பாவம் செய்த பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக்கூடாதா?
அகிலங்களின் இரட்சகனாகிய அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் உரித்தானது!
இஸ்லாமிய அறிஞர் ஒருவரின் கூற்று!
“பாவிகள் பிற பாவிகளுக்கு அறிவுரை கூறக் கூடாது’ என்றிருந்தால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பிறகு ஒருவரும் இவ்வுலகில் அழைப்பு பணி செய்ய இயலாது!”
ஆம். நிதர்சனமான உண்மை!
அல்லாஹ்வின் ஏவல், விலக்கல்களுக்கு கட்டுப்படுவதில் யாருமே தவறிழைக்காமல் இருக்க முடியாது. மறதியின் காரணமாகவோ அல்லது சோம்பலின் காரணமாகவோ அல்லது அலட்சியமாகவோ ஏதாவது ஒருவகையில் நாம் இறைவனின் கட்டளைகளை மீறியவர்களாகவே இருக்கிறோம். அனைவருக்கும் இந்த நிலை இருக்கிறது. குறைபாடு இல்லாமல் மனிதர்களில் யாரும் இருக்க இயலாது! ‘நான் எந்த பாவமும் செய்யாதவன்’ என எவரும் கூற முடியாது!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“ஆதமின் மகன் ஒவ்வொருவரும் பாவம் செய்யக் கூடியவர்களே. அவர்களில் சிறந்தவர்கள் யாரெனில் பாவம் செய்ததை எண்ணி வருந்தி மன்னிப்புத் தேடுகிறவர்கள் ஆவர்.” (திர்மிதீ 2499)
எனவே, தவறுகள், பாவங்கள் செய்வது மனித இயல்பு! மனிதர்கள் தாம் செய்கின்ற பாவங்களுக்காக தன்னிடம் பாவமன்னிப்புக் கோருவதை அல்லாஹ் விரும்புகின்றான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“என் உயிர் எவன் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை விட்டுவிட்டு வேறு மக்களைக் கொண்டு வருவான். அவர்கள் பாவம் செய்த நிலையில் அவனிடம் பிரார்த்திப்பார்கள், மன்னிப்புக் கேட்பார்கள்.” (ஸஹீஹ் முஸ்லிம் 6621)
மேற்கண்ட ஹதீஸ்கள் விளங்குவது என்னவென்றால், பாவம் செய்பவனாக மனிதன் படைக்கப்பட்டிருக்கின்றான்! ஆயினும் அவர்கள் தாம் செய்த பாவங்களுக்காக மனம் வருந்தி அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரி அதிலிருந்து விடுபடும் போது அதை அல்லாஹ் விரும்பி மனிதர்களில் சிறந்தவர்களாக அவர்களை ஆக்குகின்றான் என்பதை அறியலாம்!
வரம்புமீறி பாவம் செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் – நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான் – நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்கக் கருணையுடையவன்” (என்று நான் கூறியதை நபியே!) நீர் கூறுவீராக. (அல்-குர்ஆன் 39.53)
மானக்கேடான செயல்களைச் செய்தவர்களையும் அல்லாஹ் மன்னிக்கின்றான்!
ஒருவரின் தவறுகளோ, பாவங்களோ, குற்றங்களோ மனிதர்களின் பார்வைக்கு பாரதூரமாகத் தோன்றி மன்னிக்கத் தகுதியற்றவையாகவும் தெரியலாம். ஆனால், அத்தகைய பாவம் செய்தவர்கள் கூட அளவற்ற அருளாளனின் மீது நம்பிக்கைக் கொண்டு அவனிடம் தவ்பா செய்து மீளும் போது அல்லாஹ் அவர்களின் பாவங்களை மன்னிக்கப் போதுமானவனாக இருக்கின்றான்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“நம் வசனங்களை நம்பியவர்கள் உம்மிடம் வந்தால், “ஸலாமுன் அலைக்கும் (உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக)” என்று (நபியே!) நீர் கூறும், உங்கள் இறைவன் கிருபை செய்வதைத் தன் மீது கடமையாக்கிக் கொண்டான்; உங்களில் எவரேனும் அறியாமையினால் ஒரு தீமையைச் செய்து விட்டு அதற்குப் பின், பாவத்தை விட்டும் திரும்பி, திருத்திக் கொண்டால், நிச்சயமாக அவன் (அல்லாஹ்) மன்னிப்பவனாகவும், மிக்க கருணையுடையவனாகவும் இருக்கின்றான்.” (அல்-குர்ஆன் 6:54)
“தவிர, மானக் கேடான ஏதேனும் ஒரு செயலை அவர்கள் செய்துவிட்டாலும், அல்லது (ஏதேனும் பாவத்தினால்) தமக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அவர்கள் (மனப்பூர்வமாக) அல்லாஹ்வை நினைத்து தங்கள் பாவங்களுக்காக மன்னிப்புத் தேடுவார்கள்; அல்லாஹ்வைத் தவிர வேறு யார் பாவங்களை மன்னிக்க முடியும்? மேலும், அவர்கள் அறிந்து கொண்டே தங்கள் (பாவ) காரியங்களில் தரிபட்டிருந்து விடமாட்டார்கள்.” (அல்-குர்ஆன் 3:135)
“வரம்பு மீறி பாவம் செய்த பாவிகளைக் கூட அல்லாஹ் மன்னிக்கிறான்” எனும் போது, நமது சகோதர முஸ்லிம்கள் பாவம் செய்ததாக கூறி, ‘அவர்கள் செய்ததாக கருதப்படும்’ பாவச்செயல்களை பொதுவெளியில் பகிரங்கப்படுத்தி அவர்களை இழிவுபடுத்திக் கேவலப்படுத்துவதை எப்படி சரிகாண முடியும்?
“ஒருவர் தம் சகோதர முஸ்லிமைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக்குப் போதிய சான்றாகும்!” (முஸ்லிம் 5010)
என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்திருப்பபதை நாம் மறந்துவிட்டோமா?
கொலைக் குற்றவாளிகளைக் கூட இறைவன் மன்னிப்பான்!
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
பனூ இஸ்ராயீல்களின் சமுதாயத்தில் ஒரு மனிதர் இருந்தார். அவர் தொண்ணூற்றொன்பது மனிதர்களைக் கொன்று விட்டிருந்தார். பிறகு (தன் குற்றங்களுக்காக மனம் வருந்தி, தனக்கு மன்னிப்புக் கிடைக்குமா என்று) விசாரித்தபடி, “(எனக்குப்) பாவ மன்னிப்புக் கிடைக்குமா?” என்று ஒரு பாதிரியாரிடம் வந்து கேட்டார்.
அந்தப் பாதிரியார், “கிடைக்காது” என்று கூற, அவரையும் அம்மனிதர் கொன்றுவிட்டார். பிறகு, (மீண்டும் மனம் வருந்தி) விசாரிக்கலானார். அப்போது ஒரு மனிதர், “(நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ!” என்று அவருக்குச் சொன்னார். (அந்த ஊரை நோக்கி அவர் சென்றபோது பாதி வழியில்) மரணம் அவரைத் தழுவியது. (மரணத் தருவாயில்) அவர் தன் நெஞ்சை அந்த ஊர் இருக்கும் திசையில் சாய்த்துக் கொண்(டே இறந்து விட்)டார்.
அப்போது அல்லாஹ்வின் கருணையைப் பொழியும் வானவர்களும் அல்லாஹ்வின் தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது என்று) சச்சரவிட்டுக் கொண்டனர். உடனே அல்லாஹ் அதை நோக்கி, “நீ நெருங்கி வா!” என்று (அவர் செல்லவிருந்த ஊருக்கு) உத்திரவிட்டான். இதை நோக்கி, “நீ தூரப் போ!” என்று (அவர் வசித்து வந்த ஊருக்கு) உத்திரவிட்டான்.
பிறகு, “அவ்விரண்டுக்கு மிடையே உள்ள தூரத்தைக் கணக்கெடுங்கள்” என்று (வானவர்களுக்குக்) கூறினான். (அவ்வாறே கணக்கெடுத்த போது) செல்ல விருந்த ஊருக்கு (அவர் வசித்து வந்த ஊரை விட ஒரே) ஒரு சாண் அளவிற்கு அவர் (உடைய உடல்) சமீபமாக இருந்த காரணத்தால் அவருக்குப் பாவ மன்னிப்பு வழங்கப்பட்டது. இதை அபூ சயீத் அல்குத்ரீ ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். (ஸஹீஹுல் புகாரீ 3470)
ஸஹீஹ் முஸ்லிமின் அறிவிப்பில்,
“அம்மனிதர் நல்லோர்களின் ஊருக்கு ஒரு சாண் அளவு நெருக்கமாக இருந்தான். எனவே அவனை அந்த மக்களைச் சேர்ந்தவனாகக் கணக்கிடப்பட்டது” என்றும், அவனது நெஞ்சு அதை நோக்கியதாக இருந்தது என்றும் உள்ளது. (2716)
பாவங்களிலேயே மாபெரும் பாவமாகிய இணைவைத்தலையே அல்லாஹ் மன்னிக்கின்றான்!
“நிச்சயமாக அல்லாஹ் மூவரில் மூன்றாமவன் என்று கூறியவர்கள் காஃபிர்களாக (நிராகரிப்பவர்களாக) ஆகிவிட்டார்கள்; ஏனென்றால் ஒரே இறைவனைத் தவிர வேறு நாயன் இல்லை; அவர்கள் சொல்வதை விட்டும் அவர்கள் விலகவில்லையானால் நிச்சயமாக அவர்களில் காஃபிரானவர்களை துன்புறுத்தும் வேதனை கட்டாயம் வந்தடையும். இவர்கள் அல்லாஹ்வின் பக்கம் திரும்பி தவ்பா செய்து, அவனிடம் மன்னிப்புத் தேடமாட்டார்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும் பெருங் கருணையாளனாகவும் இருக்கிறான்.” (அல்-குர்ஆன் 5:73-74)
காஃபிர்களைவிட மோசமான, நரகத்தின் அடித்தட்டில் தண்டனைப் பெறக்கூடிய நயவஞ்சகர்களைக் கூட இறைவன் மன்னிப்பதாகக் கூறுகின்றான்!
“நிச்சயமாக இந்நயவஞ்சகர்கள் நரகத்தின் மிகவும் கீழான அடித் தளத்தில்தான் இருப்பார்கள்; அவர்களுக்கு உதவியாளராக எவரையும் நீர் காண மாட்டீர். யார் மன்னிப்புக் கேட்டு சீர்திருந்தி, அல்லாஹ்வை (தம் நற்செய்கைகள் மூலம்) கெட்டியாகப் பிடித்து, தங்களுடைய சன்மார்க்கத்தை அல்லாஹ்வுக்காகத் தூய்மையாக்கியும் கொண்டார்களோ அவர்கள் முஃமின்களுடன் இருப்பார்கள்; மேலும் அல்லாஹ் முஃமின்களுக்கு மகத்தான நற்கூலியை அளிப்பான்.” (அல்-குர்ஆன் 4:145-146)
நேற்றுவரை குஃப்ருகளில் உழன்றுக் கொண்டு காஃபிர்களாக இருந்தவர்கள் சத்திய இஸ்லாத்தை ஏற்று, இன்று இஸ்லாமிய அறிஞராகவும் முஸ்லிம்களுக்கும் முஸ்லிமல்லாவர்களுக்கும் சிறந்த பயான் செய்கின்ற சிறந்த தாயீக்களாகவும் இருக்கவில்லையா?
ஏன்! சத்திய சஹாபாக்களில் பெரும்பாலானோர் கூட இணைவத்தவர்களாக இருந்து தானே இஸ்லாத்தை ஏற்று பிறருக்கும் இஸ்லாத்தை எத்தி வைத்தனர்! இந்நிலையில், முஸ்லிமாக இருக்கும் ஒருவர் பாவம் செய்துவிட்டார் என்பதற்காக அவரின் தஃவாவை முற்றிலுமாக ஒதுக்குவது என்பது எவ்வாறு ஏற்புடையதாகும் சகோதரர்களே? நாம் சிந்திக்க வேண்டும்!
எனவே, மேற்கண்ட ஆதாரங்களின் அடிப்படையில் நாம் விளங்குவது என்னவென்றால்,
oo ஆதமின் மக்களில், ‘பாவம் செய்யாதவர்கள்’ என யாரும் இல்லை! அவர்களின் பாவச்செயல்களில் வேண்டுமானால் அவைகள் சிறியதாகவோ அல்லது பெரியதாகவோ இருக்கலாம்!
oo செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, தவ்பா செய்தால் ‘வரம்பு மீறி பாவம் செய்தவர்களையும்’ மன்னிப்பவன் இறைவன்!
oo செய்த பாவத்திற்கு மனம் வருந்தி, தவ்பா செய்தால் மானக் கேடான செயல்களைச் செய்தவர்கள், இணை வைத்தவர்கள், நயவஞ்சகர்கள் ஆகியோர்களைக் கூட மன்னிக்க கூடியவன் அல்லாஹ்!
இயல்பாகவே பாவம் செய்யும் நம்மை நோக்கித் தான் ‘தஃவா செய்யுமாறு’ அல்லாஹ் கட்டளையிட்டிருப்பதை அறியலாம்!
அல்லாஹ் கூறுகின்றான்:
“காலத்தின் மீது சத்தியமாக. நிச்சயமாக மனிதன் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆயினும், எவர்கள் ஈமான் கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து, சத்தியத்தைக் கொண்டு ஒருவருக்கொருவர் உபதேசம் செய்து, மேலும் பொறுமையைக் கொண்டும் ஒருவருக்கொருவர் உபதேசிக்கிறார்களோ அவர்களைத் தவிர (அவர்கள் நஷ்டத்திலில்லை).” (அல்-குர்ஆன் 103:1-3)
‘முஃமினான ஆண்களும், முஃமினான பெண்களும் ஒருவருக்கொருவர் உற்ற துணைவர்களாக இருக்கின்றனர், அவர்கள் நன்மையை ஏவுகிறார்கள், தீயதை விட்டும் விலக்குகிறார்கள், தொழுகையைக் கடைப்பிடிக்கிறார்கள், (ஏழை வரியாகிய) ஜகாத்தை (முறையாக)க்கொடுத்து வருகிறார்கள், அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் வழிப்படுகிறார்கள், அவர்களுக்கு அல்லாஹ் சீக்கிரத்தில் கருணை புரிவான் -நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.” (அத்தவ்பா 9: 71).
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குப் பின் ‘நன்மையை ஏவி, தீயவைகளைத் தடுக்கும் பணியை’ அல்லாஹ் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உம்மத்தினர்களாகிய ‘நம் மீது’ விதித்திருக்கின்றான். நம்மில் பாவம் செய்யாதவர்கள் என யாருமே இருக்க முடியாது!
எனவே, இயல்பாகவே பாவம் செய்பவர்களாகிய நாம், இன்னொரு சகோதர முஸ்லிமைப் பார்த்து அவர் செய்ததாக தாம் கருதும் ஒரு பாவச்செயலைக் குறிப்பிட்டு, அப்படியே அவர் அந்தப் பாவத்தைச் செய்திருந்தாலும் கூட, அதற்காக அவர் அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டாரா? இல்லையா? அந்தப் பாவத்தை அல்லாஹ் மன்னித்துவிட்டானா? இல்லையா? என்று உங்களுக்குத் தெரியாத நிலையில், அதை பகிரங்கப்படுத்தி, அவர்களைக் கேவலப்படுத்துவதும், அவர்கள் தஃவா செய்கின்ற போது அவர்களின் தஃவாக் களத்திற்குச் சென்று, (அவைகள், நேரடி பயானாகவோ அல்லது இணைய தளமாகவோ அல்லது சோசியல் மீடியாவாகவோ இருக்கலாம்) அவர்களின் பாவச் செயலைக் குறிப்பிட்டு, அவர்கள் செய்கின்ற தஃவாவுக்கு இடையூறு செய்வதும் மார்க்கத்திற்கு முரணானதும், அல்லாஹ் மன்னித்து விடுவதாக கூறியிருக்கின்ற பாவங்களை அல்லாஹ் மன்னிக்காத குற்றம் போல நாம் கருதி, அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவதற்கு சமமாகும்!
இன்றைய காலக் கட்டத்தில், தஃவா களத்தில் இருக்கும் ஏகத்துவவாதிகள் அல்லாஹ்வைப் பற்றிய அச்ச உணர்வு சிறிதும் இல்லாதவர்களாக இத்தகைய தீய செயல்களை பகிரங்கமாக செய்வதைப் பார்க்கிறோம்.
அல்லாஹ் நம்மை இத்தகைய தீய செயல்களிலிருந்து பாதுகாப்பானாகவும்!
ஆயினும், தஃவா களத்தில் இருப்பவர்கள், பெரும்பாவங்களை விட்டும் தவிர்ந்தவர்களாகவும் வெளிப்படையான, மானக் கேடானவற்றையும் விட்டு தவிர்ந்திருப்பது மிகவும் அவசியம்! மக்களிடம் அவர்களின் தஃவா சென்றடைவதற்கு இது மிக முக்கிய காரணியாகவும் விளங்குகிறது!
தாம் ஒரு பாவத்தில் உழன்றுக் கொண்டே மற்றவர்களுக்கு ‘அதைச் செய்யாதே’ என்று அறிவுரை கூறுவதும், ‘தாம் செய்யாத நல்லவைகளை மற்றவர்களுக்கு செய்யுமாறு’ அறிவுரை வழங்குவதும் மற்றவர்களிடம் ஏற்புடையதாக இருக்காது! மாறாக ‘முதலில் நீ அதைப் பின்பற்று’ என்ற கேலிக்கும், கிண்டலுக்கும் உள்ளாக நேரிடும்.
மேலும், தாம் செய்யாத ஒன்றை பிறருக்கு செய்யுமாறு கூறுவது, அல்லாஹ்விடம் வெறுப்பிற்குரியதாக இருக்கிறது என அல்லாஹ் திருமறையில் கூறுவதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
“ஈமான் கொண்டவர்களே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததை நீங்கள் கூறுவது அல்லாஹ்விடம் பெரிதும் வெறுப்புடையதாக இருக்கிறது.” (அல்-குர்ஆன் 61:2-3)