நன்மை பயக்கும் நபிமொழி – 86
o பேச்சுக்களில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகாட்டுதல்களில் மிகச்சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பாதையாகும். தீனில் தீமையானது மார்க்கத்தில் புதிதாகப் புகுத்தப்பட்டதாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். (ஆதாரம்: முஸ்லிம்)
o குர்ஆனை ஓதுவதில் தேர்ச்சி பெற்றவர் கண்ணிமிக்க வானவர்களுடன் இருப்பார். குர்ஆனை ஒதுவது சிரமமாக இருப்பினும் அதைத் திரும்பத் திரும்ப சிரமத்துடன் ஓதுவாரானால் அவருக்கு இரண்டு கூலி இருக்கிறது என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)
o மனிதர்களுக்கு தடை (ஹராம்) செய்யப்படாத செயல் ஒன்றைப்பற்றி ஒரு முஸ்லிம் கேள்வி கேட்டு அதன் காரணத்தால் அச்செயல் தடை செய்யப் படுமாயின் அக்கேள்வி கேட்டவர் கொடிய குற்றம் செய்த பாவியாவார். (அறிவிப்பாளர் ஸஃது இப்னு அபீ வக்காஸ் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, முஸ்லிம்)
o விபசாரியான ஒரு பெண் ஒரு கிணற்றின் விளிம்பில் தன் நாக்கைத் தொங்கவிட்டுக் கொண்டிருந்த ஒரு நாயைக் கடந்து சென்றாள் அந்த நாயை தாகம் சாகடிக்கவிருந்தது. அதைக்கண்ட அப்பெண் உடனே தன் காலுறையைக் கழற்றி அதைத் தன் முந்தானையில் கட்டி கிணற்று நீரை இறைத்து அதற்கு கொடுத்தாள் ஆகவே அது பிழைத்து கொண்டது. அவள் ஒர் உயிருக்குக் காட்டிய இந்த கருணையின் காரணத்தினால் அவளுக்கு பாவமன்னிப்பு வழங்கப்பட்டது. (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்)
o ஒரு மனிதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் ”என் தாயார் திடீரென இறந்துவிட்டார். அவர் (மரணமடையும் முன்புபே) முடிந்திருந்தால் தர்மம் செய்யச் சொல்லியிருந்திருப்பார் என்று நான் கருதுகிறேன். அவர் சார்பாக நான் தர்மம் செய்யலாமா? என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ”ஆம்” சார்பாக தர்மம் செய்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்கள்: புகாரி, முஸ்லிம், முஅத்தா)
o அல்குர்ஆனில் வீண் தர்க்கம் செய்வது நிராகரிப்பாகும் என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர். (அறிவிப்பவர்: அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம்: அபூதாவூத்)