காஃபிர் என்பதற்கு இத்தனை அர்த்தங்களா…?!
காஃபிர் என்பதை இன்று பலர் “இறைமறுப்பாளர்” என்பதோடு மட்டும் பொறுத்தி கெட்ட வார்த்தையாகப் பார்க்கிறார்கள்.
காஃபிர் என்பதற்கு பல அர்த்தங்கள் உண்டு.
மறைப்பது என்பதை அரபு மொழியில் குஃப்ரு என்கிறார்கள்.
அனைத்துப் பொருள்களையும் கவிழ்ந்து மூடிவிடுகின்றது இருள். எனவே இரவை காஃபிர் என்கின்றார்கள்.
உள்ளே இருக்கும் கனியை வெளித் தெரியாமல் மறைத்து விடுவதால் அதன் தொலியை காஃபூர் என்கிறார்கள்.
இரவில் வானில் விண்மீன்களை காணவிடாது மறைத்து விடுகின்ற மேகங்களை காஃபிர் என்கிறார்கள்.
தங்கள் உரிமைகளுக்காக இன்றி அரைநிர்வாணமாகப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருகிறார்களே விவசாயிகள்; அவர்களையும் காஃபிர்கள் என்கிறார்கள். இறைவேதம் அல்-குர்ஆனும் விவசாயிகளை காஃபிர் என்கிறது. (அல்குர்ஆன் 57:20) விதைகளைக் கொண்டுபோய் அவர்கள் மண்ணீல் மூடி மறைக்கின்றார்கள் அல்லவா, அதனால்!
தண்டனை அறிவிக்கப்படாத குற்றம் ஒன்றை நீங்கள் செய்துவிட்டால் அதற்குறிய மறைப்பை நிறைவேற்றி குற்றமற்றவர்களாக ஆகிவிடுங்கள் என்கிறது ஷரீஅத். பரிகாரம் என்று அதனை நாம் சொல்லிக்கொள்கிறோம். இந்த பரிகாரத்தை கஃப்பாரா என்கிறார்கள். அதாவது மூடிமறைப்பான் அல்லது மூடும் மறைப்பான்.
ஓரிறைவனைப் பற்றி எந்நேரமும் நினைவூட்டிக் கொண்டே இருக்கும் அகத்தின் குரலை ஒருவர் அடக்கி வைக்கிறார். சிந்தனைக்கு செல்ல விடாமல் மூடி மறைத்து மடக்கி தடுக்கிறார் என்றால் அவர் ஷரீஆவின் மொழியில் காஃபிர் ஆகிவிடுகிறார். அவ்வளவுதான்.
காஃபிர் என்பது கெட்ட வார்த்தையல்ல, செயலாகு பெயர்.
நன்றி மறந்தவன் காஃபிர் என்னும் பொருளில் ஏராளமான இடங்களில் அல்-குர்ஆன் கையாள்கிறது.
ஆச்சரியமான விஷயம்… நம்பிக்கையாளர்களுக்கு சொர்க்கத்தில் நறுமணம் கமழும் தெவிட்டாத பானமொன்று புகட்டப்படும். அதன் பெயர் காஃபூர். அதாவது அதன் இயற்தன்மை வெளித்தெரியாத அளவு அதன் மணம் தூக்கலாகக் காணப்படும்.
நம்பிக்கையாளர்களின் சிறு குறைகளை இறைவன் மூடி மறைத்து விடுவான் என்பதை குறிப்பிடவும் இதே சொல்லை – கஃபர வான்மறை அல்-குர்ஆன் பயன்படுத்தியுள்ளது. (அல்குர்ஆன் 5:65)
மண்ணறையில் புதைக்கப்பட்டுள்ளோரைப் பார்த்து அஹ்லுல் கஃபூர் என்று நபித்தோழர் முஆவியா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் விளித்துள்ளார்கள்.
அவ்வளவு ஏன்? நம்பிக்கையாளர்களும் இதே சொல்லால் விளிக்கப்படுகின்றனர்.
அல் முஃமினு முகஃப்பரூன் – செயலாலும் செல்வத்தாலும் அவனிழைத்த சிறு சிறு பிழைகள் யாவும் மன்னிக்கப்படுபவன் என்பது இதன் பொருள்.
(உண்மையில் காஃபிர் என்ற சொல்லை தமிழில் சரியாக மொழிபெயர்ப்பதற்கு வார்த்தைகள் இல்லை என்பது சில மார்க்க அறிஞர்களின் கருத்து.)
– மறைச்சுடர் ஆகஸ்ட், 2017