கணவன் மனைவிக்கிடையே நம்பிக்கையையும்
அன்பையும் வளர்க்கும் சுன்னத்தான செயல்கள்…
கணவன் மனைவி இருவரும் மெய்யோடு மெய் சேர்ந்து ஒன்றாகத் துயில் கொள்ளல்,
இருவரும் ஒருவருக்கொருவர் தம் பணிகளில் ஒத்துழைத்தல்,
இருவரும் ஒன்றாக ஒரே தட்டில் உண்ணுதல்,
ஒன்றாகப்பருகுதல் அதாவது ஒருவர் வாய் வைத்து எச்சில் படுத்திய அதே இடத்திலேயே மற்றவர் வாய் வைத்து அருந்துதல்,
அவ்வப்பொழுது ஒன்றாக சேர்ந்து குளித்தல்,
தலைசீவி விடுதல்,
வெளியில் செல்வதற்குமுன் முத்தமிடுதல்,
ஓய்வு நேரங்களில் ஒன்றினைந்து வெளியே சொல்லுதல்,
ஏதேனும் ஒரு பொருளை வாங்கும்போது இருவரும் ஆலோசனை செய்து வாங்குதல்,
கணவனுக்குப் பிடித்த சேலையை அல்லது ஆடையை மனைவி உடுத்திக்கொள்ளுதல்,
மனைவிக்குப்பிடித்த சட்டையை கணவன் வாங்கி அணிந்து கொள்ளுதல்
இவை யாவும் தம்பதியர் மத்தியில் நம்பிக்கையையும், அன்பையும் வளர்க்கின்றன.
இவையெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வில் இருந்தமையால் அவர்களின் இல்லற வாழ்வில் அன்புக்குப் பஞ்சமே இருந்ததில்லை.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: “நான் மாதவிடாய் காலத்தில் இருக்கும்போது அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்னிடம் தம் தலையைக் காட்டுவார்கள். நான் அவர்களுக்குத் தலைசீவி விடுவேன்”. (நூல்: நஸாஈ)
இந்த ஹதீஸைக் கேள்விபடும் எவருக்கும் ஆச்சர்யமாகத்தான் இருக்கும்! ஏன், அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தலைசீவிக் கொள்ளத் தெரியாதா என்ன!
ஏன் இவ்வாறு செய்தார்கள்? என்பதை யோசிக்கும்போது இல்வாழ்க்கையின் இனிமையைக்கூட்டும் அத்தனை செயல்களுக்கும் அவர்கள் ஒரு முன்மாதிரி என்பதை விளங்க முடியும். (அகிலத்துக்கும் அழகிய முன்மாதிரியாக ஏக இறைவனால் மனித சமுதாயம் மட்டுமின்றி அகிலத்துக்கும் அருட்கொடையாக அனுப்பப்பட்ட வழிகாட்டியல்லவா, இறைத்தூதர் கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்!)
பொதுவாக தன் கணவனுக்கு செய்யும் சிறு காரியமும் ஒரு பெண்ணுக்கு இயல்பாகவே மகிழ்ச்சியைத் தரும். தலைசீவுவது சிறு காரியமாக இருந்தாலும் அதை தன் மனைவியிடம் சொல்லி அவர்கள் மூலம் தன்னை அழகுபடுத்திக்கொள்வதன் மூலம் மனைவிக்கு அளப்பறிய சந்தோஷத்தைக் கொடுக்கும் ஒரு செயலை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுத் தந்திருக்கிறார்கள்.
நீங்கள் திருமணமானவராக இருந்தால் யோசித்துப்பாருங்கள்… இதுவரை ஒருமுறையேனும் உங்கள் மனைவியிடம் உங்களுக்குத் தலைசீவி விடும்படி சொல்லியிருக்கிறீர்களா? இல்லையெனில் அதை சற்று கற்பனையாவது செய்துத்தான் பாருங்களேன், எவ்வளவு இனிமையான ஒரு நிகழ்வாக அது இருக்கும் என்பதை!
“சின்ன சின்ன விஷயங்கள்தான் தம்பதியருக்கிடையே அன்பை வளர்க்கும் பாலங்கள்” என்று சொல்வார்கள். அதற்கு இந்நிகழ்ச்சி சரியான எடுத்துக்காட்டாக அமைகிறது.
இது ஒருபுறமிருக்கட்டும் கணவனுக்கு மனைவி தலைசீவி விடுவதும் ஒரு சுன்னத்தான காரியம் என்பதை ஒவ்வொரு தம்பதியரும் மனதில் பதிய வைத்துக்கொண்டீர்களா? சுன்னத்தான காரியம் எனும்போது அதற்கு நற்கூலி நிச்சயம் இறைவன் புறத்திலிருந்து உண்டு என்பதை மறந்து விடாதீர்கள். இதுக்குக்கூடவா…?! என்கிறீர்களா! ஆம், சகோதர சகோதரிகளே, அதுதான் இஸ்லாத்தின் தனித்துவமும் மகத்துவமும்.
மனைவி கணவனுக்கு தலைசீவி விடுவதுபோல் எப்பொழுதாவது கணவனும் மனைவிக்கு தலைசீவி விடுவதும் (கொஞ்சம் கஷ்டம்தான்… அரைகுறையாக இருப்பினும் கலகலப்பிற்கு கேட்பானேன்!) இல்லறத்திற்கு இனிமையூட்டுவதாக அமையும்.
“எனக்கு மாதவிடாய் வரும் நிலையில் நானும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரே போர்வையில் துயில் கொண்டோம்” என அன்னை ஆயிஷ ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: நஸாஈ)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இச்செயல் நமக்குப் புதுமையாக இருக்கலாம். ஆனால், அதில் எவ்வளவு அர்த்தங்கள் உள்ளன என்பது ஆழ்ந்து சிந்திப்போருக்குத்தான் புலப்படும். ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் வரும் சமயத்தில் அவள் விரக்தியாக இருப்பாள். அதைப் போக்கி அவளை மகிழ்விக்க வேண்டுமெனில் அதற்கான வழியென்ன? அவளுடன் ஒன்றாக இணைந்து துயில் கொள்வதும், அவளுடன் அன்பாக உறவாடுவதும்தானே! இத்தனை நாட்களும் நம்மோடு ஒட்டி உறவாடி ஒன்றாகத் துயில்கொண்ட கணவன் இன்று நம்மைப் பிரிந்ததேனோ என அவள் உள்ளத்திற்கு ஆறுதலளிக்கவே, ஆனந்தமளிக்கவே இவ்வெளிய வழி.
தம்பதியர் இருவரும் ஒன்றாக இணைந்து முட்டி மோதுவதுதான் இல்லறம் என்பதில்லை. மெய்யோடு மெய் சேர்ந்து இருவரும் ஒன்றாக இணைந்து துயில் கொள்வதும் இனிய இல்லறமே. அதுவும் தாம்பத்ய உறவே என்பதை அண்னல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்ந்து காட்டியுள்ளார்கள். தீண்டாமை, பிரிவினை, ஏற்றத்தாழ்வு யாவையும் களைந்தோடும்படி செய்த வாழ்வல்லவா இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடையது.
கணவன் மனைவி நெருக்கத்திற்கு கணவன் சாப்பிட்டு விட்டு மீதி வைத்த எச்சில் உணவைத்தான் மனைவி சாபிடவேண்டும் எனும் வழக்கத்தை மாற்றுமத தர்மங்கள் வலியுறுத்தும்போது தாம் உண்பதையே மனைவிக்கு ஊட்டி விட்டு உண்ணும்படி ஏவுகின்றது இஸ்லாம். இதன்மூலம் மனைவிக்கும் முக்கியத்துவமும் சமத்துவத்தையும் வழங்குகிறது. அதுமட்டுமின்றி இது ஒரு நன்மையான காரியமென்றும் பறைசாற்றுகின்றது.
“நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிர் பிரியும் நேரத்தில் எனது எச்சிலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் எச்சிலும் ஒன்று கலந்தது” என்பது ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவித்த ஒரு ஹதீஸ், அந்த நேரத்தில் கூட தனக்கும் தன் கணவருக்கும் உள்ள அழுத்தமான அன்பை எடுத்துச்சொல்வதாக அமைகிறது.
ஆம், தன் உயிர் பிரியப்போகும் அந்த கடைசி நேரத்தில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனது இல்லறத்துனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் “மிஸ்வாக்” செய்ய வேண்டும் எனும் விருப்பத்தைச் சொன்னபோது, அந்த மிஸ்வாக் குச்சியை மென்மைப்படுத்துவதற்காக அதை தன் வாயில் வைத்து எச்சில்படுத்தி மென்மைப்படுத்தி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கொடுத்ததைத்தான் அவ்வாறு சொல்லிக்காட்டுகிறார்கள்.
அன்பை மென்மேலும் வளர்க்கத் துணை புரிகிறதல்லவா அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்வு? இதைப்பின்பற்றி வாழ்ந்தால் தம்பதியரின் உள்ளங்களிலுள்ள மேடு பள்ளங்கள் மறையும்; அன்பும், பிரியமும் அதிகமாகும் என்று சொல்லவும் வேண்டுமா!