இஸ்லாத்தில் சமூகநீதி
கலாநிதி M.A.M.சுக்ரி
‘நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும், ஒருவன் நீதியின் அடிப்படையில் செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது’
சமூக நீதி பற்றிய இஸ்லாத்தின் கருத்துக்கள் இறைவன், பிரபஞ்சம், மனித வாழ்வு பற்றிய அதன் கோட்பாட்டின் பின்னணியிலேயே அணுகி ஆராயப்படல் வேண்டும். ஏனெனில் இஸ்லாமிய போதனைகள், கருத்துக்கள், கோட்பாடுகள் அனைத்தினதும் அடிப்படையாக விளங்குவது, மேற்குறிப்பிட்ட விடயங்களைத் தழுவி நிற்கும் அதன் உலக நோக்காகும்.
இந்த உலக நோக்கின் அடிப்படையிலேயே இஸ்லாத்தின் சட்டங்கள், வணக்கங்கள், சமூக, அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகள், பண்பாடு, நாகரிகம் அனைத்தும் கட்டி எழுப்பப்பட்டுள்ளன.
ஒரு மதம் என்றவகையில் இஸ்லாம் இப்பிரபஞ்சத்தின் சிருஷ்டிகர்த்தாவாகிய இறைவனுக்கும் அவனது படைப்பினங்களுக்கு இடையிலுள்ள தொடர்புகள் பற்றியும் மனிதனுக்கும், இப்பிரபஞ்சத்திற்கும் இடையில் உள்ள தொடர்புகள் பற்றியும் பேசுகின்றது.
இப்பிரபஞ்சத்தில் மனிதனின் நிலை, அவனது வாழ்வின் குறிக்கோள், அதனை அடைவதற்கான நெறிமுறைகள் பற்றி மிகத் தெளிவான ஒரு கருத்தை இஸ்லாம் கொண்டுள்ளது.
இக்கருத்து மனிதவாழ்வின் அனைத்துத் துறைகளையும் பொதிந்துள்ளது. இந்த வகையிலேயே இஸ்லாம் தனிமனிதனுக்கும், சமூகத்திற்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றியும், பல்வேறு சமூகங்களுக் கிடையிலான தொடர்புகள் எவ்வாறு அமைதல் வேண்டும் என்பது பற்றியும், சமூகப் பண்பின் முக்கிய அங்கங்களான அரசியல், பொருளாதார நிறுவனங்கள் எவ்வகையில் அமைதல் வேண்டும் என்பது பற்றியும் மிகத்தெளிவாக விளக்கியுள்ளது.
இப்பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும், சிருஷ்டித்த இறைவன், அவற்றை ஒரு ஒழுங்கான கட்டுக்கோப்பிலும், சீரமைப்பிலும் படைத்துள்ளான். இப்பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் பரஸ்பரம் இணைந்து, ஓர் ஒழுங்கிற்கும் கட்டுப்பாட்டிற்கும், வரையறைக்கும் உட்பட்டே இங்குகின்றன.
‘அவனே யாவற்றையும் படைத்து, ஒவ்வொன்றிற்கும் ஓர் ஒழுங்கை வழங்கினான்’ (அல்குர்ஆன் 25:2)
‘நாம் ஒவ்வொரு பொருளையும் (குறிப்பான) அளவின் படியே சிருஷ்டித்திருக்கின்றோம்’ (அல்குர்ஆன் 55:49)
‘தன்னுடைய வரையறைக்குள் (தவறாமல்) செல்லும் சூரியனும் ஓர் அத்தாட்சியாகும். இது யாவையும் நன்கறிந்தவனும், மிகைத்தோனுமாகிய இறைவனால் விதிக்கப்பட்டதாகும். (உலர்ந்து வளைந்த) பழைய பேரீச்சங்கம்மைப் போல (பிறையாக) ஆகும் வரையில் சந்திரனுக்கும் நாம் பல பட்சங்களை ஏற்படுத்தியி ருக்கின்றோம். சூரியன் சந்திரனை அணுகமுடியாது, இரவு பகலை முந்த முடியாது இவ்வாறே கிரகங்களும், நட்சத்திரங்களும், ஒவ்வொன்றும் தன்னுடைய வட்டவரைக்குள் நீந்திச் செல்கின்றது’ (அல்குர்ஆன் 36: 38, 40)
இறைவனால் படைக்கப்பட்ட ஒவ்வொரு படைப்பும் அதற்கென வரையறுக்கப்பட்ட பங்கையும் பணியையும் ஓர் ஒழுங்கு முறைக்கேற்ப நிறைவேற்றும் வகையில் சிருஷ்டிக்கப்பட்டிருப்பதால், இயற்கைச் சிருஷ;டியில் ஓர் ஒழுங்கும், கட்டுப்பாடும், சீரமைப்பும் காணப்படுகின்றது. இது போன்றே மனித சமூகத்தின் ஒவ்வொரு அங்கமும், பரஸ்பரம் ஒத்துழைத்து தொழிற்படும் போது அமைதியும், ஒழுங்கும் உருவாகி சமூக, பொருளாதார நீதி நிலைபெறுகின்றது என்பது இஸ்லாத்தின் கருத்தாகும்.
ஒரு கட்டத்தை அதில் உள்ள ஒவ்வொரு செங்கல்லும் பரஸ்பரம் ஒன்றுடன் மற்றொன்று இணைந்து உறுதியும், பலமும் அடையச் செய்வது போன்று சமூகத்தின் ஒவ்வொரு தனிமனிதனும், ஏனையவர்களுடன் இணைந்து, சமத்துவம், சகோதரத்துவம், சமூக உறுதிப்பாடு ஆகிய பெறுமானங்களின் அடிப்படையில், பரஸ்பர கடமைகள், உரிமைகளைப் பேணிப் பாதுகாத்து, சமூக, பொருளாதார நீதியின் செயல்பாட்டை உறுதி செய்யும் வகையில் இஸ்லாம் இவை தொடர்பான சட்டங்களையும், விதிகளையும் ஏற்படுத்தியுள்ளது.
‘அத்ல்’ எனக் குர்ஆன் குறிப்பிடும் நீதியானது முஸ்லிம் சமூகத்தின் அத்திவாரமாகும். நீதி வழங்குவதை இறைவனின் பண்புகளில் ஒன்றாக அது குறிப்பிடுகின்றது. எனவே, விசுவாசிகளை நீதி செலுத்துமபடியும், நீதியை நிலைநாட்டும் படியும் அது பணிக்கின்றது.
‘விசுவாசிகளே! நீங்கள் நீதி செலுத்தும்படியும், நன்மை செய்யும் படியும், உறவினர்களுக்கு உதவி செய்யும் படியும் நிச்சயமாக அல்லாஹ் உங்களை ஏவுகின்றான். மானக்கேடான காரிங்கள், அக்கரமம், பாபம் ஆகியவைகளிலிந்து உங்களைத் தடை செய்கின்றான்’ (அல்குர்ஆன் 16:90)
நீதி என்பது இறை விசுவாசத்துடன் பின்னிப் பிணைந்துள்ள ஒன்றாகவும்,ஒருவன் நீதியின் அடிப்படையில் செயல்படுவது உண்மையான பக்தியின் வெளிப்பாடாகவும் இஸ்லாம் கருதுகின்றது.
‘நற்செயல் என்பது உங்களது முகங்களைக் கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவதல்ல. மாறாக அல்லாஹ்வையும், இறுதி நாளையும், வானவர்களையும், வேதங்களையும், நபிமார்களையும் ஒருவன் முழுமையாக நம்புவதும், தமக்கு விருப்பமான பொருளை உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும் வறியவர்களுக்கும், வழிப்போக்கர்களுக்கும், யாசிப்போருக்கும், அடிமைகளை மீட்பதற்கும் வழங்குவதும், தொழுகையை நிலைநாட்டி ஸகாத்தைக் கொடுத்து வருவதுமே நற்செயலாகும்’ (அல்குர்ஆன் 2:177)
இஸ்லாத்தில் இறை நம்பிக்கைக்கும், இறை பக்திக்கும். சமூக, பொருளாதார நீதிக்குமிடையிலான இறுக்கமான தொடர்பை குர்ஆனின் இத்திருவசனம் மிகத்தெளிவாக விளக்குகின்றது. சமூகத்தில் வசதியும், வாய்ப்பும், பலமும், சக்தியும் படைத்தோர், பலவீனர்கள், வசதியற்றோர், வறுமையில் வாடுவோர், வயோதிபர், அங்கவீனர் ஆகிய அனைவருக்கும் ஒரு குறிப்பிட்ட தரமான வாழ்விற்கு உறுதி செய்தல் கடமையாகும் என இஸ்லாம் கூறுகின்றது.
மனிதன் உழைத்துப் பொருளீட்டி வாழ்க்கையின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்தல் வேண்டும் என்ற கருத்தை இஸ்லாம் வலியுறுத்துகின்றது. இத்தகைய உழைப்பாளிகள், அவர்களது உழைப்பில் எத்தகைய தடையுமின்றி ஈடுபடக்கூடிய வாய்ப்பை இஸ்லாமிய ஆட்சி ஏற்படுத்தல் ஆட்சியின் பொ றுப்பாகும். போதிய வசதியற்ற குடும்பங்களுக்கு அவர்களது அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வழிவகை செய்யப்படல் வேண்டும்.
‘ஒருவன் மரணித்து அவனது குடும்பத்தினரும் குழந்தைகளும் கதியற்ற நிலையில் விடப்பட்டால் அவர்களது விடயத்தை நான் பொறுப்பேற்பேன். நான் அவர்களது பாதுகாவலனாக இருப்பேன்’ என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஏழைகளின், வறியவர்களின் உரிமைகளை வழங்காதவனும், அவர்களைப் புறக்கணிப்பவனும், மார்க்கத்தை பொய்யாக்குபவன் எனக்குர்ஆன் குறிப்பிடுகின்றது.
நபியே! மறுமையின் தீர்ப்பை பொய்யாக்குபவனை நீர் பார்த்தீரா! அவன்தான் அநாதைகளை விரட்டுகின்றான். அவன் ஏழைகளுக்கு உணவளிக்காததுடன், ஆகாரமளிக்கும்படி பிறரைத் தூண்டுவதுமில்லை’ (அல்குர்ஆன்)
வியாபாரத்தில் நேர்மையையும், உண்மையையும் கடைப்பிடிப்பதை வலியுறுத்தும் இஸ்லாம், அநியாயம், மோசடி, அளவை நிறுவைகளில் மோசடி செய்தல் மூலம் வஞ்சித்துப் பொருளீட்டுவதை வன்மையாகக் கண்டிக்கின்றது.
‘அளவைப் பூர்த்தி செய்து அளந்து, எடையைச் சரியாக நிறுங்கள். நீங்கள் கொடுக்க வேண்டிய மனிதர்களுடைய பொருள்களில் யாதொன்றையும் அவர்களுக்குக் குறைத்துவிடாதீர்கள். (அல்குர்ஆன் 7: 85)
அளவையும், நிறையையும் நீதமாகவே பூர்தியாக்கி வையுங்கள். மனிதர்களுக்குக் கொடுக்க வேண்டிய அவர்களுடைய பொருள்களைக் குறைத்துவிடாதீர்கள். பூமியில் விஷமம் செய்து கொண்டு அலையாதீர்கள். (அல்குர்ஆன் 11: 84)
அளவில் மோசம் செய்பவர்களுக்கு கேடுதான். அவர்கள் மனிதர்களிடம் அளந்து வாங்கினால் நிறைய அளந்து கொள்கின்றனர். மற்றவர்களுக்கு அவர்கள் அளந்து கொடுத்தாலும் அல்லது மற்றவர்களுக்கு நிறுத்துக் கொடுத்தாலும் குறைத்து அவர்களை நஷ்டப்படுத்தி விடுகின்றனர். (அல்குர்ஆன் 83:1)
இனம், நிறம், வர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த ஒரு தனிமனிதனினும் உரிமைகள் மறுக்கப்படக் கூடாது என்ற கருத்தை இஸ்லாம் குறிப்பிடுவதோடு, அத்தகைய குறுகிய உணர்வுகளின் அடிப்படையில் செயல்படுவதையும் அது முற்றிலும் தடை செய்துள்ளது.
ஒரு தடவை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களுள் ஒருவரான அபூதர் அல் கிபாரி, கறுத்த நீக்ரோ அடிமையான பிலாலுடன் கோபமுற்று, அவரது நிறத்தைக் குறித்து இழிவுபடுத்தும் நோக்கில், யா! இப்னஸ் ஸவ்தா? கறுப்புநிற அடிமையின் புதல்வனே! என அழைத்தார். இதனைச் செவியுற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ‘உம்மில் இன்னும் இஸ்லாத்துக்கு முந்தைய அறியாமைக் கால பண்புகள் காணப்படுகின்றனவே! எனக் கண்டித்தார்கள்.
இன்னொரு சந்தர்ப்பத்தில் மிக மதிப்பும் மரியாதையும் உள்ள அரபுக் குழுக்களில் ஒன்றான பனூ மக்ஸும் குழுவைச் சார்ந்த ஒரு பெண்மணி ஒரு திருட்டுக் குற்றத்தைப் புரிந்தாள். அப்பெண் அக்குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டால் தங்களது குழுவின் கண்ணியமும், மதிப்பும் மாசுபடுத்தப்படும் என்பதை உணர்ந்த அக்குழுவின் முக்கிய தலைவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அன்புக்கும், நம்பிக்கைக்கும் உரிய, அவர்களுக்கு மிக நெருங்கியவர்களில் ஒருவரான உஸாமா பின் ஸைதை அணுகி அப்பெண்ணுக்காக நபியவர்களிடம் பரிந்து பேசும்படி கேட்டனர்.
இதற்கு இணங்கி உஸாமா நபியவர்களிடம் அப்பெண்ணுக்காகப் பரிந்து பேசிய போது, கோபமுற்ற அவர்கள் ‘இறைவன் விதித்துள்ள தண்டனையில் நீர் தலையிடுகின்றீரா? என உஸாமாவை நோக்கிக் கேட்டதோடு, தன்னைச் சூழ இருந்த முஸ்லிம்களை நோக்கி, ‘உங்களுக்கு முந்தைய சமூகங்களின்வீழச்சிக்கு முக்கிய காரணங்களில் ஒன்று எது என நீங்கள் அறிவீர்களா? அவர்களில் வசதியும் செல்வாக்கும் படைத்த குடும்பங்களைச் சார்ந்த ஒருவர் திருடினால் அவர் தண்டிக்கப்படாமல் விடப்பட்டார். ஆனால் வசதியற்ற ஏழைக்குடும்பத்தைச் சார்ந்த ஒருவர் திருடினால் அவர் தண்டிக்கப்பட்டார்.
நான் இறைவன் மீது ஆணையாகக் கூறுகின்றேன். முஹம்மதாகிய எனது புதல்வி பாதிமா திருடினாலும் அவரது கரத்தை நான் துண்டித்து தண்டனை வழங்குவேன்.
இஸ்லாமிய சமூக, பொருளாதார நீதி முஸ்லிம்களைப் பொறுத்த அளவில் மட்டுமன்றி, இஸ்லாமிய ஆட்சியில் வாழும் முஸ்லிம் அல்லாதவர்களின் அடிப்படை உரிமைகளையும் உறுதிப்படுத்தி அவர்களது மத, கலாசாரத் தனித்துவத்தைப் பாதுகாத்து வாழ வகை செய்கின்றது.
‘விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள். மக்களில் ஒரு சாரார் மீது உங்களுக்குள்ள வெறுப்பும் பகையையும் அவர்களுக்கு அக்கிரமம் செய்வதற்கு உங்களைத் தூண்டாதிருக்கவும் (எவ்வளவு குரோதமிருந்த போதிலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் பரிசுத்தத் தன்மைக்கு மிகவும் நெருங்கியது. (அல்குர்ஆன் 5:8)
இஸ்லாமிய ஆட்சியில் கீழ் வாழும், முஸ்லிம் அல்லாதார் அவர்களது மதக்கிரியைகளை நிறைவேற்றுவதிலும் திருமணம், விவாகரத்து, வாரிசுரிமை போன்ற விடயங்களில் அவர்களது சட்டம், வழக்காறு ஆகியவற்றின் அடிப்படையில் செயல்பட பூரண சுதந்திரம் பெற்றவர்களாவர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்றதும் அவர்கள் உருவாக்கிய மதீனா சாசனத்தில், அங்கு வாழ்ந்த யூதர்களின் அடிப்படை உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களுக்குப் பூரண மத சுதந்திரம் வழங்கப்பட்டது.
இது போன்றே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நஜ்ரானின் கிறிஸ்தவர்களுடன் செய்துகொண்ட உடன்படிக்கை பின்வருமாறு அமைந்திருந்தது.
‘நஜ்ரானிலும், அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும் வாழும் கிறிஸ்தவர்களுக்கு இந்த உடன்படிக்கையின் மூலம், இஸ்லாத்தின் தூதரால் அவர்களது உயிர், மதம், உடமை ஆகியவற்றின் பாதுகாவல் வழங்கப்படுகின்றது.
அவர்களது மத விவகாரங்களை நடைமுறைப்படுத்துவதில் எத்தகைய ஒரு தலையீடும் இருக்காது.
அவர்களது உரிமைகள், சலுகைகளில் எத்தகைய ஒரு மாற்றமும் செய்யப்படமாட்டாது.
எந்த ஒரு மதகுருவும் அவரது அந்தஸ்த்திலிருந்தோ, பதவியிலிருந்தோ நீக்கப்படமாட்டார்.
எந்த ஒரு துறவியும் அவரது மடாலயத்திலிருந்து வெளியேற்றப்படமாட்டார்.
எந்த ஒரு சிலுவையும் உடைக்கப்படமாட்டாது. அவர்கள் எவருக்கும் அநியாயமோ அக்கிரமமோ விளைவிக்கக் கூடாது. அவர்களுக்கும் அக்கிரமம் விளைவிக்கப் படமாட்டாது.
அவர்களுக்கும் முஸ்லிம்களிடமிருந்து அறவிடப்படும் எந்த ஒரு வரியும் விதிக்கப்படமாட்டாது. இஸ்லாமிய ராணுவத்தில் சேர்ந்து பணிபுரியவும் அவர்கள் நிர்ப்பந்திக்கப்படமாட்டார்கள்.
இஸ்லாமிய ஆட்சியில் வாழ்ந்த முஸ்லிமல்லாதார் ‘திம்மிகள்’ என அழைக்கப்பட்டனர். இஸ்லாத்தின் கலீபா உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் ஆட்சியில் ஒரு தடவை வயது முதிர்ந்து, பலவீனமுற்ற ஒரு யூதர் தள்ளாடிய நிலையில் செல்வதைக் கண்டார்கள். அந்த யூத முதியவரை நோக்கி கலீபா அவர்கள் ‘உங்களை நாங்கள் நீதியான முறையில் நடத்தவில்லை போல் எனக்குத் தோன்றுகின்றது. உங்களது இளமைக் காலத்தை நன்கு பயன்படுத்திவிட்டு, முதியவராகிப் பலவீனமடைந்ததும் உங்களை நாங்கள் புறக்கணித்து விட்டோம்’ எனக் கூறி, அவரை அன்புடன் தங்களது இல்லத்திற்கு அழைத்துச் சென்று, உணவளித்து உபசரித்து, முஸ்லிம்களின் திறைசேரியிலிருந்து, அவரது மரணம் வரை ஓய்வூதியம் பெறவும் ஏற்பாடு செய்தார்கள்.
‘எவர் ஒரு திம்மிக்கு அநியாயமான முறையில் கொடுமை இழைக்கின்றாரோ, அவரைப் பற்றி இறைவனிடம் முறைப்பாட்டாளனாக மறுமையில் நான் இருப்பேன்’ எனக்கூறிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வார்த்தைகள் வெறுமனே சித்தாந்தமாக வன்றி, இஸ்லாமிய சமூகத்தில் நடைமுறையில் செயல்படுத்தப்பட்டதை மேற்குறிப்பிட்ட நிகழ்ச்சி விளக்குகின்றது.
மனித நேயம் சகோதரத்துவம், அன்பு, கருணை ஆகிய அடிப்படைப் பெறுமானங்கள் மனித விழுமியங்களின் அடிப்படையில் எழுப்பப்பட்டு ஓர் ஆத்மீகப் பிரமாணத்தை மனித முயற்சிகளுக்கும், மனித உறவுகளுக்கும் வழங்குகின்ற சிறப்பம்சத்தை இஸ்லாமிய சமூக நீதியில் நாம் அவதானிக்க முடிகின்றது. அமைதியும், நிம்மதியும், நிறைவும் கொண்ட ஓர் சமூக அமைப்பைக் கட்டியெழுப்புவதற்கு ‘இஸ்லாமிய சமூக நீதிக் கோட்பாடு கணிசமான பங்களிப்பை ஆற்றமுடியும்.
source: http://drshukri.net/