மனிதநேயமற்ற பட்டதாரிகள்
படிக்காதவனிடத்தில் இருக்கும் மனிதநேயத்தை விட படித்தவனிடத்தில் அதிகம் மனிதநேயம் இருக்க வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாற்றமாகத் தான் பட்டதாரிகளின் நிலை உள்ளது.
கல்லூரிகளில் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களைக் கேலி செய்கிறார்கள். அவர்கள் மனம் புண்படும்படியாகப் பேசுகிறார்கள். அரை நிர்வாணமாக கல்லூரியை சுற்றச் சொல்கிறார்கள்.
இன்னும் இதுபோன்று நிறையக் கொடுமைகள் நடக்கின்றன. மக்களுக்கு மனிதநேயத்தை கற்றுக் கொடுக்க வேண்டிய இவர்கள் இப்படி மனிதநேயம் அற்று நடக்கிறார்கள். இதற்காகத் தான் இவர்கள் படித்தார்களா?
கல்வியின் நோக்கம் என்னவோ அதைக் குழிதோண்டிப் புதைக்கும் வகையில் இவர்களுடைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. மருத்துவர் நோயாளிகளிடம் கூறும் கனிவான வார்த்தைகள் பாதி நோயைக் குணப்படுத்தி விடும். ஆனால் இன்று மனிதநேயம் இல்லாத சில மருத்துவர்கள் நோயாளிகளைக் குணப்படுத்தும் நோக்கில் மருத்துவமனைகளைக் கட்டாமல் அவர்களிடமிருந்து பணம் பறிக்கும் எண்ணத்தில் கட்டுகிறார்கள்.
ஆத்திர அவசரத்திற்கு வேறு வழி இல்லாமல் தனியார் மருத்துவ மனைகளில் வந்து நோயாளிகளைச் சேர்த்து விடுகிறார்கள். இதைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை ஆயிரம், பத்தாயிரம் என்று பில்லை சரமாரியாக அனுப்பிக் கொண்டே இருக்கிறார்கள். இந்த மருத்துவர்கள் மருத்துவப் படிப்பை இவ்வாறு கொள்ளையடிப்பதற்காகத் தான் படித்தார்களா?
எவ்வளவு தான் படிப்பு இருந்தாலும் மனிதநேயம் இல்லாவிட்டால் அவன் மிருகத்தைப் போன்று ஆகிவிடுவான் என்பதை இவர்களுடைய செயல் உணர்த்துகிறது. பிற்படுத்தப்பட்டவர்களுக்காக அரசு உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டிற்கு ஏற்பாடு செய்யும் எண்ணத்தில் உள்ளது. நியாயமான சிந்தனையுடைய எவரும் இதைத் தவறு என்று சொல்ல மாட்டார்கள்.
நலிவடைந்தவர்கள் வலிமையானவர்களுடன் போட்டிப் போட இயலாது. ஒரு பேருந்தில் எல்லோரும் சமமாக நடத்தப்படுவது கிடையாது. பலம் குன்றிய முதியவர்கள், பெண்கள், ஊனமுற்றவர்கள் ஆகியோர்களுக்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுடைய இடத்தில் மற்றவர்கள் யாரும் அமர முடியாது. இப்படி இடம் ஒதுக்குவது தவறு என்று சொன்னால் நிச்சயமாக அவர் மனிதநேயம் அற்றவராகத் தான் இருப்பார்.
தான் நன்றாக அரசுப் பதவிகளில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே தவிர எல்லோரும் நன்றாக வாழ வேண்டும் என்று எண்ணுவதில்லை. மருத்துவத்தைப் படித்தவர்கள் கூட இதை விளங்கிக் கொள்ளவில்லை.
மனிதநேயம் இல்லாமல் போனால் மனிதன் மனிதனாக மதிக்கப்பட மாட்டான். நிம்மதியாக நாம் வாழ முடியாது என்பதை தெள்ளத்தெளிவாக இந்நிகழ்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. மொத்தத்தில் மனிதநேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை உண்டு என்பதைச் சந்தேகத்திற்கு இடமின்றி அறிகிறோம்.
பொதுவாக இஸ்லாமிய மார்க்கம் மனித சமுதாயத்திற்குப் பலன் தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதைப் பற்றி வலுயுறுத்தாமல் இருக்காது. அதே போல் மனிதர்களுக்குத் தீமை தரக் கூடியது ஏதேனும் இருந்தால் அதை எச்சரிப்பதில் இஸ்லாத்தை மிஞ்சுவதற்கு உலகில் எதுவும் இல்லை. மனித நேயத்தினால் உலகத்திற்கு மாபெரும் நன்மை இருக்கிறது என்றால் இஸ்லாம் அதைப் பற்றி பேசாமல் இருக்குமா என்ன? இதோ இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பாருங்கள்.