உள்ளமும் அதன் செயல்களும்
மனித உள்ளத்தின் அதிபயங்கர சூழ்ச்சிகளில் முதன்மையானது அல்லாஹ்வைப் பற்றிய சந்தேகத்தை ஏற்படுத்துவதாகும். இதன்படி பலரின் உள்ளங்களில் அவர்கள் சார்ந்துள்ள மதம், கொள்கை, சமூகச் சூழல் ஆகியவைகளை அடிப்படையாகக் கொண்டு கடவுள் என்று ஒருவன் இருக்கிறானா? எனும் சந்தேகம் எழுகிறது.
இக்கேள்விக்கு பலர் விடை தேடாமலும், மற்றும் பலர் தவறான விடைகளை ஒப்புக்கொண்டும் கடவுள் இருப்பதை மறுக்கின்றனர். நியாயமான கோணங்களில் சிந்திப்பவர்களே உண்மையான கடவுளை மிகச்சரியாக அடையாளம் கண்டு, அதனை தமது வாழ்கையின் அடிப்படைக் கொள்கையாக பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் யாதெனில்
பரம்பரை முஸ்லிம்களிலும் கூட பலர் தங்களுக்கு சோதனைகள் ஏற்படுகின்றபோது,
தான் நினைத்தவை நடக்காத போது அல்லது அவர்களுக்கு முன் தென்படுகின்ற
அநியாயக்காரர்கள் சொகுசாக வாழ்வதைக் காணும் போது,
அல்லாஹ்வுக்கு முடிந்த வரைக் கட்டுப்பட்டு வாழும் ஓர் ஏழை
மென்மேலும் சிரமங்களை சந்திக்கும் போது
அவர்களின் உள்ளத்திலும் அல்லாஹ் என்ற ஒருவன் இருக்கிறானா?
அப்படி இருந்திருந்தால் அவன் இருப்பதை ஒப்புக் கொண்டுள்ள நம்மை
அவன் ஏன் சிரமப்படுத்த வேண்டும்?
அல்லது நமது கோரிக்கைகளை அவன் ஏன் நிறைவேற்றித்தராமல் இருக்க வேண்டும்?
மேலும் அல்லாஹ் அநியாயங்கள் செய்யக் கூடியவர்களுக்கு
உரிய தண்டனைகளை வழங்காமல் ஏன் அதிகமான செல்வத்தை வழங்க வேண்டும்?
அவனையே முழுக்க முழுக்க நம்பியுள்ள ஏழைகளை அவன் ஏன் மேலும் மேலும் சிரமப்படுத்த வேண்டும்?
என்ற பலதரப்பட்ட சந்தேக எண்ணங்கள்
அவர்களின் உள்ளங்களில் அலைகளைப் போல் மோதிக் கொண்டே இருக்கின்றன.
இச்சூழலில் அல்லாஹ் உறுதியிலும் உறுதியாக இருக்கிறான் என்பதை அதற்குரிய காரண காரியங்களுடன் முதலில் முஸ்லிம்களும், மற்றவர்களும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு கொள்கையை அறிந்து கொள்வதற்கு ஆதாரங்கள் தேவைப்படுகின்றன. ஆதாரங்கள் இல்லையேல் நம்மால் அக்கொள்கையை ஏற்க இயலாது. இதன்படி முஸ்லிம்களைப் பொறுத்த வரை அவர்களின் மூலஆதாரம் இரண்டாகும். ஒன்று திருக்குர்ஆன் மற்றொன்று ஆதாரப்பூர்வமான நபிமொழிகளாகும். இதன்படி கடவுள் பற்றி இவை இரண்டும் என்ன சொல்கின்றன என்பதை அறிந்து விட்டு, பின்னர் அறிவியல் ஆதாரங்களை அறிந்து கொள்ள விழையவேண்டும். இதுதான் ஒரு முஸ்லிமின் ஏற்கத்தக்க நிலையாகும்.
இமாம் இப்னு தைமிய்யா ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கடவுள் இருக்கிறான் என்பதை முன்னிறுத்த நிறுவப்படும் சான்றுகளில் இரு நிபந்தனைகள் முழுமைப் பெற்றிருக்கவேண்டும்.
முதலாவது : அவை மார்க்கத்தின் ஆதாரமாக அமைந்திருக்க வேண்டும். அதாவது அல்லாஹ் அதனை தான் இருப்பதற்கான ஆதாரமாகக் கூறுவதுடன், மற்றவர்களையும் அவைகளை ஆதாரங்களாக எடுத்துரைக்க உத்தரவிட்டிருக்க வேண்டும்.
இரண்டாவது : அனைவராலும் ஏற்றுக் கொள்ளத்தக்க அறிவியல் ஆதாரங்களாக இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள்.
முஸ்லிம்களைப் பொறுத்தமட்டில் மார்க்கத்தின் ஆதாரங்களை ஏற்றுக் கொள்வார்கள் என்றிருந்தாலும், இயற்கையின் கோணத்தில் சிந்திக்கத் தவறும் பலர் அறிவியல் ஆதாரங்களையே தேடுகின்றனர். எனவே இவ்விரு ஆதாரங்களையும் முறையே தங்களின் கவனத்திற்கு கொணர்கிறேன்.
திருக்குர்ஆனின் ஆதாரங்கள்
முதலாவது : இஸ்லாம் இயற்கையான மார்க்கமாகும். இயற்கை என்பதன் பொருள் மனிதனாகப் பிறக்கிற அனைவரின் உள்ளத்திலும் நம்மைப் படைத்த ஒருவன் இருக்கிறான் எனும் எண்ணம் தோன்றுவதாகும். இந்த எண்ணம் உலகில் பிறக்கிற அனைவரின் உள்ளத்திலும் ஏற்படத்தான் செய்யும்.
இன்று உலகளாவிய அளவில் பெரும்பான்மையான மக்கள் கடவுள் இருக்கிறான் எனும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளதே இதற்கான சான்றாகும். அல்லாஹ் கூறுகிறான். நீர் உம்முகத்தை தூய (இஸ்லாமிய) மார்க்கத்தின் பக்கமே முற்றிலும் திருப்பி நிலைநிறுத்துவீராக! எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே அவனுடைய (நிலையான) இயற்கை மார்க்கமாகும்;. (அல்குர்ஆன் 30 : 30)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் (பெற்றெடுக்கிறதோ அது போல) எல்லாக் குழந்தைகளும் இயற்கையான மார்க்கத்தி)லேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைகளுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தை விட்டுத் திருப்பி) யூதர்களாகவோ, கிருஸ்தவர்களாகவோ, நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர். (புகாரி : 1385)
மேற்சென்ற திருக்குர்ஆன் வசனத்தின்படியும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸின்படியும் உலகில் பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில்தான் பிறக்கின்றன. எனினும் அவர்களைச் சுற்றி இருப்பவர்கள் அவர்களுக்குள் தங்களின் கொள்கைகளைத் திணித்து விடுகின்றனர். இதனால் அவர்கள் இயற்கைக்குப் புறம்பாக கடவுள் இல்லை என்றோ, அல்லது பலகடவுள்கள் உள்ளனர் என்றோ நம்பி விடுகின்றனர். ஆனாலும் பருவ வயதை அடைந்த பின்னர் கடவுள் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கும் போது அவர்கள் பூசாரியின் வீட்டில் பிறந்திருந்தாலும் அவர்களால் பொய்யான கடவுளை ஏற்றுக் கொள்ள முடிவதில்லை.
இதற்கு மிகச் சிறந்த உதாரணம் இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களாவார்கள். அவர்களும் ஒரு இணைவைப்பாளருக்கு மகனாகத்தான் பிறந்தார்கள். எனினும் கற்சிலைகளுக்கு முன் பகுத்தறிவு பெற்றுள்ள ஒரு மனிதன் நின்று மண்டியிடுவதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை, ஏற்க முடியவில்லை. அதனால் உண்மையான கடவுளைக் கண்டறிந்து, அவனையே வழிபட வேண்டும் என்று முடிவு செய்தார்கள். பின்னர் கடவுளை அறிய முற்பட்டு, வானங்களையும் அதிலுள்ள பிரம்மாண்ட படைப்புகளான நட்சத்திரங்கள், சந்திரன், சூரியன் என்று அல்லாஹ்வின் படைப்புகளைப் பார்த்து, இவைகள் என் இறைவனாக இருக்குமோ என்று ஆராய்ந்தார்கள். எனினும் அவைகள் மறைவதைக் கண்டதும் கடவுள் மறைபவனாக இருக்கக்கூடாது. அவன் எப்போது இருந்து கொண்டே இருக்க வேண்டும் எனும் முடிவின்படி, அவர்கள் பார்த்த அத்துனைப் படைப்புகளும் மறையக்கூடியவைகளாக இருப்பதால் இவைகள் கடவுளாக இருக்க முடியாது எனும் முடிவுக்கு வந்தார்கள்.
அவர்களின் இந்த ஆய்வைப் பார்த்துக் கொண்டிருந்த அல்லாஹ் அவர்களுக்கு உண்மையான மார்க்கத்தை அறிவித்துக் கொடுத்தான். இது குறித்து அல்லாஹ் கூறுகிறான். சந்திரன் (பிரகாசத்துடன்) உதயமாவதைக் கண்டு, அவர், ”இதுவே என் இறைவன்” என்று கூறினார். ஆனால் அது மறைந்த போது அவர், ”என் இறைவன் எனக்கு நேர்வழி காட்டவில்லையானால், நான் நிச்சயமாக வழி தவறியவர்கள் கூட்டத்தில் (ஒருவனாக) ஆகிவிடுவேன்” என்று கூறினார்.
பின் சூரியன் (மிக்க ஒளியுடன்) உதயமாவதைக் கண்டபோது ”இதுவே என் இறைவன்; இது எல்லாவற்றிலும் பெரியது” என்று கூறினார். அதுவும் அஸ்தமிக்கவே, அவர்என் சமூகத்தாரே! நீங்கள் (ஆண்டவனுக்கு) இணைவைக்கும் (ஒவ்வொன்றையும்) விட்டு நிச்சயமாக நான் விலகி விட்டேன்” என்று கூறினார்.
”வானங்களையும் பூமியையும் படைத்தவன் பக்கமே நான் உறுதியாக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன்; நான் முஷ்ரிக்காக – (இணைவைப் போரில் ஒருவனாக) இருக்க மாட்டேன்” (என்று கூறினார்). (அல்குர்ஆன். 77 – 79)
இப்றாஹீம் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிய இவ்வரலாறு மனிதன் நேர்மையாக சிந்தித்தால் அவனால் இயற்கையான மார்க்கத்தை அறிந்து கொள்ள முடியும் என்பதை அறிய முடிகிறது. எனினும் உலகில் வாழும் பலரும் அவர்களுக்குள் இருக்கின்ற உள்ளம் எனும் எதிரிக்கு சரணடைந்து, நேர்மையாக சிந்திக்காது, கடவுளைப் பற்றி தவறான எண்ணங்களைக் கொண்டவர்களாகவே உள்ளனர்…..
source: http://www.samooganeethi.org/