உம்முல் முஃமினீன்
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள்
أم المؤمنين خديجة بنت خويلد رضي الله عنها
மவ்லவியா எம். வை. மஸிய்யா B.A. (Hons)
பிறப்பு
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கி.பி. 556 ஆம் ஆண்டு மக்காவில் பிறந்தார். இவரது தந்தை குவைலித் பின் அஸத்; தாயார் ஃபாத்திமா பின்த் ஸாஇதா; இவருக்கு இரு சகோதரிகள்; அவர்கள் ஹாலா பின்த் குவைலித், ருகையா பின்த் குவைலித் ஆகியோராவர்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அன்றைய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்றவராகத் திகழ்ந்தார்கள். இவர் அறபிகளால் மதிக்கப்படும் உயர் குலத்தைச் சேர்ந்தவர். பெண்களிடம் அவசியம் இருக்க வேண்டிய ஒழுக்கத்தை நிறைவாகவே பேணி வாழ்ந்து வந்ததால் ‘தாஹிரா’ – பரிசுத்தமானவள் என்ற சிறப்புப் பெயரால் அழைக்கப்பட்டு வந்தார்கள்.
அந்தக் கால கட்டத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பல கூட்டத்தினரோடும் வியாபாரக் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபட்டு வந்தனர். அவற்றில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்மையான நடைமுறைகள், நீதியான கொடுக்கல் வாங்கல்கள் மக்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டன. அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அம்மக்கள் ‘அல்-அமீன்’ – நம்பிக்கையாளர் என்றழைத்தனர்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேர்மை, நாணயம் அறிந்து தமது வியாபாரச் சரக்குகளை விற்கும் பொறுப்பைக் கவனித்துக் கொள்ளுமாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அழைத்து, வணிகத்திற்காக அனுப்பி வைத்தார்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். அதற்கிணங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வியாபாரப் பொருட்களை விற்றுக் கொடுத்தார்கள்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது வயது நாற்பதை எட்டி இருந்தாலும் அவர்களின் செல்வச் செழிப்பின் காரணமாகப் பெரும் பெரும் செல்வச் சீமான்களைத் திருமணம் முடித்திருக்க முடியும். ஆனால், தனக்குக் கீழ்ப் பணியாளராக வேலை செய்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் முடித்து இவ்வுலகிற்கு அழியாத முன்மாதிரியை வழங்கினார்கள்.
ஒரு பெண் தனது வருங்காலக் கணவனை எவ்வாறு தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதற்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஒரு சிறந்த முன்மாதிரி. ஒரு மனிதன் எவ்வளவு கெட்டவனாக இருப்பினும் அவனிடம் பணமிருந்தால் அவனுக்குப் பெண் கொடுக்கப் பெருங் கூட்டம் தயாராகிவிடும். அவனைக் கணவனாக அடைய எத்தனையோ பெண்கள் ஆசைப்பட்டுவிடுவார்கள். பணத்திற்காக எதையும் தாங்குவேனென்று பணக்காரனையே மணவாளனாகக் கொள்ள நினைப்பதுண்டு.
இந்நிலைக்கு முற்றிலும் மாறுபட்டு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திகழ்ந்தார்கள். பொன்னையும் பொருளையும் ஒதுக்கி வைத்துவிட்டு நீதி, நேர்மை நிறைந்த, உண்மையுரைக்கின்ற, உயர் பண்புகளுக்குச் சொந்தக்காரன் ஆகிய நபிகள் நாயகத்தை மணமுடித்தார்கள். இதனால், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்க்கை மகிழ்வோடு கழிந்தது.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்), ஸைனப், உம்மு குல்ஸூம், பாத்திமா, ருகையா ஆகிய குழந்தைகள் பிறந்தார்கள். இவ்வாறு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறந்த நான்கு பெண் குழந்தைகள் மற்றும் காஸிம் என்ற ஆண் குழந்தை ஆகியோர் விடயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு இல்லை.
எனினும், அப்துல்லாஹ், தாஹிர், தையிப் ஆகியோர் தொடர்பில் வரலாற்று அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு நிலவுகின்றது. மூன்று பேரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் என்று சிலர் குறிப்பிடுவர். அப்துல்லாஹ் என்ற குழந்தையே தாஹிர், தையிப் என்றவாறும் அழைக்கப்பட்டாரென்று சிலர் கூறுகின்றனர். காஸிம் என்ற ஆண் குழந்தையைத் தவிர கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு வேறு ஆண் குழந்தைகள் பிறக்கவில்லை என்று மற்றும் சில வரலாற்றாசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
திருமணம்
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் அபூ ஹாலா பின் ஸுராரா என்பவரையும், அவருக்குப் பின்னர் அதீக் பின் ஆயித் என்பவரையும் திருமணம் முடித்திருந்தார். அவர்களிருவரும் மரணித்த பின் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் விதவையாகக் காணப்பட்டார்கள்.
அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகுந்த செல்வச் சீமாட்டியாகக் காணப்பட்டார்கள். மக்கா மாநகரிலிருந்து வெளிநாடுகளுக்குச் சரக்குகளை ஏற்றிச் செல்லும் அனைவரினதும் ஒட்டகங்களின் சுமைகளைவிட கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சரக்கு ஒட்டகங்கள் மிகைத்திருக்கும். அந்தளவுக்கு, அவ்வளவு பொருட்களுக்கும் உரிமையாளராக அவர்கள் காணப்பட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வியாபாரத்தில் மட்டுமன்றி, அனைத்து விடயங்களிலும் மிக நேர்மையாக நடந்து கொண்டதனால் மக்கள் அவர் மேல் உயிரையே வைத்தனர். நற்குணங்களின் உறைவிடமாகத் திகழ்ந்த நபியவர்கள் அனைவரையுமே மதித்து நடந்தனர். இதனால், நபியவர்களது அருங்குணங்கள் மக்கள் மத்தியிற் பரவ ஆரம்பித்தன.
அவர்கள் வணிகத்தில் அதற்கு முன் எவருமே ஈட்டாத அளவு இலாபத்துடன் நாடு திரும்பினார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடன் வியாபாரத்திற்காகச் சென்ற மைஸரா என்ற அடிமை மூலம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நன்னடத்தை பற்றி மேலும் அறிந்து கொண்டார்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள். இதனால், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை மணமுடிக்க விரும்பினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது நாற்பதை எட்டியிருந்தது; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது இருபத்தைந்தாக இருந்தது.
பிள்ளைகள்
நபியவர்களைத் திருமணம் முடிக்க முன்னர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஏற்கனவே முடித்திருந்த அபூ ஹாலா மூலமாக ஹிந்த், ஹாலா ஆகிய பெண்களுக்கும், அதீக் என்ற கணவர் மூலமாக ஹிந்த என்ற பெண் பிள்ளைக்கும் தாயாக இருந்தார். அபூ ஹாலாவிற்குப் பிறந்த ஹிந்த், ஹாலா ஆகிய இருவரும் இஸ்லாத்தைத் தழுவினார்களா இல்லையா என்பது பற்றிய விபரங்கள் கிடைக்கவில்லை. எனினும், அதீக் என்பவருக்குப் பிறந்த ஹிந்த் என்ற பெண் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக இமாம் தாரகுத்னி ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிள்ளைகள் பற்றி:
காஸிம், அப்துல்லாஹ் (தாஹிர், தையிப்) ஆகியோர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வஹீ வருவதற்கு முன்பே இறந்து விட்டனர். ஏனையோர் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறந்த பின்பு சில காலம் உயிர் வாழ்ந்தனர். இவர்களில் ருகையா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 2 ஆம் ஆண்டு மரணித்தார்கள். ஸைனப் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 8 ஆம் ஆண்டும் உம்மு குல்ஸூம் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் ஹிஜ்ரி 9 ஆம் ஆண்டும் மரணித்தனர். மேற்படி மூவரும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உயிர் வாழும் போதே மரணித்து விட்டார்கள். எனினும் ஃபாத்திமா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மாத்திரம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வபாத்தாகி ஆறு மாதங்களின் பின் மரணித்தார்கள்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றல்:
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வயது 55 ஆகவும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வயது இருந்த வேளை அது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், சீர் கெட்டு, வழி தவறி, இருளில் மூழ்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை எண்ணிக் கவலைப்படுகிறார்கள். அத்தகைய சமுதாயத்தைச் சீர் செய்வதெப்படி, அவர்களை ஒளியின்பால் இட்டுச் செல்வதெப்படி என்றெல்லாம் பலவாறு சிந்திக்கத் தலைப்பட்டார்கள். அவ்வேளை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களது உள்ளத்திற்குத் தனிமை மிகவும் பிரியத்தைக் கொடுத்தது. எனவே, இறைவனை வணங்கி வழிபட அமைதியான தனிமையான இடம் நாடி ஹிராக் குகைக்குச் சென்றார்கள். அங்கு பல இரவுகள் தங்கி வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இவ்வாறு, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குகையிற் தங்கி வணக்கத்தில் ஈடுபட்ட வேளையில் அவர்களுக்குத் தேவைப்படும் உணவுகளைத் தயார் செய்து கொடுக்கும் பணியை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மிகவும் கனிவுடன் செய்து வந்தார்கள். குகை, ஹிரா மலையின் உச்சியிலேயே அமைந்திருந்தது. பாதையோ மிகவும் கரடு முரடானதாகக் காணப்பட்டது. இப்படியிருந்தும் தமது முதுமைப் பருவத்தையும் பொருட்படுத்தாது சிரமத்துடன் நடந்து சென்று அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் உணவளித்ததைப் பெண்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.
ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹிராக் குகையில் வணக்க வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன் தோன்றி ‘இக்ரஃ’ (ஓதுவீராக!) என்று கூறினார்கள். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனக்கு ஓதத் தெரியாது” என்றனர்.
பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை இறுகக் கட்டித் தழுவினார்கள். இவ்வாறு மூன்று முறை செய்தார்கள். பின்னர் ஓதுவீராக என்று கூறி மீண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைக் கட்டித் தழுவிவிட்டு 96 ஆம் அத்தியாயமாகிய “அல்-அலக்” இன் முதல் ஐந்து வசனங்களையும் ஓதிக் காட்டினார்கள். அவற்றை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்படியே ஓதினார்கள். பின்பு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சென்று விட்டார்கள். இந்நிகழ்வால் அதிர்ச்சியடைந்து பயந்து நடுங்கிய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் வந்து “என்னைப் போர்த்துங்கள், என்னைப் போர்த்துங்கள்” என்று கூறினார்கள்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் போர்த்திவிட்ட பின்னர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நடந்த சம்பவத்தை விளக்கினார்கள்; பின்னர் தமக்கு ஏதும் ஆபத்து நேர்ந்துவிடுமோ என்று அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் தமது கணவருக்கு மிக அழகான முறையில் ஆறுதல் கூறி மன தைரியத்தை ஊட்டினார்கள்.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் கூறிய வார்த்தைகள் வருமாறு: “அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அல்லாஹ் ஒருபோதும் உங்களை இழிவுபடுத்த மாட்டான். நீங்கள் உங்கள் உறவினர்களுடன் இணங்கி வாழ்கிறீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைச் சுமக்கிறீர்கள். ஏழைகளுக்காக உழைக்கிறீர்கள். விருந்தினரை உபசரிக்கிறீர்கள். சோதனைகளில் (சிக்கியோருக்கு) உதவி புரிகிறீர்கள்” என்று கூறிப் பயந்திருந்த உள்ளத்திற்கு உண்மையான வார்த்தைகளைக் கொண்டு ஆறுதல் கூறினார்கள்.
அதுமட்டுமல்ல; அந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்னவென்பதைக் கேட்டறிய வேண்டும் என்பதற்காகத் தமது தந்தையின் சகோதரர் வறகா பின் நௌபல் என்பவரிடம் சென்று கேட்டறிந்து கொள்ளலாம் என்று ஆறுதல் கூறினார்கள். ஏனெனில், அவர் இன்ஜீல் வேதத்தை நன்கு அறிந்து வைத்திருந்த கிறிஸ்தவராகக் காணப்பட்டார். எனவே, கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களது ஆலோசனையை ஏற்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் வறகா பின் நௌபல் என்பவரிடம் வந்து நடந்ததை எடுத்துக் கூறி விளக்கம் கேட்டனர்.
அதற்கு அவர் “முஹம்மதிடம் வந்தவர் வானவர் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் ஆவார். முஹம்மதை அல்லாஹ் தனது தூதராகத் தெரிவு செய்துள்ளான். உங்களை மக்கள் ஊரை விட்டு வெளியேற்றுவார்கள்” என்றார். அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “எனது கூட்டத்தினர் என்னையா வெளியேற்றுவார்கள்” என்று வியப்புடன் கேட்டார்கள். அதற்கு “ஆம், அப்போது நான் உயிரோடு இளைஞனாக இருந்தால் உங்களுக்கு உதவிடுவேன் என்று கூறினார்”.
– அச்சத்துடனும் திடுக்கத்துடனும் வீடு திரும்பிய கணவனை அன்போடு ஆறுதலளித்து அரவணைத்த விதத்தைப் பெண்கள் அவதானிக்கக் கடமைப்பட்டுள்ளனர்.
– தன்னைப் போர்த்திவிடுமாறு கூறியபோது, ஏன், எதற்காக, உங்களுக்கு என்ன நடந்தது என்று பதறியடித்துக்கொண்டு அதிரடியான கேள்விகளைத் தொடுத்து அவரைத் திக்குமுக்காடச் செய்யாது பதற்றம் நீங்கும்வரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் போர்த்திவிட்டமை.
– தமது பதற்றம் நீங்கிய பின்னர் தாமாகவே தமக்கு என்ன நடந்தது என்று கூறும் வரை பொறுத்திருந்து சூழ்நிலையறிந்து நடந்து கொண்ட விதம், தன் கணவர் மீது அவர் வைத்திருந்த அன்புக்கு எடுத்துக்காட்டாகும்.
– தனக்கு ஏதும் ஆபத்து வந்துவிடுமோ என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அஞ்சுவதாகக் கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் காணப்பட்ட அருங் குணங்களையும் நல்லறங்களையும் சுட்டிக் காட்டிய விதமானது, அன்னை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையையும் மரியாதையையும் தெளிவுபடுத்துகின்றது.
=========================
أم المؤمنين خديجة بنت خويلد رضي الله عنها
=========================
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இறை நம்பிக்கைக்குப் பெரும் சாட்சி:
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டு ‘அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஒருபோதும் இழிவுபடுத்த மாட்டான்’ என்று ஆணித்தரமாகக் கூறியமை அன்னாரது இறை நம்பிக்கைக்குப் பெரும் சாட்சி.
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவின் ஆழம்
இந்நிகழ்ச்சியின் உண்மையான விளக்கம் என்ன என்பதை அறியத் தம் கணவரை வேதம் அறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றமை கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் அறிவின் ஆழத்தைத் தெட்டத் தெளிவாகக் காட்டுகிறது. ஏனெனில், தன் குடும்பத்தில், சமுதாயத்தில், தனக்கு நெருக்கமான, நம்பிக்கையான எத்தனையோ பேர் இருந்தும் வேதமறிந்த ஒருவரிடம் அழைத்துச் சென்றுள்ளமை நிகழ்வின் யதார்த்தத்தை ஓரளவு புரிந்து கொள்ளும் மனப் பக்குவமும் அறிவும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களிடம் காணப்பட்டுள்ளதைச் சுட்டிக் காட்டுகின்றது
இந்நிகழ்ச்சியின் பின்னர் முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு இறைத் தூதர் என்ற உண்மையை உணர்ந்து ஏற்றுக் கொண்டார்கள். எனவே, முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நபி என்று ஏற்றுக் கொண்ட முதல் பெண்மணியாகக் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் திகழ்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “மக்கள் என்னை நிராகரித்த போது அவர் என்னை ஏற்றுக் கொண்டார். மக்கள் என்னைப் பொய்யாக்கிய போது அவர் என்னை உண்மைப்படுத்தினார். மக்கள் எதையுமே எனக்குத் தராமற் தடுத்துக் கொண்ட போது அவர் தமது சொத்துக்களை எல்லாம் எனக்காக அர்ப்பணித்தார்” (அஹ்மத், 16: 118)
மேற்கூறப்பட்ட அனைத்து விடயங்களையும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் வாழ்விலிருந்து அனைவரும், குறிப்பாகப் பெண்கள் படிப்பினையாகப் பெற்றிடல் வேண்டும்.
இந்நிகழ்ச்சியில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் நடந்து கொண்ட விதமானது, பெண்ணினத்துக்குப் பல முன்மாதிரிகளைத் தருகின்றது. அவை:
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சிறப்பு
எவ்விதச் சலனமுமின்றி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முதல் மனிதராகிய கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு தோளோடு தோள் நின்று உழைத்தார்கள். அவர்களின் தஃவாக் களத்தில் தன்னையும் பங்காளியாக இணைத்துக் கொண்டார்கள். தமது செல்வத்தையெல்லாம் இஸ்லாத்தின் வளர்ச்சிக்காகவும் பிரச்சாரப் பணிக்காகவும் தியாகம் செய்தார்கள். இவ்வாறு இஸ்லாத்திற்காக உடலாலும் பொருளாளும் உள்ளத்தாலும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்கள். கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சிறப்புப் பற்றி ஏராளமான நபி மொழிகள் காணப்படுகின்றன. அவற்றிற் சில வருமாறு:
உலகிற் சிறந்த பெண்மணி
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் அலைஹி வஸல்லம் ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா ஆவார்” (அறிவிப்பவர்: அலி ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815)
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குடும்பத்தினரை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதித்தல்
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள், “கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் மரணத்திற்குப் பின் ஒரு நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வருவதற்கு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் சகோதரி ஹாலா பின்த் குவைலித் ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அனுமதி கேட்டார்கள்.
அவருடைய குரல் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் குரலைப் போன்று இருந்ததால் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அனுமதி கோருகிறார்கள் என்று எண்ணி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மகிழ்ச்சியுற்றார்கள். பிறகு அவருடைய சகோதரி என்று தெரிந்த போது ‘என் இறைவனே! இவர் ஹாலா’ என்று கூறினார்கள். இதனைக் கேட்ட நான் பொறாமைப்பட்டேன். ‘காலத்தால் அழிக்கப்பட்ட பல் விழுந்த குறைஷிக் கிழவிகளில் ஒருவரையா இவ்வளவு நினைவு கூருகிறீர்கள். நிச்சயமாக அவர்களை விடச் சிறந்த ஒருவரை அல்லாஹ் உங்களுக்குத் தந்துள்ளான்’ என்று கூறினேன்” (நூல்: புகாரி 382, முஸ்லிம் 4824)
மற்றுமொரு அறிவிப்பில், “‘அல்லாஹ் உங்களுக்கு வயது முதிர்ந்தவர்களையும் சிறிய வயதினரையும் கொடுத்துள்ளான்’ என்று நான் கூறியபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கோபமுற்றார்கள். அப்போது நான், ‘உங்களை சத்தியத்தைக் கொண்டு அனுப்பியவன் மீது ஆணையாக! இதன் பிறகு அவர்களைப் பற்றி நல்லதைத் தவிர வேறு எதையும் கூற மாட்டேன்’ என்று கூறினேன்” என்றுள்ளது. (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அஹ்மத், தபரானி)
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் நேசர்களை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதித்தல்
ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மனைவிமார்களில் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது பொறாமைப்பட்டதுபோல எவர்மீதும் நான் பொறாமைப்பட்டதில்லை. நானோ அவர்களைப் பார்த்ததுகூடக் கிடையாது. எனினும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அதிகமதிகம் நினைவுகூருவார்கள்.
ஒரு ஆட்டை அறுத்தால் அதைப் பங்கிட்டு கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களின் தோழிகளுக்கும் அனுப்பி வைப்பார்கள். சில நேரங்களில் நான் எரிச்சல் பட்டு “உங்களுக்கு உலகத்தில் கதீஜாவை விட்டால் வேறு பெண்களே இல்லையா” என்று கேட்பேன். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அந்தப் பெண்மணி இன்னின்னவாறு இருந்தார்” என்று அவர்களின் நற் பண்புகளைக் கூறுவார்கள். மேலும், “அப்பெண்மணியின் மூலம்தான் எனக்குக் குழந்தைகளும் கிடைத்தன” என்றும் கூறுவார்கள். (புகாரி: 3818)
கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்கு அல்லாஹ் ஸலாம் கூறல்:
ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து “அல்லாஹ்வின் தூதரே! இதோ கதீஜா. அவர் தன்னுடன் குழம்பு, உணவு, பானம் ஆகியவை நிறைந்த பாத்திரத்தை உங்களிடம் கொண்டு வந்துள்ளார். அவருக்கு என் சார்பாகவும் அவரின் இறைவன் சார்பாகவும் ஸலாமை எடுத்துச் சொல்லுங்கள். சொர்க்கத்தில் அவருக்கு சச்சரவு, துன்பங்கள் இல்லாத, முத்தாலான மாளிகையுண்டு என்ற நற்செய்தியையும் சொல்லுங்கள்” என்று கூறினார். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 3820, 7497, முஸ்லிம் 4817)
சுவனத்தைக் கொண்டு நன்மாராயம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களைப் பற்றி அதிகம் நினைவு கூர்ந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வேறு எந்த மனைவியின் மீதும் பொறாமைப்படாதளவு நான் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் மீது பொறாமைப்படுவேன். அவர்கள் இறந்து மூன்று ஆண்டுகள் கழிந்து என்னை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணம் செய்தார்கள். அல்லாஹ்வும் ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுக்குச் சுவர்க்கத்தில் முத்து மாளிகை யுண்டு என்ற நற்செய்தியை அவருக்குத் தெரிவியுங்கள் என்று கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி 3817, முஸ்லிம் 4820)
மரணம்
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நபித்துவ வாழ்க்கையில் 10 வருடங்கள் வாழ்ந்து தமது 65 ஆம் வயதில் கி.பி. 621 இல் மரணித்தார்கள். அதே ஆண்டில்தான் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வாழ்க்கைக்குப் பெரும் துணையாக இருந்த அவரது சிறிய தந்தை அபூ தாலிப் அவர்களும் மரணித்தார்கள்.
சிறிய தந்தையினதும் ஆருயிர் மனைவி கதீஜா ரளியல்லாஹு அன்ஹா அவர்களினதும் மரணத்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லொணாத் துயரத்திற்காளானார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மட்டுமன்றி இஸ்லாமிய உலகமே சோகத்தில் மூழ்கியது.
இஸ்லாமிய வரலாற்றில் இவ்வாண்டு ஆமுல் ஹுஸ்ன் (عام الحزن துக்க ஆண்டு) என அழைக்கப்படுகிறது. அல்லாஹ் அவர்களைக் கொண்டு திருப்தியடைந்து மேலான சுவர்க்கத்தை வழங்குவானாக.
source: www.manaruddawa.org/index_files/khadija.htm