அநியாயம் செய்வோருக்கு அல்குர்ஆனின் எச்சரிக்கை!
உலகில் வாழும் மனிதர்களில் சிலர் வரம்புமீறி கொலை, களவு, ஏமாற்று, மோசடி, பொய், பித்தலாட்டம், விபச்சாரம் போன்ற பாவத்திற்குமேல் பாவங்களையும், அநியாயங்களையும் செய்தவண்ணமாகவே இருக்கின்றனர்.
மக்கள் பணத்தை சுரண்டி கொழுப்பது பல அரசியல்வாதிகளுக்கும் அதிகார வர்க்கத்தினருக்கும் பொழுதுபோக்காகவே போய்விட்டது. மனிதர்கள் வகுத்த பலவீனத்திலும் பலவீனமான சட்டங்களிலிருந்து தப்பி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து குதூகளிக்கின்றனர்.
தண்டனையிலிருந்து தப்புவது ஹல்வா சாப்பிடுகின்ற மாதிரி அவர்களுக்கு எளிதாக இருப்பதால் தவறு செய்வதைப்பற்றியோ, அநியாயம் செய்வதைப் பற்றியோ அவர்கள் சிறிதும் கவலைப்படுவதில்லை.
ஆனால்,
இவை அத்தனையும் கானல் நீராக மற்றும் ஒரு நாள் வரும். அப்போது அவர்கள் செய்த எந்த சிறு குற்றத் தண்டனையிலிருந்து கூட தப்ப முடியாது எனும்போது பெரும் குற்றங்களின் தண்டணையிலிருந்து தப்புவது துளியும் முடியாத காரியம்.
ஆனால் அவர்கள் அதைப்பற்றி சிறிதும் சிந்திப்பதில்லை. இவ்வுலக வாழ்க்கையின் மேலுள்ள கட்டுக்கடுங்காத ஆசை அவர்களை தவறுக்குமேல் தவறை செய்யத் தூண்டுகிறது. அவர்கள் விழிப்படைவதற்குள் மறுமை வந்துவிடும் என்பதை நினைவில் கொண்டு திருந்தி வாழ வேண்டும்.
இறைவனின் அருட்கொடைகளுக்கு நன்றி மறந்து தான்தோன்றித்தனமாக வாழ்ந்த கொடியோருக்காகவும் இறைவனையும் அவன் தூதர்களையும் வேதங்களையும் நிராகரித்தோருக்காகவும் நரகம் காத்திருக்கிறது.
கொழுந்துவிட்டு எரியும் நெருப்பின் நடுவே மரணமற்ற வாழ்வும் அகோர பசியும் தாகமும் அதைத்தீர்க்க உணவாக முட்செடிகளும் கொதிநிலை அடைந்த பானங்களும் என்று தொடர் வேதனைகளின் இருப்பிடமாக இருக்கும். நரக வேதனைகள் பற்றி திருக்குர்ஆன் எச்சரிக்கிறது:
”நிச்சயமாக நரகம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றது. வரம்பு மீறியவர்களுக்குத் தங்குமிடமாக! அதில் அவர்கள் பல யுகங்களாகத் தங்கியிருக்கும் நிலையில். அவர்கள் அதில் குளிர்ச்சியையோ குடிப்பையோ சுவைக்கமாட்டார்கள்! கொதிக்கும் நீரையும் சீழையும் தவிர.!” (அல்குர்ஆன் 78:21)
”அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும் அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு – இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.” (அல்குர்ஆன் 7:41)
(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும். (அல்குர்ஆன் 22:19,20)
வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 78:21-24)
அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!’ (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 9:35)
அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான். (அல்குர்ஆன் 29:55)
ஆக, நரக வேதனை என்பது தாங்க முடியாதது. அதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால் நாம் மரணத்திற்கு முன்பாக திருந்தி, இறைவனிடம் மன்னிப்பு கோரி நல்வாழ்க்கை வாழவேண்டும்.
– M.A.Mohamed Ali