இறுதி மூச்சு வரை இதே பணி தான்
சத்தியம் எது? அசத்தியம் என்பது என்ன?
உண்மையான, என்றும் மாறாத, நிலையான, சரியான விழுமங்களுக்கு பெயர் தான் சத்தியம்.
உலக மக்கள் ஏற்றுக் கொள்வதால் யாதொன்றும் சத்தியம் ஆவதில்லை. ”சுயமாக” இருப்பது தான் சத்தியம்.
இதனை தெளிவாக நினைவில் இருத்திக் கொள்ளுங்கள். ஒட்டு மொத்த மக்களும் சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் முற்றாக ஒதுக்கி தள்ளினாலும் சத்தியம் அசத்தியம் ஆகி விடாது. அப்போதும் அது சத்தியமாகதான் இருக்கும்.
உலக மக்கள் ஏற்று கொண்டால் தான் சத்தியமாக நீடிக்கும் என்கிற கட்டாயத்திற்கு அப்பாற்பட்டது தான் சத்தியம்.
உலகம் சத்தியத்தை ஏற்கின்றதா இல்லையா என்பது ஒரு பொருட்டே கிடையாது. உலகம் ஏற்று கொள்ள மறுப்பதால் சத்தியம் தோற்று போவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாமல் ஒதுக்கி அசத்தியத்தை ஏற்றுக் கொண்ட உலகம் தான் தோற்று போனது.
துன்பங்களும் துயரங்களும் சத்தியத்திற்கு வருவதில்லை. சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள் மீது தான் அவை மழையாய் பொழியும்.
நன்கு ஆராய்ந்து எல்லாக் கோணங்களிலும் சீர்தூக்கிப் பார்த்து முழுமையான மனதிருப்தியுடன் சத்தியத்தை ஏற்றுக் கொண்டவர்கள், சத்தியமே மேலோங்க வேண்டும் என்கிற தணியாத தாகத்துடன் ஓயாமல் ஒழியாமல் உழைப்பவர்கள், சத்தியமே மேலோங்க வேண்டும் என்பதற்காக தம் வாழ்வையே அர்ப்பணித்தவர்கள் மீது துன்பங்களும் துயரங்களும் புயலாய் வீசலாம். ஆனால் அவர்களை தோற்றுப் போனவர்களாகச் சொல்ல முடியாது.
இறைத்தூதர்களில் சிலர் வாழ்நாள் முழுவதையும் சத்திய அழைப்பில் செலவிட்ட பிறகும் அவர்களை பின்பற்றி நடக்க எவருமே முன் வரவில்லை என்கிற வரலாற்று குறிப்பை நபிமொழிகளில் வாசிக்க முடிகின்றது. அப்படியானால் அந்த இறைதூதர்களை தோற்றுப் போனவர்கள் என்று சொல்ல முடியுமா?
நிச்சயமாக கிடையாது. அவர்களை ஏற்று கொள்ள மறுத்த அசத்தியவாதிகளைத் தங்களின் தலைவர்களாக ஏற்று கொண்ட சமூகத்தினர் தான் தோற்றுப் போனவர்கள்.
நம்முடைய கவலையெல்லாம் ஒன்றே ஒன்றுதான். நமக்கு முன் இருக்கின்ற பணி ஒன்றே ஒன்றுதான். இருள்களை விரட்டியடிக்க வழி விளக்குகளை ஏற்றுவது தான்! சாகின்ற வரை இதனை செய்து கொண்டிருப்போம்.
வழிகெட்டுப் போனவர்கள், வழிகெடுப்பவர்களின் பட்டியலில் நம்முடைய பெயர் இடம் பெற்று விடக்கூடாது என்பது தான் நமக்கு இருக்கின்ற ஒற்றை கவலை. இதற்காக இறைவனிடம் பாதுகாவலைத் தேடிக் கொண்டே இருப்போம்.
அசத்திய இருட்டை விரட்டியடிக்கின்ற மிக பெரும் பணியில் அல்லாஹ் நம்மை ஈடுபடுத்தியிருக்கின்றான். இந்த மாபெரும் பணிக்காக அல்லாஹ் நம்மை தேர்ந்தெடுத்திருக்கின்றான்.
இவ்வாறு நம் மீது மிகப்பெரும் அருளை பொழிந்திருக்கின்றான். அதற்காக அவனுக்கு நன்றி செலுத்துவதற்கு ஓரே வழிதான் இருக்கின்றது. இருளை விரட்டி அடிக்க விளக்குகளை ஏற்றிக் கொண்டே போவது! அதே பணியில் உயிரைத் துறப்பது!
– மெளலானா மெளதூதி ரஹ்மதுல்லாஹி அலைஹி
நன்றி : சமரசம்