இஸ்லாம் இயம்பும் உடல்நலம்
ஒரு மனிதனுக்கு அடிப்படை தேவை நல்ல உடல் நலம். அதாவது ஆரோக்கியம். ஆரோக்கியத்தைப் பெற நம் உடல் வலிமையாக இருக்கவேண்டும்.
“நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். ஆரோக்கியமான வாழ்வுதான் அருள் பெற்ற வாழ்வு.இஸ்லாம் ஆரோக்கியத்திற்கு அளவு கடந்த முக்கியத்துவம் அளிக்கிறது. ஆரோக்கியமாக வாழ வேண்டுமென்றால் உடலை வலிமையாக வைத்திட வேண்டும்.
நம் தலைவர் தாஹா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உடல்நலத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்துள்ளார்கள். வலிமையானவர்களாக வாழ்ந்துள்ளார்கள். சிறந்த மல்யுத்த வீரராகத் திகழ்ந்துள்ளார்கள்.
அன்றைய அரேபியாவின் மிகச் சிறந்த மல்யுத்த வீரரான ருகானாவை மல்யுத்தப் போட்டியில் வென்றார்கள். பல தடவை அவரை மண்ணைக் கவ்வ வைத்தார்கள். (அபூதாவூத்)
உடலை வலுவாக வைத்துக்கொள்வதற்காக மனிதன் ஆண்டாண்டு காலங்களுக்கு முன்பே பல விளையாட்டுகளைக் கண்டுபிடித்தான். இஸ்லாமிய ஒழுக்கங்கள் கடைப்பிடிக்கப்படும் அனைத்து விளையாட்டுகளையும் இஸ்லாம் அனுமதிக்கிறது.
உடலுக்கு வலு சேர்க்கும் விளையாட்டுகளை அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஊக்குவித்துள்ளார்கள். மதீனாவில் மஸ்ஜிதின் வளாகத்திலேயே ஓட்டப் பந்தயம், அம்பெறிதல் போன்ற போட்டிகளை நடத்தியிருக்கின்றார்கள்.
தங்கள் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களுடன் ஓட்டப் பந்தயத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
அன்னை ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள்:
“ஒரு தடவை நானும், அண்ணலாரும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டோம். இதில் நான் வெற்றி பெற்றேன். சிறிது காலத்திற்குப் பிறகு, எனக்கு கொஞ்சம் சதை போட்ட பிறகு மீண்டும் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டோம். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெற்றி பெற்றார்கள். அதன் பிறகு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் : “அதற்கு இது சரியாகிவிட்டது.” (புகாரீ)
அதேபோல் நீச்சல், குதிரையேற்றம், அம்பெறிதல் ஆகியவற்றிற்கு அண்ணலார் அதிகமதிகம் ஊக்கமளித்துள்ளார்கள்.
நாம் குடும்பத்துடன் சுற்றுலா செல்லும்பொழுது கூட அங்கே உல்லாசமாகச் செலவிடும் நேரத்தில் சிறிது பகுதியை விளையாட்டுக்கு ஒதுக்கலாம். இறகுப் பந்து போன்ற விளையாட்டுகளை நம் பிள்ளைகளுடன் விளையாடலாம். இது உடலுக்கும் நலன் தரும். உள்ளத்துக்கும் உவகை தரும். பிள்ளைகள் நம்முடன் விளையாடும்பொழுது குதூகலம் அடைவார்கள்.
நல்ல உடல் ஆரோக்கியத்தைப் பெற உணவில் நிதானமும், சுத்தமும், சுகாதாரமான சுற்றுப்புறச் சூழலும், முறையான உடற்பயிற்சியும் தேவை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகின்றார்கள்:
“பலமான முஃமின் பலவீனமான முஃமினை விட சிறந்தவர். மேலும் அல்லாஹ்வின் விருப்பத்திற்குரியவருமாவார்.” (முஸ்லிம்)
அல்லாஹ் பலமான முஃமினையே விரும்புகிறான் என்ற அடிப்படையில் நாம் நம்முடைய உடல்நலத்தைப் பேண வேண்டும். உடல் பலத்தை அதிகப்படுத்திக்கொள்ள வேண்டும்.
இஸ்லாம் முழுமையான வாழ்க்கை நெறியைக் கொண்டது. அது மனிதனுக்கு ஆன்மீகத் துறையில் மட்டுமின்றி அவனது உடல், உள்ளம், சிந்தனை, உணர்வு என சகல துறைகளிலும் முழுமையான சிறந்த வழிமுறைகளைக் காட்டியுள்ளது.
இதனடிப்படையில் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாகவும் கட்டுப்பாடாகவும் வைத்திருப்பதற்கான பயனுள்ள இஸ்லாமிய வரையறைகளுக்குட்பட்ட உடற்பயிற்சிகளை அது அனுமதித்துள்ளது.
உடற்பயிற்சி உடலை சுறுசுறுப்பாக வைக்கிறது. சோம்பேறித்தனத்தை அகற்றுகிறது. நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கிறது. கடும் நோய்களிலிருந்து உடலைப் பாதுகாக்கிறது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருந்துள்ளார்கள். அதனையே விரும்பியுள்ளார்கள். அடிக்கடி சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாப்பும் தேடியுள்ளார்கள். நம்மையும் அப்படிப் பாதுகாப்பு கேட்க தூண்டியுள்ளார்கள்.
அண்ணலார் எப்பொழுதும் விறுவிறுவென்று வேகமாக நடக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். அவர்களின் வேகத்திற்கு யாராலும் ஈடு கொடுக்க முடியவில்லை.
ஹஸ்ரத் அலீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நடந்தால், மேடான பகுதியிலிருந்து கீழே இறங்கும்பொழுது எவ்வளவு வேகம் இருக்குமோ அவ்வளவு வேகமும், அவர்களின் கால்களுக்கு அவ்வளவு பலமும் இருக்கும்.” (திர்மிதீ)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்:
“நான் அண்ணலாரை விட வேகமாக நடக்கும் ஒரு நபரைக் கண்டதில்லை. அண்ணலாருக்காக பூமியை மடித்து வைத்தது போலிருக்கும். ஒரு இடத்தில் இருப்பார்கள். சில நொடிகளில் வேறொரு இடத்தில் இருப்பார்கள். அவர்கள் நடக்கும்பொழுது அவர்களுக்கு ஈடு கொடுப்பதற்காக நாங்கள் சிரமப்படுவோம். ஆனால் அவர்கள் சாதாரணமாகத்தான் நடந்து கொண்டிருப்பார்கள்.” (திர்மிதீ)
நீச்சல், ஈட்டி எறிதல் போன்ற கலைகளைப் பயிலும்படி பல ஹதீஸ்களில் ஏவப்பட்டுள்ளதன் மூலம் உடற்பயிற்சிக் கலைகளில் இஸ்லாம் எந்தளவு ஆர்வமூட்டியுள்ளது என்பது புலனாகின்றது.
இறைத்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்:
“உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல், அம்பெறிதல், குதிரையேற்றம் ஆகியவைகளைக் கற்றுக்கொடுங்கள்.”
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“அம்பெறிதலையும், குதிரையேற்றத்தையும் கற்றுக்கொள்ளுங்கள்.” (முஸ்லிம்)
எம்பெருமானார் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மஸ்ஜிதுக்குள்ளேயே ஈட்டி எறிதல் விளையாட்டை அனுமதித்துள்ளார்கள். ஒரு தடவை அபிசீனியர்கள் மஸ்ஜிதுக்குள் ஈட்டி எறிதல் விளையாட்டில் ஈடுபட்டபொழுது தங்கள் மனைவி ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களை அதனைக் காண அனுமதித்தார்கள். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்கள் அண்ணலாரின் தோளில் சாய்ந்து அந்த வீர விளையாட்டை தான் சோர்வடையும் வரை பார்த்தார்கள்.
அம்பெறிதலில் அண்ணலார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அலாதிப் பிரியம் வைத்திருந்ததாக ஷமீம் அலீம் என்பவர் தனது “இறைத்தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும், அவர்களின் குடும்பமும் : ஒரு சமூகப் பார்வை” என்ற நூலில் குறிப்பிடுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் தோழர்களை அதிகமாக உழைத்திடவும், சுறுசுறுப்பாக இருந்திடவும், அதிகாலையில் எழுந்திடவும் ஊக்குவித்தார்கள். இவையெல்லாம் நம் உடலை ஆரோக்கியமாக வைக்க உதவிடுபவை.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு பிரார்த்தித்தார்கள்:
“அல்லாஹ்வே, என் உம்மத்திற்கு அதிகாலைப் பொழுதை அருள் நிறைந்ததாக ஆக்கி வைப்பாயாக.” (இமாம் அஹமத் ரஹ்மதுல்லாஹி அலைஹி)
இந்த அடிப்படையில் அதிகாலையில் எழுந்து ஃபஜ்ர் தொழுதுவிட்டு நாம் உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்வதற்கு மிகச் சிறந்த நேரம் அதிகாலைப் பொழுது என்று இன்றைய உடலியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
குறைந்த அமலானாலும் நிரந்தரமாகச் செய்யப்படும் அமல்களையே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விரும்புகின்றார்கள். அதுபோல் குறைந்த நேரமானாலும் நிரந்தரமாகச் செய்யப்படும் உடற்பயிற்சிதான் உடலுக்கு நல்லது என்று இன்றைய மருத்துவ வல்லுனர்கள் கூறுகிறார்கள்.
இஸ்லாம் வலியுறுத்தியுள்ள மிக முக்கிய வணக்கமாகிய தொழுகையின் அசைவுகளிலும், அதன் வெவ்வேறு நிலைகளிலும் மனித உடலுக்கு சிறந்த பயன்கள் ஏற்படுகின்றன என்பது இன்று நிரூபணமாகியுள்ளது. எனவே தொழுகையை நிதானமாக, அதன் ஒவ்வொரு இருப்பையும் முழுமையாகச் செய்தால் அதுவே நல்ல உடற்பயிற்சியாக அமையும்.
அத்தோடு இஸ்லாம் அனுமதித்த, ஆர்வமூட்டிய வழிகளில் உடற்பயிற்சிகளை மேற்கொள்வதே நமது உடலுக்குப் பாதுகாப்பானதாகும்.
ஒரு காலகட்டத்தில் உலகத்திற்கே தன் அறிவையும், ஆற்றலையும் வாரி வழங்கிய சமுதாயம், இவ்வுலகையே கட்டி ஆண்ட ஒரு சமுதாயம் இன்று தான் அறிவு பெறுவதற்காகவும், தம் வாழ்வுரிமைக்காகவும் மாற்றாரிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை கேட்கும் அளவிற்கு பரிதாப நிலையில் உள்ளதை நம் கண்கூடாகக் காண்கிறோம்.
உலக முஸ்லிம்களின் இன்றைய நிலையை சற்று ஏறிட் பார்ப்போமானால் அவர்களுக்கெதிரான அநீதிகளும், கொடுமைகளும், எங்கும் கட்டவிழ்த்து விடப்பட்ட போர்ப்பிரகடனங்களும் கண்கூடாகத் தெரியும்.
முஸ்லிம்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு; அவர்களை ஒட்டுமொத்தமாக நசுக்கிய போதிலும் கேட்பதற்கு நாதியற்ற சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறது. எண்ணிக்கையில் ஐம்பதிற்கும் மேற்பட்ட இஸ்லாமிய நாடுகளும், 150 கோடிக்கும் மேற்பட்ட முஸ்லிம்களும் இவ்வுலகில் வாழ்ந்து கொண்டு இருக்கின்ற போதிலும் இத்தகைய அவல நிலைக்கு என்ன காரணம்?
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
”ஒரு காலம் வரும். அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதை நோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.”
அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள்: ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ?”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”இல்லை. மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள். ஆனால் வெள்ளத்தின் நுரை போல ஆகி விடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்’ வந்துவிடும்.”
அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்’ என்றால் என்ன?”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள்: ”இவ்வுலகத்தின் மீது அதிகமான பற்றும், மரணத்தை அஞ்சுவதும்.”வெள்ளத்தின் நுரை போல என்பது பலஹீனத்தைக் குறிக்கும். ஆகையால் அனைத்து விதமான பலஹீனங்களையும் நாம் களைய வேண்டும். அனைத்து விதமான பலங்களையும் நாம் பெற வேண்டும்.
MSAH
நன்றி : விடியல் வெள்ளி, டிசம்பர் 2013