“நீ யாரை நேசித்தாயோ, அவருடன் இருப்பாய்”
ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள்: “ஒரு மனிதர் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார், “யா ரசூலல்லாஹ் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்)! கியாமத் தீர்ப்பு நாள் எப்போது?”
நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள், “வாஹ் (கியாம நாள் நிகழும் காலம், குறிப்பாக அதன் நேரம் பற்றி தெரிந்து கொள்ள விரும்புகிறாய்) சரி. அதற்காக நீ என்ன தயாரித்துக் கொண்டிருக்கிறாய்?”
அம்மனிதர் சொன்னார, “(தங்களிடம் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க நம்பிக்கைக்குரிய) எதையும் நான் செய்யவில்லை. ஆனால், அல்லாஹுதஆலாவின் அருளால் ஒன்று எனக்குக் கிடைத்திருக்கிறது. எனக்கு அல்லாஹ்வின் மீதும், அவன் தூதர் மீதும் அன்பு இருக்கிறது.”
நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
“நீ யார் மீது அன்பு கொண்டிருக்கிறாயோ, அவர்களுடன் இருப்பாய்”.
ஹதீஸ் அறிவிப்பாளர் ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறுகின்றார்கள், “நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய இந்த செய்தியைக் கேட்டு முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்தது போல், அவர்கள் இஸ்லாத்தில் சேர்ந்த பிறகு வேறு எதனாலும் பூரிப்படைந்து நான் பார்த்ததில்லை.” (புகாரி, முஸ்லிம்)
இதே ஹதீஸின் இறுதியில் மற்றொரு அறிவிப்பில், ஹளரத் அனஸ் ரளியல்லாஹு அன்ஹு மேலும் கூறி இருக்கின்றார்கள்: “அன்த மஅ மன் அஹ்பப்த “நீ யாரை நேசித்தாயோ, அவருடன் இருப்பாய்” என்ற நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்த பேச்சைக் கேட்டு புளகாங்கிதம் அடைந்தது போல், ஸஹாபாக்கள் வேறு எந்த பேச்சைக் கேட்டும் மகிழ்ந்ததில்லை. அல்லாஹ்வின் அருளால் நான் நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும், ஹளரத் அபூபக்கர் சித்தீக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும், ஹளரத் உமர் ஃபாரூக் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மீதும் பாசம் கொண்டிருக்கிறேன். அம்மாமனிதர்கள் போல்நான் காரியங்கள் ஆற்றவில்லை என்றாலும், அவர்கள் மீது நான் கொண்டுள்ள அன்பின் அடிப்படையில் அவர்களுடன் இருப்பதை ஆசித்து நிற்கிறேன்” என்று உள்ளது.