பனை மரத்துக்குக்கீழ் பால் குடித்தாலும்….
சே.ச.அனீஃப் முஸ்லிமின்
[ “மீனா வீட்டிற்கு புதிதாக ஒரு ஆண் வந்திருக்கிறார்…”
“அவரைப் பார்த்தால் மீனாவின் சொந்தக்காரர் போன்றும் தெரியவில்லை… அவர் ஒரு முஸ்லிம் பாய்”
“பையனை கல்லூரிக்காக சென்னை அனுப்பிவிட்டு அவள் கடையை கூட பார்க்காமல் இப்படி கூத்து அடிக்கிறாள்..”
“60 வயதைக் கடந்தவர் என்றாலும் அவரும் ஆம்பிளை தானே..”
“அவளுக்கு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு…”
இவை அக்கம்பக்கத்தில் மீனாவை பற்றி இன்று பேசிக் கொண்ட சில வார்த்தைகள். ]
பனை மரத்துக்குக்கீழ் பால் குடித்தாலும்….
“அவளுக்கு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு…”
ஆம் அவர்கள் மீனாவை பற்றித் தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
மீனா பழைய தஞ்சை பஸ் ஸ்டாண்ட் அருகில் இட்லி கடை ஒன்று வைத்திருக்கிறாள்.
மீனா நல்ல அழகு. கடுமையான உழைப்பினால் வடிவான தேகம் கொண்டவள். அவளுக்கு 38 வயதாகிறது என்றால் யாரும் நம்பக்கூட மாட்டார்கள். நெற்றியில் விபூதியும், தலையில் கொண்டையும், இடுப்பில் சொருகிய சேலையும் தான் அவளின் அடையாளம்.
பதினைந்து வருடங்களுக்கு முன்னால் கணவன் இல்லாமல் கையில் ஐந்து வயது குழந்தையோடு இதே பழைய பஸ் ஸ்டாண்டில் சிறியதாக தள்ளுவண்டியில் இட்லி விற்க ஆரம்பித்தாள். வயிற்றுப் பிழைப்புக்காக ஆரம்பித்த கடை என்றாலும், அவளுடைய உழைப்பும் நேர்மையும் பழைய பஸ் ஸ்டாண்டிலேயே அதிக கூட்டம் உள்ள கடையாக இன்று அவளுடைய இட்லிக் கடையை மாறியிருக்கிறது.
காலை 4 மணிக்கெல்லாம் கடையை திறந்து விடுவாள். ஆறு ஆறரை மணிக்கெல்லாம் சுடச்சுட இட்லி, சாம்பார், தேங்காய் மற்றும் தக்காளிச் சட்னி ரெடியாகிவிடும். இட்லி காலை 11 மணி வரை கிடைக்கும். அதற்குப் பிறகு கடையை மூடிவிடுவாள். பிறகு மீண்டும் மாலை ஆறு மணிக்கு வியாபாரம் தொடங்கி இரவு 11 மணி வரை நடக்கும்.
ஒரே நேரத்தில் 50 பேர் உட்கார்ந்து சாப்பிடும் அளவு கடை இருந்தாலும், கடைக்கு வெளியே எப்போதும் ஒரு கூட்டம் கையில் தட்டோடு இருக்கும்.
6 பெண்கள் வேலைக்கு இருந்தும் சாம்பாரை மட்டும் மீனாவே தான் செய்வாள். அந்த சாம்பாரின் சுவைக்காகவே தினமும் அங்கு வந்து சாப்பிடுபவர்கள் எண்ணிக்கை அதிகமானது. பேருந்து நிறுத்தங்கள் அருகே இருக்கும் உணவுக் கடைகளில் தரமும் சுவையும் இருக்காது என்ற கூற்றுக்கு முற்றிலும் முரணாக மீனாவின் இட்லி கடை இருந்தது.
தனியாக இருக்கும் பெண் தானே என்று எந்த ஆணும் மீனாவிடம் சீண்டி விட முடியாது. எப்போதும் கோபமாகவே இருப்பாள். எல்லோரிடமும் கடுமையாகவும் தட்டையான குரலிலும் மட்டுமே பேசுவாள். இதனால் அவளை யாருக்கும் பிடிக்காது என்றாலும் சாம்பாரின் சுவைக்காகவே கடையை மீண்டும் மீண்டும் நாடி வந்தார்கள்.
ஆனால் கடந்த சில நாட்களாக சாம்பாரின் சுவை முன்பைப் போல இல்லை. துறுதுறுவென கடையில் எப்போதும் ஓடிக்கொண்டிருக்கும் மீனாவையும் பல சமயங்களில் கடையில் பார்க்க முடிவதில்லை. சாம்பார் வைக்க புதிதாக ஒரு மாஸ்டர் வைத்துள்ளார் மீனா என்பது வாடிக்கையாளர்களுக்கு பேரிடியாக இருந்தது.
“மீனா வீட்டிற்கு புதிதாக ஒரு ஆண் வந்திருக்கிறார்…”
“அவரைப் பார்த்தால் மீனாவின் சொந்தக்காரர் போன்றும் தெரியவில்லை… அவர் ஒரு முஸ்லிம் பாய்”
“பையனை கல்லூரிக்காக சென்னை அனுப்பிவிட்டு அவள் கடையை கூட பார்க்காமல் இப்படி கூத்து அடிக்கிறாள்..”
“60 வயதைக் கடந்தவர் என்றாலும் அவரும் ஆம்பிளை தானே… “
“அவளுக்கு ஆம்பள சுகம் தேட ஆரம்பிச்சுடுச்சு…”
இவை அக்கம்பக்கத்தில் மீனாவை பற்றி இன்று பேசிக் கொண்ட சில வார்த்தைகள்.
இந்த வார்த்தைகள் மீனா காதிலும் விழுந்தது. ஆனால் அவள் எதற்கும் பதில் கொடுக்கவில்லை.
-*-
ரஹீம் பாய் அந்த ஊரிலேயே அதிகம் படித்தவர். தஞ்சாவூரில் ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வந்தார். அந்த ஊரில் காய்ச்சல் தலைவலிக்கு எல்லாம் அவர்தான் மருந்து தருவார். சிலருக்கு மாதமாதம் இலவச மருந்துகள் அவரிடமிருந்துதான் செல்லும்.
யாராவது “சம்பாதிக்கிற காசை எல்லாம் ஏன் இப்படி தானம் பண்ணியே முடிக்கிற..?” என்று கேட்டால்.
“எனக்கென்ன பிள்ளையா குட்டியா…” என்று அலுத்துக் கொள்வார்.
இருபது வருடங்களாக குழந்தை இல்லாத போதும் மனைவியிடத்தில் ஒருமுறை கூட அவர் குறைப்பட்டுக் கொண்டதில்லை.
40 வயதில் கூட பேண்ட் சட்டை அணிந்து கொண்டு அவர் வேலைக்கு செல்லும் அழகை அந்த ஊர் கன்னிப்பெண்கள் கூட ரசித்தார்கள். ஆறடி உயரமும் கருத்த சுருள் சுருளான தலை முடியும் தாடியும் பெண்களுக்கு அவர் மீது காதல் வர வைத்தது.
மனைவி இருந்தவரையில் திடமாக இருந்த மனிதர். மனைவி இறந்த ஒரு வருடத்தில் நொடிந்து போனார். இவரால் வளர்ந்த உறவினர்கள் கூட இவரை கைவிட்டனர்.
இவரது மனைவியின் தம்பி வீட்டை எழுதி வாங்கிக்கொண்டு. அவரை திருச்சியில் உள்ள ஒரு முதியோர் இல்லத்தில் சேர்த்தான். சேர்த்த அன்றோடு அவனை அங்கு பார்க்க முடியவில்லை.
மகனின் பிறந்த நாளுக்காக அன்னதானம் செய்ய மீனா திருச்சி முதியோர் இல்லம் சென்றபோதுதான் அங்கே ரஹீம் பாயை பார்த்தாள்.
அவரைப் பார்த்தவுடன் கண்களில் நீர் பொங்கி வழிந்தன. பதினைந்து வருடங்களுக்கு பிறகு அன்றுதான் அவளின் கன்னங்கள் கண்ணீரை பார்த்தன.
அவளது வாழ்வில் மறக்க முடியாத மனிதர் அல்லவா ரஹீம் பாய்.
-*-
25 வருடங்களுக்கு முன்னால் அந்த கிராமத்தில் பள்ளி ஆசிரியராக வந்தவரை காதலித்து திருமணம் செய்து கொண்டாள் மீனா. சாதி மாறி திருமணம் என்பதால். இரண்டு வீட்டிலும் கடுமையான எதிர்ப்பு இருந்தது. ஒரு கட்டத்தில் ஊரில் இருக்க முடியாமல் மீனாவும் அவளின் கணவரும் உயிருக்கு பயந்து தஞ்சையில் வந்து குடியேறினர்.
தஞ்சாவூரில் ஒரு தனியார் பள்ளியில் மாதம் 4000 ரூபாய்க்கு அவருக்கு வேலை கிடைத்தது. நல்ல மகிழ்ச்சியான வாழ்விற்கு பரிசாக ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
டிசம்பர் 26 இல் தான் பேரிடியாக அந்த விபத்து நிகழ்ந்தது. கணவரை இழந்து கைம்பெண் ஆனால் மீனா. கையில் இருந்த காசு அனைத்தும் செலவான பின்பு. குழந்தை பாலுக்கு கூட என்ன செய்வது என்று தெரியாமல் தஞ்சை தெருக்களில் குழந்தையோடு அழைந்தாள்.
ஒரு நாள், அந்த பராரி நிலையிலும் மீனாவை அடையாளம் கண்டு கொண்டார் ரஹீம் பாய்.
“முருகேசன் மகள்தானே நீ…? என்னம்மா இப்படி ஆயிட்டே…” என்று கேட்டு வருந்தினார்.
அவளை ஊருக்கு அழைத்து வந்து அவளுடைய வீட்டில் சமாதானம் செய்து வைக்க பல முயற்சிகள் செய்தார். சாதி வெறி பிடித்த அவளது அண்ணன்கள் அவளை ஏற்க மறுத்தனர். அவள் ஊரில் இருந்தாள் அவளைக் கொன்று விடுவோம் என்று மிரட்டினர்.
எனவே அவளை வேறு வழி இல்லாமல் மீண்டும் தஞ்சைக்கு அழைத்து வந்து கீழவாசலில் ஒரு வீடு பிடித்து கொடுத்தார். முன்பணம் கட்டி தள்ளுவண்டி ஒன்று வாங்கி கொடுத்து. இட்லி கடை ஒன்று வைத்துக் கொள்ளும்படி ஊக்கப்படுத்தினார்.
அதற்குப் பிறகு அவளது கடை நன்றாக ஓட்டமெடுத்தது. சாப்பிட்டால் காசு வாங்க மறுக்கிறாள் என்பதற்காக மீனாவின் கடைக்கு செல்வதை வெகுவாக குறைத்துக் கொண்டார் ரஹீம் பாய்.
தள்ளுவண்டிக்கு அவர் முன்பணமாக கட்டிய 20 ஆயிரம் ரூபாயை எடுத்துக்கொண்டு மீனா ஒருமுறை அவர்முன் சென்று நின்றாள். பணத்தை பார்த்த ரஹீம் பாய் மிகக் கடுமையாகக் கோபப்பட்டார்.
“பணம் வந்த உடனே ரொம்ப மாறிட்டே மீனா… நான் உன்ன மகளா நினைச்சுத்தான் செஞ்சேன்…” என்று கோபித்துக் கொண்டார் ரஹீம் பாய்.
அதற்குப் பிறகு ஒரு 10 வருடங்கள் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை. ஆனால் எப்போதும் மீனா மனதில் ரஹீம் பாயை நன்றியோடு நினைத்துக் கொண்டே இருந்தாள்.
அதனால்தான் ரஹீம் பாயை அந்த முதியோர் இல்லத்தில் பார்த்தபோது அவளால் அழுகையை அடக்க முடியவில்லை. அவரது கால்களில் போய் விழுந்தாள்.
பதறிப்போன ரஹீம் பாய் துடித்து நகர்ந்தார். “என்னமா பண்ற எந்திரிம்மா முதல்ல… இதெல்லாம் எங்களுக்கு பழக்கம் கிடையாது.. பெத்த தாய் காலில் கூட நாங்கள் விழமாட்டோம்… எந்திரிம்மா…”என்று பதறினார் ரஹீம் பாய்.
தன்னோடு வந்து தன் வீட்டில் தங்கும்படி மீனா அவரை வற்புறுத்தினாள். ரஹீம் பாய் எவ்வளவோ மறுத்தும், மீனாவின் பிடிவாதத்தால் ரஹீம் பாய் மீனா வீட்டிற்கு சென்றார்.
ரஹீம் பாயை கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காகவே கடை வேலைகளில் இருந்து தன்னை கொஞ்சம் விடுவித்துக் கொண்டாள். ஆனால், அதற்குள் ஊர் வதந்திகளில் பேரன் பேத்தி எடுத்து இருந்தது.
விடுமுறைக்காக வந்திருந்த மீனாவின் மகனுக்கும் இந்த வதந்திகள் மனக்கஷ்டத்தை ஏற்படுத்தியது. மீனாவை அவன் தவறாகவே நினைத்தான்.
“அம்மா நீ வேணும்னா இரண்டாவது ஒரு கல்யாணம் பண்ணிக்ம்மா…” என்று அவன் சொன்னபோது. “பளார்” கன்னம் பழுக்க அறைந்தால் மீனா. அதன்பின் அன்று இரவு முழுவதும் மீனா அழுது கொண்டே இருந்தாள்.
மறுநாள் காலை எப்போதும் போல் 4 மணிக்கு கடைக்கு சென்றுவிட்டு ஏழு மணி போல் ரஹீம் பாய்க்காக இட்டிலி எடுத்து வந்தபோது. கட்டிலில் ரஹீம் பாய் இல்லை.
மீனா எங்கெங்கோ தேடியும் ரஹீம் பாயை கண்டுபிடிக்க முடியவில்லை. சில நாட்களுக்குப் பிறகு மீனாவின் இட்டிலி கடை காலை மூடி இருந்தது. வாடிக்கையாளர்கள் கூட்டம் கூட்டமாக வந்து பசியோடு போனார்கள். மீனாவின் வீட்டிலும் Tolet போர்ட் போடப்பட்டிருந்தது.
மீனாவும் அந்த முஸ்லிம் கிழவனும் கல்யாணம் செய்து கொண்டதாக மீண்டும் ஊருக்குள் பேசிக் கொண்டார்கள்….
ஆக்கம் : சே.ச.அனீஃப் முஸ்லிமின்
source: https://www.facebook.com/rafiul.ashik.7/posts/932341280306605