால் இந்நிலைக்கு அவர் ஆளானார். ஒருமுறை அதிசயமான ஒரு விஷயம் பள்ளிவாசலில் நடந்தது. மஃரிப்க்கான அதான் சொல்ல நேரம் நெருங்கியும் முஅத்தின் பள்ளிக்கு வராதது கண்டு, உடனே நானே அதான் சொல்லகிறேன் என்று கிளம்ப நிர்வாகத்தினர் சிலர் தடுக்க முயன்ற போது அப்பள்ளியின் இமாம் அவரை விடுங்கள் அதான் சொல்லாட்டும் என்றார்கள்.
உடனே அழகிய முறையில் அதான் சொன்னார் ஹுஸைன் பள்ளிவாசலில் இருந்த அனைவருக்கும் ஒருவிதமான நிம்மதி அந்த அதானிலும் அவருடைய அந்த குரலிலும், ஸுப்ஹானல்லாஹ்…
அதான் சொல்லி முடிந்ததும் பள்ளியின் இமாம் கண்ணீரோடும், வியப்போடும் ஹுஸைனிடம் கேட்டார்கள், “ஹுஸைன் இவ்வளவு அழகாக அதான் சொல்லத் தெரியுமா உனக்கு?” என்று, ஹுஸைன் சொன்னார், “ஒவ்வொரு நாளும் இங்கே தானே இருக்கிறேன் அதெல்லாம் தெரியும், பைத்தியத்திற்கு தொழுகைதான் வாஜிப் இல்லை அதான் சொல்லலாம்,அல்லாஹுத்த ஆலா எனக்கு உங்களோடு சேர்ந்து தொழுகத் தான் அனுமதி கொடுக்கவில்லை அதானுக்கு இல்லை” என்றார்.
நீங்களும் தான் என்னோடு சேராமல் என்னை ஒதுக்கி வைத்திருக்கிறீர்கள் என்று சத்தமாக சிரித்தார். நான் எனது முறையில் தொழுது கொள்கிறேன் என்று சொல்வார். சில காலங்களுக்கு முன்னால் தான் ஹுஸைன் மரணித்தார்.
இதோ ஹுஸைன் அவர்களின் ஜனாஸா பள்ளிவாசல் வந்துவிட்டது, கஃபன் செய்வதற்கு சென்றவர்கள் மூன்று பேரும் மாற்றி மாற்றி கண்ணீர் விட்டு அழுதுகொண்டே கஃபன் செய்து முடித்தனர், காரணம் ஹுஸைன் அவர்களின் முகம் நுரானியத்தாகவும் உடல் முழுக்க நறுமணமாகவும் இருந்தது, துர்நாற்றத்தோடும், கரை படிந்த பற்களாகவும் இருந்த ஹுஸைன் இன்று இப்படி நறுமணத்தோடு ஜனாஸாவாக கிடப்பது கண்டு அழுதார்கள் ஜமாத்தார்கள் அனைவரும். அல்லாஹு அக்பர்.
அவர்களின் வெளித்தோற்றத்தில் பைத்தியமாக இருந்தார்கள், ஆனால் அல்லாஹுத்த ஆலா அவர்கள் பற்றிய ரகசியத்தை கஃபன் செய்யும்போது தான் வெளிகாட்டியுள்ளான். ஒருவார காலமாக பள்ளிவாசல் ஹுஸைன் இல்லாமல் ஒருவித அமைதியாக காணப்பட்டது, ஒவ்வொரு வக்திலும் தொடர்ச்சியாக ஒருமாத காலம் ஹுஸைன் அவர்களின் பெயர் சொல்லி துஆ துஆ கேட்கப்பட்டது.
துஆவில் ஹுஸைனை நினைத்து ஜமாத்தினர் அனைவரும் அழுதனர். அகப்பார்வை திரையிடப்பட்டு இருக்கும் நமக்கு இது போன்றவர்கள் பைத்தியாமாக தான் தெரிவார்கள். நமது குருட்டு கண்களால் கண்டு யாரையும் குறைத்து மதிப்பிட வேண்டாம். அவர்கள் அல்லாஹுத்த ஆலாவின் ஆட்களாக இருப்பார்கள்.