கலிமா மொழிபவர் மீது விதியாகும் கடமைகள்
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பகர்ந்தார்கள்:’
‘எவர் உளத்தூய்மையுடன் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என மொழிகின்றாரோ அவர் சுவர்க்கம் நுழைவார்.” (ஆதாரம் : அல் பஸ்ஸார், அத்தபரானி, அறிவிப்பவர்: அபூ ஸஈத் அல் குத்ரி”இதே கருத்தில் சில வித்தியாசங்களுடன் மேற்படி ஹதீஸ் புகாரி, முஸ்லிம் உட்பட இன்னும் பல கிரந்தங்களிலும் பதியப்பட்டுள்ளது.)
இன்றைய முஸ்லிம்களால் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டுள்ள ஹதீஸ்களில் இதுவும் ஒன்றாகும். வெறுமனே ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று மொழிவது ஒருவரைச் சுவர்க்கத்தில் நுழைத்துவிடும் என்ற கருத்தையே இன்று பலர் இந்த ஹதீஸின் மூலமும் இதனை ஒத்த கருத்தில் வந்த சில ஹதீஸ்கள் மூலமும் விளங்கிக்கொள்கின்றனர்.
ஆனால், றஸுல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த ஹதீஸை இக்கருத்தில் கூறவில்லை என்பது மாத்திரம் உண்மையாகும். அதே போன்று ஸஹாபாக்களோ, பிற்காலத்தில் வந்த இமாம்களோ, உலமாக்களோ இந்நபிமொழிக்கு மேற்போந்த கருத்தைக் கொள்ளவில்லை என்பதும் உண்மையே.
இந்த ஹதீஸின் உண்மைக்கருத்தை விளக்க வந்த அறிஞர் இப்னுல் முன்திரி கீழ்வருமாறு கூறுகிறார்: ‘
பேரறிஞர்கள் பலர் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியவர் சுவர்க்கம் நுழைவார் அல்லது நரகம் அவர் மீது ஹராமாகிவிடும்’ என்ற கருத்தில் வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் உண்மையில், இஸ்லாமியப் பிரசாரத்தின் ஆரம்பக்கட்டத்தில் சொல்லப்பட்டவையென்றும், அச்சந்தர்ப்பத்தில் இஸ்லாமியக் கடமைகள் அமுலுக்கு வந்திருக்கவில்லை என்றும் கூறுகின்றனர்.
மேலும், கடமைகளும், சட்டங்களும் வந்ததைத் தொடர்ந்து, குறிப்பிட்ட ஹதீஸ்கள் ரத்து (நஸ்க்) செய்யப்பட்டன என்ற கருத்தையும் தெரிவிக்கின்றனர். இக் கருத்துக்கு ஏராளமான ஆதாரங்களையும் உதாரணங்களையும் காணலாம். அஸ்ஸுஹ்ரி, ஸுபியானுஸ் ஸவ்ரி போன்ற இமாம்கள் இக்கருத்தையே கொண்டுள்ளனர். (முக்கிய தாபிஈன்களில் ஒருவரான ஸஈத் இப்னுல் முஸையிப் என்பவரது கருத்தும் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது).
இன்னும் சில அறிஞர்கள், இந்த ஹதீஸ்கள் ரத்துச் செய்யப்பட்டு விட்டன என்று சொல்லவேண்டிய அவசியம் கிடையாது என்றும், ‘லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் றஸுலுல்லாஹ்’ என்ற வசனங்களைக் கொண்ட தௌஹீதின் வார்த்தைகளை ஏற்று, சாட்சி பகர்வதே ‘தீனி’ன் அடிப்படைகளையும் கடமைகளையும் ஏற்றுச் செயல்படுவதை வேண்டி நிற்கிறது என்றும், ஷஹாதத் (சாட்சியம்) பூர்த்தியடைவது இவற்றை ஏற்று நடப்பதில்தான் தங்கியுள்ளது என்றும் கூறுகின்றனர்.
”ஒருவர் கலிமாவை ஏற்று, தீனின் கடமைகளில் ஒன்றை நிராகரித்து, செய்யாது விட்டால் அல்லது அசட்டையின் காரணமாக எடுத்து நடக்காவிட்டால் அவரை நாம் காபிர் என்போம்; சுவர்க்கத்தில் நுழையமாட்டாரெனத் தீர்ப்பு வழங்குவோம்.’ (இவ்விடயத்தில் கருத்து முரண்பாடு உண்டென்பதை மறுப்பதற்கில்லை.)
இவை தவிர அறிஞர் இப்னுல் முன்திரி, குறிப்பிட்ட ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தை, அவற்றின் உண்மைப் பொருளாகக் கொள்ளமுடியாது என்பதற்கும் பல ஆதாரங்களைக் காட்டுகிறார்.
இமாம் அல்ஹஸனுல் பஸரி இந்த ஹதீஸ்கள் சம்பந்தமாக வித்தியாசமான ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளார்: ‘இந்த ஹதீஸ்கள் பொதுப்படையாகவும் மேலோட்டமாகவும் கூறப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு விளக்கமும் வியாக்கியானமும் கொடுக்கப்படல் வேண்டும். இவ்வகையில் எவர் கலிமாவை மொழிந்து, அதற்குரிய உரிமையையும் கடமையையும் நிறைவேற்றுகிறாரோ அவர் சுவர்க்கம் நுழைகிறார் அல்லது நரகம் அவர்மீது ஹராமாகிவிட்டது’ என்பதாகும்.”ஷஹாதத் (சாட்சி பகரல்) என்ற சொல் வெறும் தவ்ஹீதை மாத்திரம் குறிக்காது. அது ஒரு பொதுவான சொல்லாகும். அதன்கீழ் தீனின் அனைத்துக் கடமைகளும் அடங்குகின்றன’ என இமாம் பைழாவியும் இன்னும் பலரும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அபூ அம்றிப்னு அஸ்ஸலாஹ் ரஹ்மதுல்லாஹி அலைஹி குறிப்பிடுவதாவது: ‘அறிவிப்பாளர்கள் தமது மனத்திலோ பதிவிலோ ஏற்பட்ட குறைபாட்டின் காரணமாக இந்த ஹதீஸ்களைச் சுருக்கமாக அறிவித்திருக்கின்றனர். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இவ்வாறு சுருக்கமாகக் குறிப்பிட்டிருக்கின்றார்கள் என்று கொள்வது பிழையானது. ஏனெனில், இன்னும் பல ரிவாயத்துகளில் இவ்விடயம் விரிவாகச் சொல்லப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.’
இப்னு அஸ்ஸலாஹ் குறிப்பிடுவதுபோல இவை சம்பந்தமாக விரிவாகவும் விளக்கமாகவும் ஹதீஸ்கள் வந்திருக்கின்றன. ஒரு சந்தர்ப்பத்தில் பொதுப்படையாகவும் சுருக்கமாகவும் கூறப்பட்ட ஒரு விடயம் இன்னொரு சந்தர்ப்பத்தில் விளக்கமாகவும் விரிவாகவும் கூறப்பட்டிருப்பதை ஹதீஸ்களில் அதிகமாகக் காணமுடியும். இந்த ஹதீஸைப் பொறுத்தவரையிலும் கூட இந்நிலையையே நாம் காண்கின்றோம்.
‘அல்லாஹ்வைத்தவிர வேறு இலாஹ் இல்லை. முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய ரஸூலாவார்கள் எனச் சாட்சி பகர்ந்து தொழுகையையும் நிலைநாட்டி ஸக்காத்தும் கொடுக்கும் வரை மக்களுடன் போராடுமாறு நான் ஏவப்பட்டுள்ளேன்’ (புகாரி, முஸ்லிம்) என்ற ஹதீஸில், மேற்படி ஹதீஸ்களில் சொல்லப்படாத பல அமல்கள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம்.
மேலும் ஒரு ஹதீஸில் ‘எவர் அல்லாஹ்வை ஷிர்க் வைக்காத நிலையில் சந்திக்கிறாரோ அவர் சுவர்க்கம் நுழைகிறார்’ (புகாரி, முஸ்லிம்) எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இன்னுமோர் அறிவிப்பில் ‘அல்லாஹ்வுக்கு எதனையும் இணைவைக்காது, ஐங்காலத் தொழுகைகளை நிறைவேற்றி, ரமழான் நோன்பு நோற்று, அல்லாஹ்வை எவர் சந்திக்கிறாரோ, அவர் மன்னிக்கப்படுகின்றார்’ (முஸ்னத் அஹ்மத்) என வந்துள்ளது.
இவ்வாறு குர்ஆனிலும் ஹதீஸிலும் இன்னும் பல நூற்றுக்கணக்கான ஆதாரங்கள் ஈமான், அமல்களுடன் பிணைந்த ஒன்று என்பதைக் காட்டி நிற்கின்றன. எனவே, இந்த ஒருசில ஹதீஸ்களின் வெளிப்படையான கருத்தை வைத்துத் தவறான விளக்கங்களைக் கொடுப்பது எங்ஙனம்?
ஷிர்க் என்பது வெறுமனே தவ்ஹீதுடைய வார்த்தையான ‘லாஇலாஹ இல்லல்லாஹ்வை’ மொழிவதன் மூலம் நீங்கிவிடுகின்ற வெறும் வார்த்தையல்ல: மாறாக, அது உள்ளத்துடன் தொடர்பானது. அது உள்ளத்தை அல்லாஹ் அல்லாதவற்றின்பால் செலுத்தும். அது அவயவங்களால் செய்யப்படும் செயல்களோடு தொடர்புடையது. அல்லாஹ் அல்லாதவற்றின்பால் அவயவங்களின் செயல்களை அது திருப்பக்கூடியது. இவ்வாறு ஷிர்க் வெறும் வார்தையோடு நிற்காத ஒன்றாக இருக்கும்போது, தவ்ஹீத் மாத்திரம் எவ்வாறு வெறும் வார்த்தைகளுடன் குறுகிவிட முடியும்?
உண்மையில், தவ்ஹீதுடைய வார்த்தையை வறண்ட மண்ணில் வளரும் ஒரு பட்டுப்போன பயிருக்கு ஒப்பிட முடியாது. மாறாக அது நல்ல செழிப்பான மண்ணில்; வளர்ந்து, ஆழமான வேர்களைக் கொண்ட ஒரு விருட்சத்துக்கு ஒப்பானது. வானளாவ உயர்ந்து, விரிந்து வியாபித்த கிளைகளைக் கொண்டதாகவும் இன்பமான கனிகளைக் கொண்டதாகவும் அது காணப்படுகிறது.
”(நபியே! தவ்ஹீத் கலிமா எனும்) நல்ல வாக்கியத்துக்கு அல்லாஹ் எவ்வாறு (மிக மேலான) உதாரணத்தைக் கூறுகின்றான் என்பதை நீர் கவனிக்கவில்லையா? (அவ்வாக்கியம்) வானத்தையளாவிய கிளைகளையும் (பூமியில்) ஆழப் பாய்ந்த வேரையும் உடைய ஒரு நல்ல விருட்சத்துக்கு ஒப்பாக இருக்கிறது. அது (பருவ காலத்தில் மட்டுமன்றி) இறைவனின் அருளைக் கொண்டு, எக்காலத்திலும் கனிகளைக் கொடுத்துக் கொண்டே இருக்கிறது. மனிதர்கள் நல்லுணர்ச்சி பெறும் பொருட்டு, அவர்களுக்கு (இவற்றை) அல்லாஹ் உதாரணங்களாக்குகின்றான்.” (14:24-25)
செயலோடு கூடிய விசுவாசமே ஈமானாகும். வெறும் நாவால் மொழியும் தவ்ஹீதுடைய வார்த்தைகளையோ செயல் மூலம் பிரதிபலிக்காத உள்ளத்தாற் கொள்ளும் வெறும் விசுவாசத்தையோ ஈமான் என்றோ ஷஹாதத் என்றோ கூறுவதற்கில்லை. (நபியே) அல்லாஹ்வையும் இறுதி நாளையும் விசுவாசம் கொண்டிருக்கிறோம் எனக் கூறுவோரும் மனிதரில் சிலருண்டு. ஆனால், (உண்மையில்) அவர்கள் விசுவாசங் கொண்டவர்களல்லர்.” (2:8)
”ஷைத்தானியத்துடன் முண்டியடிப்பவனை, தன் சொல்லாலும் செயலாலும் இஸ்லாத்தின் எதிரிகளை ஆதரிப்பவனை வக்காலத்து வாங்குபவனை, கலிமாவை மொழிந்தவன் என்ற ஒரே காரணத்திற்காக ஈமான் கொண்டவனாகக் கருதமுடியாது. அவன் தான் ஈமானிலிருப்பதாகச் சத்தியம் செய்தாலும் சரியே’ என்று அறிஞர் ஷெய்க் அல் கஸ்ஸாலி குறிப்பிடுவது மிகப் பொருத்தமானதொரு கருத்தாகும்.
”நிச்சயமாகத் தாங்களும் உங்களைச் சார்ந்தவர்கள் தாம் என்று அவர்கள் அல்லாஹ்வின்மீது சத்தியம் செய்கின்றனர். எனினும், அவர்கள் உங்களைச் சார்ந்தவர்களல்லர். அவர்கள் (தங்கள் உண்மைக் கோலத்தை வெளிப்படுத்த அஞ்சும்) கோழைகள், தப்பித்துக் கொள்ளக் கூடியதோர் இடத்தை அல்லது (மலைக்) குகைகளை அல்லது ஒரு சுரங்கத்தை அவர்கள் காண்பார்களேயானால், (உம்மிடமிருந்து விலகி) அவற்றின் பக்கமாக அல்லோலக்கல்லோலமாக விரைந்தோடுவார்கள்.” (9:56, 57)
நாம் விளக்க எடுத்துக் கொண்ட ஹதீஸையும் அதனை ஒத்த கருத்துக்களையுடைய ஹதீஸ்களையும் ஆரம்பத்தில் குறிப்பிட்ட விதத்தில் தவறாக விளங்கிக் கொள்வதற்கு மேலும் ஒரு முக்கிய காரணம், ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’வை முழுமையாகவும் சரியாகவும் புரிந்து கொள்ளாமையே ஆகும். இதனை அறிஞர் முஹம்மத் அல் கஸ்ஸாலி கீழ்வருமாறு தெளிவுபடுத்துகின்றார்:
”இன்று வாழும் அநேக முஸ்லிம்களையும் ஆரம்பகால ஜாஹிலிய்ய மக்களையும் ஒப்பிட்டு நோக்கின், அவர்களுடைய நிராகரிப்பிற்கும் இவர்களுடைய நிராகரிப்பிற்கும் இடையில் பாரிய வித்தியாசம் எதனையும் காண்பதற்கில்லை. ஒரேயொரு வித்தியாசத்தை நாம் இருசாராருக்கிடையிலும் காண்கிறோம்; இவர்கள் கலிமாவை மொழிந்தார்கள்; அதனை விளங்கிக் கொள்ளவில்லை. அவர்கள் அதனை விளங்கிக் கொண்டார்கள்; ஆனால் மொழியவில்லை.’
‘லா இலாஹ இல்லல்லாஹ்’ என்ற வசனம் இறைவனின் ஏகத்துவத்தை வலியுறுத்துவதாக உள்ளது. ஏகத்துவம் அடிப்படையில் மூன்று அம்சங்களை உள்ளடக்கியுள்ளது. அவற்றைக் கீழ்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்:
1. அல்லாஹ்வுக்கு மாத்திரம் இபாதத் செய்தல், அல்லாஹ்வை இறைவனென்ற வகையில் மகத்துவப்படுத்தி, பரிபூரண அன்புடன் முழுமையாக அவனுக்குக் கட்டுப்படல் என்பதை இது குறிக்கும். இம்முதலாவது அம்சம் நிறைவு பெற, கீழ்வரும் மூன்று அம்சங்களும் தவிர்க்கப்படல் வேண்டும்.
அ) அல்லாஹ்வைத்தவிர வேறு எவரையும் ரப்பாக ஏற்றுக்கொள்ளக் கூடாது.
ஆ) அல்லாஹ்வின்மீது அன்பு செலுத்துவதுபோல வேறொருவர் மீதோ, வேறொரு சக்தி மீதோ அன்பு செலுத்தி, தனது நேசனாக ஆக்கிக் கொள்ளக் கூடாது.
இ) அல்லாஹ் அல்லாதாரைத் தீர்ப்புக் கூறுபவர்களாக ஏற்று, அவர்களுக்குக் கட்டுப்படக் கூடாது.
2. தாஃகூத்களை முற்றாக நிராகரித்து, தான் இபாதத் செய்த, விசுவாசமாய் நடந்து கொண்ட அனைத்தையும் விட்டு நீங்கிவிடல் வேண்டும்.
3. ஷிர்க்கை முற்றாகத் தவிர்ந்து கொள்ளல் வேண்டும். குறிப்பாக, கீழ்வரும் மூன்று பெரும் ஷிர்க்குகளை விட்டும் நீங்கிவிடல் வேண்டும்.
அ) வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்காகன்றி வேறு ஒரு மனிதருக்கோ ஒரு சக்திக்கோ செலுத்தல்.
ஆ) இறந்தவர்களிடம் பிரார்த்தனை செய்தலும் உதவி தேடலும்.
இ) அல்லாஹ் அல்லாதாரைச் சட்டம் இயற்றுவோராக ஏற்றல், வேறு வார்த்தையில் குறிப்பிடுவதெனில், அல்லாஹ்வுடைய சட்டமல்லாத மனித சட்டங்களை ஏற்று அங்கீகரித்தல்.
மேற்குறிப்பிட்ட அம்சங்களைக் கவனத்திற்கொள்ளாத வகையில் ஒருவர் மொழிந்த ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ அவரை தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவராகவோ அன்றி சுவர்க்கத்துக்கு அருகதை உடையவராகவோ ஆக்காது.
மேற்குறிப்பிட்ட விளக்கங்கள் மூலம் ‘லாஇலாஹ இல்லல்லாஹ்’ என்று கூறியவர் சுவர்க்கம் நுழைவார் அல்லது நரகம் அவர்மீது ஹராமாகிவிடும் என்ற கருத்துக்களில் வரும் ஹதீஸ்களின் உண்மைப் பொருளையும் தத்துவத்தையும் புரிந்துகொள்ள முடியும்.
ஈமான் வெறுமனே உள்ளத்தால் இறைவனைப் பற்றிக் கொள்ளும் நம்பிக்கையுடனும், நாவால் வெளிப்படுத்தும் சில வார்த்தைகளுடனும் குறுகிவிடும் ஒன்றல்ல. அதன் தாக்கமும் ஆதிக்கமும் முழுவாழ்விலும் பிரதிபலிக்கும் போதே அது யதார்த்தமானதாக மாறுகின்றது. ‘ஈமான் என்பது வெறும் எண்ணங்களல்ல: ‘யதார்த்தமான ஈமான் என்னும் போது அது உள்ளத்தில் ஆழமாகப்; பதிந்திருத்தல் வேண்டும். செயல்கள் அதனை உண்மைப்படுத்தல் வேண்டும்.’ (ஹதீஸ்)
source: www.sheikhagar.org