‘வரலாறு திரும்பும், இஸ்லாம் மீண்டும் எழுச்சி பெறும்!’
மெல்போர்ன் என்று சொன்னாலே நமக்கு ஆஸ்திரேலியாவில் இருக்கின்ற ஒரு நகரமும் அதில் நடந்த கிரிக்கெட் போட்டிகளும்தான் நினைவுக்கு வரும். ஆனால் லார்ட் மெல்போர்ன் என்கிற பிரிட்டிஷ் அரசியல்வாதியின் நினைவாகத்தான் அந்த நகரத்துக்கு மெல்போர்ன் எனப் பெயர் சூட்டப்பட்டது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?
இங்கிலாந்தின் பிரதமராகக் கோலோச்சியவர் தான் லார்ட் மெல்போர்ன் (1779-1848). அவரை பிரிட்டிஷ் பிரதமர்களில் பத்தோடு பதினொன்றாகச் சொல்லிவிட முடியாது. விஷய ஞானம் நிறைந்தவர்; உலக நாடுகளின் வரலாறுகளைக் கரைத்துக் குடித்தவர்; பண்பாடுகளையும் மதங்களையும் ஆழ்ந்து படித்தவர்; கடின உழைப்பாளி; ஒழுக்கசீலர் எனப் பல்வேறு சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் அவர்.
பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் புகழ்பெற்ற அடையாளச் சின்னமாக முத்திரை பதித்த ராணி விக்டோரியாவுடன் (1819-1901) நெருக்கமான தொடர்பு வைத்திருந்தார் மெல்போர்ன்.
பதின்பருவத்து இளம் பெண்ணாக இருந்த ராணி விக்டோரியாவுக்கு உலக வரலாறு, அரசியல், மதங்கள் என அனைத்தையும் சொல்லிக் கொடுத்தவர் மெல்போர்ன் தான்.
ராணி விக்டோரியாவுக்கு மெல்போர்ன் அளித்த பதில்:
ஒரு முறை ராணி விக்டோரியா மெல்போர்னிடம் கேட்டார்: “”நீங்கள் உலக வரலாற்றை ஆழ்ந்து வாசித்துள்ளீர்கள். வரலாற்றில் மற்றெல்லாவற்றையும் விட மிக அதிகமாக வியப் பிலாழ்த்திய நிகழ்வு எது எனச் சொல்ல முடியுமா”?
சற்றும் தாமதிக்காமல் மெல்போர்ன் சொன்ன பதில்: “”இஸ்லாத்தின் எழுச்சி”.
விக்டோரியா விடவில்லை. “”இஸ்லாம் எழுச்சியடைந்ததற்கான காரணங்களைக் குறித்தும் ஆராய்ந்திருக்கின்றீர்களா?” எனக் கேட்டார்.
மெல்போர்ன் சொன்னார்: “”என்னைப் பொருத்தவரை இஸ்லாத்தின் எழுச்சிக்கு ஒரே ஒரு காரணத்தைத்தான் சொல்ல முடியும். அவர்களின் இறைத்தூதர் அவர்களுக்கு வழிகாட்டுதல்களைக் கொண்ட நூல் ஒன்றைக் கொடுத்திருந்தார். அவர்கள் அந்த நூலைப் பின்பற்றி நடந்த வரை அவர்கள் சென்ற இடமெல்லாம் வெற்றிக் கதவுகள் அவர்களுக்காகத் திறந்தே இருந்தன. காலம் செல்லச் செல்ல அவர்கள் அந்த நூலிலிருந்து தங்களுடைய கவனத்தைத் திருப்பிக் கொண்டார்கள். அந்த அலட்சியம் வளர வளர அவர்களின் வீழ்ச்சியும் அதிகமாகிக் கொண்டே போயிற்று”.
மெல்போர்ன் மேலும் சொன்னார் :
“”இனி வருங்காலத்தில் வரலாறு எப்போதாவது மீண்டும் தானாகத் திரும்பினால், ஒட்டுமொத்த முஸ்லிம்களும் குர்ஆனை இறுகப் பற்றிப் பிடித்துக் கொள்வார்களேயானால், தங்களுடைய தனிப்பட்ட வாழ்வையும் கூட்டு வாழ்வையும் குர்ஆனின் அடிப்படையில் அமைத்துக் கொள்வார்களேயானால் இந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யம் என்ன, ஒட்டுமொத்த உலகமே அவர்களின் ஆளுகையின் கீழ் வந்துவிடும்.”
நன்றி: சமரசம் 1-15 நவம்பர் 2010