மனித நேயப்பண்பு முஸ்லிம்களிடம் இருக்க வேண்டிய உயர் பண்பு
ஹாத்திம் தாயி என்பவருடைய மகள் ஸஃபானாவும், அவரின் கோத்திரத்தாரும் கைதியாக பிடிக்கப்பட்டு மதீனாவின் மஸ்ஜித்துன் நபவீயின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தருணம் அது..
நிலைமையை உணர்ந்து கொண்ட ஸஃபானா தழுதழுத்த குரலில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம்,
“அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய தந்தையோ இறந்து விட்டார். என்னை ஆதரிக்க வேண்டிய என் சகோதரன் அதீயோ என்னை இந்த நிலைமைக்கு ஆளாக்கி விட்டு ஓடிவிட்டார். என் மீது கருணை காட்டுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு அருள் புரிவான்!” என்றார்.
இந்த அபயக்குரல் மூன்று நாட்களாக மாநபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காதுகளில் பள்ளிவாசலைக் கடந்து வீட்டிற்கும், வீட்டைக் கடந்து பள்ளிவாசலுக்கும் செல்கிற போது ஒலித்துக் கொண்டே இருந்தது.
மூன்றாம் நாள் ஸஃபானாவின் அருகே சென்ற பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அன்பு கூர்ந்து நோக்கி ”ஸஃபானாவே! உம்முடைய கோரிக்கை தான் என்ன?” ஆதரவுடன் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை வறியோருக்கும், எளியோருக்கும், வாழ வழியில்லாதோருக்கும் கலங்கரை விளக்கமாய் இருந்தவர். உயிருடன் வாழும் காலம் வரைக்கும் ஈந்து கொடுப்பதை வழக்கமாய் கொண்டிருந்த மாமனிதர் அவர். ஆனால், நானும், என் சமூகமும் இன்று இப்படி நிராயுதபாணிகளாய் நின்று கொண்டிருக்கின்றோம். எங்கள் மீது கருணை காட்டுங்கள்! உங்களுக்கு அல்லாஹ் அருள் புரிவான்!” என்றார்.
நீண்ட உரையாடலுக்குப் பின்னர் அண்ணலார் ஸஃபானாவின் தந்தையை வாழ்த்தி விட்டு, விடுதலை அளிப்பதாக கூறிவிட்டு அணிய ஆடையும், உண்ண உணவும், செலவுக்கு பணமும் கொடுத்து விட்டு சுற்றியிருந்த தோழர்களை நோக்கி,
“கண்ணியமானவர்கள் இழிவடைந்த நிலையில் இருப்பதைக் கண்டாலோ,
வசதி படைத்தவர்கள் வறுமையில் மாட்டிக் கொண்டாலோ,
அறிவுபடைத்தவர்கள் முட்டாள்களிடத்தில் சிக்கிக் கொண்டாலோ
உடனடியாக அவர்களுக்கு உதவுங்கள்” என கூறினார்கள்.
பின்னர், தகுந்த பாதுகாப்போடு ஸஃபானாவை அவரின் சொந்த ஊரான ஷாமுக்கு அனுப்பி வைத்தார்கள். (நூல்: இப்னு ஹிஷாம், அத்தாரிக் லித் தபரீ)
source: http://vellimedaiplus.blogspot.com/