ஏன் இறைவன் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்?
[ ஒருமுறை என் மகள் கேட்டாள், “சரி dad, குர்ஆன் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?” இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.
நான் குர்ஆனை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன். நான் எந்த அளவு குர்ஆனை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன். ஆனால் குர்ஆன், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது. அதுமட்டுமல்லாமல், குர்ஆனைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.
என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று. குர்ஆனை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குர்ஆன் தான். பலரும் என்னிடம் கேட்பார்கள், “இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது” என்று. நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம். ]
நாத்திகம் To இஸ்லாம்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)…
உங்கள் மீதும் உங்கள் குடும்பத்தினர் மீதும் எல்லாம் வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக…ஆமின்.
டாக்டர் ஜெப்ரி லேங் (Dr.Jeffrey Lang), அமெரிக்காவின் கன்சாஸ் பல்கலைகழகத்தில் (University of Kansas) கணிதத்துறை பேராசிரியராய் இருப்பவர். 1980 களின் முற்பகுதியில், தன் 28 ஆவது வயதில் இஸ்லாத்தை தழுவியவர். தன் பதினாறு வயதிலிருந்து இஸ்லாத்தை ஏற்கும்வரை நாத்திகராக இருந்தவர்.
நேர்த்தியாக பேசக்கூடியவர். அவருடைய கருத்துகளாகட்டும், அதை அவர் சொல்லக்கூடிய விதமாகட்டும், கேட்பவர்களை சிறிதாவது யோசிக்க வைத்துவிடும்.
தான் நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி அவர் கூறிய கருத்துக்கள் இந்த விதத்தை சார்ந்தவை தான். இன்ஷா அல்லாஹ், இந்த பதிவில், அவர் இஸ்லாத்திற்கு வந்த விதம் பற்றி கூறியதை பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன்.
இந்த பதிவு, நடுநிலையோடு சிந்திக்கும் நாத்திக சகோதரர்களுக்கு தங்கள் வளையத்தை தாண்டி வர உதவலாம்… இன்ஷா அல்லாஹ்.
“நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன் (1954). என் தாய் கடவுள் நம்பிக்கை மிக அதிகமுடையவர், மிக இனிமையானவர். என் தந்தையும் கடவுள் நம்பிக்கை உடையவர்தான், ஆனால் துரதிஷ்டவசமாக குடிப்பழக்கத்திற்கு ஆளாகி விட்டார். அவருடைய வன்முறைக்கு அதிகம் இலக்கானது என் தாய்தான்.
என் தந்தையால் என் தாய்க்கு ஏற்பட்ட கஷ்டங்கள் மிக மோசமானவை (லேங் அவர்களின் தாய் தன் கணவரின் வன்முறையால் மனநிலை பாதிக்கப்பட்டவர்). எனக்கு இன்றும் நினைவில் இருக்கிறது, என் ஏழு, எட்டு வயதில் கடவுளிடம் வேண்டிக்கொள்வேன், கடவுளே தன் தந்தையை எங்களிடமிருந்து அழைத்து சென்று விடு என்று.
இந்த சூழ்நிலைகள் தான் என்னை நாத்திகனாக வைத்தன.
• என் தாய் கடவுளையே தன் துணையாக கொண்டவர். அப்படிப்பட்ட நல்லவருக்கு, தன்னையே நாடியவருக்கு ஏன் இந்த கடவுள் இவ்வளவு கஷ்டங்களை கொடுக்க வேண்டும்?
• ஏன் ஒருவன் மற்றொருவனை அடக்கியாள வேண்டும்? (Why should strong oppress the poor), அதனை ஏன் இறைவன் பார்த்துக்கொண்டு இருக்க வேண்டும்?
• உலகில் எங்கு பார்த்தாலும் ஊழல்கள், வன்முறைகள், அநியாயங்கள்…இதையெல்லாம் அடக்காமல் இறைவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?
• இறைவன் பூரணமானவன் (perfect) என்றால், அவன் உருவாக்கிய இந்த உலகமும் பூரணமாகத்தானே இருக்க வேண்டும்?
• நல்லதெல்லாம் இறைவனிடமிருந்து வந்ததென்றால், தீமையும் அவனிடமிருந்து தானே வந்திருக்க வேண்டும்?
இப்படி என்னுள் பல கேள்விகள், முடிவில் கடவுளே இல்லையென்று என் பதினாறாம் வயதில் முடிவெடுத்து விட்டேன்.
நன்றாக படித்தேன், நல்ல வேலையிலும் சேர்ந்தேன். நான் சான் பிரான்சிஸ்கோ பல்கலைகழகத்திற்கு வந்த போதுதான் இஸ்லாம் எனக்கு அறிமுகமானது. ஒரு அருமையான இஸ்லாமிய குடும்பத்தை சந்தித்தேன். நிறைய முறை அவர்களுடைய வீட்டிற்கு சென்றிருக்கிறேன்.
கடவுள் பற்றிய என்னுடைய கேள்விகளை அவர்களிடம் கேட்பேன். என்னுடைய கேள்விகள் அவர்களை பெரும் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தின. பதிலளிக்க மிகவும் கஷ்டப்பட்டார்கள்.
பிறகு ஒருமுறை, அப்துல்லா யூசுப் அலியால் மொழிபெயர்க்கப்பட்ட ஆங்கில குரானை எனக்கு பரிசளித்தார்கள். “தங்களால் தான் அவர் கேட்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை,குரானைப் படிப்பதால் அவருக்கு பதில்கள் கிடைக்கலாம்” என்று அவர்கள் நினைத்திருக்கலாம்.
அந்த குர்ஆனை படிக்கவேண்டும் என்று அப்போதைக்கு நான் விரும்பவில்லை. குர்ஆனை என் வீட்டிலிருந்த புத்தக மேசையில் வைத்து விட்டு அப்படியே விட்டுவிட்டேன். பல நாட்கள் அந்த குரான் அங்கேயே இருந்தது.
ஒருநாள் ஓய்வு நேரம். என்னிடம் இருந்த அனைத்து புத்தகங்களையும் படித்தாகி விட்டது, புதிதாக படிப்பதற்கு ஒன்றுமில்லை. அப்போது, மேசையில் இருந்த குர்ஆன் கண்ணில் பட்டது.
வீட்டில் போரடிக்கும் போது, ஒரு வார இதழை எடுத்து நாலு பக்கங்களை புரட்டி பின்னர் வைத்துவிடுவோமே, அதுபோல நினைத்துதான் குர்ஆனைத் திறந்தேன்.
குர்ஆனில் குறை கண்டுபிடிக்க வேண்டுமென்ற எண்ணமெல்லாம் இல்லை. என்னைப் பொறுத்தவரை கடவுள் இல்லை, அவ்வளவுதான். இது மற்றுமொரு புத்தகம், அவ்வளவே…
முதல் அத்தியாயத்தை பார்த்தேன், அல் பாத்திஹா என்றிருந்தது. அதில் ஏழு வசனங்கள். நல்ல அழகான, கோர்வையான வசனங்கள். முஸ்லிம்கள் குரானை இறைவேதமென்று சொன்னாலும், என்னைப் பொறுத்தவரை அது மனிதரால் எழுதப்பட்டது. அதனால், இந்த புத்தகத்தை எழுதியவர் நல்ல இலக்கியவாதி என்று பாராட்டினேன். நல்ல புத்திசாலி என்றும் நினைத்தேன், படிப்பவர்களை துவக்கத்திலேயே நன்றாக கட்டிப்போடுகிறாரே…
அதில் ஒரு வசனம்,
தீர்ப்பு நாளின் அதிபதி (குர்ஆன் 1:3)
என்ன தீர்ப்பு நாளா?, இவரே மக்களுக்கு கஷ்டத்தை கொடுப்பாராம், இவரே தீர்ப்பு சொல்லுவாராம் என்று கோபப்பட்டேன்…
முதல் சூரா என்னை மேற்கொண்டு படிக்க தூண்டியது. அடுத்த அத்தியாயம், சூரத்துல் பகரா…
அதன் இரண்டாது வசனம்,
இது திரு வேதமாகும்; இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு நேர்வழி காட்டியாகும். (குர்ஆன் 2:2)
என்ன ஒரு அதிகார தோரணை என்று வியந்தேன். நிச்சயமாக இந்த புத்தகத்தை எழுதியவர் அறிவாளிதான். அதுமட்டுமல்லாமல் ஒரு அறிவுசார்ந்த விவாதத்திற்கு தயார்படுத்தின அந்த வசனங்கள்.
படித்துக்கொண்டே வந்தேன். அந்த சூராவின் முப்பதாவது (30) வசனம் ஒரு கனம் என்னை திக்குமுக்காட செய்தது. ஏனென்றால் என் மனதில் நீண்ட நாட்களாக இருந்த கேள்வி அங்கு கேட்கப்பட்டிருந்தது.
ஏன் கடவுள் அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? என்ற கேள்விதான் அது…
என்னுடைய கேள்வியை இங்கே வானவர்கள் கேட்கின்றனர்.
இன்னும், உம் இறைவன் வானவர்களை நோக்கி “நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி ரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னை துதித்து, உன் பரிசுத்தத்தைப் போற்றியவர்களாக இருக்கின்றோம்” என்று கூறினார்கள். — Qur’an 2:30
இந்த ஒரு வசனம் என் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
நான் நாத்திகனாக மாறியதில் இந்த ஒரு கேள்விக்கு நிச்சயம் முக்கிய பங்குண்டு.
வானவர்கள் கேட்பது நியாயம்தானே?. அவர்களோ தவறு செய்யாதவர்கள், இறைவனுக்கு கட்டுப்பட்டவர்கள், அவர்களையே பூமியில் வாழ வைத்திருக்கலாமே? ஏன் இந்த அநியாயக்கார மனிதனை படைக்க வேண்டும்? வானவர்களின் கேள்வி மிக நியாயமானது…இதற்கு என்ன பதில் என்று ஆர்வமுடன் மேற்கொண்டு படித்தேன்.
அதே வசனத்தின் இறுதியில்,
அவன் ” நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” எனக் கூறினான் — Qur’an 2:30.
என்ன நீ அறிவாயா? ஏன் பாவம் செய்யக்கூடிய மனிதர்களை படைத்தாய் என்று கேட்டால், அதற்கு அனைத்தையும் நீ அறிவாய் என்பதுதான் பதிலா?
இப்போது குர்ஆனுடன் நான் வாக்குவாதம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் (சிரிக்கிறார்), இந்த குர்ஆனை முழுமையாக படித்து என் மற்ற கேள்விகளுக்கும் என்ன பதிலளிக்கிறது என்று பார்த்து விட வேண்டியதுதான் என்று முடிவெடுத்துக் கொண்டேன்.
நாலு பக்கங்கள் மட்டுமே திருப்பலாம் என்றிருந்தவனை இந்த குர்ஆன் மென்மேலும் படிக்க தூண்டிக்கொண்டே இருந்தது, என்னுடைய கேள்விகள் ஒவ்வொன்றாய் பதிலளிக்கப்பட்டு கொண்டே வந்தன.
என் அனுபவங்களை முழுமையாக சொல்ல இந்த நேர்க்காணல் நேரம் போதாது. ஆனால் நான் சொல்ல விரும்புவதெல்லாம், குரானை முழுமையாக படித்த பிறகு, தனிப்பட்டமுறையில் என் கேள்விகளுக்கு விடைகள் கிடைத்தன.
குர்ஆனின் வசனங்கள் ஆணித்தரமானவை, ஆழ்ந்த கருத்துக்களை கொண்டவை.
பிறகு, என் இருபத்தி எட்டாவது வயதில் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டேன்.
ஒருமுறை என் மகள் கேட்டாள்,
“சரி dad, குர்ஆன் உங்கள் கேள்விகளுக்கு பதிலளித்து விட்டது. ஆனால், உங்கள் கேள்விகளுக்கெல்லாம் ஒரு புத்தகம் பதிலளித்து விட்டால் மட்டும் இறைவன் இருக்கிறானென்று ஆகிவிடுமா, அல்லது அந்த புத்தகம் இறைவனிடமிருந்து வந்துவிட்டதாக தான் நீங்கள் நினைத்துவிட முடியுமா?”
இது என்னிடம் பலரும் கேட்க நினைக்கக்கூடிய அர்த்தமுள்ள கேள்வி.
நான் குர்ஆனை மென்மேலும் படிக்க படிக்க, என் கேள்விகளுக்கு பதில்கள் கிடைக்க துவங்கின. பதில்கள் கிடைக்க கிடைக்க நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் எந்த அளவு குர்ஆனை மேற்கொண்டு படித்தேனோ அந்த அளவு நாத்திகத்தை கேள்வி கேட்க ஆரம்பித்துவிட்டேன்.
நான் கடவுள் இல்லை என்பதில் மிக உறுதியாய் இருந்தவன், யார் எப்படி விளக்கினாலும் கடவுள் இல்லை என்பதில் நின்றவன்.
ஆனால் குர்ஆன், அதனைப்பற்றி நிறைய கேள்விகளை எழுப்பிவிட்டது.
அதுமட்டுமல்லாமல், குர்ஆனைப் படித்து முடித்ததும் என் மனதில் ஏற்பட்ட அமைதி இருக்கிறதே, இதுநாள் வரை என் வாழ்வில் அனுபவிக்காதது. இறைவனின் அன்பு என்பது இதுதானோ? சில நேரங்களில் அந்த உணர்வு பத்து, பதினைந்து நிமிடங்கள் கூட நிலைத்திருக்கும். என் மனம் அமைதியடைந்தது, ஒரு அற்புதமான உணர்ச்சி அது.
என் வாழ்நாளில் கஷ்டங்களை அதிகம் பார்த்தவன், அந்த அற்புத மன அமைதி எனக்கு பதிலளித்துவிட்டது, இறைவன் இருக்கிறானென்று, இது இறைவேதமென்று.
குர்ஆனை ஓதும்போது பலமுறை கண்கலங்கியிருக்கிறேன், அன்பு என்றால் என்னவென்று புரியவைத்தது குரான் தான்.
source: http://www.ethirkkural.com
பலரும் என்னிடம் கேட்பார்கள், “இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டதால் உங்கள் வாழ்வில் என்ன திருப்பம் வந்துவிட்டது” என்று.
நான் இப்போது சக மனிதர்களை அதிகம் நேசிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுதான் இஸ்லாம் எனக்கு கற்றுகொடுத்த முதல் பாடம்.
தற்போது மனைவி, மூன்று குழந்தைகள் என்று ஒரு நிறைவான வாழ்வை இறைவன் எனக்கு அளித்திருக்கிறான்.
இஸ்லாத்தை ஏற்ற புதிதில், விடியற்காலை தொழுகைக்கும், மாலை நேர தொழுகைகளுக்கும் பள்ளியில் சென்று தொழுது வருவேன். குரான் ஓதப்படுவதை கேட்பது ஒரு மிக அழகான உணர்வு.
ஒருமுறை ஒருவர் என்னிடம் கேட்டார், “டாக்டர் லேங், உங்களுக்கு அரபி புரிகிறதா?” என்று,
நான் சொன்னேன், “ஒரு குழந்தை தன் தாயை எதிர்க்கொள்கிறதே, அதுபோல தான்” என்று…
வாழ்வின் அர்த்தங்களை தேடி கொண்டிருப்போருக்கு நான் சொல்லிக்கொள்ள விரும்புவதெல்லாம் ஒன்று தான். நீங்கள் தேடுவதை தொடருங்கள், ஆனால் நேர்மையாய், திறந்த மனதுடன் தேடுங்கள்.
உங்களை என் மார்க்கத்தை ஏற்க சொல்லி கட்டாயப்படுத்தி நான் என் மார்க்கத்தை விற்க விரும்பவில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கே அந்த உரிமையை இறைவன் வழங்கவில்லை. எடுத்து சொல்வது மட்டும்தான் எங்கள் கடமை, உங்களை நேர்வழியில் செலுத்துவதெல்லாம் இறைவனின் நாட்டம்.
அதனால் தேடுவதை தொடருங்கள்….”
இது தானே குர்ஆனின் பலம். ஒருவர் மிகத் தீவிரமாய் இருக்கக்கூடிய ஒரு கொள்கையை உடைத்தெறிய வைப்பதென்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால், குரான் அதை எளிதாக, நேர்த்தியாக செய்து முடித்துவிட்டது….அல்ஹம்துலில்லாஹ்.
நாத்திகர்களுக்கு முஸ்லிம்களாகிய நாங்கள் விடுப்பதேல்லாம் ஒரே ஒரு வேண்டுகோள்தான். நன்கு சிந்திக்கக்கூடியவர்களாய் இருக்கிறோம், அதனால் தயவு கூர்ந்து சிந்தியுங்கள், உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். ஒரு நேர்க்கோட்டை வரையும்போது, அதை அருகில் இருந்து பார்க்கும் போது நேராகத்தான் தெரியும், தூரத்தில் இருந்து பார்த்தால் தான் உண்மை புரியும்.
அதுபோல நீங்கள் உங்கள் வட்டங்களை விட்டு வெளியே வந்து சிந்தியுங்கள். சொல்வதை சொல்லிவிட்டோம், ஏற்பதும் ஏற்காததும் உங்கள் இஷ்டம்…
டாக்டர் ஜெப்ரி லேங் அவர்களை முதன் முதலில் நான் (வீடியோக்களில்) பார்த்தது, டாக்டர் ஜமால் பதாவி அவர்களுக்கும் கிறித்துவ மிசனரியான அனீஸ் ஷோறோஷ் அவர்களுக்கும் இடையே நடந்த விவாதத்தில் தான். அப்போது கேள்வி நேரத்தில் தன் கேள்வியை அனீஸ் ஷோறோஷ் அவர்களிடம் முன்வைத்தார் அவர்.
பிறகு டாக்டர் ஜமால் பதாவி அவர்களுடன் சேர்ந்து விவாதங்களில் பங்கேற்றிருக்கிறார் டாக்டர் லேங். தற்போது பல இஸ்லாமிய கருத்தரங்குகளில் பங்கேற்று தன் கருத்துக்களை பகிர்ந்து கொண்டு வருகிறார்.
இவர் எழுதி வெளிவந்து பலருக்கும் உதவியாய் இருந்த/இருக்கும் நூல்கள்
• “Losing my religion, A call for Help”,
• “Struggling to Surrender” மற்றும்
• “Even Angels Ask:: A Journey to Islam in America”
இவர் இஸ்லாத்திற்கு வந்தது பற்றியான முழுமையான விளக்கம் இவருடைய “Losing my Religion, A call for help” புத்தகத்தின் முதல் அத்தியாயத்திலும், இவருடைய மற்றொரு புத்தகமான “Even Angels Ask” என்பதிலும் இடம் பெற்றுள்ளது.
நான் முன்பே கூறியது போன்று, தன் கருத்துக்களை மிக அழகாக, ஆழமாக வெளிப்படுத்துவதில் வல்லவர் டாக்டர் லேங். அல்ஹம்துலில்லாஹ்.
இவருடைய இந்த புத்தகங்களை படிப்பவர்கள் நிச்சயம் இதை உணர்வார்கள்.
அதிலும் இவருடைய “Even Angels Ask” என்ற புத்தகம், அமெரிக்காவில் இருக்கும் இளைய தலைமுறை முஸ்லிம்களை இலக்காக கொண்டு எழுதப்பட்டது. பலருடைய பாராட்டுதல்களையும் பெற்ற இந்த புத்தகத்தில் இஸ்லாமின் பல்வேறு அங்கங்களை தெளிவாக, ஆழமாக விளக்குகிறார் லேங்.
டாக்டர் லேங்கை போல, நாத்திகத்திலிருந்து இஸ்லாத்திற்கு வந்த மற்றுமொரு பிரபலமான நபர் சகோதரர் நூமன் அலி கான் (Nouman Ali Khan) அவர்கள். அமெரிக்காவின் பய்யினாஹ் கல்வி நிறுவனத்தின் (Bayyinah Institute) தலைவராய் இருக்கிறார். இவருடைய கதையும் சிந்திக்கும் நாத்திகர்களுக்கு அழகிய பாடம்.
For the believers, there is always a bright spot at the end of the tunnel…..
இறைவன் இவர்களுக்கு மென்மேலும் உடல்நலத்தையும், மனபலத்தையும் தந்தருள்வானாக…ஆமின்.
இறைவன் நமக்கு இஸ்லாத்தை எடுத்துச் சொல்கின்ற வாய்ப்பை என்றென்றும் தந்தருள்வானாக….ஆமின்.
அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன்…
Dr.Jeffrey Lang’s Books can be bought at:
1. Amazon.com
2. Or by requesting any popular book shop with their ISBN numbers which follows.
a) Losing My Religion, A call for Help. ISBN: 978-1590080276. link
b) Struggling to surrender. ISBN: 978-0915957262
c) Even Angels Ask. ISBN: 978-0915957675
My Sincere Thanks to:
1. Br. Eddie
2. Dr.Jeffrey Lang, Associate Professor, University of Kansas, USA.
3. Amazon.com
References:
1. Dr.Lang’s Interview with Br.Eddie for The Deen Show. thedeenshowdotcom.
உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ