இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி
இப்திகார் கிலானி (முன்னணி ஊடகவியலாளர், DNA India நிறுவனத்தின் மூத்த செய்தியாளர், Chief of National Bureau — DNA India)
தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
[ o ‘தங்கள் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப் போவதில்லை. ஆகையால் அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை’ என பாஜக நினைக்கின்றது. ஆகையால் முடிந்த அளவுக்கு முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி, ஹிந்து ஓட்டுகளை எந்த அளவுக்கு ஒன்றுதிரட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஒன்று திரட்ட வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம், முயற்சி.
o மறுபக்கம் மதச்சார்பற்ற கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஆர்எஸ்எஸ் – பாஜக போன்றவற்றை எதிர்த்து முஸ்லிம்கள் எங்குதான் போவார்கள்? நம்மிடம் தான் வரவேண்டும், நமக்குத்தான் வாக்களிக்க வேண்டும்!. ஆகையால் அவர்களும் சமூக – பொருளாதார சிக்கல்களை சரி செய்பவர்களாக இல்லை
o ‘பெருநகரங்களை பொருத்தவரை ஹிந்து வலதுசாரிக் கட்சியான பாஜகவிற்கும் மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸிற்கும் இடையே வேறுபாடுகள் ஒன்றுகூட இல்லை!’
o இன்னும் ஒரு தகவலும் காதும் காதும் வைத்தாற்போல கட்சிக்குள் உலாவருகின்றது. முஸ்லிம் தலைவர்கள் எவரும் சீட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக தமது தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள மதச்சார்பற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளை தேர்வு செய்து அவர்களது வெற்றிக்காக உழைக்க வேண்டும்
o இவற்றையெல்லாம் பார்க்கும்போது என்ன தோன்றுகின்றது? அடுத்து அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அறவே இருக்காது!
o இந்த நாட்டின் வாடகைதாரர்களளோ குடியேறிகளோ அல்லர் முஸ்லிம்கள்!. இந்த நாட்டின் பங்குதாரர்கள், இந்த நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள். வரலாறு திரிக்கப்படுகின்றது என்பார்கள் இங்கு வரலாறு அடியோடு துடைத்தழிக்கப்படுகின்றது என்கிறார்கள் மக்கள்.
o முஸ்லிம் தலைவர்களும் ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். சரியான வியூகத்தோடு நுட்பமாக தீட்டப்பட்ட ஒரு மாற்று ஏற்பாடு குறித்து நிதானமாக யோசிக்க வேண்டிய காலம் ]
இந்திய முஸ்லிம்களின் அரசியல் சமூக வீழ்ச்சி
இப்திகார் கிலானி (முன்னணி ஊடகவியலாளர், DNA India நிறுவனத்தின் மூத்த செய்தியாளர், Chief of National Bureau — DNA India)
தமிழில்: சையத் அப்துர் ரஹ்மான் உமரி
சில காலத்திற்கு முன்னால் எனது ஒரு ஹிந்து நண்பர் விடுமுறையை கழிப்பதற்காக கஷ்மீருக்கு கிளம்பினார். கிளம்புவதற்கு முன்னால் ஏதோ ஒரு மனத்தாங்கலோடு என்னை வந்து சந்தித்தார்.
‘14 வயது நிரம்பிய எனது மகன் டெல்லியில் ஒரு உயர்ந்த பள்ளிக்கூடத்தில் பயில்கிறான். முஸ்லிம்களைப் பற்றி தாறுமாறான தவறான எண்ணங்கள் அவன் மனதில் இருக்கின்றன. அவர்களை ஏதோ பூதங்களைப் போல் கருதுகிறான். ஏதாவது ஒரு முஸ்லிம் குடும்பத்தில் சில நாட்கள் விருந்தாளியாக அவனை தங்க வைத்தால் நல்லது என எண்ணுகின்றேன்!’
இது அவருடைய யோசனை. அவரது கருத்துக்கு மதிப்பளித்து ஸ்ரீநகரில் எனக்கு தெரிந்த ஒரு முஸ்லிம் குடும்பத்தில் அந்த சிறுவனை தங்க வைத்தேன். அந்த வீட்டு சிறுவர்களோடு ஓடியாடி விளையாடி நான்கு நாட்களைக் கழித்தான். இந்த நான்கு நாள் விருந்தோம்பல் வாழ்க்கை அவனது வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அந்த சிறுவனின் தந்தையோடு தொடர்ந்து பலநாட்கள் இது விஷயமாய் உரையாடிக் கொண்டிருந்தேன்.
ஒரு கட்டத்தில் அவர் கூறினார், ‘என் மகனின் மனதில் இருந்த தவறான எண்ணங்கள் மட்டுமல்ல, சிலந்திவலை போல என்னுடைய சிந்தனையில் அப்பிக் கொண்டிருந்த முஸ்லிம்களைப் பற்றிய பல தவறான எண்ணங்களும் ஒரேயடியாக துடைக்கப்பட்டு விட்டன!’
என்னோடு அலுவலகத்தில் பணியாற்றுகின்ற நண்பரின் தந்தையார் மும்பையில் பெரிய வியாபாரியாக திகழுகிறார். முஸ்லிம்களோடு பார்த்து பார்த்து பழகுவார். இத்தனைக்கும் அவரது வியாபாரம் பெரும்பாலும் முஸ்லீம்களோடு தான் நடக்கின்றது. அதிகபட்சம் வீட்டின் வரவேற்பறை வரை அவர்களை அனுமதிப்பார். அலுவலகம் என்றால் கேபினுக்கு வெளியே வைத்து பேசி அனுப்பி விடுவார். ‘எனது தந்தையார் தயக்கம் இல்லாமல் சுதந்திரமாக கலந்துறவாடும் என்ற ஒரே முஸ்லிம் நீங்கள்தான்!’ என்று அவர் பெருமிதத்தோடு கூறினார்
அவர் சொன்னதை பாராட்டாக எண்ணி மகிழ்வதா, இல்லை என்னுடைய மற்ற முஸ்லிம் சகோதரர்களுக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதுவதா என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை
இந்தியாவின் புகழ்பெற்ற முன்னணி பத்திரிகையாளர்களில் ஒருவர் சயீத் நகவீ. (Saeed Naqvi) அவர் Being the Other என்றொரு நூலை எழுதியிருக்கிறார். இதைப்போன்ற பல நிகழ்வுகள் அந்நூலில் உள்ளன. ‘ஒருமுறை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் உரையாற்றிக் கொண்டிருந்தபோது முன்னால் அமர்ந்திருந்தவர்களைப் பார்த்து ஒரு கேள்வி எழுப்பினேன். உங்களில் எத்தனை மாணவர்கள், ஆசிரியர்கள் ஏதேனும் ஒரு முஸ்லிம் நண்பரின் வீட்டுக்கு போய் இருக்கிறீர்கள்? அல்லது அருகிலிருந்து அவரை அவதானிக்க முயற்சி செய்திருக்கிறீர்கள்?’
என்னுடைய இந்தக் கேள்விக்கு ஒருவரால் கூட பதில் தர முடியவில்லை. ‘என்னுடைய தந்தையார் அல்லது தாத்தா உருது மொழியை பார்சி மொழியை அறிந்திருந்தார்’ என்பன போன்ற சில பதில்கள் வந்தன. சமயப் பொறை, சமய வெறியற்ற அருங்குணம் என்பதற்கு அவர்களால் எடுத்துக்காட்ட முடிந்த உதாரணம் இந்தளவில்தான் இருந்தது
சமூகத்தில் எங்கு திரும்பினாலும் அடிக்கடி இது போன்ற பல உண்மைகள் திரை அகன்று கோர முகத்தோடு காட்சி தருகின்றன அம்மணமாக!.எப்பேற்பட்ட இனப்பாகுபாடு, அந்நியத்தனம் ஆகியவற்றுக்கு மத்தியில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்னும் உண்மை உறைக்கின்றது. ஆனாலும் நம்மில் பலர் அதனை உணரவோ அங்கீகரிக்கவோ தயாராக இல்லை
இந்த சயீத் நக்வி யார்? ஒரு முஸ்லீம் வீட்டில் பிறந்தவர், நல்ல வசதியான வாழ்க்கை அமையப்பெற்றவர், 50 ஆண்டுகளாக ஊடகத்துறையில் முன்னணியில் திகழ்பவர், ஸ்டேட்ஸ்மேன் இந்தியன் எக்ஸ்பிரஸ் போன்ற முன்னணி ஆங்கிலப் பத்திரிகைகளின் ஆசிரியர் குழுவில் இடம் பெற்றிருந்தவர், அவரது மகளும் சகோதரரும் கூட ஊடக உலகத்தில் தான் இருக்கிறார்கள். ஆனால் இந்த 50 ஆண்டுகளாக தாம் யார் என்று அடையாளம் கண்டுகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் அவருக்கு ஏற்பட்டிருக்காது என்று கூறலாம்
இந்தியாவின் மதச்சார்பின்மை பண்பாட்டில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட லிபரல் முஸ்லிம்களில் அவரும் ஒருவர். லிபரல் முஸ்லிம் எப்படி இருக்கிறார்கள்? அவர்களது வீடுகளில் ஈது பண்டிகைகளோடு தீபாவளி, ஹோலி பண்டிகைகளும் கொண்டாடப் படுகின்றன. அவர்களது மகள், சகோதரன், அண்ணன் மகள் போன்ற நெருங்கிய உறவுகளில் பலர் ஹிந்து பெருமக்களோடு திருமணம் முடித்திருக்கிறார்கள். இப்பேற்பட்ட மக்களே தங்களை வேற்றாளாக அந்நியத்தன்மையோடு உணர்கிறார்கள் என்றால் மற்ற போது முஸ்லிம்களின் நிலை என்ன என்பதை உங்கள் கணிப்பிற்கு விட்டுவிடுகிறேன்.
இந்தியாவில் அரசியல் அரங்கில் முஸ்லிம்களின் விலை எந்த அளவுக்கு சரிந்துள்ளது என்பதை ஒரு மேற்கோள் மூலம் அறியலாம். மாநிலங்களவையில் எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம்நபி ஆசாத் ஒரு கருத்தை வெளிப்படுத்தி உள்ளார். ‘எனது கட்சியின் ஹிந்து பிரதிநிதிகள் தமது பகுதிகளில் நடைபெறும் மாநாடுகளுக்கு, அரசியல் அமர்வுகளுக்கு வருமாறு என்னை அழைக்க மிகவும் தயங்குகிறார்கள்!’
லக்னோவில் அலிகர் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மத்தியில் உரையாற்றும் போது தமது உள்ளக் கிடக்கையை இந்த அரசியல் தலைவர் வார்த்தைகளில் இறக்கி வைத்தார்.
‘1973 ஆண்டிலிருந்து ஆண்டு காங்கிரஸில் சேர்ந்ததில் இருந்து இன்றுவரை எல்லா தேர்தல்களிலும் நான் பணியாற்றி உள்ளேன். தங்கள் பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்ய என்னை அழைப்பதற்காக ஏறக்குறைய எல்லா தலைவர்களும் காத்திருப்பார்கள். தமது பகுதிக்கு வருமாறு எனக்கு விடுக்கப்படும் அழைப்புகளில் கிட்டத்தட்ட 95 சதவிகிதம் இந்துக்களிடமிருந்து தான் வரும். ஆனால் கடந்த 4ஆண்டுகளாக இது குறைந்து 20 சதவிகிதமாக ஆகிவிட்டது!’
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் ஒரு காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்தவர் குலாம் நபி ஆசாத். ஆனால் தனது அரசியல் வாழ்க்கையை 1980ஆம் ஆண்டில் மகாராஷ்டிராவில் ஹிந்து பெரும்பான்மை தொகுதியான வாசன் தொகுதியிலிருந்து தான் தொடங்கினார். 1984ஆம் ஆண்டு மறுபடியும் அதே தொகுதியில் வெற்றி பெற்றார்
‘சிறுபான்மையினரின் பிரதிநிதியாக அல்ல, இந்தியாவின் பெரும்பான்மையினரின் மதச்சார்பின்மையின் அடையாளமாக நான் திகழ்கிறேன்!’ என அவர் அடிக்கடி சொல்வது வழக்கம்
2005, 2008 ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். காங்கிரஸ் காரியக் கமிட்டியின் உறுப்பினராகவும் மேல்மட்ட முன்னணித் தலைவராகவும் திகழ்கிறார். மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம்பெற்றிருந்தார்
ஒருநாள் காலை அவரிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. காஷ்மீர் டைம்ஸ் பத்திரிகையின் டெல்லி பிரிவில் நான் பணியாற்றி வந்ததால் என்னுடைய பணிவட்டத்தில் (Beat) அவரை சந்திப்பதும் ஓர் அம்சம்.
அலுவலகம் செல்லும் வழியில் நிர்வான் பவனில் உள்ள அவரது அமைச்சக அலுவலகத்திற்கு சென்றேன். வரவேற்பறையில் என்னை உட்கார வைத்தார் அவரது உதவியாளர்திரு.ராமச்சந்திரன். ஏறக்குறைய ஒரு மணி நேரம் காத்திருந்தேன். பலர் வருகிறார்கள், சந்திக்கிறார்கள், செல்கிறார்கள். எனக்கு அழைப்பு வருவதாக இல்லை!. ராமச்சந்திரனிடம் போய் கேட்டபோது, அவர் ஒரு நாள் கழித்து வருமாறு சொன்னார். காரணத்தைச் சொல்லவில்லை
‘அமைச்சரை நான் சந்திக்க வரவில்லை!, அமைச்சர் தான் என்னை வரச் சொல்லி இருக்கிறார்’ என்பதை அழுத்தமாக சுட்டிக் காண்பித்து, திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்ட பிறகு அவர் சொன்ன காரணம் என்னை உறையச் செய்துவிட்டது
‘இன்று அமைச்சரை சந்திப்போர் பட்டியலில் முஸ்லிம்களில் பலர் இருக்கிறார்கள். நாம் ஒரு மதச்சார்பற்ற நாட்டில் தானே இருக்கிறோம்? ஆகையால் சந்திப்பு பட்டியலையும் மதச்சார்பற்றதாக பேணவேண்டிய அவசியம் எங்களுக்கு இருக்கின்றது!’. இதுதான் அவர் கூறிய காரணம்
கிளம்பும்போது அவரிடம் போய் சொன்னேன், ‘முஸ்லிமாக இருப்பதால், அதுவும் காஷ்மீர் முஸ்லிமாக இருப்பதால் தான் இந்த அமைச்சரவையில் ஆசாத் அவர்களுக்கு அமைச்சர் பதவி கிடைத்துள்ளது என்பதை நினைவில் கொள்ளுங்கள்!’
கடந்த ஆண்டு குஜராத் தேர்தலில் நரேந்திர மோடியை தோற்கடிப்பதற்காக எல்லா வகையான உத்திகளையும் காங்கிரஸ் கட்சி கையாண்டது. தேர்தல் பிரச்சார மேடைகளில் எந்த முஸ்லிம் தலைவர்களும் வீற்றிருக்கக்கூடாது என்பது அதில் குறிப்பிடத்தக்கது. குஜராத் காங்கிரஸின் முக்கிய தலைவர்களில் ஒருவரும் சோனியா காந்தி அம்மையாரின் அரசியல் ஆலோசகருமான அஹ்மத் பட்டேலைக் கூட முன்னிலைப்படுத்தவில்லை
முஸ்லிம் பகுதிகளுக்கு வாக்கு சேகரிக்க செல்லக்கூடாது, பேரணிகள் பொதுக் கூட்டங்களில் தாடியும் தொப்பியும் வைத்த முஸ்லிம்களை முதல் வரிசையில் அமர வைக்கக் கூடாது என்றெல்லாம் வேட்பாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. ஏறக்குறைய இதேபோன்ற தேர்தல் உத்திகளைத்தான் வருகின்ற 2019 நாடாளுமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி கையாள உள்ளது
தேர்தல் பிரச்சாரத்தின் போது கோயில்களுக்கும் மடங்களுக்கும் சென்று ஆசீர்வாதம் பெறுவதன் வழியாக நரேந்திர மோடி மற்றும் பா.ஜ.க.வின் இந்து வாக்கு வங்கியில் குறிப்பிட்ட அளவு பிளவை ஏற்படுத்திவிடலாம் என காங்கிரஸின் தலைவர் ராகுல்காந்தி திட்டமிட்டு செயல்படுகிறார். இன்னும் ஒரு தகவலும் காதும் காதும் வைத்தாற்போல கட்சிக்குள் உலாவருகின்றது. முஸ்லிம் தலைவர்கள் எவரும் சீட்டை கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம். அதற்குப் பதிலாக தமது தொகுதியில் வெற்றி வாய்ப்புள்ள மதச்சார்பற்ற காங்கிரஸ் பிரதிநிதிகளை தேர்வு செய்து அவர்களது வெற்றிக்காக உழைக்க வேண்டும்
இவற்றையெல்லாம் பார்க்கும்போது என்ன தோன்றுகின்றது? அடுத்து அமையப் போகின்ற நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதித்துவம் அறவே இருக்காது!
சீர்குலைந்து கிடக்கின்ற பொருளாதாரம், வேலைவாய்ப்பின்மை, ஊழல் போன்றவற்றிலிருந்து பொதுமக்களின் பார்வையை முற்றிலும் திருப்ப வேண்டுமென்றால் polarization (முஸ்லிம்களுக்கு எதிரான இனவெறி)யே மிகச் சரியான ஆயுதம்
முஸ்லிம்கள் குறித்த அச்சத்தை இந்துக்களுக்கு ஊட்டி முஸ்லிம்களின் வாக்கு வங்கியை நிலைகுலையச் செய்துவிட வேண்டும் என ஏறக்குறைய தீர்மானித்து பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் அமித்ஷா செயல்பட்டுவருகிறார். ஹிந்துத்துவா அடிப்படைவாத அமைப்பான ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் எஸ் எஸ் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத் உத்தரப்பிரதேச மாநிலத்தின் அயோத்தியா நகரத்தில் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதின் இடத்தில் பிரமிக்கத்தக்க ராமர் கோயிலை கட்டுவதற்கான சட்ட வடிவை இயற்றுமாறு ஓயாமல் கோரிக்கை வைப்பதன் வாயிலாக அதனை ஒரு தேர்தல் பிரசார கருவியாக மாற்றிவிட்டார்
இந்த வழக்கை விரைவாக விசாரிக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோயயி மறுத்துவிட்டது தீவிர வலதுசாரியினரிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கி விட்டால் அதை ஊடகங்களில் பெரிதாக பேச வைத்து அதற்கான ஆதாரங்கள் சாட்சிகள் என்றெல்லாம் விவாதிக்க வைத்து ஒரு தேர்தல் பிரச்சாரக் கருவியாக இதனை மாற்றி, களத்தை கொந்தளிக்க வைத்துவிடலாம் என்பது இந்துத்துவா வலதுசாரிகளின் திட்டம். ஆனால் தலைமை நீதிபதி அதைக் குலைத்துவிட்டார்
இதேபோன்று கஷ்மீரில் நிலையற்ற அமைதியின்மையை நீடிக்கச் செய்வதும் நாடு நெடுக உள்ள இந்துக்கள் மனதில் பயத்தை விதைப்பதும் போலராய்ட் (ஒரு பக்கத்தில் குவிப்பது) பண்ணுவதும் பாஜகவின் தேர்தல் வியூகங்களில் ஒன்று எனத் தெரிய வருகின்றது. இதன் மூலமாக முஸ்லிம்களிடையே கல்வி முன்னேற்றம் போன்ற கருத்துக்கள் எல்லாம் பின்தள்ளப்பட்டு பாதுகாப்பின்மை குறித்த பய உணர்வு சூழ்ந்துகொள்ளும். அபாயகரமான குறியீடு இது!
இன்றைய இந்திய முஸ்லிம்களின் அரசியல் நிலை எந்த அளவுக்கு கையறு நிலையாக இருக்கின்றது என்பதை விளக்கிக் கூறுவது ஒன்றும் கடினமல்ல!. ‘தங்கள் வேட்பாளர்களுக்கு முஸ்லிம்கள் வாக்களிக்கப் போவதில்லை. ஆகையால் அவர்களைப் பற்றி கவலைப்பட எதுவுமில்லை’ என பாஜக நினைக்கின்றது. ஆகையால் முடிந்த அளவுக்கு முஸ்லிம் வாக்குகளை பிளவுபடுத்தி, ஹிந்து ஓட்டுகளை எந்த அளவுக்கு ஒன்றுதிரட்ட முடியுமோ அந்த அளவுக்கு ஒன்று திரட்ட வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம், முயற்சி.
மறுபக்கம் மதச்சார்பற்ற கட்சிகளை எடுத்துக்கொண்டால் ஆர்எஸ்எஸ் – பாஜக போன்றவற்றை எதிர்த்து முஸ்லிம்கள் எங்குதான் போவார்கள்? நம்மிடம் தான் வரவேண்டும், நமக்குத்தான் வாக்களிக்க வேண்டும்!. ஆகையால் அவர்களும் சமூக – பொருளாதார சிக்கல்களை சரி செய்பவர்களாக இல்லை
இந்தியாவின் மதச்சார்பற்ற தன்மையின் மாண்புமிகு சின்னங்களாக முன்னிலைப் படுத்துப்படுகின்ற, பொதுமக்களால் ‘கவர்மெண்ட் முஸ்லிம்கள்’ என அழைக்கப் படுகின்ற சயீத் நக்வி, குலாம் நபி ஆசாத் மற்றும் அகமது படேல் போன்ற தலைவர்களின் உள்ளத்திலேயே இந்த சிஸ்டம் – அமைப்பை விட்டு தாங்கள் துண்டிக்கப்படுகிறோம் என்னும் உணர்வு தலை தூக்கிவிட்டது.
அலிகார் முஸ்லிம் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தரான லெப்டினன்ட் ஜெனரல் (ஓய்வு) ழமீருத்தீன் ஷாஹ் அண்மையில் தனது வாழ்க்கை வரலாற்று நூலை வெளியிட்டார். அதன் தலைப்பு என்ன தெரியுமா? ‘கவர்மெண்ட் முஸ்லிம்’
தமது வாழ்நாளில் தாம் சந்தித்த வெற்றிகரமான பல முஸ்லிம்கள் தங்களை மதச்சார்பற்றவர்களாகக் காட்டிக்கொள்ள முஸ்லிம் சமூகம், முஸ்லீம் அமைப்புகளை விட்டு வெகுதூரம் விலகி இருப்பதையே விரும்புகிறார்கள் என அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தனது சமுதாய நலன், தன் வேலை இரண்டுக்குமிடையே வாள்நுனியில் நடப்பதைப்போல பயங்கரமான எச்சரிக்கையை ஒவ்வொரு முஸ்லிம் அதிகாரியும் கடைப்பிடிக்க வேண்டியுள்ளது என்கிறார் அவர். கடைசியில் அதிகாரிகள் அனைவரும் வேலைக்கு முன்னுரிமை கொடுத்து தம் சொந்த சமுதாய மக்களோடு பாரபட்சமாக நடந்து கொள்ளத் தொடங்குகிறார்கள்
எனது தந்தையார் நிர்வாக அதிகாரியாக அஜ்மீர் சென்ற போது அங்குள்ள முஸ்லிம்கள் அனைவரும் ‘இதோ இன்னொரு கவர்ன்மெண்ட் முஸ்லிம் வந்துவிட்டார்’ என பேசலாயினர். இதற்கான பொருள் தந்தையாருக்கு விளங்கவில்லை. விசாரித்து தெரிந்து கொண்டார்
‘ஒரு முஸ்லீம் அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் அமரவைக்க பட்டால் அவ்வளவுதான்!. இனி, அவர் தமது சமுதாய நலன்களைப் பற்றி சிந்திக்க மாட்டார். அரசாங்கம் என்ன சொல்கிறதோ அதையே பேசுவார். பொது முஸ்லிம்களை விட்டு முடிந்தளவுக்கு தனது தொடர்புகளை அறுத்துக்கொள்வார்!’
‘கவர்மெண்ட் முஸ்லிம்’ என்பதற்கு இதுதான் பொருள் தான் என்கிறார் ஜெனரல் ழமீர் ஷா. ஒரு ராணுவ அதிகாரியாக இருந்த காரணத்தினால் 1970இல் பல்கலையில் நடந்த ஒரு விளையாட்டுப் போட்டியில் கலந்து கொண்டு தலைமை தாங்கினார். முஸ்லிம் விளையாட்டு அணிகளின் உறுப்பினர்களை சந்தித்து ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியுமாறு ஊக்கப்படுத்தினார். பல நாட்கள் இது தொடர்பாக பேசிய பிறகும் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை.
கல்வியை முடித்த பிறகு ராணுவத்தில் சேர்வோம் என ஒருவர் கூட சொல்லக் காணோம். நீங்கள் புரிந்து கொள்ளுமளவு என்னால் சொல்ல முடியவில்லை என தன்மீது அவர் குறைப்பட்டுக்கொண்ட போது அனைவரும் ஒருமித்த குரலில் பதில் சொன்னார்கள்,
‘நீங்கள் ஒரு கவர்மெண்ட் முஸ்லிம்!. உங்கள் வார்த்தையை எப்படி நம்புவது?’
சயீத் நக்வி, ழஹீருத்தீன் ஷாஹ் ஆகியோரின் நூல்களை வாசிக்கும் போது ஒரு உண்மை புலப்படுகின்றது. ஏறக்குறைய நூறு ஆண்டுகளுக்கு முன்னால் முஸ்லிம் லீக் தலைவர் முகமது அலி ஜின்னா கண்டுணர்ந்த கசப்பான உண்மை அது. அதன் பிறகுதான் அவர் காங்கிரஸை விட்டு விலகினார்
‘மத வெறி என்பது ஒன்றும் புதிய வியாதி அல்ல! என்பதையும் நக்வி ஒத்துக் கொள்கிறார். 1960ஆம் ஆண்டு இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் பணியாற்றுவதற்காக டெல்லி வந்த போது முஸ்லிம் என்ற ஒரே காரணத்தினால் வாடகைக்கு வீடு பிடிக்க முடியவில்லை.
கடைசியில் மூத்த பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் அவர்களின் பலத்த பரிந்துரையால்தான் வீடு கிடைத்தது. இன்றோ வீடு கொடுக்காதவர்கள் – வீட்டுக்காக பரிந்துரை செய்பவர்கள் இடையிலான விகிதாச்சாரம் தாறுமாறாக ஆகிவிட்டது’ என்கிறார்
முஸ்லிம்கள் தங்கள் சொந்த நாட்டிலேயே அந்நியர்களாக அகதிகளாக உணர வைக்கப்படுகிறார்கள் என்பதையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன. இந்திய முஸ்லிம்கள் அனைவரும் ஒரு வகையான முக்கோணத்திற்குள் (triangle) சிறைப் பட்டுள்ளார்கள் என்கிறது அந்நூல். ஒரு பக்கம் ஹிந்துக்களும் முஸ்லிம்களும் மறுபக்கம் இந்தியா மற்றொரு பக்கம் பாகிஸ்தானும் காஷ்மீரும்!
இந்த முக்கோண சிக்கல் விடுவிக்கப்படாத வரை தெளிவான தீர்மானத்தை எட்டாத வரை இந்தப் பிரச்சனை தீராது!. ஆனால் நிலைமை என்ன? பாகிஸ்தான் ஒருவேளை தீர்வுக்கான முன்வந்தாலும் ஹிந்து வலதுசாரிகள் ஒருபோதும் தீர்வுகாண முன்வர மாட்டார்கள். ஏனென்றால் இந்த பிரச்சினைகளின் மீதுதான் அவர்களுடைய அரசியல் நிலை கொண்டுள்ளது!
‘பெருநகரங்களை பொருத்தவரை ஹிந்து வலதுசாரிக் கட்சியான பாஜகவிற்கும் மதச்சார்பற்ற கட்சியான காங்கிரஸிற்கும் இடையே வேறுபாடுகள் ஒன்றுகூட இல்லை!’ என்கிறார் நகவி. 1947லிருந்து ஏமாற்றும் திரை ஒன்று இடையே தொங்கிக் கொண்டிருந்தது. அது இப்போது ஒன்றுமில்லாமல் கிழிந்துவிட்டது. சமூகத்தின் பொதுப்புத்தியில் அரசியல் நலன்களை பற்றியெல்லாம் சிந்திக்காமல் மத அடிப்படையிலான பாகுபாடும் பிளவும் ஆழமாக வேரூன்றி விட்டன
ஒவ்வொரு நாளும் முஸ்லிம்கள் தங்கள் பகுதிகளுக்குள் உட்சுருங்கிக் கொண்டே போகிறார்கள். இனவாதத்தை பேசாத இந்துக்களும் கூட செய்வதறியாமல் திகைத்து போய் நிற்கிறார்கள்
மேலும் அவர் கூறுகிறார், ‘முடிந்தளவுக்கு மதச்சார்பின்மைக்கு விளக்கம் கொடுப்பதை தவிர்த்துவிடுகிறேன். ஏனெனில் இந்த சொல்லின் உன்னதம் ஏறக்குறைய பாழாகிவிட்டது. வேதனை தருகின்ற கெடுவாய்ப்பு என்னவென்றால் பயங்கரவாதத்திற்கு எதிரான போர், இன்று வலதுசாரி ஹிந்துத்துவாவை கட்டியெழுப்புகின்ற கட்டுமானமாக மாறிவிட்டது!’
நூற்றுக்கணக்கான அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் பொய் வழக்குகளில் அன்றாடம் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் அவர்கள் குற்றமற்றவர்கள் அப்பாவிகள் என்ற சிந்தனைகூட பெரும்பான்மை இந்துக்களின் மனதில் உதிப்பதில்லை! அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்பதற்கான எந்த சான்றும் கிடைக்காவிட்டாலும் பரவாயில்லை, முஸ்லிம்களாக இருப்பது ஒன்றே அவர்கள் கைது செய்யப்படுவதற்கான சரியான காரணம் என ஏறக்குறைய அனைவரும் நினைக்கிறார்கள்
உள்ளொடுங்கிய முஸ்லிம் கிராமங்களில் வசிப்பவர்களின் மனங்களில் வெளியே சொல்ல முடியாத நூற்றுக்கணக்கான மனக்கவலைகளும் முறையீடுகளும் தவித்துக் கொண்டிருக்கின்றன. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியாக இருக்கட்டும், அமெரிக்காவில் நடக்கின்ற தேர்தலாக இருக்கட்டும் அனைத்து விஷயங்களிலும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட இரண்டு உளசார்புகள் வெளிப்படுகின்றன
ஒரு முஸ்லிம் அரசாங்கத்தின் உயர் உறுப்புகளுக்கு சென்று விட்டார் என்றால் தனது சொந்த முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த உதவியும் செய்யாமல் அவர் முகம் திருப்பிக்கொள்ள வேண்டியிருக்கின்றது. சமுதாய நலனோடு செயல்படுகிறாரோ என்னும் குற்றச்சாட்டு வரக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியுள்ளது என மேலும் ஒரு உண்மையை நகவி சொல்கிறார்
இதற்கு முன்பெல்லாம் நிலைமை இந்த அளவுக்கு கடுமையானதாக உணர்ச்சிக் கொந்தளிப்புக்கு இடமளிப்பதாக இருந்ததில்லை. இன்றைக்கு நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. எந்த இந்தியரும் முஸ்லிம்களின் குடியுரிமையைப் பற்றியும் தேசப்பற்றைப் பற்றியும் கேள்வி எழுப்பமுடியும்!
சினிமா உலகில் உள்ள முஸ்லிம்கள்கூட விதிவிலக்குகள் அல்லர். அவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்படுவதில்லை. 2015ஆம் ஆண்டு சினிமா உலகத்தைச் சேர்ந்த இரண்டு நபர்கள் மத ரீதியிலான பாகுபாடுகள் எண்ணங்கள் அதிகரித்துக் கொண்டே போவதை சுட்டிக்காண்பித்து குரல் கொடுத்த போது பெரும்பான்மை இந்துத்துவவாதிகளின் கடுமையான கோபப்பார்வைக்கும் எதிர்வினைகளுக்கும் ஆளாக நேர்ந்தது. அவர்கள் நடித்த படங்களுக்கு எதிராக சில அமைப்புகள் வழக்கு தொடுக்கவும் முன்வந்தன
நகவி-யின் குடும்பத்தினர் பலர் பாகிஸ்தானில் வசிக்கிறார்கள். அவர்களை சந்திப்பது கூட இன்றைக்கு கடும் கஷ்டம். இந்திய வெளிவிவகார துறையில் பணியாற்றும் ஒரு நண்பர் ‘இனிமேல் நீங்கள் உறவுகளைப் பற்றி எல்லாம் அடியோடு மறந்து விடுங்கள்’ என ஆலோசனை தருகிறார். ஒருவகையில் பார்த்தால் அது உண்மைதான்!. உறவுகளை சந்திப்பதைப் பற்றியோ உறவாடுவதைப் பற்றியோ சிந்திக்கவும் முடியாது. ஆனால் என் உள்ளத்து விரக்தியை, ஏமாற்றத்தை, இழப்யுணர்வை என்ன செய்வது? இவை மறைய நெடுங்காலம் ஆகும்’ என்கிறார் நகவி
1857 க்கு பிறகு முஸ்லிம்கள் தங்கள் எதிரிகளாக இருப்பதால் ஆங்கிலேய ஆட்சியாளர்கள் அவர்களை அந்நியர்களாக வேற்றாள்களாகக் கருதி, அதேபோல் நடத்தவும் தலைப்பட்டார்கள். 1947க்குப் பிறகு பாகிஸ்தான் என்னும் பெயரில் தனிநாடு ஒன்றை முஸ்லிம்கள் பெற்றுக் கொண்டதால் இந்தியாவில் வசிக்க நேர்ந்த முஸ்லிம்கள் அனைவரின் மீதும் பாகிஸ்தானை உருவாக்கி பிரித்த குற்றம் வலுக்கட்டாயமாக சுமத்தப்பட்டு அந்நியர்களாக வேற்றாள்களாக அவர்கள் உணர வைக்கப் படுகிறார்கள் என்பது நாம் கண்டாக வேண்டிய ஒரு உண்மை
கடந்த 4 ஆண்டுகளில் என்னென்ன மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்திருக்கின்றன? டெல்லி, அவுரங்கசீப் சாலை பெயர் மாற்றப்பட்டு விட்டது. கோரக்பூரில் உள்ள உருது பஜார், ஹிந்து பஜாராகிவிட்டது. ஹுமாயூன் நகர், ஹனுமான் நகராகி விட்டது. உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரின் எல்லைப் புறங்களில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க முகல் சராய் நகரம் தீனதயாள் உபாத்யாயா நகரமாக மாறிவிட்டது. முகலாய பேரரசர் அக்பரால் நிர்மாணிக்கப்பட்ட அலாஹாபாத் நகரம் இப்போது பிரயாக் ராஜ் ஆகிவிட்டது. அஹ்மதாபாத் மாநகரம், கர்னாவதி நகராக மாறப்போகின்றது
வரலாறு திரிக்கப்படுகின்றது என்பார்கள் இங்கு வரலாறு அடியோடு துடைத்தழிக்கப்படுகின்றது என்கிறார்கள் மக்கள். பெயர்கள் மட்டும் மாற்றப்படுவதில்லை. முஸ்லிம்களின் மின்னும் கடந்த கால வரலாற்றை சுட்டிக்காட்டுகின்றன பெயர்கள். அந்த வரலாற்றை அழிப்பதற்காகத்தான் சின்னங்கள் அழிக்கப்படுகின்றன
இந்த நாட்டின் வாடகைதாரர்களளோ குடியேறிகளோ அல்லர் முஸ்லிம்கள்!. இந்த நாட்டின் பங்குதாரர்கள், இந்த நாட்டின் வரலாற்றை உருவாக்கியவர்கள்.
பதினைந்தாம் நூற்றாண்டின் இறுதியில் ஐரோப்பாவின் ஸ்பெயின் நாட்டில் நிகழ்ந்த சீர்குலைவுகள் யாவும் இங்கே நிகழ்த்தப்படுகின்றன. இந்திய முஸ்லிம்களின் வரலாறு பழைய புராணமாக மாற்றப்படுகின்றது. இஸ்லாமோடு பிணைந்திருப்பதும் முஸ்லிம் என்ற அடையாளத்தை உயிர்ப்போடு வைத்திருப்பதும் அரும்பாடுபட்டாவது செய்தேயாக வேண்டிய கடமைகள்
முஸ்லிம் தலைவர்களும் ஒரு சுயபரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மதச்சார்பற்ற கட்சிகளோடு இணைந்தும் கரைந்தும் தாம் மேற்கொள்கின்ற பயணங்களின் விளைவுகள் என்ன? என்பதை யோசிக்க வேண்டும்
சரியான வியூகத்தோடு நுட்பமாக தீட்டப்பட்ட ஒரு மாற்று ஏற்பாடு குறித்து நிதானமாக யோசிக்க வேண்டிய காலம் இனியும் தகையவில்லையா?
source: https://www.facebook.com/syed.umari.7/posts/955237104680685