லண்டனின் முதல் முஸ்லிம் மேயர் சாதிக் கான்
[ மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது.
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம்.
பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் லண்டன் நகரின் பங்களிப்பு மட்டும் 22% (சுமார் 830 பில்லியன் டாலர்கள்).
தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகமானது, நெதர்லாந்து பட்ஜெட்டுக்கு இணையானது இது.
உலகின் முன்னணி வணிக நகரங்களில் ஒன்றான லண்டனின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது மேயர் பொறுப்புக்கு உட்பட்டது.
london mayor sadiq khan
ஒரு முஸ்லிம்-இந்து கதை
ஊர்கள் எப்போதும் என் நினைவுகளில் மனிதர்களாகத்தான் படிகின்றன. ஒரு ஊரின் பெயரைச் சொல்லி “ஒரு நிமிஷம் கண்களை மூடி ஊரை யோசித்துப்பார்” என்று சொன்னால், நிலப்பரப்பையோ, கட்டிடங்களையோ, நீர்நிலைகளையோ காட்சிக்குக் கொண்டுவரும் முன், அங்கிருந்த மனிதர்களைத்தான் முதலில் மனம் நினைவுக்குக் கொண்டுவருகிறது. லண்டன் அப்படி நினைவுகளில் அள்ளிக்கொண்டுவரும் மனிதர்களில் சாதிக் கான் தவிர்க்கவே முடியாத மனிதராக இருப்பார்.
மேற்கத்திய நாடுகளின் தலைநகர் ஒன்றில் இவர்தான் முதல் முஸ்லிம் மேயர் என்பதற்கு அப்பால், சாதிக் கான் வடிவில் பாகிஸ்தானிலிருந்து பிழைப்புக்காக வந்த பஸ் ஓட்டுநர் ஒருவரின் மகன், இன்று லண்டன் மேயர் ஆகியிருப்பது பிரிட்டிஷாரின் ஜனநாயகத்தைக் கண்ணியப்படுத்துகிறது. லண்டன் மேயர் தேர்தலில் வெல்லுதல் எளிதானதல்ல. ஐரோப்பாவில் நடக்கும் பெரிய தேர்தல்களில் ஒன்று அதற்கானது.
ஃபிரான்ஸ் அதிபர் தேர்தலுக்கு அடுத்து, இன்று அதிகமான வாக்காளர்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் லண்டன் மேயர். பிரிட்டனில் மேயருக்கான பொறுப்புகளும் அதிகாரங்களும் அதிகம்.
லண்டன் பயணத்துக்கு முன்பிருந்தே சாதிக் கான் என்னுடைய கவனத்துக்குரியவராக இருந்திருக்கிறார். ஓராண்டுக்கு முன் இந்தியா வந்திருந்தார் சாதிக் கான். அமிர்தசரஸில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக் களத்தைப் பார்வையிட்டவர் சொன்னார்: “ஜாலியன் வாலாபாக் படுகொலைக்காக, இந்தியாவிடம் முழுமையாக, முறைப்படியாக மன்னிப்புக் கோர வேண்டும் என்று பிரிட்டன் அரசைக் கேட்டுக்கொள்கிறேன். சம்பவம் நடந்து நூறாண்டுகள் நெருங்கும் நிலையிலும், இது நடக்கவில்லை என்பது வெட்கக்கேடானது!.”
இதற்கும் சில ஆண்டுகளுக்கு முன்பு அமிர்தசரஸ் வந்திருந்த அன்றைய பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் வார்த்தைகளோடு சாதிக் கானின் வார்த்தைகளை ஒப்பிட வேண்டும். இந்தியாவில், “பிரிட்டன் வரலாற்றில் மிகவும் வெட்கக்கேடான சம்பவம் இது” என்று கூறினார் கேமரூன். ஆனால், “நான் பிறப்பதற்குப் பல ஆண்டுகள் முன்பு நடந்த அந்தச் சம்பவத்துக்காக வரலாற்றில் பின்னோக்கிச் சென்று, மன்னிப்புக் கோருவது சரியான விஷயமாக இருக்காது” என்று பின்பு அவர் குறிப்பிட்டார்.
மன்னிப்புக் கோரலைத் தாண்டி சாதிக் கானின் அணுகுமுறை என்னிடத்தில் இந்தியா சார்ந்து சில கேள்விகளை எழுப்பியது: வெளிநாடு செல்லும் ஒரு இந்திய முஸ்லிம் தலைவர் இப்படிப் பேச முடியுமா? அதற்கான சுதந்திரத்தை, தாராளச் சூழலை இந்திய அரசியலும் இந்தியச் சமூகமும் கொண்டிருக்கின்றனவா? முதலில், இந்திய ஊடகங்கள் என்ன எழுதும்?
சுவாரஸ்யமான கதை சாதிக் கானுடையது.
பொருளாதார நெருக்கடிகளை பிரிட்டன் எதிர்கொண்டிருந்த காலத்தில் வளர்ந்தவர் அவர். பதினைந்து வயதில் அரசியலில் இறங்கியிருக்கிறார். பள்ளி நாட்களில் விடுமுறைக் காலைகளில் தொழிலாளர் கட்சியின் துண்டறிக்கைகளை வீதிகளில் விநியோகித்தபடி நிற்பாராம். அரசியல் ஆர்வம் படிப்புக்கும் ஊக்கம் சேர்த்திருக்கிறது. சட்டம் படித்தார்.
வழக்குரைஞரானதும், குடிமை உரிமை வழக்குகள் விருப்பத்துக்குரிய தேர்வாக இருந்திருக்கின்றன. நிற – மதப் பாகுபாடு வழக்குகளில் சாதிக் கான் கொடுத்த கவனம் ஆசியர்கள், ஆப்பிரிக்கர்கள் மத்தியில் உறவையும் செல்வாக்கையும் வளர்த்திருக்கிறது. முதலில் டூட்டிங் கவுன்சிலர். அடுத்து, அதே தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர். கன்சர்வேடிவ் கட்சியின் கோட்டை டூட்டிங். அதை உடைத்த பின் தொழிலாளர் கட்சிக்குள் சாதிக் கானின் வளர்ச்சி பாய்ச்சலில் சென்றிருக்கிறது.
லண்டன் மேயரானதுமே, அடுத்தடுத்து அடிகளைச் சந்தித்திருக்கிறார் சாதிக் கான். மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எட்டாவது வாரம், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவது என்று முடிவெடுத்தது பிரிட்டன். அடுத்து, மூன்று பயங்கரவாதத் தாக்குதல்களை எதிர்கொண்டது லண்டன். அடுத்து, லண்டன் பல மாடிக் கட்டிடம் ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்து எழுபதுக்கும் மேற்பட்டோரைப் பலி வாங்கியது.
உலகப் போருக்குப் பின் லண்டனில் குடியிருப்புப் பகுதி ஒன்றில் ஏற்பட்ட பெரும் தீ விபத்து இது. எல்லாச் சூழல்களுக்கும் முகங்கொடுத்தார் சாதிக் கான்.
ஒரு முஸ்லிம் என்பதைச் சுட்டி அவரை நோக்கி ஊடகங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில் இது:
“நான் மேற்கத்தியன். நான் லண்டன்காரன்.
நான் பிரிட்டிஷ்காரன்.
நான் முஸ்லிம்.
நான் ஆசியப் பூர்வீகன்.
நான் பாகிஸ்தான் மரபினன்.
நண்பர்களே, நான் முஸ்லிம் மேயர் அல்ல; நான் மேயர், அதேசமயம் முஸ்லிமாகவும் இருக்கிறேன்!”
பிரிட்டனின் ஒட்டுமொத்த உற்பத்தி மதிப்பில் லண்டன் நகரின் பங்களிப்பு மட்டும் 22% (சுமார் 830 பில்லியன் டாலர்கள்).
தென்னாப்பிரிக்காவின் ஒட்டுமொத்த பட்ஜெட்டைக் காட்டிலும் அதிகமானது, நெதர்லாந்து பட்ஜெட்டுக்கு இணையானது இது.
உலகின் முன்னணி வணிக நகரங்களில் ஒன்றான லண்டனின் பொருளாதாரத்தை வளர்த்தெடுப்பது மேயர் பொறுப்புக்கு உட்பட்டது.
எல்லோரையும் உள்ளடக்கும் செயல்பாட்டில் விளிம்புநிலையினரை அரவணைப்பது எவ்வளவு முக்கியம் என்பதைத் தொடர்ந்து பேசும் சாதிக் கான், “பிரிட்டன் வளர்த்தெடுக்க விரும்பும் பன்மைக் கலாச்சாரத்துக்கு நானே உயிருள்ள சாட்சியம்” என்று சொன்னவர், “ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் விலகக் கூடாது” என்றும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறார்.
“பொருளாதாரப் பலன்களோடு சேர்த்து, சமூக, கலாச்சாரப் பலன்களையும் பிரிட்டிஷார் இழப்பார்கள் என்று அஞ்சுகிறேன். ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிடிபியானது சீனம், அமெரிக்காவைவிட அதிகமானது. 50 கோடி பேர் கொண்ட சந்தை அது. இதையெல்லாம் தாண்டி ஐரோப்பிய ஒன்றியத்தினர் வாடிக்கையாளர்கள் மட்டுமல்ல, எங்களுடைய ஐரோப்பிய உறவினர்கள்.”
லண்டனில் நான் சந்தித்த பிரிட்டிஷார் எல்லோருமே லண்டன் தொடர்பில் பேசுகையில், ஒரு விஷயத்தை மிகுந்த பெருமையோடு சொல்லக் கேட்டேன். சாதிக் கானும் பெருமையாக அதைத்தான் அடிக்கடி சொல்கிறார். “லண்டன் மக்கள்தொகையில் இன்று 37% பேர் வெளிநாட்டினர். சொல்லப்போனால், வெள்ளையர்கள் 44.9%. வெளியார்தான் பெரும்பான்மை. இன்று இங்கு முந்நூறு மொழிகள் பேசப்படுகின்றன. இது மேலும் வளரும். வெவ்வேறு நாடுகளிலிருந்து இங்கு வெவ்வேறு வண்ணங்களில் வந்தவர்கள்தான் லண்டனையும் பிரிட்டனையும் இன்று இவ்வளவு வண்ணமயமாக்கியிருக்கிறார்கள்..”
இயல்பிலேயே ஏராளமான வண்ணங்களைக் கொண்டிருக்கிற ஒரு நாட்டிலிருந்து சென்ற எனக்கு லண்டனின் பெருமைகளிலேயே உன்னதமானதாக இதுதான் தோன்றியது.!
– சமஸ்
source: தமிழ் இந்து