தொழுகையும் உள்ளச்சமும்
CMN SALEEM
நாம் இந்த மாத இதழில் பார்க்கவிருப்பது خشوع வும் தொழுகையும் எவ்வாறு பிணைக்கப்பட்டிருப்பது என்பதைத்தான். பொதுவாக எந்த அரபி வார்த்தையை நாம் எடுத்துக்கொண்டாலும் அவ்வார்த்தைக்கு இதுதான் பொருள் என்று நம்மால் எந்த மொழியிலும் சரிவர கூற முடியாது.
அது போல خشوع என்ற இந்த அரபி வார்த்தைக்கும் ‘உள்ளச்சம்’ அல்லது ‘கட்டுப்படுதல்’ என்று பொழிபெயர்த்தால், போதாது. ஆக முதலில் நாம் خشوع என்ற வார்த்தைக்கு இஸ்லாமிய அறிஞர்களால் தரப்படும் விளக்கத்தை பார்ப்போம்.
இமாம் ஜுனைத் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள் : خشوع என்பது மறைவானவற்றை அறிந்த ஒருவனிடம் தமது இதயத்தை பணிய வைப்பதாகும்.
இமாம் இப்னுல் கையும் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் விளக்கம் : خشوع என்பது அல்லாஹ்வைப் பற்றி, அவனுடைய பெயர்களைப் பற்றி, அவனுடைய பண்புகளைப் பற்றி, அவனுடைய மகத்துவத்தை பற்றி அறிவதுனாலும்; அவனை வணங்கி, அவன் மீது அன்பு செழுத்தி, அவனால் பிரமிப்பு அடைவதுனாலும்; மேலும் தன்னைப் பற்றி தான் செய்த பாவங்களைப் பற்றி தன்னுடைய பலவீனம் பற்றி அறிவதனால், நாம் அவன் முன் நிற்கும் போது ஏற்படும் உதவியற்ற உணர்வு நமக்கு பணிவை தரும். இதுவே خشوع வாகும்.
21 ஆம் நூற்றாண்டின் தலைசிறந்த இஸ்லாமிய உளவியல் துறை பேராசிரியராக போற்றப்படும் ‘மாலிக் பத்ரி’ என்ற அறிஞர் ஆங்கிலத்தில் தான் எழுதிய ‘CONTEMPLATION’ என்னும் புத்தகத்தின் முன்பக்கத்திலே خشوع வை பற்றி இவ்வாறு குறிப்பிடுகிறார்கள்
THIS DESCRIBES SOME UNIQUE SUBTLE INNER EMOTION
THIS TERM REFERS TO A STATE OF TOTAL HUMILITY TO THE EXTENT OF BECOMING MOTIONLESS, SILENT, FEARFUL AND SUBSERVIENT
IT CARRIES THE SENTIMENT OF EMOTIONAL APPRECIATION OF THE
GREATNESS OF GOD MIXED WITH LOVE ,SUBMISSION AND FEAR
இது ஒரு தனித்துவம் மிக்க நுட்பமான உள்ளுணர்வாகும் இவ்வுணர்வு நம்மை அசையவிடாமல், பேசவிடாமல் அச்சத்தோடு கட்டுப்படவைத்து நம்மை முழுமையாக சரணடைய வைக்கும்.
இறைவனின் மகத்துவத்தை அன்பு, கட்டுப்படுத்தல், அச்சம் என்ற மூன்று உணர்வுகளைக் கொண்டு உணர்வுப்பூர்வமாக அதை பாராட்ட வைக்கும்.
அல்குர்ஆனை அங்கில மொழியில் மொழிபெயர்த்த ஒருவரான அல்லாமா ‘யூசுஃப் அலி’ அவர்கள் خشوع வை பற்றி இவ்வாறு விளக்கம் தருகிறார்கள் : என்னைப் பற்றிய அந்தரங்கங்களை அறியாத நிலையில் இவ்வுலகில் எனக்கு மதிப்பும் மரியாதையும் உண்டு ஆனால்…. இறைவனின் முன்னால் எனது மதிப்பு என்ன ? என்ற கவலையுணர்வு.
உலகில் எனக்கு மிகுந்த செல்வாக்கு உண்டு ஆனால் இறைவனுக்கு முன்னால் ?
இறைவனுக்கு முன்னால் எனது ஆற்றலும் அதிகாரமும் எவ்வளவு ? அதுவும் இறைவனின் உதவியை நீக்கி விட்டுப் பார்த்தால் எனது சக்தி என்பது என்ன? ஒன்றுமே இல்லை என்ற நிதர்சனமான உண்மையை அறிந்த நிலை.
நாம் வைக்கின்ற கோரிக்கைகளை அவன் ஒருவனாலேயே நிறைவேற்ற முடியும். நம்மால் ஒன்றுமே செய்ய முடியாது என்ற இயலாமை உணர்வே خشوع ஆகும்.
மேற்கூறப்பட்ட அனைத்து விளக்கங்களையும் வைத்து خشوع என்பது விழிப்புணர்வு {awareness}, அடக்கம், பணிவு {humbleness} அமைதி {calm}, மரியாதை {dignity}, சரணடைவது {surrender} ஆகிய பொருள்களை உள்ளடக்கியதாகக் காணலாம்.
ஒட்டுமொத்தமாக خشوع என்பது நான் என்ற {ஈகோ} அகங்காரத்தைப் போக்கி பணிவை நம்மிடையே மலரச் செய்யும். இதைக் கற்றுத் தருவதற்கு அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு உன்னதமான வணக்கமே தொழுகையாகும்!
சரி خشوع விற்கும் تقوى விற்கும் என்ன வித்தியாசம்? அதன் நுணுக்கத்தை நாம் இங்கே காண்போம்.
خشوع ஒரு நற்செயலை செய்வதற்கு நம்மை ஊக்குவிக்கும்.
تقوى ஒரு தவறான செயலை செய்வதிலிருந்து நம்மை தடுக்கும்.
خشوع அல்லாஹ்வின் நேர்வழியைப் பெற்று, நம் அறிவிற்கு நம்மை உடனடியாக கட்டுப்பட வைக்கும்.
تقوى தவறிலிருந்து நம்மைத் தடுத்து தூய்மையான இதயத்தை பெற உதவும்.
இன்னும் சற்று தெளிவாக வித்தியாசத்தை புரிந்துகொள்ள இந்த ஹதீஸை நாம் ஆதாரமாக எடுத்துக்கொள்ளலாம்.
உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உபை இப்னு கஅபு ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடத்திலே “தக்வா” என்றால் என்ன? என்று கேட்டார்கள். அதற்கு, உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “நீங்கள் முட்கள் நிறைந்த மரங்கள் அடர்ந்த காட்டில் நடந்து செல்வதுண்டா?” என்று கேட்டார்கள்.
அதற்கு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “ஆம்” என்றார்கள். “எப்படிக் கடந்து சென்றீர்கள்?” சொல்லுங்கள்! என உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களிடம் கேட்டார்கள்.
அதற்கு, உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “உடல் மற்றும் உடையைப் பாதுகாத்தவாறு, வழியையும் கடக்க வேண்டும். அதே நேரத்தில் உடலிலோ, உடையிலோ முள்ளும் தைத்து விடக் கூடாது என மிக கவனத்தோடும், பேணுதலோடும் ஒவ்வொரு எட்டாக எடுத்து வைத்து நடப்பேன்” என்று பதிலளித்தார்கள்.
அப்போது, உபை ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் “இவ்வாறு தான் இறையச்சமும்” என்று பதிலளித்தார்கள்.
{ தஃப்ஸீர் இப்னு கஸீர்}
நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்களோடு தக்வாவை இணைத்துக் கூறும் இறைவன் தொழுகையோடு மட்டும் خشوع வை இணைத்துக் கூறுகிறான் காரணம்? {பார்க்க 2:183; 2:197; 23: 2} நோன்பு, ஹஜ் போன்ற வணக்கங்கள் நம்மை சில விஷயங்களிலிருந்து தடுக்கும். ஆனால் தொழுகையில் நம்மை கட்டுப்படவைக்கும் செயல்களே அதிகம்.
உதாரணமாக : ஏன் இரண்டு ஸஜ்தா செய்யவேண்டும் என்று கேள்வி எல்லாம் கேட்க இயலாது. செவியேற்ற பின் கட்டுப்படவேண்டும் . ஆகவே தொழுகை خشوع வோடு இணைக்கப்பட்டுள்ளது.
خشوع நம்மை கேள்வி கேட்காமல் இறைக்கட்டளைக்கு கட்டுப்பட வைக்கும்.
சரி خشوع வை எப்படி தொழுகையில் கடை பிடிப்பது? ஒரு முறை உமர் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரு மனிதர் தொழுகையின் போது தமது தலையை நன்கு குனிந்தவாறு தொழுது கொண்டிருந்ததைக் கண்டு, அவரை அழைத்து “உமது தலையை உயர்த்துவீராக ஏனென்னில் خشوع என்பது கழுத்தில் உள்ளதல்ல இதயத்தில் உள்ளதாகும்” என்று கூறினார்கள். {பைஹகி}
ஆக தொழுகையில் خشوعவை கடைபிடிப்பது நம் உள்ளத்தோடு தொடர்புடையது மாறாக செய்கைகளில் மட்டும் அல்ல.
இதே خشوع இல்லாவிட்டால் விளைவு என்ன ?
இந்த வசனத்தைப் படியுங்கள். மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவே யிருக்கும். {2:45}
இப்போது நாம் خشوعவை எவ்வாறு வளர்த்துக்கொள்வது என்பதைப் பற்றி பார்ப்போம் : இதற்கு இரண்டு வழிகள் அவசியம்:
1. மறுமையை நினைவுகூர்வது :
(உள்ளச்சமுடைய) அவர்கள்தாம், “திடமாக (தாம்) தங்கள் இறைவனைச் சந்திப்போம்; நிச்சயமாக அவனிடமே தாம் திரும்பச்செல்வோம்” என்பதை உறுதியாகக் கருத்தில் கொண்டோராவார். {2:46}
2.அல் குர்ஆனோடு நம் தொடர்பை அதிகப் படுத்திக் கொள்வது :
ஈமான் கொண்டார்களே அவர்களுக்கு, அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள் – முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம், (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக – பாவிகளாக ஆகிவிட்டனர். {57:16}
அல்குர்ஆனினால் மலையும் நடுங்கும் : நாம் ஒரு மலையின் மீது இந்த குர்ஆனை இறக்கியிருந்தோமானால், அல்லாஹ்வின் பயத்தால், அது நடுங்கிப் பிளந்து போவதாகக் கண்டிருப்பீர்; மேலும், மனிதர்கள் சிந்திக்கும் பொருட்டு இத்தகைய உதாரணங்களை நாம் அவர்களுக்கு விளக்குகிறோம். {59:21}
எச்சரிக்கை : இந்த சமுதாயத்திலிருந்து முதன் முதலில் உள்ளச்சம் எடுக்கப்பட்டுவிடும். இச்சமுதாயத்தில் உள்ளச்சமுடைய ஒருவரைக் கூட நீர் காணமாட்டீர் என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூதர்தா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். [தப்ரானி}
இதை விட்டு நம்மை பாதுகாத்துக்கொள்ள நபி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு துஆ வை கற்றுதந்துள்ளார்கள் : இறைவா! பயன் தராத கல்வியை விட்டும், உள்ளச்சமில்லாத இதயத்தை விட்டும், திருப்திபெறாத நஃப்ஸை விட்டும், எற்றுக்கு கொள்ளப்படாத பிரார்த்தனையை விட்டும் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் ! {நஸயீ அபூ தாவூத் }
இப்போது خشوع விற்கும் வாழ்க்கையின் வெற்றிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி பார்ப்போம். ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்,அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள். (23:1-2)
خشوع ‘நான்’ என்ற அகங்கார எண்ணத்தை ஒட்டுமொத்தமாக அழித்து பணிவை பெறச்செய்யும் என்பதை நாம் முன்னதாகவே பார்த்தோம். இந்தப் பணிவு நமது வாழ்க்கைக்கு வெற்றியை பெற்று தரும்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : யார் பணிவை கொண்டுள்ளாரோ அவரை நிச்சயம் அல்லாஹ் உயரச் செய்வான். {முஸ்லிம்}
நம் அனைவருக்கும் முன்மாதிரியாக திகழும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எவ்வாறு பணிவோடு செயல்பட்டார்கள் என்பதை காண்போம்.
உதாரணம் 1 :
ஒரு தடவை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு கூறினார்கள : நபியாகவும் அரசராகவும் இருக்க விருப்பமா? அல்லது, நபியாகவும் அல்லாஹ்வின் அடிமையாகவும் இருக்க விருப்பமா ? என்று தேர்ந்தெடுக்கும் உரிமையை இறைவன் எனக்கு தந்தான் நான், நபியாகவும் அல்லாஹ்வின் அடிமையாகவும் இருப்பதையே தேர்வு செய்தேன். {தபரானி}
உதாரணம் 2 :
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாயிஃப் நகரத்தில் ஏகத்துவத்தை எத்தி வைத்ததால் கல்லடியாலும் சொல்லடியாலும் பெருந்துன்பம் பட்ட போது அல்லாஹ்விடம் அவனை ஒரு குறை கூட சொல்லாது, தமது பலவீனத்தை மட்டும் கூறி பிரார்த்தனை செய்த விதம் அவர்களின் பணிவிற்கு ஒரு எடுத்துக்காட்டு.
உதாரணம் 3 :
வெற்றியின் போதும் பணிவை வெளிப்படுத்துதல் : நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா வெற்றியின் பொது, தனது ஒட்டகையில் அமர்ந்தவாறு, இந்த மிகப் பெரும் வெற்றியைத்தந்த அல்லாஹ்வுக்கு நன்றியுணர்வுடன் பணிந்தவாறு தனது நெற்றி ஒட்டகத்தின் திமிலைத் தொட்டுவிடும் அளவு தலையை முன்னோக்கித் தாழ்த்தியவர்களாக மக்காவினுள் நுழைந்தார்கள்.
ஆக நாம் நம் வாழ்வின் அனைத்து கட்டங்களிலும் “நான் அல்லாஹ்வின் அடிமை” என்ற உணர்வுடன் பணிவோடு நடந்திட வேண்டும். குறிப்பாக அறிவை கற்கும் விஷயத்தில் பணிவு மிக அவசியம்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்களை கண்டபோது அவர்கள் இருவரும் கண்ட காட்சியை வைத்து ஹிள்ர் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கூறியதுலிருந்து நாம் பணிவை கற்றுக் கொள்ளலாம்.
“ஒரு குருவி தன அலகில் தண்ணீர் அள்ளியதை கண்டு, என் அறிவும், உங்கள் அறிவும், இன்னும் படைக்கப்பட்டவைகைளின் மொத்த அறிவை சேர்த்தாலும் இக்குருவியின் வாயிலுள்ள தண்ணீரை விட அதிகமானதல்ல” என்று கூறினார்கள். [புகாரி}
இவ்வாறு அல்லாஹ் நமக்கு தொழுகையின் மூலம் கற்றுத்தரும் خشوع கொண்டு, நம் வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் முன் பணிவை வெளிப்படுத்தி மக்களை மரியாதையோடு அணுகுவதால் வெற்றி பெற முடியும்!
source: http://www.samooganeethi.org/index.php/category/salim-articles/pathetic/item/1304