மது, மா பாவங்களின் அன்னை
மவ்லவி, முஹம்மது கான் பாகவி
இஸ்லாத்தில் முழு மதுவிலக்கு ஹிஜ்ரீ 8ஆம் ஆண்டு (கி.பி. 630) நடைமுறைக்கு வந்தது. சர்வசாதாரணமாக மது புழங்கிவந்த அக்கால அரபியரிடையே மதுவின் தீமைகளைத் தாமே உணர்ந்து கைவிடும் நிலையைக் கொண்டுவந்த பிறகு மதுவிற்கு முற்றாகத் தடை விதிக்கப்பட்டது.
மது தயாரிப்பு, விற்பனை, விநியோகம் என எல்லாவற்றுக்கும் தடைபோட்டது இஸ்லாம். மது அருந்த பயன்படுத்திவந்த பாத்திரங்களைக்கூட இனிமேல் தொடக்கூடாது என்று சிறிது காலம் தடை செய்தது. அறிவையும் நிதானத்தையும் இழக்கச்செய்து, கனவுலகில் மிதக்கவைத்து, நிஜத்தை மறக்கவைக்கும் கொடிய பானமே மது!
இதனாலேயே, குடிகாரன் மிருகத்தைப் போன்று நடந்துகொள்கிறான். தாய்க்கும் தாரத்திற்கும் வித்தியாசம் தெரிவதில்லை. தான் பெற்ற மகளையே புணர்கிறான். விபசாரம் செய்யத் தெரியாதவன், கொலைசெய்து பழக்கமே இல்லாதவன் குடித்துவிட்டால் எல்லாக் குற்றங்களையும் செய்யத் துணிந்துவிடுகிறான்.
கலீஃபா உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்ன முற்கால நிகழ்ச்சி ஒன்று உண்டு. வணக்கவழிபாட்டில் அதிகமாக ஈடுபட்டுவந்த ஒரு மனிதர் இருந்தார். ஒரு விலைமாது, அவரை அடைய விரும்பினாள். பணிப்பெண்ணை அனுப்பி, ஒரு வழக்கில் சாட்சியம் அளிக்க வேண்டும் என்று பொய்சொல்லி, அவரை அழைத்துவரச் சொன்னாள். (அவ்வழக்கின் நேரடி சாட்சியாக அவர் இருந்ததால், மறுக்காமல் வந்துவிடுவார் என்பது அவளுக்குத் தெரியும்.) அவ்வாறே பணிப்பெண்ணும் போய் அழைக்க, அவளுடன் அவரும் வந்துவிட்டார்.
ஒன்றுக்குள் ஒன்றாகப் பல அறைகள் கொண்ட ஒரு வீட்டிற்குள் நுழைய நுழைய அதன் வாயிலைத் தாழிட்டுக்கொண்டே இருந்தாள். இறுதியாக, அழகும் பொலிவும் மிக்க ஒரு மங்கையிடம் அவர் போய்ச்சேர்ந்தார். அவளுக்கு அருகில் ஒரு சிறுவன்; இன்னொரு பக்கம் மதுக்கிண்ணம். விலைமாது சொன்னாள்: சத்தியமாக! சாட்சியமளிக்க உம்மை நான் கூப்பிடவில்லை. என்னுடன் நீர் உறவுகொள்ள வேண்டும்! அல்லது இந்த மதுவை அருந்த வேண்டும்! அல்லது இச்சிறுவனைக் கொலை செய்ய வேண்டும்! (விபசாரம், கொலை ஆகியவற்றைவிட இது பரவாயில்லை என்று கருதினாரோ என்னவோ!) ஒரு கோப்பை மது ஊற்றிக்கொடு என்றார்.
அவளும் கொடுத்தாள். (போதை தலைக்கேற) இன்னும் கொடு! இன்னும் கொடு என்று கேட்டு வாங்கிக் குடிக்கலானார்! இறுதியில், அவளுடன் தவறான உறவு கொண்டது மட்டுமன்றி, அச்சிறுவனையும் கொலைசெய்து முடித்தார். இதைக் கூறியபோதுதான், உஸ்மான் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், “குடியைத் தவிர்த்துவிடுங்கள்! அது மா பாவங்களின் அன்னை” என்று குறிப்பிட்டார்கள். (நஸயீ)
இன்றும் இப்படித்தானே நடக்கிறது! பாலியல் பலாத்காரம் செய்பவன் குடித்துவிட்டே அதைச் செய்கிறான்; படுகொலை செய்பவன் குடித்திருக்கிறான்; திருட வந்தவன் குடித்துவிட்டே வருகிறான்…
குடியால் விளையும் தீமைகள்
1. குடியால் விளையும் தீமைகளிலேயே ஒரு முஸ்லிம் மிகவும் அஞ்ச வேண்டியது, குடிகாரன் இறைவனின் சாபத்திற்கு ஆளாவதுதான். அது மட்டுமல்ல; மது அருந்தும்போது அவனுடைய ஈமான் அவனைவிட்டு விலகிவிடுகிறது என்பது எவ்வளவு பெரிய துயரம்! ஒருகால் அதே நிலையில் அவன் இறந்துபோனால் என்னாவது? ஒருவர் மது அருந்தும்போது அவர் இறைநம்பிக்கையாளராக (முஃமினாக) இருந்துகொண்டு அருந்துவதில்லை –என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரீ)
இந்த நபிமொழிக்கு என்ன விளக்கம் அளித்தாலும் இதுதான் அதன் வெளிப்படையான பொருளாகும். மற்றொரு நபிமொழி கூறுவதைப் பாருங்கள்:
”மதுவையும் அதை அருந்துபவனையும் ஊற்றிக்கொடுப்பவனையும் விற்பவனையும் வாங்குபவனையும் பிழிபவனையும் பிழிந்துகொடுக்கச் சொல்பவனையும் எடுத்துச்செல்பவனையும் யாருக்காக எடுத்துச்செல்லப்படுகிறதோ அவனையும் அல்லாஹ் சபிக்கின்றான். அல்லது அவர்களுக்கெல்லாம் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்!” (அபூதாவூத்)
மறந்துவிடாதீர்கள்! போதைமருந்து கடத்தலும் இதில் அடங்கும். கலியுகம் என்பது இதுதானோ என்று எண்ணும் அளவுக்குக் குடி பெருத்துப்போயுள்ள இன்றைய நிலையில் பின்வரும் ஹதீஸைக் கவனியுங்கள்: (பயனுள்ள) கல்வி எடுபட்டுப்போவதும் அறியாமை அதிகமாகிவிடுவதும் விபசாரமும் குடியும் பெருத்துப்போவதும் உலக அழிவின் அடையாளங்களாகும். (புகாரீ)
“இவ்வுலகில் மது அருந்திவிட்டு, பாவமன்னிப்புக் கோரி திருந்தாத (நிலையில் இறப்ப)வனுக்கு மறுமையில் (சொர்க்க) மது தடுக்கப்படும்; அவனுக்கு அது புகட்டப்படாது”” என்றும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (முஸ்லிம்)
போதையில்லாத சொர்க்கத்தின் மது தடுக்கப்படும் என்றால், சொர்க்கத்தில் நுழைவதே தடுக்கப்படும் என்றுதான் பொருள். சொர்க்கத்தினுள் நுழைந்தால்தானே சொர்க்கத்தின் மது கிடைக்கும்!
மற்றொரு ஹதீஸ், குடியின் கொடுமையை இவ்வாறு சித்தரிக்கிறது: குடிகாரன், சிலையை வழிபாடு செய்கின்றவனைப் போன்றவன். (இப்னுமாஜா) 2. குடியால் ஏற்படும் அடுத்த பெரிய தீமை, வணக்க வழிபாடுகளில் ஈடுபாடு இல்லாமல் போவதுதான். திருக்குர்ஆன் கூறுகின்றது: மது மற்றும் சூதாட்டத்தின் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும் குரோதத்தையும் உருவாக்கவும், அல்லாஹ்வை நினைவுகூர்வதிலிருந்தும் தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். ஆகவே, நீங்கள் (அதிலிருந்து) விலகிக்கொள்வீர்களா? (அல்குர்ஆன் 5:91)
மது என்றால், போதை தரும் எல்லாம்தான். சாராயம், கள், விஸ்கி, பீர், ரம், போதை மருந்து, கஞ்சா…. என எதுவானாலும் தடை செய்யப்பட்ட ஹராம்தான். இந்நிலையில், போதை மருந்து கடத்தும் முஸ்லிம்களை என்ன சொல்வது? இந்த அக்கிரமத்தைச் செய்பவர் எப்படி ஒரு முஸ்லிமாக இருக்க முடியும்?
போதை தரும் ஒவ்வொன்றும் மது (கம்ர்)தான். போதை தரும் ஒவ்வொன்றும் ஹராமே! போதைப் பொருளை எவன் உட்கொள்கிறானோ அவனது நாற்பதுநாள் அதிகாலைத் தொழுகை மதிப்பிழந்துவிடும். அவன் மனம் வருந்தினால் அல்லாஹ்வும் மன்னிப்பான். திரும்பத் திரும்ப நான்காவது முறை அவன் குடித்தால், நரகவாசிகளின் உடம்பிலிருந்து வழியும் சீழையே அவனுக்கு அல்லாஹ் புகட்டுவான். (அபூதாவூத்)
குடியைக் கெடுக்கும் குடி
3. நல்லோருடனான நட்பு குடிகாரனுக்குக் கிடைக்காமல்போகும். குடிகாரனின் நண்பர்கள் யாராக இருப்பார்கள்? அவனுடைய பழக்க வழக்கங்கள் என்னவாக இருக்கும்? குடித்துவிட்டு சாக்கடையில் விழுந்துகிடக்கும் மனிதனைப் பார்த்து போவோர் வருவோருக்கு குமட்டல் ஏற்படுகிறதே!
அறிஞர்கள், நல்ல மனிதர்கள், கண்ணியமானவர்கள் போன்றவர்களின் உறவும் அவர்களுடனான தொடர்பும் குடிகாரனுக்கு எப்படிக் கிடைக்கும்? அவர்களே இவனிடம் நெருங்கிவந்தாலும் இவன் ஒதுங்கிப் போய்விடுவானே! பிறகு எப்படி குடிகாரன் காதில் நல்லுரைகள் விழும்? வாயில் நல்லவார்த்தைகள் வரும்? உன்னைக் கண்டு அசூசியாக நினைத்து நாலுபேர் விலகிப்போகிறார்களே! இதைவிட ஒரு கேவலமும் அவமானமும் வேறு உண்டா? உனக்கு ஸலாம் உண்டா? ஸலாமுக்குப் பதில் உண்டா? பரஸ்பர நலவிசாரிப்பு உண்டா? இது ஒரு வாழ்க்கையா?
4. குடிகாரன் குடும்பத்தில் செய்யும் அட்டூழியம் இருக்கிறதே! சொல்லி மாளாது. மனைவி மக்களை அடிப்பான். வீட்டுப் பொருட்களைப் போட்டு உடைப்பான். கொலை செய்யவும் தயங்கமாட்டான். தாயையே துன்புறுத்துவான். தந்தையை அவமரியாதை செய்வான். உறவுகளைப் புறக்கணிப்பான்.
உச்சகட்டமாக, பெற்ற மகளையே கற்பழிப்பான். இவன் ஒரு மிருகம் என்பதற்கு வேறு என்ன சான்று வேண்டும்? மிருகம்கூடப் பரிவோடு குட்டியை வளர்க்கிறதே! பாசம் காட்டுகிறதே! எதிரியிடமிருந்து காக்கிறதே! தீனி கொண்டுவந்து ஊட்டுகிறதே! இந்தப் பாவிக்கு அந்தக் கொடுப்பினைகூட இல்லையே!
தவறு செய்வது இவன். சந்தேகப்படுவான் மனைவியை! ஆசையோடு இரவை எதிர்பார்த்து, இன்பக் கனவில் மூழ்கியிருக்கும் இல்லாளைக் காக்கவைத்து, நடுச்சாமத்தில் வந்து கதவைத் தட்டி, தள்ளாடிவந்து அப்படியே படுக்கையில் விழுந்து சுயநினைவின்றி கிடக்கும் இவனிடம் அவள் என்ன சுகத்தை அனுபவிக்கமுடியும்? பிறகு எப்படி குடும்பம் உருப்படும்?
இவனுக்குப் பெண்ணைக் கொடுத்துவிட்டு, மகள் படும் துயரத்தைக் கண்டு பெண்ணின் தந்தையும் தாயும் தினமும் அனுபவிக்கும் மனஉளைச்சல் இருக்கிறதே! எழுத்தில் வராது. இவனைப் பெற்ற பாவத்திற்காக இவனுடைய பெற்றோர் புழுங்கிப் புழுங்கி உயிரையே விட்டுவிடுவர். இப்படி ஒரு ஜென்மமா?
பொருளாதாரச் சீரழிவு
5. குடிகாரன் தனக்கே சுமை! தன் வீட்டுக்கும் நாட்டுக்கும் சுமை. வேலைக்குப்போவதில்லை. போனாலும் சம்பளத்தை வீட்டில் கொடுப்பதில்லை. ஊதியம் பெற்ற கையோடு உயர்ந்த மது வகைகளைக் குடித்துவிட்டு வெறுங்கையோடு வந்து மனைவிக்கு அதிர்ச்சி கொடுப்பான். குடும்பச் செலவுக்கு அவள் என்ன செய்வாள்? தானே வேலை செய்வாள். அவள் கொண்டுவரும் பணத்தையும் அடித்துப் பறித்து குடித்தே அழிப்பான், குடிகாரக் கணவன்.
அது மட்டுமா? மனைவியின் நகைநட்டுகளை, வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களை, அரிசி, பருப்பு போன்ற உணவுப் பொருட்களைக்கூட விட்டுவைக்காமல் அள்ளிக்கொண்டுபோய், அல்லது திருடிச்சென்று விற்றுவிட்டுக் குடிப்பான்; குடிப்பான்; குடித்துக்கொண்டே இருப்பான். பெரும் பணக்காரன்கூட குடியால் தொழிலைத் தொலைக்கிறான்; வேலையை இழக்கிறான்; குடும்பச் சொத்தை அழிக்கிறான்.
வணிகம், நிறுவனம், தொழிற்சாலை ஆகியவை குடியால் கேட்பாரற்று, நாதியற்று நஷ்டத்திற்குமேல் நஷ்டம் ஆகி, அழிந்து நாசமாகின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் மாணவ மாணவியர்கூட இந்தப் பாழாய்ப்போன குடிக்கும் போதைப் பழக்கங்களுக்கும் அடிமைகளாகி படிப்பைப் பாழாக்கி, எதிர்காலத்தைத் தொலைத்து, பெற்றோரின் கனவில் மண்ணைப் போட்டுத் தாமும் அழிந்து, தம்மை நம்பியவர்களையும் அநியாயமாக அழிக்கின்றனர்.
பெற்றோரின் தள்ளாமை, சகோதரனின் படிப்பு, சகோதரியின் திருமணம்ஸ மொத்தத்தில் குடும்பத்தின் எதிர்காலமே ஒருவனின் குடியால் கேள்விக்குறியாகி நிற்கிறது என்றால், குடி எவ்வளவு கொடூரமானது! எண்ணிப்பாருங்கள்.
அற்பாயுசில் சாவு
6. நீண்டகாலம் வாழ வேண்டியவன் குடிப்பழக்கத்தால் அற்பாயுசில் சாவைத் தேடிக்கொள்கிறான் என்கிறது மருத்துவ உலகம். குடியால் ஏற்படும் நோய்கள் பயங்கரமானவை. அவற்றில் புற்றுநோயும் அடங்கும். குடியால் இருதயம், மூளை, குடல், கல்லீரல் ஆகிய உறுப்புகள் வெகுவாகப் பாதிக்கப்படுகின்றன.
ஆல்கஹால் (Alcohol) எனும் சாராயச்சத்து உயிருக்கே உலைவைக்கும் என்கிறார்கள். ஆல்கஹால் பயன்படுத்துவதால் வைட்டமின் A மற்றும் B, இரும்புச் சத்து ஆகியவற்றின் இழப்பு ஏற்படுகிறது. இரத்தத்தில் மதுவின் அளவு 100 மில்லி அளவைக் கடந்துவிட்டால், மூளையின் முகுளம் – அதாவது சுவாசம், இருதயத் துடிப்பு போன்றவற்றைக் கட்டுப்படுத்தும். மூளையின் கீழ்ப்பகுதியில் முடிச்சுப்போல் அமைந்துள்ள பகுதி – நேரடியாகப் பாதிக்கப்படும்.
இதனால் கைகால் நடுக்கம், தடுமாற்றம், நுட்பமான வேலைகள் ஆற்ற முடியாமை ஆகிய தொல்லைகள் ஏற்படும். தொடர்ந்து மது அருந்துவதால் ‘Rum Fits’ எனப்படும் வலிப்புநோய் உண்டாகும். ‘Paranoid State’ எனும் மூளைக்குழப்பம் ஏற்படும். இது ஒருவகை பைத்தியமாகும். இதனால் மனைவிமீது சந்தேகம், மக்கள்மேல் வெறுப்பு, எதைப் பார்த்தாலும் எரிச்சல் போன்ற குழப்பங்கள் நேரும். குடிப்பழக்கத்தால் குடற்புண் (Ulcer). மீளா மயக்கம் (Hapatic Coma) ஆகியன ஏற்பட வாய்ப்பு உண்டு.
இரைப்பை புற்று, கல்லீரல் புற்று ஆகியவற்றில் 85 விழுக்காடு மதுவால் ஏற்படுகிறதாம்! கள்ளச்சாராயத்தில் சேர்க்கப்படும் ‘மெதில் ஆல்கஹால்’ எனும் எரிபொருள் கல்லீரலில் கலப்பதால் ‘ஃபார்மாலிக்’ எனும் அமிலம் (Acid) சுரக்கிறது. இது 50 மில்லி அளவைத் தாண்டிவிட்டால் கண்பார்வையே போய்விடும். ஆக, மனைவி மக்களையும் ஈன்ற தாய் தந்தையையும் தவிக்க விட்டுவிட்டு, இளம் வயதிலேயே மரணத்தைத் தேடிக்கொள்ளும் கொடுமை மதுவால் நேரும். இது தேவைதானா? யோசியுங்கள்! செத்தபிறகாவது நிம்மதியா என்றால் அதுவுமில்லை. நரகம்தான் வரவேற்கும்!
சமூகமும் சட்ட ஒழுங்கும்
7. குடியால் குடிகாரன் மட்டும் கெடுவதில்லை. மற்றவர்களும் பாதிக்கப்படுகிறார்கள். சாலை விபத்துகளில் அதிகமானவை, குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதாலேயே நிகழ்கின்றன. அல்லது குடிகாரன் வாகனத்திற்குமுன் சுரணையின்றி வந்து விழுவதால் நேர்கின்றன. குடித்துவிட்டு மதியை இழந்து, சாலைகளில் கலகம் செய்வதாலும் அடிதடியில் ஈடுபடுவதாலும் சட்டஒழுங்கு சீர்குலைகிறது. அதை முன்னிட்டுச் சம்பந்தமே இல்லாத பலரும் பாதிக்கப்படுகிறார்கள்.
குடிப்பழக்கத்தால் மனித ஆற்றல் –குறிப்பாக இளைஞர்களின் சக்தி- வீணாகி, யாருக்கும் உதவாமலேயே போய்விடுகிறது. இது ஒட்டுமொத்த தேசத்திற்கே நஷ்டம்! ஆக, குடி குடியை மட்டும் கெடுக்கவில்லை; குடிகாரனை, அவன் வீட்டை, சமூகத்தை, நாட்டை, மனித குலத்தையே கெடுத்து அழித்துவிடும் கோர விஷமாகும்! குடிகாரர்களே! இனியாவது விட்டொழியுங்கள்
source: http://khanbaqavi.blogspot.com/2014/02/blog-post.html