பொள்ளாச்சி: பதறவைக்கும் பாலியல் கொடூரம்
”டேய் ரிஷ்வந்த் .. விட்ருடா வீட்டுக்குப் போயிடறேன்”,
“டேய் பிரெண்டுன்னு சொன்னத நம்பி தானேடா வந்தேன், ஏண்டா என்ன இப்படி பண்ணினே”
“அண்ணா அடிக்காதீங்கண்ணா.. வலிக்குது.. நானே கழட்டிடறேண்ணா”
– மங்கலாக்கப்பட்ட அந்தக் காணொலியில் முகமும் அடையாளங்களும் மறைக்கப்பட்ட அந்தப் பெண்ணின் கதறல்கள் இதயத்தை கூரிய கத்தியால் பிளந்து போடுகின்றன.
நக்கீரன் பத்திரிகை வெளியிட்ட அந்தக் காணொளியைக் கண்ட அந்தக் கணத்தில் சுயநினைவே மறந்தது; கல்வி மறந்து போனது; பார்க்கும் நான் ஒரு ஆண் என்பதும் மறந்து போனது. கண் முன் வந்து சென்றதெல்லாம் மகள், அம்மா, சகோதரி, பாட்டி உள்ளிட்டோரின் முகங்கள் தான். அந்தக் காணொளியைப் பார்த்த இரவு கெட்ட கனவுகளால் நீண்டது.
சென்ற மாத இறுதியிலேயே பொள்ளாச்சி பாலியல் வல்லுறவுக் குற்றம் செய்தியாக வெளியானது. இளம்பெண் ஒருவரை காதலிப்பதாய் ஏமாற்றி தன் நண்பர்களோடு காரில் ஏற்றிச் சென்றுள்ளான் ரிஷ்வந்த். செல்லும் வழியில் அப்பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயற்சித்துள்ளனர். அப்பெண் எதிர்த்துப் போராடவே அக்கம் பக்கத்திலிருந்த மக்கள் கூடியுள்ளனர். கழுத்தில் அணிந்திருந்த நகையைப் பறித்துக் கொண்டு அப்பெண்ணை நடுவழியில் இறக்கி விட்டு தப்பியுள்ளது அந்த கும்பல்.
பாதிக்கப்பட்ட பெண் தன் குடும்பத்தாரிடம் நடந்ததைச் சொல்லியிருக்கிறார். பெண்ணின் அண்ணன் தனது நண்பர்களோடு ரிஷ்வந்தையும் அவனது கூட்டாளிகளையும் பிடித்து அடித்து விசாரித்துள்ளார். அப்போது அவர்களது செல்போன்களை சோதனையிட்ட போது ஏராளமான பாலியல் வீடியோக்களைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனே காவல் துறையில் புகாரளித்து ரிஷ்வந்தையும் அவனது கூட்டாளிகளையும், ஆதாரமாக அவர்களது செல்போன்களையும் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட காவல் துறையோ சிக்கியவர்களை தீவிரமாக விசாரித்து கடும் நடவடிக்கை எடுக்காததுடன், புகாரளித்த பெண்ணின் அடையாள விவரங்களையும், முகவரியையும் குற்றவாளிகள் தரப்பினரிடம் பகிர்ந்து கொண்டுள்ளது. இதையடுத்து ரிஷ்வந்தின் நண்பனும், அதிமுகவின் அம்மா பேரவையில் பொறுப்பில் இருப்பவனுமான பார் நாகராஜன் ஒரு கும்பலைத் திரட்டிச் சென்று பெண்ணின் அண்ணனைத் தாக்கியுள்ளான்.
இதையடுத்து விவகாரம் மெல்ல மெல்ல பெரிதாகத் துவங்கியுள்ளது. பொள்ளாச்சி பகுதியைச் சேர்ந்த திமுகவினரும் பெண்கள் அமைப்பினரும் தொடர்ந்து இப்பிரச்சினையைக் கையிலெடுத்து ஆர்ப்பாட்டம், சாலை மறியல் என போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
இதையடுத்து ரிஷ்வந்த் கும்பலைச் சேர்ந்தவர்கள் தலைமறைவாகியுள்ளனர். இந்நிலையில் குற்ற கும்பலுக்குள் நடந்த உள்குத்து விவகாரங்கள் இன்னும் வெளியாகவில்லை – எனினும், தலைமறைவாக இருந்த சமயத்தில் இந்த கும்பலில் முக்கியமான புள்ளியான திருநாவுக்கரசு வீடியோ ஒன்றை வெளியிடுகிறான். அதில், இந்த விவகாரத்தின் பின்னணியில் பெரும் அரசியல் தலைகள் இருப்பதாகவும், அதை வெளியிடுவதால் தனது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டாலும் சரி எனவும், சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் எனவும், தனக்கு எதிர்கட்சிகள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டு பேசியிருந்தான்.
அதையடுத்து மேலும் சில நாட்கள் கழித்து மற்றொரு வீடியோவை திருநாவுக்கரசு வெளியிடுகிறான். அதில் இந்த விவகாரத்தில் தம்மேல் எந்தக் குற்றமும் இல்லை எனவும், தான் காவல்துறையிடம் சரணடையப் போவதாகவும் குறிப்பிடுகிறான். சொன்னபடி மறுநாள் சரணடைகிறான்.
oooo
செய்தித்தாள்களின் எட்டாம் பக்க கள்ளக்காதல் செய்திகளுக்கு இடையே புதைந்து ஒரு சில வாரங்களில் ஆறிப் போயிருக்க வேண்டிய விவகாரத்தை நக்கீரன் வெளியிட்ட வீடியோ அதன் குரூரத்தோடு அம்பலப்படுத்தியுள்ளது. இதே சமயத்தில் விகடன் பத்திரிகையும் இந்த விவகாரங்களின் பின்னணி குறித்து எழுதத் துவங்கியிருந்தது.
நக்கீரனின் வீடியோவைத் தொடர்ந்து வலைத்தளமெங்கும் இவ்விவகாரம் தீயாய் பரவத் துவங்கியது. குறிப்பாக பாலியல் குற்றக் கும்பலோடு துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனின் இரண்டு மகன்களுக்கு இருக்கும் தொடர்பையும், குற்றத்தில் அவர்கள் சம்பந்தப்பட்டிருப்பதற்கான வாய்ப்புகளையும் நக்கீரன் கோபால் அம்பலப்படுத்தி மற்றொரு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
இந்தக் குற்றச்சாட்டுகளின் உண்மைத் தன்மை ஒரு முறையான விசாரணையின் முடிவில்தான் தெரியவரும். என்றாலும் அப்படி ஒரு முறையான விசாரணையை நடத்தும் அருகதையோ, யோக்கியதையோ இந்த அரசுக்கு இல்லை என்பதை இதற்கு முன் எண்ணற்ற சந்தர்ப்பங்களில் நிரூபித்துள்ளனர்.
அது நிர்மலா தேவி விவகாரம் ஆகட்டும், அமைச்சர் ஜெயக்குமார் மீதான பாலியல் புகாராகட்டும், கொடநாடு கொலை கொள்ளை விவகாரங்கள் ஆகட்டும், இல்லை 14 உயிர்கள் போலீசின் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியாக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டமாகட்டும் – எடப்பாடி தலைமையேற்று நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக அரசாங்கம் ஒரு கிரிமினல் குற்றக் கும்பலாட்சி என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 250-க்கும் மேல் என்றும், கைப்பற்றப்பட்ட வீடியோக்களின் எண்ணிக்கை 1000-க்கும் மேல் என்றும் செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. இதில் பள்ளி மாணவிகளில் இருந்து வசதியான மருத்துவர்கள், மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் வரை பாதிக்கப்பட்டுள்ளனர் என பத்திரிகைகள் எழுதுகின்றன. பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் கடந்த சில வருடங்களில் மாத்திரம் 8 இளம்பெண்கள் சந்தேகத்திற்கு இடமான முறையில் தற்கொலை செய்துள்ளனர் எனவும் ஒருபக்கம் செய்திகள் வருகின்றன.
குற்றம் இழைத்தவர்கள் அதிமுக பெரும்புள்ளிகளின் பினாமிகள் எனத் தெரியவந்துள்ளது. டாஸ்மாக் பார்களை எடுத்து நடத்துவது உள்ளிட்டு அதிமுக பெரும் புள்ளிகளின் முறைகேடான பல தொழில்களுக்கு இவர்கள் முகங்களாக இருந்துள்ளனர். அரசியல் அதிகார பலம் தம் பின்னே இருக்கும் திமிரில்தான் பெண்களை நர வேட்டை ஆடியுள்ளனர் குற்றவாளிகள்.
இந்த பிரம்மாண்டமான குற்றச் செயலை துரிதமாக விசாரித்து குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்பட வேண்டும் – அதை இந்த அரசு செய்யாது; மக்கள் போராட்டங்களின் மூலமே அதை சாத்தியமாக்க வேண்டும். வடக்கே ஒரு நிர்பயாவுக்கு நிகழ்ந்த அநீதிக்கு எதிராக நாடே கொதித்தெழுந்தது – இங்கே 250 நிர்பயாக்கள். நாம் இதை இப்படியே விட்டு விட முடியாது; விடவும் கூடாது.
source: vinavu
ooooo
o பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்முறை சம்பவம் பெண்கள் பாதுகாப்பாக இல்லை என்பதையே உணர்த்துகிறது. இந்த கூட்டத்தையும், இதில் சம்பந்தப்பட்டவர்களையும், அரசும் அமைச்சர்களும் காப்பாற்ற முனையாமல், சிறப்பு நீதிமன்றத்தை நிறுவி, உடனடியாக குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை பெற்றுத் தர வேண்டும். – கனிமொழி.
o பெண் பிள்ளைகளை வளர்ப்பதில் மட்டுமே கவனம் செலுத்தி, கட்டுப்பாடுகள் விதித்து, கண்காணித்து, திரும்பிப் பார்த்தால் ஆண்பிள்ளைகள் தறுதலைகளாகி தரங்கெட்டு நிற்கிறார்கள். பெண்ணை சக மனுஷியாய் மதிக்கச் சொல்லிக் குடுத்து ஆண்பிள்ளைகளை வளர்க்கும் வரை சமூகத்தில் பெண்ணுக்கு விடிவு இல்லை . – கரு பழனியப்பன்.
o பொள்ளாச்சி சம்பவத்தை பார்க்கும் போது பெண்ணை பெற்ற ஒவ்வொருக்கும் அடிவயிறு கலங்கும்.குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.ஆராய்ந்து பழகாத கூட சமூக வலைதள நட்பு கேடாய் முடியுமென்பதை பிள்ளைகள் உணர வேண்டும். ஊடகங்கள் பெரிய அளவில் இதை விவாதிக்க வேண்டும். – செல்வம் அரசுப்பள்ளி ஆசிரியர்.